Home இலங்கை வடக்கு-கிழக்குச் சமூகம், கலாநிதி குமார வடிவேல் குருபரனை, ஒரு மனித உரிமைப் பாதுகாவலனாகவே பார்க்கிறது.

வடக்கு-கிழக்குச் சமூகம், கலாநிதி குமார வடிவேல் குருபரனை, ஒரு மனித உரிமைப் பாதுகாவலனாகவே பார்க்கிறது.

by admin


முது நிலை விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன் ஞானசீலன்.

வடக்கு கிழக்குச் சமூகம் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை  ஒரு மனித உரிமை பாதுகாவலனாகவே பார்க்கிறது. அவரது அமைதியான மற்றும் நியாயமான மனித உரிமைப் பணிகளுக்காக அவர் பழிவாங்கப்படுகிறார். எனவே அவருக்கு எதிரான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க பல்கலைக்கழக பேரவையையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் எமது கல்விச் சமூகம் கோருகிறது என யாழ் பல்கலைக்கழகம் வவுனியா வளாக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஜெயசீலன் ஞானசீலன் தெரிவித்துள்ளார்.

-அவர் இன்று திங்கட்கிழமை(20) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,
கலாநிதி குமாரவடிவேல் குருபரன் எப்போதுமே ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் வறியவர்களுக்காக சட்டப்பூர்வமாக போராடும் ஒரு மனித உரிமை வழக்கறிஞராக இருந்து வருகின்றார்.

இலங்கை நீதிமன்றங்களில் வழக்கறிஞராக செயற்பட அனுமதிக்கப்பட முடியாது என்று யாழ் பல்கலைக்கழக பேரவை 2019 கார்த்திகை 9 அன்று அவருக்கு அறிவிக்கும் வரை அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையின் தலைவராக இருந்தார்.

பேரவையானது பல்கலைக்கழக மானிய ஆணையம் எடுத்த முடிவை எந்த விதமான மீளாய்வும் இன்றி ஏற்றுக் கொண்டதாகவே தோன்றுகிறது. இதன் மூலம் இலங்கையில் சுயாதீன உயர் கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பின் தன்மையை இழக்கும் நிலையை நோக்கி நகர்கிறது.

பல்கலைக்கழகத்திற்கும் நாட்டிற்கும் உறுதியான முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் பேரவை கவனம் எடுக்க வேண்டும்.

அவரது அமைதியான மனித உரிமைப் பணிகளில் இருந்து அவரை நீக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளி சக்திகளால் தூண்டப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கின்றோம்.

அவர் நிறுவிய மனித உரிமை அமைப்பாக செயல்படும் யாழ்ப்பாணத்தில் உள்ள கொள்கை ஆராய்ச்சிக்கான அடையாளம் மையத்தின் நிர்வாக இயக்குநராக இருந்ததாலும் இது மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களை எரிச்சலூட்டியிருக்கலாம்.

புரட்டாதி 2011 முதல் அவர் ஒரு மூத்த விரிவுரையாளர் பதவியையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையின் தலைமையையும் கொண்டிருந்தமை நாட்டில் மனித உரிமைகளை உயர்த்துவதில் அவருக்கு பலமாக இருந்தது.அவர் சட்டத்துறையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க துறைசார் நடைமுறைகள் ஏற்கனவே இருக்கின்றன.

பேரவையானது பல்கலைக்கழக விவகாரங்களில் உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எவரும் அல்லது எந்த ஒரு அதிகாரமும் தலையிட அனுமதிக்க கூடாது.

ஆயினும்கூட 2019 புரட்டாதி 19 அன்று அவரை நீதிமன்றங்களில் வழக்காடும் செயற்பாட்டிலிருந்து தடை செய்யப்பட்டமையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பேரவைக்கு உறுதிப்படுத்திய போது அதற்கு பேரவை அடி பணிந்தது. 9 ஆம் திகதி கார்த்திகை 2019 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை ஏற்றுக்கொண்டது.

இருப்பினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவுக்கு எதிராக போராட பேரவைக்கு அதிகாரம் இருக்கிறது. ஏனெனில் இது ஏற்கனவே உள்ள விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறுகிறது.

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் நிறுவனத்திற்கு வெளியே ஆலோசனை மற்றும் சமூகத்திற்கான சேவைகளை மேற்கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ பீடங்களின் கல்விசார் ஊழியர்கள் வைத்திய ஆலோசகர்களாக செயற்படுகின்றனர்.

மற்ற அனைத்து துறைகளிலும் உள்ள பிற கல்விசார் ஊழியர்களும் கூட தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஆலோசகர்களாக பணியாற்றுகின்றனர்.

மேலதிக கள அனுபவம் இல்லாமல் கல்வி சேவை அல்லது கற்பித்தல் என்பது கேலிக்குரியது. மேலும் ஆசிரியர்களும் மாணவர்களும் ‘புத்தகப் பூச்சிகள்’ ஆகிவிடுவார்கள்.

பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் அப்படி ஆக வேண்டும் என்று நாடும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவும் பல்கலைக்கழகமும் விரும்புகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இப்போது பல்கலைக்கழக பட்டதாரிகள் வேலையற்றவர்களாகவும் படைப்பாற்றல் மற்றும் திறனாய்வு திறன் அற்றவர்களாகவும் மாறுவது குறித்து கடும் விமர்சனங்கள் உள்ளன.

உண்மையான கள அனுபவம் என்பது நமது ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஆக்கபூர்வமான ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் மாற்றுவதற்கான உறுதியான வழியாகும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் கடந்த 20 ஆண்டுகளாக பல்கலைக்கழக அமைப்பில் இந்த வெற்றிட நிலை குறித்து புலம்பி வருகின்றன.

உண்மையான கல்வி, நிர்வாக உரிமை மற்றும் சுயாதீனம் ஆகியவற்றைக் கொண்ட பேரவையானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த கல்விசார் முடிவினுடைய சட்டப்பூர்வ செல்லுபடித்தன்மையை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள பல உயர் மட்ட சட்ட வழக்குகளை அவர் கையாண்டு வருகிறார் என்பது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள பலர் உட்பட நாம் அனைவரும் அறிவோம்.

விசேடமாக வடக்கு-கிழக்கு பகுதியில் பல குடிமக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்களுக்கான குற்றவாளிகள் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட அவர் அயராது முயன்று வருகிறார் என்பது வெளிப்படை.
இதன் விளைவாக அவர் நீதி மற்றும் நியாயத்திற்கான தனது சட்ட போராட்டத்திற்கு எதிராக பல அச்சுறுத்தல்கள் எதிர் கொள்கிறார்.

நீதிமன்றங்கள் மூலம் குற்றங்களுக்கு எதிரான நியாயம் வழங்கும் அவரது போராட்டத்தில் இருந்து அவரை அகற்றுவதற்கான ஒரு முயற்சியே இதுவாகும். இது கலாநிதி குருபரன் மீதான துன்புறுத்தலாகவே தீவிரமாக கருதப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் அவரது கல்விசார் பதவி துறத்தல் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. அது நிறுவனத்தின் ஒரு பாரிய இழப்பாகவே அமையும். அவர் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வடக்கு கிழக்குச் சமூகம் அவரை ஒரு மனித உரிமை பாதுகாவலனாகவே பார்க்கிறது. அவரது அமைதியான மற்றும் நியாயமான மனித உரிமைப் பணிகளுக்காக அவர் பழிவாங்கப்படுகிறார்.

அவருக்கு எதிரான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க பல்கலைக்கழக பேரவையையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் எமது கல்விச் சமூகம் கோருகிறது.

இதனால் அவர் சட்டத்தில் ஒரு மூத்த கல்வியாளராக கற்பித்தல் மற்றும் வழக்காடுதல் ஆகியவற்றில் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் மூலம் நீதி தேடுவதில் அவர்களுக்கு உதவும் ஒரு மூத்த வழக்கறிஞராக செயல் படவும் வேண்டும்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More