இலங்கை பிரதான செய்திகள்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கண்ணதாசன் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட ஆயுட்கால  சிறைத் தண்டனைத் தீர்ப்பை ரத்துச் செய்த
மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்கை  மேல் நீதிமன்றில் மீள விளக்கத்துக்கு எடுக்கவும் கட்டளையிட்டது.
கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில் இந்தக் கட்டளையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வழங்கியது. இந்த மேன்முறையீட்டு மனு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்டு கடந்த மே மாதம் 13ம் திகதி  வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டாளர் கண்ணதாசனால் மேன்முறையீடு செய்யப்பட்டு  எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில் வவுனியா மேல் நீதிமன்றினால்   வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை நியாயப்படுத்த முடியவில்லை என்றும் அதனால் மீண்டும் விளக்கத்துக்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் அன்றைய தினம்  சட்ட மா அதிபர்  சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார்  குமார் ரட்ணம் விண்ணப்பத்தை முன்வைத்தார்.
ஏற்கனவே இடம்பெற்ற விசாரணையை நியாப்படுத்த முடியவில்லை என சட்டமா அதிபர்  ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட வேண்டுமே அன்றி மீள் விளக்கத்துக்கு இணங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்  மன்றுரைத்திருந்தார்.  அன்றைய தினம்  மேன்முறையீட்டாளர் மன்றுக்கு அழைத்துவரப்பட்டிருக்கவில்லை.  அதனால்  குற்றம் சாட்டப்பட்டவரையும் அழைத்துவருமாறும் மீள் விசாரணையா அல்லது விடுதலையா என்பதற்கான கட்டளையை வழங்குவதாக  இந்த வழக்கு இன்றைய  தினத்திற்கு  ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று  எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, பிரியங்க பெர்னாண்டோ ஆகியோர் கொண்ட அமர்வு கட்டளையை வழங்கியது.
கண்ணதாசன் குற்றவாளியாக காணப்பட்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட   ஆயுள் தண்டனைத் தீர்ப்பை ரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் மேல் நீதிமன்றில் மீள விளக்கத்துக்கு உள்படுத்துமாறு கட்டளை வழங்கியது.
பின்னணி. 
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக, தமிழீழ இசைக் கல்லூரியின் முன்னாள் பொறுப்பாளரும்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு யூலை மாதம் 26ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. அந்த வழக்கில் கண்ணதாசனை குற்றவாளியாக கண்ட வவுனியா மேல் நீதிமன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. #ஆயுள்தண்டனை  #கண்ணதாசன் #விடுதலை #தமிழீழவிடுதலைப்புலிகள்  #மிருதங்கவிரிவுரையாளர்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap