Home இலங்கை மானிப்பாய் பிரதேச சபையின் குடிநீர் கட்டுப்பாட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி

மானிப்பாய் பிரதேச சபையின் குடிநீர் கட்டுப்பாட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி

by admin

மானிப்பாய் பிரதேசத்திலிருந்து காரைநகர் பகுதிக்கு குடிதண்ணீர் எடுத்துச் சென்று விநியோகிப்பதனைக் கட்டுப்படுத்தும் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் தீர்மானத்துக்கு எதிராகவும் அந்தக் குடிதண்ணீர் சேவையினை கொண்டு நடாத்துவதினை பிரதேச சபை தடை செய்யக்கூடாது எனக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட் தடையீட்டு எழுத்தாணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

காரைநகர் பயிரிக்கூடலைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நடராசா என்பவர் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையை எதிர்மனுதாரராகக் குறிப்பிட்டு இந்த எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மானிப்பாயிலிருந்து காரைநகருக்கு குடிதண்ணீர் வழங்கல் சேவையினை தடுத்து நிறுத்தும் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் 2019 மார்ச் 19ஆம் திகதிய கடிதம் மூலமான தீர்மானத்தினை இரத்துச் செய்யும் உறுதிகேள் எழுத்தாணை கட்டளையை வழங்குதல்.

வலி. தென்மேற்கு பிரதேச சபை தொடர்ந்தும் குறித்த குடிதண்ணீர் சேவையினை கொண்டு நடாத்துவதினை எதிர்மனுதாரர்கள் அவர்களது முகவர்கள், ஏவலாட்கள், எவ்விதத்திலும் தடை செய்யக்கூடாது என தடையீட்டு எழுத்தாணை கட்டளையைப் பிறப்பித்தல் உள்ளிட்ட நிவாரணங்களுடன் இடைக்கால நிவாரணத்தையும் மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது. இந்த மனு மீதான கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் வழங்கினார்.

கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

எழுத்தாணை கோரி நிற்கும் தரப்பானது மிகவும் நேர்மையாக, உண்மையாக சுத்தமாக வேறு மாற்று நிவாரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் துரிதமாக, தேவையான அக்கறை, பொறுப்பு என்பவற்றுடன் தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புத் தொடர்பில் ஒழிவுமறைவற்ற கோரிக்கையை முன்வைத்து நீதிமன்றிடம் நிவாரணம் பெறமுடியும், மாறாக திட்டமிடப்பட்ட தீய நோக்கங்களுடன் தந்திரமாக மன்றில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மன்றினால் முற்றாக நிராகரிக்கப்பட முடியும் என்பது முற்தீர்ப்புகளில் குறிப்பிடப்படுகின்றது.

உறுதிகேள் எழுத்தாணை எனப்படும் பொழுது, குடிமக்களின் உரித்துக்கள் தொடர்பிலான பிணக்குகளை தீர்மானம் செய்யும் சட்ட அதிகாரமுள்ள நபர் சட்டப்படியாக செயற்படும் கடமையைக் கொண்டுள்ள வேளையில், சட்டப்படியான அதிகாரத்திற்கப்பால் செயற்பட்டு அதிகார வரம்பு மீறியிருந்தால் அது உறுதிகேள் எழுத்தாணை மூலம் கட்டுப்படுத்தப்படலாம் என்பது அடிப்படைக் கருவூலங்களாக அமைகின்றது.

தற்றுணிவு நிவாரணமாகிய எழுத்தாணைக் கோரிக்கையின் பொழுது, அந்தக் கோரிக்கை நியாயமானதாக இல்லாதவேளையில், அதனை மறுக்க முடியும் என்பது சட்டவிளக்கமாக அமைகின்றது. மனுதாரரிடமுள்ள கீழ்த்தரமான நோக்கம் மனுதாரர் குறித்த நிலமையை ஏற்படுத்துவதில் சம்மதித்து கையளித்தமை, மனுதாரர் தமது உரித்தைக் கைவிட்டுள்ளமை போன்ற பலகாரணங்களினால் உறுதிகேள் எழுத்தாணை விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் எனவும் தீர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளாக அமைகின்றது.

இந்த விண்ணப்பத்தில் எதிர்மனுதாரரான வலி.தென்மேற்கு பிரதேச சபையின் 19.03.2019ஆம் திகதிய தீர்மானத்தை இரத்து செய்யும் உறுதிகேள் எழுத்தாணை கோரப்பட்டுள்ளது.

வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன், மனுதாரருக்கு அனுப்பிய கடித்தில் “எமது பிரதேச எல்லைக்குள் இருந்து காரைநகர் பகுதிக்கு நீர் வழங்குதல் தொடர்பாக எமது சபையால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக காரைநகர் பிரதேச சபையினருடன் ஓர் ஒழுங்குமுறையான நடைமுறைக்கு நாம் வந்துள்ளோம். இதனடிப்படையில் காரைநகர் பகுதிக்கான நீர் வழங்கலினை காரைநகர் பிரதேச சபையினர் பொறுப்பேற்று கிரமமாக மேற்கொண்டு வருகின்றனர்.

எமது பகுதியிலிருந்து கூடிய அளவு நீர் உறிஞ்சப்படுவதால் எமது பகுதி நீர் உவர்த்தன்மையுற்று வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் காரைநகர் பகுதிக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் குடிதண்ணீரை மட்டுமே எம்மால் வழங்க முடியும். எனவே இதற்கு மேலதிகமாக தங்களால் தனிப்பட்ட ரீதியிலும், எமது அனுமதியற்ற முறையிலும் நீர் பெற்றுக் கொள்வதற்கு எம்மால் அனுமதிக்க முடியாது.

எனவே எமது சபை எல்லைக்குள் இருந்து நீர் பெற்றுச் செல்வதனை உடனடியாக நிறுத்துமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். இதற்கு மேலதிகமாக தாங்கள் இச்செயற்பாட்டில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் தங்கள் மேல் உரிய சட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம் என்பதனையும் தங்களுக்கு அறியத் தருகின்றேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறித்த ஆவணம் ஆழமாக பரிசீலிக்கப்படுமிடத்து, அது பிரதேச சபையின் தவிசாளரரினால் அனுப்பப்பட்ட ஒரு கடிதமாகக் காணப்படுகின்றது. மாறாக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தீர்மானமாக அக்கடிதம் அமையவில்லை. உறுதிகேள் எழுத்தாணையானது வரம்பு மீறி எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கு கோரப்படலாம்.

எனினும் வலி.தென்மேற்கு பிரதேசசபையின் தீர்மானமாக அடையாளப்படுத்தப்பட முடியாத நிலையில், குறித்த 19.03.2019ஆம் திகதிய ஆவணம் மூலமான தீர்மானத்தை இரத்துச் செய்வதற்காக உறுதிகேள் எழுத்தாணை பிறப்பிக்கப்பட முடியாது என்பது குறிப்பிடப்படுகின்றது. அதாவது மனுதாரரினால் கோரப்பட்ட உறுதிகேள் எழுத்தாணை சம்பந்தப்பட்ட அடிப்படையான 19.03.2019ஆம் திகதிய கடிதம் பிரதேச சபையினது தீர்மானமாக அமையாத நிலையில், அவ்வாறான உறுதிகேள் எழுத்தாணை வழங்கப்பட முடியாது என்பது குறிப்பிடப்படுகின்றது.

