இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

உசாத்துணை என்பதான பிரதியாக்கம் செய்தல் – இரா.சுலக்ஷனா..

உயர்க் கல்வி சூழல் என்பது, நிறுவனமயப்பட்டு நிற்கும், ஏற்கனவே தயார்நிலையில் இருக்கும் கேள்வி பதில்களுக்கான தயார்ப்படுத்தலாக இருந்து வருகின்ற, ஆரம்ப கல்வி சூழலில் இருந்து வேறுபட்டு, அக, புற காரணிகளின் தாக்கத்திற்கு உட்பட்டு உருவாகும், பன்மைத்துவம் மிக்க அறிவுருவாக்கச் செயன்முறைக்கு அடிப்படையாகின்றது.

குறித்த ஒரு பாடநெறி சார்ந்த அறிவோடு மாத்திரம் மட்டிட்டு நிற்காமல், அவரவர் படைப்பாக்கச் செயன்முறைக்கு உறுதுணையாக அமையவும், தேடலின் விகசிப்புக்கும் களமாக, உயர்க்கல்விச் சூழலில், பல்கலைக்கழகங்கள் அமைவதும் அமையப்பெறுவதும் தேவைப்பாடுடையதாகிறது.

சமகால சூழல் என்பது, அத்தகையதொரு கல்விச் சூழலுக்கான வாய்ப்பைத் தற்காலிகமாகத் தடை செய்து வைத்திருக்கின்ற நிலையில், ஏற்கனவே வடிவமைத்து வைத்திருக்கின்ற, திட்டங்களுக்கு அமைய, பாடநெறிகளுக்கு உட்பட்டு, கற்றல் நடவடிக்கைகள், உயர்க்கல்வி சூழலிலும், இணையவழி முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

அரையாண்டு முறைக்கு அமைய, உயர்க்கல்வி சூழலில், கட்டுரைகள், ஒப்படைகள், அறிக்கைகள், டியுட்கள் என்பன பாடநெறி சார்ந்த அறிவு விருத்திக்கும், தேடலுக்குமான வாய்ப்பை விரிவுப்படுத்தும் நோக்கில், வழங்கப்படுவதும், எழுதி சமர்ப்பிக்கப்படுவதும் நிகழ்ந்தேறி வருகின்றன.

மிக முக்கியமாக, ஆய்வேடுகள், ஆய்வு மாநாடுகள் மற்றும் இறுதிவருட மாணவர்கள் தம் துறை சார்ந்து, ஆய்வுகளை சமர்ப்பித்தல் என இன்னப்பிற கல்வி அல்லது பாடநெறி சார்ந்த அறிவுதளத்தின் விரிவாக்கத்திற்கான வழிமுறைகள் அல்லது உத்திமுறைகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இத்தகைய , வடிவமைக்கப்பட்ட கல்வி வழிமுறைகளில், சொல்லப்படுகின்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு, எழுதுதல் என்பதும் அவசியமான ஒன்றாகும். இதனடிப்படையில், உசாத்துணை அல்லது உசாத்துணை நூல்கள் என்ற சொல்லாடல், உயர்க்கல்வி சுழலில், பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

இதனடிப்படையில் நோக்கும் போது, உசாத்துணை என்பது, நாம், குறிப்பிடுகின்ற தகவல்கள், நாம் வாசித்தறிந்த, பார்த்தறிந்த, கேட்டறிந்த ஏதாவது ஒன்றை அடியொட்டியே அமைந்திருக்கும். அத்தகைய தகவல்களை முன்னிறுத்தி, எழுதப்படும் ஆக்கங்களில் ( கட்டுரை, ஒப்படைகள், ஆய்வேடுகள்) குறித்த தகவல்களைப் பெறுவதற்கான வாயிலாக அமைந்த மூலங்களை குறிப்பிடுவதாகும்.

குறிப்பாக, மேற்கோள் காட்டுதல், எடுத்துக்காட்டுக்கள் என்ற அடிப்படையில், சான்றாதாரங்களாகக் கொள்ளப்படுகின்ற, கொள்ளப்பட்ட விடயங்களின் மூலங்களை, உரிய முறையில் குறிப்பிடுவது உசாத்துணை என்பதாக நோக்கலாம்.

குறிப்பாக, இத்தகைய உசாத்துணை பயன்பாட்டில், பல்வேறு வகைமாதிரிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்ற நிலையில், ( ஹார்வட் மாதிரி – ஆசிரியர் பெயர் மற்றும் வருடத்தை குறிப்பிடல் ) பின்வரும் வகையிலான உசாத்துணை பயன்பாட்டு வழிமுறை அல்லது உசாத்துணை குறிப்பிடல் பரவலான பயன்பாட்டில் இருந்துவருவதை அவதானிக்கலாம். உதாரணம் – ( உமர்பாரூக். அ. 2019, மனு எதிர்ப்பாளர் திருவள்ளுவர், ஜோதி என்டர்பிரைசஸ், சென்னை 600 005.)

இத்தகைய உசாத்துணைகள் நேர்த்திக் கருதி, அகரவரிசை ஒழுங்கில் குறிப்பிடப்படுவதோடு, ஆசிரியர் பெயர், முதலெழுத்து, நூலின் பெயர், பதிப்பு ஆண்டு, வெளியீட்டகம், பக்க எண் ( உமர்பாரூக். அ. மனு எதிர்ப்பாளர் திருவள்ளுவர், 2019, ஜோதி என்டர்பிரைசஸ், சென்னை 600 005, ப.எண்- 9 – 32 )என்ற அடிப்படையிலும் குறிப்பிடப்படுவதுண்டு.

ஏற்கனவே சொல்லப்பட்டு போல, எடுத்துக்காட்டுக்கள் அல்லது மேற்கோள் காட்டுதல் என்ற அடிப்படையில், குறித்த தகவல்களை பின்வரும் வகையில் குறிப்பிடலாம்.

 காலம் காலமாக மாறிக் கொண்டேயிருக்கும் இலக்கிய, கருத்தியல் வகைமைகளில் அந்;தந்தக் காலத்தில் எது தேவையோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு வலிமையாகத் தொடரும் முற்போக்குத் தமிழ் மரபின் தவிர்க்க முடியாத பகுதியாகத் திருக்குறள் நிற்கிறது. அது தமிழரின் அடையாளம். (அ. உமர் பாரூக், மனு எதிப்பாளர் திருவள்ளுவர், 2019)

 அ. உமர் பாரூக், மனு எதிர்ப்பாளர் திருவள்ளுவர் என்ற நூலில், காலம் காலமாக மாறிக் கொண்டேயிருக்கும் இலக்கிய, கருத்தியல் வகைமைகளில் அந்;தந்தக் காலத்தில் எது தேவையோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு வலிமையாகத் தொடரும் முற்போக்குத் தமிழ் மரபின் தவிர்க்க முடியாத பகுதியாகத் திருக்குறள் நிற்கிறது. அது தமிழரின் அடையாளம் என்று குறிப்பிடுகிறார்.

 மனு எதிர்ப்பாளர் திருவள்ளுவர் என்ற நூல், காலம் காலமாக மாறிக் கொண்டேயிருக்கும் இலக்கிய, கருத்தியல் வகைமைகளில் அந்;தந்தக் காலத்தில் எது தேவையோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு வலிமையாகத் தொடரும் முற்போக்குத் தமிழ் மரபின் தவிர்க்க முடியாத பகுதியாகத் திருக்குறள் நிற்கிறது. அது தமிழரின் அடையாளம் என்ற தகவலைத் தருகிறது.

 காலம் காலமாக மாறிக் கொண்டேயிருக்கும் இலக்கிய, கருத்தியல் வகைமைகளில் அந்;தந்தக் காலத்தில் எத தேவையோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு வலிமையாகத் தொடரும் முற்போக்குத் தமிழ் மரபின் தவிர்க்க முடியாத பகுதியாகத் திருக்குறள் நிற்கிறது. அது தமிழரின் அடையாளம் ( உமர் பாரூக், அ. ப.எண் 5, 2019. )
 காலம் காலமாக மாறிக் கொண்டேயிருக்கும் இலக்கிய, கருத்தியல் வகைமைகளில் அந்;தந்தக் காலத்தில் எத தேவையோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு வலிமையாகத் தொடரும் முற்போக்குத் தமிழ் மரபின் தவிர்க்க முடியாத பகுதியாகத் திருக்குறள் நிற்கிறது. அது தமிழரின் அடையாளம் (1)

ஆனால் நடைமுறையில், நகலாக்கக் குற்றம் என்பதை அறியாமலே, பெற்றுக் கொண்ட தகவல்களை, மூலத்திலிருந்து சிதையாமல், அச்சுபிசகாமல், தன்னுடைய ஆக்கங்களில், தன்னுரிமத்தின் அடிப்படையில் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.

உலகளவில், புலமைச் சொத்துக்களைப் பாதுகாப்பதன் பொருட்டு, சட்ட ஏற்பாடுகள் நிலவி வருகின்ற நிலையில், உசாத்துணை எனும் பெயரில் நகலாக்கம் அல்லது பிரதிபண்ணுதல் சர்வசாதாரணமாக நிகழ்ந்தேறி வருகிறது.

உதாரணமாக, மேற்கண்ட வகைமாதிரிகளைக் கைக்கொள்ளாமல், ஒருவரின், ஆக்கத்தில், ஏற்கனவே சொல்லப்பட்ட நூற் தகவல்களையோ, கட்டுரை தகவல்களையோ, ( கட்டுரை, ஆய்வுகள்) அப்படியே பயன்படுத்தும் போது அது நகலாக்கமாகவே கருதப்படும். இந்நிலையில், ஒரு தகவலை அல்லது கோட்பாட்டை விளக்க அல்லது விபரிக்கத் துணை செய்கின்ற தரவு என்ற அடிப்படையில், கொள்ளப்படுகின்ற உசாத்துணை என்பதன் அடிப்படை குறித்த புரிதலற்ற நிலையில் உசாத்துணை என்பதான நகலாக்கம் மிகச் சாதாரணமாக நடந்தேறுகிறது.

ஆக, இணைய வசதியின் மீயுச்ச வளர்ச்சியின் பேறாக, உசாத்துணை என்ற பெயரில், இடம்பெறும் நகலாக்கச் செயன்முறைகள், அதிகரித்து வருகின்ற நிலையில், உசாத்துணை என்பதன் அடிப்படை பயன்பாட்டு நிலை குறித்த புரிதலும், தெளிவும் கிட்டும் பட்சத்தில், இவ்வகையிலான நகலாக்கச் செயற்பாடுகள் நீறுபூத்த நெருப்பாய் நலிவடைந்து செல்வற்கான சூழல் வாய்க்கப் பெறலாம்.

இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap