Home இலங்கை குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்

குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்

by admin

நீதி நிலை நிறுத்தப்படுவதற்கான முறைமையின் மீதும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் மீதும் மேற்கொள்ளப் பட்டுள்ள மிக மோசமானதும், கீழ்த்தரமானதுமான தாக்குதலாகவே கலாநிதி குமரவடிவேல் குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடையை நாம் நோக்குகிறோம்”

இவ்வாறு தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கையிட்டுள்ளது.

இதுதொடர்பில் அமையத்தின் செயலாளர் அ. கஜேந்திரன், பேச்சாளர் வி. யோகேஸ்வரன் ஆகிய இருவரும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறைத் முதுநிலை விரிவுரையாளர், கலாநிதி குமரவடிவேல் குருபரன், நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகி வாதாடுவதற்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கலாநிதி குருபரன் சட்டத்தரணியாக செயற்படுவதற்குரிய தமது உரிமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கு விசாரணை தொடர்ச்சியாக பிற்போடப்படும் நிலையில் பிந்திய முடிவாக இவர் தமது சட்டத்துறை விரிவுரையாளர் பதவி நிலையிலிருந்து விலகியுள்ளார்.

பல்கலைக்கழகங்களிற்கான தாபனக் கோவையின், எட்டாவது பிரிவின் கீழ், நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகி வாதாடுவதற்கான அனுமதியை முறையாகப் பெற்று, 2011ஆம் ஆண்டு முதல் கலாநிதி குருபரன் பல்வேறு பொது நல வழக்குகளில் வாதாடி, நீதி நிலை நிறுத்தப்படுவதற்குத் துணையாக இருந்து வந்துள்ளார்.

இந்த வகையில், 1996ம் ஆண்டு, ஜூலை மாதம் 19ம் திகதி நாவற்குழி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் கைது செய்யப் பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் மூவரினது உறவினர்கள் தொடுத்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் அவர் வாதாடி வந்தார். இதனால் அதிருப்தியடைந்த இலங்கை இராணுவத்தின் தலைமைப் பீடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினூடாக இத் தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

நீதி நிலை நிறுத்தப் படுவதற்கான முறைமையின் மீதும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் மீதும் மேற்கொள்ளப் பட்டுள்ள மிக மோசமானதும், கீழ்த்தரமானதுமான தாக்குதலாகவே இத் தடையை நாம் நோக்குகிறோம்.

பல்கலைக்கழகங்களில் நடப்பிலுள்ள தாபன விதிக் கோவையின் விதி முறைகளுக்கமைவாக முறையான அனுமதி பெற்ற பின்னரே கலாநிதி குருபரன் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகி வாதாடி வருகிறார். எனவே ஏற்றுக் கொள்ளப் பட்ட விதிமுறைகளுக்கமைவாக வழங்கப்பட்ட அனுமதியை, இத் தடை எதேச்சாதிகாரமான முறையில் மறுதலிக்கிறது. இது அநீதியானது.

பிரயோகம் சார்ந்த, தொழில் வாண்மைக் கற்கை நெறிகளில், கற்பிப்பவர்கள் நேரடியான பிரயோக அனுபவத்தைத் தொடர்ச்சியாகப் பெறுவதை உறுதிப் படுத்தி, அதனூடாகக் கற்பித்தற் தரத்தை மேலும் செழுமையடையச் செய்யலாம் என்ற அடிப்படையில் உலகம் முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்கள் இவ்வாறான நடைமுறையினை ஊக்குவித்து வருகின்றன. இவ்வகையில், மருத்துவத் துறை, பொறியியற் துறை, சட்டத் துறை போன்ற இன்னோரன்ன துறைகளில், கற்பிப்பதற்கு மேலாக தத் தம் துறைகளில் பிரயோக நிலைத் தொழிற்பாடுகளில் ஈடுபடுவது அங்கிகரிக்கப் பட்ட நடைமுறையகவே இருந்து வருகிறது. இவ்வாறான நடைமுறையின் மீதான தடை வழமைக்கு மாறானதொன்று.

பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு உறுதுணையாக விளங்கவல்ல தரமான சட்ட உதவியினைத் தடுப்பதனூடாக நீதி வழங்கலைத் தடுப்பதையும், அதன் வழி குற்றம் புரிந்தோரைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டே இத் தடை ஏற்படுத்தப் பட்டுள்ளது. தமது குற்றமற்ற தன்மையை நிரூபிக்கத் தேவையான உச்ச கட்ட சட்ட நிபுணத்துவம் சட்ட மா அதிபர் திணைக்களத்தினூடாக இலங்கை இராணுவத்திற்குக் கிடைத்து வருகிறது. அதன் வழி தமது நியாயத் தன்மைகளை நிரூபிப்பதை விடுத்து, சாதாரண குடிமக்களுக்குக் கிடைக்கக் கூடிய சட்ட உதவிகளைத் தடுப்பதனூடாக தமது நலன்களைப் பாதுகாக்க விழையும் கயமைத்தனமான செயற்பாட்டினையே இலங்கை இராணுவம் முன்னெடுத்து வருகிறது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இந்த நடவடிக்கைக்கு ஒத்திசைவாக நடந்து கொண்டிருப்பதன் மூலம், சிங்கள-பௌத்தப் பேரினவாத மனநிலை கொண்ட பல்வேறு பொது நிறுவனங்களில் தமதும் ஒன்று என்பதை நிரூபித்துள்ளது.

மீள நிகழாமை மற்றும் பொறுப்புக் கூறலுக்கான பொறிமுறை உள்ளகப் பொறிமுறையாக இருக்க முடியாது என்பதற்கான நிதர்சனமான உதாரணமாகவும் இத்தடை முயற்சி விளங்குகிறது. அதியுயர் கல்விசார் விழுமியங்களைப் பேண வேண்டிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட, அனைத்து நிறுவனங்களும் கூர்மையான இனத்துவச் சார்பு நிலை கொண்டுள்ளமையையும், நீதி வழுவா நெறிமுறை இங்கு இல்லை என்பதையும் இச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

அவர் தொடுத்திருந்த வழக்கில் அவருக்கெதிரான மேலதிக சான்றுகளாக அடையாளம் கொள்கை ஆய்வு மன்ற அறிக்கைகளும் தமிழ் சிவில் சமூக அறிக்கைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் பின்னால் உள்ள இராணுவ அரசியல் நோக்கங்களை தெளிவு படுத்தியுள்ளது.

இத்தகைய உள்நோக்கம் கொண்ட பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒரு அறிவுறுத்தலை யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை போதிய உசாவுதல் இன்றி அவசர அவசரமாக நடைமுறைப்படுத்த முன்வந்தமை அது இவ்விடயத்தில் சுதந்திரமாக முடிவெடுக்கும் தனக்குரிய சுயாதீனத்தை இழக்கும் அவல நிலைக்கு அதனைத் தள்ளியுள்ளது.
இதனடிப்படையில்,

இத் தடைக்கு எதிராக சகல வழிகளிலும் ஒன்றிணைந்து குரல் கொடுக்குமாறு அனைத்து மக்களையும், பொது அமைப்புகளையும் வேண்டுகிறோம்.இத் தடையை நீக்குவதற்கு ஏதுவான அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு இராஜதந்திரத் தரப்பினரையும், சட்டத் துறையைச் சார்ந்தவர்களையும் வேண்டுகிறோம்.

தனக்குரிய சுயாதீனத்தை துணிவோடு பயன்படுத்தி கலாநிதி குருபரனுக்குரிய உரிமையை உரிய முறையில் நிலைநாட்டுவதன் மூலம் தனது கௌரவத்தை பேணிக்கொள்ள முன்வர வேண்டுமென்று யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையை பற்றுரிமையோடு கோருகின்றோம். இத் தடையை உடனடியாக நீக்குமாறு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவைக் கோருகிறோம்- என்றுள்ளது. #தமிழ்சிவில்சமூகஅமையம்  #தடை  #குருபரன்  #சட்டத்தரணி

Spread the love
 
 
      

Related News

1 comment

PONNUTHURAI PARANSOTHY July 24, 2020 - 5:50 am

There is no such restriction in developed countries.

Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More