இலங்கை பிரதான செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா நேற்று (10.08.2020) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. நல்லூர் பேராலயத்தில் நடைபெற்று வரும் மஹோத்ஸவத்தில் 17ஆம் திருநாள் மாலை இறைவன் பூத நிருத்த சமர்ப்பணத்துடன் இடும்ப வாகனத்தில் எழுந்தருள்கிறான்.

இடும்பன் என்பவன் முருகப் பெருமானுக்கு அடிமைத் தொழில் பூண்டு, எப்பொழுதும் இறைவன் முருகனையே பணிந்து அவன் தொண்டர்கள் எவ்வகையினும் எந்த இடரும் அடையாமல் காக்கும் அசுரன்.

இவன் சூரபதுமன் முதலிய அரக்கர்களுக்கு வில் வித்தையை கற்பிக்கும் ஆசிரியனாக விளங்கியவன் என்றும் அசுரர்களின் அழிவின் பின், ஞான நாட்டம் கொண்டு அகத்திய மாமுனிவரை குருவாக கொண்டு இறை பக்தியில் திளைத்திருந்தான் என்றும் சொல்லப்படுகிறது.

இத்தகு வல்லமை பெற்ற ஒரு அசுரனாக திகழ்ந்த இடும்பனுக்கு குமரவேற்பெருமான் குழந்தை வடிவமாக காட்சி தந்து அருள் புரிந்தான்.  அவனை சில சோதனைகளுக்கு உட்படுத்தி தடுத்தாட் கொண்டருளினார்.

இந்த இடும்பனே பழனி மலையை காவடி போல தூக்கி வந்து இன்றைக்கு இருக்கும் இடத்தில் வைத்தவன் என்றொரு ஐதீகமும் இருக்கிறது.  இதனால், காவடி சுமக்கும் வடிவினனாக இடும்பனின் உருவத்தை அமைக்கும் மரபும் உள்ளது.

தமிழகத்து முருகன் திருக்கோயில்களில் கோயில் காப்பாளனாகவும், வழிபடும் அடியவர்களை காக்கும் ஒருவனாகவும் தனிச்சந்நதியில் இடும்பன் காட்சி தருகிறான்.

தென்னிலங்கையிலும், மலையகத்திலும் இந்திய வம்சாவளியினருடன் தொடர்பு பட்ட முருகன் ஆலயங்களில் இடும்பன் சந்நதியை நாம் அவதானிக்கலாம்.

வட இலங்கை முருக வழிபாட்டுக்கு மிகுந்த முதன்மை வழங்கும் கந்தபுராணப் பூமியாக காட்சி தரும் போதும், ஏனோ இடும்பன் வழிபாடும், இடும்பனுக்கான முதன்மையும் குறைவாகவே காணப்படுகின்றது.

அது ஏன் என்பது சிந்திக்கத்தக்கது. கந்தபுராணத்தில் இடும்பன் குறித்த செய்திகள் இல்லாமை கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

எவ்வாறாயினும், புகழ் பெற்ற நல்லூர் பெருங்கோயிலில் பெருவிழாவில் ஒரு நாள் மிகப்பெரிய இடும்ப வாகனத்தில் வேற்பெருமான் பழனாபுரி நாயகனாக மாடவீதியில் பவனி வருகிறான்.

இடும்பனின் துணைவியரான இடும்பிகளின் மீது தேவியர் எழுந்தருள்கிறார்கள்.

இதனை விடச் சிறப்பு யாதெனில், இவ்வாறு இறைவன் இடும்ப வாகனத்தில் எழுந்தருளும் திருநாளன்று இடும்பனைப் போலவும் பூத சேனை போலவும் வேடம் புனைந்த அடியவர்கள் சுவாமிக்கு முன் பூத நாட்டியம் நிகழ்த்துவார்கள்.

பூதங்கள் எனப்படுபவை சிவபெருமானின் சேவகர்களாக கைலாசத்தில் காணப்படுபவை.  அவையே சூர சம்ஹாரத்தின் போது, முருகனுடைய படை வீரர்களாக அசுரரர்களுக்கு எதிராகப் போராடியனவாகும்.
மேலும், கோயிற் தூண்களிலும், கோபுரங்களிலும், விமானங்களலும், தேர்களிலும் பல வித பாவனையில் பூத உருவங்கள் அமைக்கப்பட்டிருக்க காணலாம்.

பூதங்கள் இறை அடியார்களிடமுள்ள துர் குணங்களை அகற்றுவனவாகவும், துஷ்ட சக்திகளை இறையடியார்களை அணுகாமல் காப்பனவாகவும் இவை கருதப்படுகின்றன. பூதங்கள் விநோதமாக நடனம் செய்ய வல்லன. வாத்தியங்களை இசைக்க வல்லன.

பூத நிருத்தம் என்றொரு நிருத்தம் கூட, ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது.மத்தளத்தை தோளில் தூக்கியவாறு ஒற்றை காலில் ஆடி ஆடி வாசிப்பதை பூத நிருத்தம் என்பர். இவ்வாறாக பூத கண வாத்தியங்கள் முழங்க, பூத நடன சமர்ப்பணத்தோடு இடும்பன் மீது வரும் நல்லை நகர் ஆண்டவனை நம் துயரழிய வேண்டுவோம்.. #நல்லூர்கந்தசுவாமிகோவில் #திருவிழா

பிரம்மஸ்ரீ. தியாக. மயூரகிரிக்குருக்கள்

படங்கள்: ஐ.சிவசாந்தன்
 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap