இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

அகழ்வாய்வும் – சமகாலச் செல்நெறிகளும்…


அகழ்வாய்வு மற்றும் தொல்பொருட்கள் பற்றிய உரையாடல் இன்றைய சூழலில் துறைசார்ந்த ஆய்வறிவாளர்களுக்கு மட்டும் உரியது என்ற நிலையைக் கடந்துள்ளது. சமகால அரசியல் செல்நெறியில் அகழ்வாய்வும் தொல்பொருட்களும் நேர்மையீனமாக அரசியல் செய்வோருக்கு மிகவும் பயன்படத்தக்க விடயமாக மாறி வருவதனை அவதானிக்க முடிகின்றது.

இனத்தூய்மைவாதம், மதத்தூய்மைவாதம், பிரதேசவாதம் என்பனவற்றைப் போன்று இன்று அகழ்வாய்வும் தொல்பொருட்களும் அது தொடர்பான உரையாடல்களும் சுயநல நோக்குடன் அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்காக முயற்சிப்போருக்கு மிகவும் பயன்பட்டு வருகின்றன.இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என்பனவற்றை மேலும் விரிவுபடுத்தி அரசியல் செய்ய தொல்பொருட்களும் அகழ்வாய்வும் பெரிதும் உதவியளித்து வருகின்றன. இனப்பரவலாக்கம், மதப்பரவலாக்கம், பிரதேச விரிவாக்கம், இனப்பாதுகாப்பு, மதப்பாதுகாப்பு, பிரதேசப்பாதுகாப்பு என்று ஏட்டிக்குப் போட்டியாகக் கதைகளையளந்து நாடாளுமன்ற உறுப்புரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் மையம் மற்றும் பிராந்திய அரசுகளின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் இது வாய்ப்பளித்து வருகின்றது.

இதனோடிணைந்ததாக சமகால ஊடகங்களும் அகழ்வாய்வையும் தொல்பொருட்களையும் தமது ஊடக வணிகத்துக்கான முதலீடாகக் கொண்டு செய்திகளை உற்பத்தி செய்து வருகின்றன. உதாரணமாக இனம் சார்ந்து வாடிக்கையாளர்களை (சந்தைகளை)கொண்டுள்ள ஊடகங்கள் தத்தமது வாடிக்கையாளர்களின் இனஞ்சார்ந்து(வியாபாரக் கண்ணோட்டத்துடன); அகழ்வாய்வு மற்றும் தொல் பொருட்கள் சம்பந்தமான செய்திகளை மிகப்பெரும்பாலும் உருவாக்கஞ் செய்து பரவலாக்கி வருகின்றன. இதன்காரணமாக அகழ்வாய்வு மற்றும் தொல்பொருட்கள்வெகுசனப் பரப்பில் பலராலும் பல்வேறு கோணங்களில் உரையாடப்படும் பேசுபொருளாகியுள்ளன. சமூக ஊடகங்களிலும் அகழ்வாய்வு மற்றும் தொல்பொருட்கள் பற்றிய செய்திகளும் தகவல்களும் வைரலாகப் பரவி வருகின்றன.

பல்லின, பல்பண்பாட்டுத் தன்மைகள் கொண்ட நாட்டில் வாழும் எண்ணிக்கையில் அதிகமான இனக்குழுமங்கள் உண்மைக்குப் புறம்பாகவும், வரலாற்றைத் திரிபுபடுத்தியும் ஆதிக்குடிகள் தாமே என நிரூபிக்கும் வகையில் ஏட்டிக்குப் போட்டியாக தொல்பொருட்களையும் அகழ்வாய்வினையும் புனைவிற்குட்படுத்திப் பயன்படுத்தும் ஏதுநிலைமைகள் அதிகரித்து வருகின்றன.இதனால் பாதிக்கப்படும் இனக்குழுமங்கள் தமது பாதுகாப்பிற்கான காரியங்களில் ஈடுபட வேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது. குறிப்பாக வரலாற்றுத் திரிபுபடுத்துதலிலிருந்து தத்தமது வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாத்து நாட்டின் அரசியல் சாசனத்திற்கிணங்க தமது வரலாற்றை நிரூபிக்க முயல வேண்டியது இத்தகைய இனக்குழுமங்களுக்கு அவசியமாகியுள்ளது.

அதாவது நாட்டின் பிரசைகள் தத்தமக்கான அரச சேவைகளைப் பெற்றுக் கொள்ளுவதில் சமத்துவமான நிலை காணப்பட வேண்டும் என்பதற்காக அரசியல் சாசனத்திற்கிணங்க முழு நாட்டிலும் பொது நிருவாகம், நீதி நிருவாகம், கல்வி நிருவாகம், மருத்துவ நிருவாகம், விவசாய நிருவாகம் என அடிப்படையான நிருவாகக் கட்டமைப்புக்கள் நாடு முழுவதும் பரவலாக்கஞ் செய்யப்பட்டு அவை முன்னேற்றகரமான விதத்தில் பிரயோகிக்கப்படும் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகள் எங்கிலும் பரந்து வாழும் சாதாரண பொது மக்கள் இத்தகைய நிருவாகப் பரவலாக்கத்தினூடாகத் தத்தமது தேவைகளை கணிசமான அளவில் பூர்த்தி செய்து வருகின்றனர்.

இந்த வகையில் எண்ணிக்கையில் குறைவாக வாழும் இனக்குழுமங்களைச் சேர்ந்தோர் தமது மரபுரிமைகள் மீறப்படும் போது தமக்கு வசதியானதும் இலகுவானதும் அருகிலுள்ளதுமான நீதி நிருவாகக் கட்டமைப்பினையும் அதன் பொறிமுறைமைகளையும் நாடிச்சென்று முறையிட்டு அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் உரிமையினைப் பெற்றுள்ளார்கள்.இவ்வாறு எண்ணிக்கையில் குறைந்தளவான இனக்குழுமங்களைச் சார்ந்தோர் தமது மரபுரிமைகளைத் தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை விரும்பாத வரலாற்றுத் திரிபுபடுத்துனர்கள் நாட்டின் அரசியல் சாசனத்திற்கிணங்க உருவாக்கப்பட்டுள்ள நிருவாகப் பரவலாக்கத்திற்கு முரணாக அகழ்வாய்வு மற்றும் தொல்பொருட்கள் பற்றிய முறைப்பாடுகளையும் விசாரணைகளையும் ஓரிடத்தில் மையப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது நடந்தேறுகின்றது.

அதாவது நாட்டின் தலைநகருக்கு மிகவும் தூரத்தில் வாழும் எண்ணிக்கையில் குறைந்த அளவில் வாழும் இனக்குழுமத்தினர் தமது வரலாற்று மரபுரிமைகள் அகழ்வாய்வு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் பாதிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படும் போது அதற்கு எதிராகத் தமது மரபுரிமைகளைப் பாதுகாக்கும் நோக்குடன் தாம் வாழும் பிரதேசத்திற்கு மிகவும் அண்மையிலுள்ள நீதிநிருவாகக் கட்டமைப்பினை நாடி முறைப்பாடுகளைப் பதிவு செய்து செயற்படும் உரிமையினைக் கொண்டிருக்கும் நிலையில்இந்த அடிப்படை உரிமையினை மறுதலிக்கும் வகையில் இத்தகைய முறைப்பாடுகளையும் விசாரணைகளையும் ஓரிடத்தில் நடத்த வேண்டிக் கோருவது நாட்டின் பிரசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தாம் வாழும் ஊரிலேயே தத்தமக்கான அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் அடிப்படை உரிமையினை மறுதலிக்கும் செயற்பாடாகவே கருதப்படவேண்டியதாக உள்ளது.