மனுதாரர் எதிர்மனுதாரரின் தீர்மானத்தை ரத்துச் செய்கின்ற உறுதிகேள் எழுத்தாணை கோரியுள்ளார். உறுதிகேள் எழுத்தாணை எனப்படும் பொழுது சட்ட அதிகாரமுள்ள நபரொருவர் சட்டப்படியாக செயற்படும் கடமை தவறி சட்டப்படியான அதிகாரத்திற்கு அப்பால் செயற்பட்டால் மட்டுமே உறுதிகேள் எழுத்தாணை வழங்கப்பட முடியும். அதிகாரம் மீறப்பட்டு முறைகேடு செய்யப்பட்டு இயற்கை நீதிக்கோட்பாடுக்கு மாறாக செயற்பட்டு தீர்மானம் எடுத்திருந்தால், அத்தீர்மானமானது உறுதிகேள் எழுத்தாணை மூலம் ரத்துச் செய்யப்படலாம். இந்த விண்ணப்பத்தில் மனுதாரர் கோரும் உறுதிகேள் எழுத்தாணையானது 19.05.2020ம் திகதிய எதிர்மனுதாரரின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் வகையிலானதாகும்.

குறித்த எதிர்மனுதாரரின் தீர்மானமானது வரம்பு மீறியதென்றோ, அதிகார துஸ்பிரயோகமானதென்றோ, எவ்வித நிலைப்பாடுகளும் மனுதாரினால் முன்வைக்கப்படவில்லை. மனுதாரர், நீர் பெறுவதனை தடுக்கக்கூடாது என்ற வகையிலான கோரிக்கையே காணப்படுகின்றது. எனவே மனுதாரரின் உறுதிகேள் எழுத்தாணை கோரிக்கையானது அவசியமான கரூவூலங்கள் தொடர்பில் கவனத்தில் எடுக்கப்படாது முன்வைக்கப்பட்டுள்ளமை காரணமாக செறிந்த சட்டவழுவை கொண்டுள்ளதாக மன்று வெளிப்படுத்துகின்றது.

அதாவது எதிர்மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகளில் ஒன்றான மனுதாரரின் விண்ணப்பம் சட்டவழுவை கொண்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட நிலைப்பாடு இம்மன்றினால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

பிரதேச சபையொன்று அப்பிரதே சபைக்கும், வீட்டுத் தேவைகள் அல்லாத நோக்கங்களுக்காக நீர்வழங்கலை விரும்பும் ஆட்களுக்குமிடையே உடன்பாடு செய்து கொள்ளப்படக் கூடியவாறான அல்லது அதற்கெனத் துணைவிதிகளினால் விதித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய அளவுகளிலும் அத்தகைய நியதி நிபந்தனைகளின் மீதும், வீட்டுத் தேவைகள் அல்லாத நோக்கங்களுக்காக நீர் வழங்கலாம் அல்லது வீட்டுத் தேவைகளுக்காக எவையேனும் வளவுகளுக்குத் தனிப்பட்ட நீர்ச்சேவையொன்றை அனுமதிக்கலாம்.

மேற்குறித்த பிரிவுகளின் ஆழமான ஆராய்வானது பிரதேச சபைகளானவை தமது பிரதேசங்களுக்கு உட்பட்ட நீர் வளங்கள் நீர் வசதிகள் போன்றவை தொடர்பில் போதிய தத்துவங்களையும், அதிகாரங்களையும் கொண்டுள்ளது. இந்த வகையில் மனுதாரரால் சாட்டப்பட்ட அதிகார தத்துவமின்றி அல்லது அதிகார வரம்பு மீறி எதிர்மனுதாரர் செயற்பட்டுள்ளார் என்ற நிலைப்பாடானது முற்றிலும் தவறுகின்றது.

மனுதாரரின் கோரிக்கையில் உள்ள குறைபாடுகள், எழுத்தாணைகளுக்குத் தேவையான கருவூலங்கள் தொடர்பில் திருப்திப்பாடு ஏற்படுத்தப்படாதமை, மனுதாரரிடம் உள்ள கீழ்த்தரமான நோக்கம் என்பவற்றின் அடிப்படையில் மனுதாரரின் நிவாரணக் கோரிக்கைகளை மன்று நிராகரித்து, மனுதாரரின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்கின்றது. என கட்டளையில் குறிப்பிட்டுள்ளார்.  #மானிப்பாய் #காரைநகர்  #குடிதண்ணீர்  #பிரதேசசபை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More