கருத்து முரண்பாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் குடும்ப பெண்ணை தேடிச் சென்ற கணவர், சித்திரவதையின் பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த ஊரெழுவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 34 வயதுடைய குடும்பப் பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். குப்பிளான் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
படுகாயமடைந்த குறித்த பெண் தனது கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் குப்பிளான் பகுதியில் வீடொன்றில் முதியவரை பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார் . இந்த நிலையில் பணி புரியும் வீட்டின் முதியவர் சுன்னாகம் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அந்தப் பெண் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அதன்போது அங்கு சென்ற கணவர், மனைவியின் தலைமுடியை வெட்டி எறிந்து அவரின் முகத்தில் கத்தியால் கீறி சித்திரவதை செய்துள்ளார். அத்தோடு கத்தியால் வெட்டியும் உள்ளார்.
சம்பவத்தில் குடும்பப் பெண் அதிகளவு குருதி வெளியேறி அவதிப்பட்டு அவல குரல் எழுப்பிய நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் காவல்துறையினர், அந்தப் பெண்ணை வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் அவரது கணவரைக் கைது செய்து தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #மனைவி #கத்திக்குத்து #தாக்குதல் #முரண்பாடு
Add Comment