மேற்குலகின் காலனித்துவம் தாம் காலனித்துவப்படுத்திய தேசங்களைச் சேர்ந்த மனிதக் குழுமங்களையும் அவற்றின் பண்பாடுகளையும் அவற்றின் உள்ளார்ந்த அசைவியக்கங்களையும் ஐயந்திரிபற அறிந்து விளங்கிக் கொண்டு காலங்காலமாக தமது ஆதிக்கத்தின் கீழ் இம்மக்கள் குழுமங்களைச் சிறை வைப்பதற்காக உருவாக்கிக் கொண்ட விடயங்களுள் குறிப்பிடத்தக்கதாக தொல்பொருள் அகழ்வாய்வு முறைமைகளும், இனவரைவியல் ஆய்வு நுட்பங்களும் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இத்தகைய வழிமுறைகளில் காலனித்துவம் தாம் ஆக்கிரமித்த மக்களை விளங்கிக் கொண்டதன் பின்னர் தனது பிரித்தாளும் உபாயங்களூடாக உள்ளக முரண்பாடுகளை வேர்கொள்ளச் செய்து நவகாலனித்துவத்திற்கான அடிப்படைகளை உருவாக்கிக் கொண்டது.

காலனித்துவத்தின் நேரடியான ஆட்சி நீக்கம் பெற்றதன் பின்னர் உருவாக்கம் பெற்ற பெரும்பாலான தேசிய அரசுகளிலும் காலனித்துவம் பயன்படுத்திய கட்டமைப்புக்களும், பொறிமுறைமைகளும் மாற்றமின்றித் தொடர்ந்துள்ளன. அதாவது தேசிய அரசுகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய உள்நாட்டு அதிகார வர்க்கத்தினர் காலனித்துவம் பயன்படுத்திய மேற்படி தொல்பொருள் அகழ்வாய்வு முறைமைகளையும், இனவரைவியல் நுட்பங்களையும் தமது குறுகிய சுயநல அரசியல் இருப்பிற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதன் காரணமாக பன்மைப்பண்பாட்டுப் பாரம்பரியங்களைக் கொண்ட நாடுகளிலும், தேசங்களிலும் உள்நாட்டு முரண்பாடுகள் கூர்மையடைந்ததுடன் சிவில் யுத்தங்களாகவும் அவை பரிணமித்தன. (சில தேசிய அரசுகள் காலனித்துவம் கற்பித்த முறைமைகளிலிருந்து விடுபட்டு தமக்கேயான கட்டமைப்புக்களையும், பொறிமுறைமைகளையும் உருவாக்க எத்தனித்த சூழலில் அவை நவகாலனித்துவத்தின் முகவர்களால் சிதைக்கப்பட்டு விட்டன. அல்லது முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டன.)

இன்றைய சூழலில், ஒரு நாட்டில் எண்ணிக்கையில் அதிகளவில் வாழும் இனக்குழுமங்களைச் சார்ந்து அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக முயலுகின்ற தரப்புக்கள் ஏட்டிக்குப் போட்டியாக தொல்பொருட்களையும் அகழ்வாய்வினையும் வரலாற்று எழுத்தியலையும் பயன்படுத்தி வரும் நிலையில் இதனால் மிகவும் பாதிக்கப்படுபவர்களாக அந்நாட்டிற்கேயுரிய பழங்குடி மக்களே காணப்படுகின்றார்கள்.

எண்ணிக்கையில் அதிகமானோரின் தேசியவாதப் போராட்டத்தில் தமது அடையாளங்களை இழந்து தாம் வாழும் பகுதியிலுள்ள பெரும்பான்மையினருடன் கரைய வேண்டியவர்களாக இப்பழங்குடி மக்களின் வாழ்வியல் நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டு வருகின்றது. காலங்காலமாகத் தமக்கு இருந்து வரும் மரபுரிமைகளான நில வளத்தை, நீர் வளத்தை, காட்டு வளத்தை நிலைபேறாகப் பயன்படுத்தும் உரிமைகளை வெளியிலிருந்து வந்தவர்களிடம் கையளித்துவிட்டு அவர்களின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழும் துர்ப்பாக்கிய நிலைமைக்குள் இப்பழங்குடி மக்கள் தள்ளப்பட்டு வருகின்றார்கள்.

