இலங்கை பிரதான செய்திகள்

எமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம்

ஒரு நியாயமான தீர்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தேர்தல் அரசியலினால் கட்சிகளுக்குள்ளேயும் கட்சிகளுக்கிடையேயும் எழுந்துள்ள ஒற்றுமைக்குலைவு ஒரு வேதனையான விடயமாக அமைந்திருக்கிறது. இன்றைய எமது நிலையில் குழுக்களாகப் பிரிந்து நின்று சுயநலத் தேர்தல் அரசியல் செய்வது ஆரோக்கியமான அணுகுமுறையாக அமையாது.

எமது வாக்குகள் அற்ப சலுகைகளுக்காக விலை பேசப்படும் இந்த நிலையிலே எமது தேசிய நலனில் அக்கறை கொண்டுள்ள நாம் பிரிந்து நின்று சண்டையிடுவதற்கான காரணங்களைத் தேடுவதிலும் பார்க்க ஒற்றுமைப்பட வேண்டியதற்கான அவசியத்தையும் அதன் அனுகூலங்களையும் ஆராய்வது ஆரோக்கியமானதாக அமையும்.

எமக்கு நியாயப்படியும் சட்டப்படியும் கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களையும் வசதிகளையும் ஒழுங்குவிதிக்கமைய தரமறுத்து அவற்றை தமது முகவர்களின் ஊடாக குழப்பமான முறையில் நடைமுறைப்படுத்த முயன்று அவற்றை எமக்கு வழங்கப்படும் சலுகைகளாக சித்திரிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. அதனைச் செய்யும் அந்த முகவர்கள் செயல் வீரர்கள் போல நம் மத்தியிலே உலா வருகின்றனர்.வறுமையையும் சமூக சிக்கல் நிலைகளையும் எம்மக்கள் மத்தியிலே திட்டமிட்டு ஏற்படுத்திவிட்டு அதை தீர்க்கவென தற்காலிக போலிச் சலுகைகளைக் காட்டி அவர்களின் வாக்குகளை விலைபேச முயல்வது மனிதத்துவம் ஆகாது.

தமது வறுமையைப் போக்கவென தமது வாக்குகளைச் சலுகைகளுக்காக விற்கும் எம்மவர்களை கோபித்துக் கொள்வதும் அர்த்தமற்றது. அந்தச் சூழ்நிலைக் கைதிகளின் நிலையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பல்வேறு அழுத்தங்களால் தடம்மாறி நிற்கும் மக்கள், எம் மக்கள் அல்ல என்று ஆகிவிடாது அவர்களையும் தடம்மாற்றி சலுகைகளுக்காக எமது வாக்குகள் விலைபோகாது என்பதை சரியான முறையில் எமது வாக்குரிமையைப் பயன்படுத்தி நிரூபிப்போமாக இருந்தால் எதிர்காலத்தில் இவ்வாறு விலை பேசும் செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்ள முடியும். இது எமது விடியலை நோக்கிய பயணத்திற்கு உரம் சேர்க்கும். எலும்புத் துண்டையும் உணவுத் துண்டையும் காட்டி தமது ஆட்டத்திற்கு ஆட்டி வைக்கப்படும் வட்டரங்கு விலங்குகள் (Circus animals) போல நாம் இல்லை என்பதை தெளிவாக்கும்.பொது விடயங்கள் மற்றும் அடிப்படை பிரச்சினைகள் சம்பந்தமாகவேனும் நாம் ஒற்றுமைப்படாவிட்டால் நாம் பிரித்தாளப்பட்டு எமது அபிலாசைகள் சிதைக்கப்படுவதற்கான ஆபத்து நிலை இருக்கிறது. கோணேசர் கோயிலும் நல்லூர் ஆலயமும் கூட நம் பூர்வீகமல்ல என வாதிடுபவர்களுக்குக்கூட இது வரப்பிரசாதமாக அமைந்துவிடும். இந்த ஒற்றுமைக்காக தமிழ் மக்கள் பேரவையானது அனைத்துத் தமிழ் தலைவர்களுடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறது. இந்த முயற்சிகள் தொடரும்.

இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு சரியான திசையில் சிந்திக்கும் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பெரும் பொறுப்பு தமிழ் மக்கள் முன் எழுந்து நிற்கிறது. அரசியல்வாதிகளின் குறுகிய சுயநல சிந்தனைப் போக்குகள் காரணமாகவும் மாறிவரும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை காரணமாகவும் எம்மக்கள் மனமுடைந்து விரக்தியடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் காரணமாக சரியாகச் சிந்தித்து வாக்களிக்கும் திறன் உடைய பலர் “வாக்களித்து என்ன பயன்” என்று எண்ணி வாக்களிக்காமல் இருந்து விடுவார்களோ? என்ற ஏக்கம் எம்மத்தியில் எழுகிறது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் விலைபோன வாக்குகளால் மட்டுமே எமது பிரதிநிதிகள் எனப்படுவோர் தெரிவாகும் ஒரு ஆபத்து நிலை இருக்கிறது. அவ்வாறு நடந்தால் அது ஒரு பிழையான செய்தியை உலகிற்கு தெரிவிப்பதாக அமைந்துவிடும்.

எனவே எத்தனையோ இடர்களைத் தாண்டி பயணித்த நாம் மனம் சோர்ந்து போகாது ஒரு தூய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக அனைவரும் அணிதிரண்டு சிந்தித்து வாக்களிப்போம். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் தவறாமல் சிந்தித்து வாக்களிக்கத் தூண்டுவோம். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்வோம். #தேசியஇனம்  #தேர்தல்  #ஒற்றுமை #வறுமை  #வாக்கு  #தமிழ்மக்கள்பேரவை

தமிழ் மக்கள் பேரவை

12.07.2020.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link