Home இலங்கை பெத்த மனம் – பு.ரதிகலா…

பெத்த மனம் – பு.ரதிகலா…

by admin

கோப்பு படம்..

முல்லைத்தீவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்த பேரூந்தின் ஓர் யன்னலோர இருக்கையில் கமலா அமர்ந்திருந்தாள். குழிவிழுந்த கண்களும், கலைந்த தலைமுடியும், ஆங்காங்கே அழுக்கடைந்திருந்த சேலையும், கையில் பிடித்திருந்த அவளுடைய பையும் அவளுடைய ஏழ்மைத் தன்மையை பறைசாற்றின. ஆனால் அவளுடைய கண்களில் மட்டும் தனது லட்சியம் நிறைவேறப் போவதான சந்தோசத் தாண்டவம் தென்பட்டது. அதுதான் அவளுடைய வாழ்க்கையின் கனவு. பேரூந்து முன்னோக்கிச் செல்லச் செல்ல அவளது நினைவுகள் மாத்திரம் பின்னோக்கி செல்கின்றது.

கமலாக்கு ஒரேயொரு மகள். அன்று ஒரு நாள் அம்மா…என்று அழைத்தவாறு மிகுந்த சந்தோசத்துடன் ஓடி வந்தாள் ஆரணி. கமலா தனது மகளிடம் என்னம்மா இவ்வளவு சந்தோசமாக ஓடி வறாய் எனக் கேட்டாள். ஆரணி அம்மா நான் கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடத்திலையும் “3ஏ” என்று கூறினாள். கமலா தனது மகளை விட மிகவும் சந்தோசப்பட்டாள். சந்தோசத்தில் தனது மகளைக் கட்டியணைத்து முத்தமிட்டாள். கமலாவினுடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காரணம் தான் தனது சிறுவயதில் ஒருவேளை சாப்பாடு கூட இல்லாமல் கஸ்டப்பட்டு இப்போதும் க~;டத்தையே அனுபவிப்பதை எண்ணியும், தனது மகள் மேலும் பல்கலைக்கழக படிப்பைப் படித்து ஒரு வைத்தியரானால் தன்னைப் போல கஸ்டப்படமாட்டாள் என்று எண்ணியதும், அவளது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதற்கிடையில் இவர்களுடைய சல சலப்பைக் கேட்டு வீட்டுக்குள் இருந்து வருகிறார் ஆரணியின் அப்பா சின்னசாமி.

கமலா :- “என்னங்க நம்ம பிள்ளையப் பாருங்க. கெட்டித்தனமாகப் படிச்சு “மூனு ஏ” வாங்கியிருக்கா. மாவட்டத்திலையும் முதலாம் இடமாம். ஏவ்வளவு சந்தோசமா இருக்குங்க. நாங்க இன்னும் எப்படி வேணுமானாலும் க~;டப்பட்டு நம்ம புள்ளைய பல்பலைக்கழகத்துக்கு அனுப்பி படிக்க வைக்கணும். நீங்க என்ன சொல்றீங்க”.

சின்னசாமி :- ஓம் கமலா நம்ம புள்ளைய எப்படியாவது மேல் படிப்பு படிக்க வைச்சு பெரிய ஆளா பார்க்கணும் எண்டுதானே நானும் ஆசைப்படுறன். (கண்களில் கனவுகளுடன்.) தனது மனைவியையும், மகளையும் தனது உயிராக சின்னசாமி நேசித்தார். ஊரார் பொறாமைப்படும்படி மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் விதி இவர்களுடைய சந்தோசத்தை நிலைக்கவிடவில்லை. தனது மகளை மேல் படிப்பு படிக்க வைக்க அதிக பணம் தேவைப்படுமே. எவ்வாறு இக் கஸ்டத்தில் என் மகளை படிக்க வைப்பேன் என்று ஆழ்ந்த யோசனையில் இருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னர் தனது மனைவியிடம்,

சின்னசாமி :- இனி மகளுக்கு எல்லாமே நீதான். அவளை எப்படியாவது க~;டப்பட்டு வைத்தியராக்கிடு. உன்ன தனிய கஸ்டப்பட விட்டுட்டுப் போறன் என்றத நினைக்க கவலையா இருக்கு. என்னை மன்னித்து விடு கமலா.

சின்னசாமி இவ்வாறு கூறியதும், அவரது உயிர் அவரை விட்டுப் பிரிந்தது. தனது கணவனின் பிரிவால் அவளது இதயமே கண்ணாடி உடைந்ததைப் போல நொருங்கியது.

கணவனைப் பிரிந்தாலும் தன்னம்பிக்கையுடன் தனது ஆசையையும், தனது கணவனின் ஆசையையும் நிறைவேற்ற எண்ணம் கொண்டாள் கமலா. மனது மகளைப் படிக்க வைக்க தனது கணவன் வேலைசெய்த தோட்ட முதலாளி வீட்டில் சமையல் வேலை செய்து தனது மகளைப் படிப்பிக்கின்றாள். படிப்பில் மிகவும் கெட்டிக்காரியான ஆரணி தற்போது மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கின்றாள்.

பேரூந்தின் கோர்ண் சத்தம் கேட்டதும் கமலா சுயநினைவுக்கு வந்து திடுக்கிட்டுப் பார்த்தாள். பேருந்து மட்டக்களப்பை அடைந்திருந்தது. கமலா பேரூந்திலிருந்து இறங்கி பல்கலைக்கழகம் நோக்கி நடந்து பல்கலைக்கழகமும் நுழைந்தாள்.

ஆரணி, ஆரணி… உன்ன பார்க்க யாரோ வந்திருக்காங்க. யாரென்னு கேட்டா உன்னோட அம்மாவாம் என்று ஆரணியின் தோழி முகத்தைச் சுழித்த படி கூறினாள். ஆரணி தன் காதலனின் கையிலிருந்து தனது கையை விடுவித்த படி தாயிடம் கோபத்துடன் விரைந்து சென்றாள்.

பெத்த மனதுக்குத் தெரியாது தன் மகளின் குணம் மாறியது. மகளைக் கண்ட கமலா ஓடிச்சென்று தனது கைகளால் ஆசையோடு மகளின் முகத்தை வருடி கட்டியணைத்தாள். உடனே தாயின் கைகளை வெறுப்புடன் தட்டி விட்டு தாயைப் பார்த்து,

கமலா :- ஏம்மா இங்கயெல்லாம் வந்தனீ? இப்ப என்ன அவசரம்? நான் என்ன செத்தா போய்டன். இங்க வந்து ஏன் என்னோட மானத்த வாங்கிறீங்க. எதுவானாலும் போன்ல பேசியிருக்கலாம் தானே. நீங்க வரலன்னு யார் அழுதது? அதுவம் இப்படி அழுக்கான சேலையையும் கட்டிக்கொண்டு, ஏன் என்னட சொல்லாம வந்தீங்க? என்னை மகளெண்டு சொல்லுறது உங்களுக்கு வேணுமெண்டா பெருமையா இருக்கும் ஆனா எனக்கு அப்படியில்லை. அதோட நான் இங்க ஒரு பையனையும் காதலிக்கிறன். அவனத்தான் திருமணமும் செய்யப்போறன். மற்ற எல்லாம் போன்ல சொல்றன். இப்ப கெதியா போங்க. போனதும் எனக்கு பணம் போடுங்க.

இவற்றையெல்லாம் கேட்டதும் கமலாவின் மனமானது இரண்டாகப் பிளந்தது. சற்று நேரம் தனது மகளையே கண்ணிமைக்காமல் பார்த்து விட்டு புறப்பட்டாள். போகும் போது தன் மகளினுடைய மாற்றத்தை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகளினுடைய மாற்றத்திற்கான காரணத்தை அவளால் உணரவும் முடியவில்லை. “பெத்த மனம் பித்துப் பிடித்தது…” போல நடந்து சென்றாள்.

மகளின் முன் அழாமல் அழுகையை அடக்கி வைத்திருந்து தன் மகளினுடைய மாற்றத்தினையும், தன் கணவரின் பிரிவையும் எண்ணி தன் வீடு வந்ததும் கணவரின் படத்தின் முன்னிலையில் நின்று ஓ…என்று கதறி அழுதாள்.

கமலா :- யாருக்கும் என்னோட நிலமை வரக்கூடாது. கணவனை இழந்தும், பெத்த பிள்ளையே தாயை ஒதுக்கும் நிலைமை வரக்கூடாது என்று அழுதாள்.
பாவம் கமலாக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமில்லாத நிலைமை. மறுநாள் மகள் நடந்து கொண்ட விதத்தையெல்லாம் மறந்து என்னோட பிள்ளைதானே பாவம் அவளுக்கு நான் தானே இருக்கிறன் என்று தன் மனதுக்குள் அலசியபடியே மகளுக்கு பணம் அனுப்ப வேணும் என்று வீட்டு வேலைக்குப் புறப்பட்டாள் தனது உடல் நிலை மோசமான நிலையிலும். வீட்டு வேலைக்குப் போனதும் அவ் வீட்டுக்காரி,

வீட்டுக்காரி :- என்ன கமலா பிள்ளையப் பார்க்க லீவு கேட்டுப் போனாய். மகள் எப்படி இருக்கிறாள். உன்னக் கண்டதும் கட்டியணைத்து போகாத அம்மா என்று அழுதாளா?

கமலா :- (கமலா தனது மனதுக்குள் சோகங்களையெல்லாம் அடக்கி) “ம்ம்ம்.. அவ நல்லா இருக்கிறா. பணம் கொஞ்சம் வேணுமாம்.

வீட்டுக்காரி :- அதுதான்…” போகும் போதுதான் உனக்கு பணம் தந்தனான் தயவு செய்து என்னட மட்டும் கேட்டிடாத. அப்போ அந்த பணத்தை நீ என்ன செய்தனீ.

கமலா :- அந்த பணத்தை ஆரணியிட்ட குடுத்துடு வந்திடன் அந்தப் பணம் காணாதாம் அதுதான் என்ன செய்ற எண்டே தெரியாம இருக்கு.

கமலா. தொடர்ந்து எதுவும் கேட்க விரும்பாதவளாக வீட்டு வேலைகளை முடித்து விட்டு தனது வீடு நோக்கி புறப்பட்டாள். தன் வீட்டிற்குள் சென்றதும் பெட்டியைத் திறந்து பெட்டிக்குள் உள்ள சேலை முடிச்சை அவிழ்த்தாள். அதற்குள் இருந்த மோதிரம் அவளை இருபத்தைந்து வருடத்திற்கு முன் கொண்டு சென்றது. கமலா என்றழைத்தபடி சின்னசாமி வீட்டிற்குள் நுழைந்தார். கணவரின் அருகே வந்தாள் கமலா.

கமலா :- என்னங்க ஏன் கூப்பிட்டிங்க?

சின்னசாமி :- உன் கையை ஒருக்கா தாவன்.

அவளும் கைகளை நீட்ட சின்னசாமி மோதிரத்தைப் போட்டு விட்டார்.

கமலா :- “ஏதுங்க மோதிரம்? ரொம்ப விலையா இருக்குமே” என்று சந்தோசத்துடனும், ஆச்சரியத்துடனும் கேட்டாள்.

சின்னசாமி :- ஆமா இண்டைக்கு என்ன நாள். நினைச்சுப்பார்.கமலா :- எனக்கு ஞாபகம் இல்லையே.

சின்னசாமி :- என் செல்லமே நாம கலியாணம் செய்து ஐந்து வருடம் ஞாபகம் இருக்குதா? அப்போதுதான் கமலாவுக்கு ஞாபகம் வந்தது. இவ்வளவு அளவற்ற அன்பு கொண்டவன் சின்னசாமி. தனது குடும்பத்தை எண்ணியே வாழ்க்கையை நடத்துபவன்.

சின்னசாமி :- நான் இதுவரைக்கும் உனக்கெண்டு எதுவும் வாங்கித்தரவும் இல்லை. அவ்வளவுக்கு வசதியும் இல்லை. என்னோட நிலைமை உனக்குதெரியும் தானே. அதுதான் இந்த வருடமாவது உனக்கு மோதிரம் வாங்கித் தரனும் என்று எண்ணி சிறுகச் சிறுக பணம் சேர்த்து இப்ப இந்த மோதிரத்தை வாங்கித் தந்தன் என்று கூறியவாறு தன் மனைவியின் கையைப் பிடித்து மோதிரம் போட்டு விட்டான் சின்னசாமி. பின்னர் எந்த கஸ்டம் வந்தாலும் இந்த மோதிரத்தை நீ விற்கக் கூடாது. என்னோட ஞாபகமாவே உன்னட இருக்கனும் என்றான்.

மீண்டும் சுயநினைவுக்கு வந்த படியே தன் கணவனை நினைத்து அழுதாள். மோதிரத்தை எடுத்து தன்னோட சேலைத் தலைப்பில் முடிந்து கொண்டு பின் சுவரில் படமாகச் சிரித்துக் கொண்டிருக்கும் தன் கணவனைப் பார்த்து,

கமலா :- “என்னை மன்னிச்சிடுங்க, இத விட்டா எனக்கு வேற வழி தெரியலங்க”

என்று கூறியபடி மீண்டும் கதறி அழுதாள். அப்போது சுவரில் நின்ற பல்லி சத்தம் எழுப்பியதும் தன் கணவர் சம்மதித்து விட்டார் என்று எண்ணியபடி எழுந்து அடகுக்கடையை நோக்கிப் புறப்பட்டாள்.

மோதிரத்தைப் பணமாக்கி பணத்தை தன் மகள் ஆரணியின் பெயரிலேயே அனுப்பி வைத்தாள். கமலா தன் மனதிலுள்ள பாரத்தை தீர்த்துக் கொள்ள கோயிலை நோக்கிச் சென்றாள். கோயில் சென்றதும் இறைவனிடம் தன் மனவேதனை தீர அழுது முடித்தாள். அர்ச்சனைத் தட்டை ஐயரிடம் நீட்டி “ஆரணி சித்திரை நட்சத்திரம்” என்றாள்.
பு.ரதிகலா
நுண்கலைத்துறை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More