‘எல்லாம் எல்லாருக்கும் சொந்தம் எதுவும் எவருக்கும் சொந்தமன்று’ எனும் பொருளியல் தத்துவத்துடன் இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்த பழங்குடி மக்களின் வரலாற்றையும் வாழ்வியலையும் மறுதலித்து,எண்ணிக்கையில் அதிகமான வந்தேறு குடிகள் தமக்குத் தகுந்தாற்போல் தேசியவாதங்களைக் கட்டமைத்து (ஆக்கிரமிப்புப் பெருந்தேசியவாதம், தற்காப்பிற்கான சிறுபான்மைத் தேசியவாதம்) வரலாறுகளைத் திரித்துக் கூறித் தாமே பழங்குடிகள் என ஏட்டிக்குப் போட்டியாக கதைகளைக் கட்டி முரண்பாடுகளை வலுப்படுத்தி மனித குலத்திற்கும் இயற்கைக்கும் எதிரான ஆதிக்க அரசியல் செய்யும் காலத்தில் பழங்குடிகளின் வரலாறுகளைமீளுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகள் உலகம் பூராகவும் நடந்தேறி வருகின்றன.

இப்பின்புலத்திலேயே ‘உலக அகழ்வாய்வு காங்கிரஸ்’ எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு காலனியநீக்கம் பெற்ற தொல்லியல் மற்றும் அகழ்வாய்வு முறைமைகள் பற்றியும் புதிய வரலாற்று எழுத்தியல் குறித்தும் அக்கறை செலுத்தும் நிலை உருவானது.

தொல்பொருட்களால் மட்டும் இனக்குழுமங்களின் வரலாறுகளைக் கட்டமைக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. அண்மைக்காலக் குடியேற்றவாத நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்தரேலியா, நியூசிலாந்து முதலியவற்றில் வாழும் குடியேறிய இனக்குழுமங்களுக்கான தொல்பொருட்களை எப்படித் தேடுவது? எனும் கேள்வி எழுப்பப்படுகின்றது. இதேநேரம் பழங்குடிகளின் வரலாறுகளைத் தேடும் மாற்று முறைமைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பழங்குடிகளின் வரலாறுகளைத் தேடுதல் என்பது தொட்டுணராப் பண்பாட்டு நடைமுறைகளையும், மரபுரிமைகளையும் அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனூடாக சமுதாயப் பங்குபற்றல் அகழ்வாய்வுப் பொறி முறைமைகள் பற்றி முன்மொழியப்பட்டு வருகின்றன. பழங்குடிகளின் தொன்மையினை நிறுவுதலானது ஏனையோரை நாடற்றவர்களாகவோ, வந்தேறு குடிகளாகவோ முத்திரை குத்தி வெறுப்பு அரசியல் செய்யும் நோக்கமற்றது,மாறாக ஒரு நாட்டின் வரலாற்று உண்மையினை உணர்ந்து பல்வகைப் பண்பாடுகளையும் மதித்துத் தேசியங்களின் ஒற்றுமையுடன் இயற்கையினை நேசித்து ஆக்கபூர்வமாக ஒவ்வொரு மனிதரும் வாழுவதற்கான உயரிய நோக்கத்துடன் கூடியது.இவ்வரலாற்று எழுத்தியல் முறைமை வெறுப்பையும் குரோதத்தையும் வலுப்படுத்தும் நவீன கால வரலாற்றுக் கற்பிதங்களைச் சூனியம் என நிரூபிக்கும் தன்மை கொண்டது.

எனவே! காலனித்துவம் அறிமுகஞ் செய்த தொல்பொருட்கள் மற்றும் அகழ்வாய்வு எனும் விடயம்,நவீன தேசிய அரசுகளில்,அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உபாயமாகப் பிரயோகிக்கப்படும் இன்றைய காலத்தில் இதன் ஆபத்துக்களிலிருந்து மீண்டெழுவதற்கான செயல்மைய அறிவையும் அனுபவங்களையும் வழங்கவல்ல காலனிய நீக்கத்துக்கான முன்மொழிவுகளுடன் கூடியபழங்குடி மக்கள் தொடர்பிலான வரலாற்று கற்கைகளை அறிவதும் அதனைப் பிரயோகிப்பதும் சமாதானமான ஆக்கபூர்வமான வாழ்வியலை விரும்பும் ஒவ்வொரு மனிதரதும் தலையாய கடமையாகின்றது.

கலாநிதி சி.ஜெயசங்கர், து.கௌரீஸ்வரன்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap