இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் – அடுத்த கட்டம் ? நிலாந்தன்..

நாளை அனைத்துலக காணாமல் ஆக்கபட்டவர்களின் தினம்.அதையொட்டி  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ்ப் பகுதி எங்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் நகர மையத்தில் இருந்து தொடங்கி ஊர்வலம் கச்சேரியை சென்றடையும். மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் இருந்து தொடங்கி காந்தி சிலையை சென்றடையும். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கவிருக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இவ்வாறு போராடுவது இதுதான் முதல் தடவை அல்ல ஆனால் ராஜபக்சக்கள் இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்தபின் அவர்கள் நடத்தும் பெரிய அளவிலான போராட்டம் இது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் வீதியோரங்களில் அமர்ந்து போராடத் தொடங்கினார்கள். ஒவ்வொரு மார்ச் ஜெனிவா கூட்டத்தொடரை ஒட்டி அல்லது அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையொட்டி பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படும். நாளை 30ஆம் திகதியோடு இப்போராட்டங்கள் 1,290 ஆவது நாளை அடைகின்றன. ஆனால் போராடும் மக்களுக்கு பொருத்தமான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. ஏன்?

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெருவோரங்களில் அமர்ந்திருந்து போராடத் தொடங்கிய பொழுது தொடக்கத்தில் ஊடகங்களின் கவனத்தையும் அரசியல்வாதிகளின் கவனத்தையும் அவர்களால் கவர முடிந்தது. தொடக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்களும் பிரமுகர்களும் போராட்டக் குடில்களுக்குப் போய் தங்கள் வருகையைப் பதிவு செய்தார்கள். ஊடகங்கள் ஒவ்வொரு நாளும்  எத்தனையாம் நாள் போராட்டம் என்று முன்பக்கத்தில் செய்தி போட்டன. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் எல்லாமே தொய்யத் தொடங்கியது. படிப்படியாக இப்போராட்டங்கள் யாருடைய கவனத்தையும் ஈர்க்காத ஒரு நிலைமை வந்தது.

தெருவோரப் போராட்டங்கள் 500வது நாளை நெருங்கிய போது சட்டச் செயற்பாட்டாளரான வழக்கறிஞர் ரட்ணவேலும் உட்பட வவுனியாவைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்கள் போராடும் மக்களை அணுகி சில ஆலோசனைகளை முன்வைத்தார்கள். அரசாங்கத்தின் கவனத்தையும் வெளி உலகின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் இந்தப் போராட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்றும் சிந்திக்கப்பட்டது. அதன் பிரகாரம் தெருவோரப் போராட்டங்களை நிறுத்தி போராடும் மக்கள் தங்களுக்கென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அலுவலகங்களை உருவாக்கி அந்த அலுவலகங்களில் இருந்தபடி போராடலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.

வவுனியா மாவட்ட போராடும் அமைப்பின் ஒருபகுதி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் போராட்டம் பெருமளவிற்கு சோர்ந்து போய்த் தேங்கிவிட்டது.

இப்படிப்பட்டதொரு பின்னணியில்  கோட்டாபய ராஜபக்சவின் வருகைக்குப்பின் பெரிய அளவில் ஒரு போராட்டத்தை மேற்படி அமைப்புகள் ஒழுங்குபடுத்தி இருக்கின்றன. எனினும் வவுனியா மாவட்ட அமைப்பு தனது போராட்டத்தை ஒரு நாள் முன்னதாக அதாவது இன்று சனிக்கிழமை நடத்தப்போவதாக கூறியிருக்கிறது. இம்முறையும் போராட்ட அமைப்புகளுக்கு இடையே ஒத்த கருத்து இல்லை என்றே தோன்றுகிறது.

ஈழத்தமிழர்களின் அரசியல் பரப்பில் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் என்று பார்த்தால் அது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தெருவோரப் போராட்டம்தான். இதற்கு முன் மூன்றாம் கட்ட ஈழப்போர் காலகட்டத்தில் மல்லாவியில் நிவாரண வெட்டை எதிர்த்து ஐ.சி.ஆர்.சி அலுவலகத்துக்கு அண்மையில் ஒரு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்டம் ஒப்பீட்டளவில் நீண்ட நாட்களுக்கு நடந்தது.

அதற்குப்பின் இப்பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் நாளை 1,290 ஆவது நாளை அடைகிறது. போராடத்  தொடங்கியதிலிருந்து இன்று வரையிலும் மொத்தம் எழுபதுக்கும் குறையாத  உறவினர்கள் இறந்து போய்விட்டதாக அமைப்புகள் தெரிவிக்கின்றன. மன்னாரில் நடந்த ஒரு ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த பெற்றோர்களில் ஒருவர் அடுத்த ஆண்டு இதே போல ஒரு போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் பொழுது எங்களில் எத்தனை பேர் உயிரோடு இருப்பார்களோ தெரியாது என்று கூறியிருந்தார்.

அதுதான் உண்மை இந்த போராட்டத்தின் உயிர்மூச்சாக காணப்படுவது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ரத்த உறவுகள்தான். அதிலும் குறிப்பாக முதிய பெற்றோர்தான். அப்படிப்பட்டவர்கள்தான் தமக்கு வரக்கூடிய உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாது ஆவேசமாகப்  போராடுவார்கள். அவர்களுடைய உடல்நிலையும் வயதும் அவர்களுக்கு ஒரு தடைதான். ஆனாலும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைக்கு  நீதி வேண்டும் என்ற ஆவேசம் அவர்களைப் போராட வைக்கிறது. இப்பெற்றோர் படிப்படியாக இறந்து போனால் போராட்டத்தின் கதி என்னவாகும்?

இவ்வாறு ஒவ்வொரு நாளும் போராட்டக் குடிலில் குந்தி இருப்பதற்கு பதிலாக அவர்கள் வீட்டில் ஆடு வளர்த்தால் அல்லது கோழி வளர்த்தால் அல்லது பாய் இழைத்தால் எதையாவது சம்பாதிக்கக் கூடியதாக இருக்கும். அல்லது குறைந்த பட்சம் தமது பேரப்பிள்ளைகளையாவது பராமரிக்கலாம். ஆனால் அவை எவற்றையும்  செய்யாமல் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைக்காக இவ்வாறு பொது இடம் ஒன்றில் வந்து அமர்ந்திருக்கிறார்கள். அவர்களால் தென்னிலங்கையின் கவனத்தையும் ஈர்க்க முடியவில்லை. உலகத்தின் கவனத்தையும் ஈர்க்க முடியவில்லை. அதைவிடக் கொடுமை என்னவெனில் தமது சொந்த மக்களின் கவனத்தையும் ஈர்க்க முடியவில்லை என்பதே.இதைச் சுட்டிக்காட்டி கண்ணன் அருணாச்சலம் என்ற ஓர் ஆவணப் பட தயாரிப்பாளர் குடில் என்ற பெயரில் ஓர் ஆவணப் படத்தைத்  தயாரித்திருக்கிறார்.

போராட்டத்துக்கு சொந்த மக்கள் மத்தியில் இருந்தே தொடர்ச்சியான ஆதரவு கிடைக்கவில்லை.அதாவது அவை மக்கள் மயப்படவில்லை. போராட்டங்கள் தொடங்கிய புதிதில் போராட்ட குடில்களுக்குள் காணப்பட்ட அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் படிப்படியாக அங்கே போவதைக் குறைத்துக் கொண்டார்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். ஆனால் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு பெரும்பாலானவர்கள் தயாரில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் இந்த நிலைமை? பாதிக்கப்பட்டவர்களை மட்டும் போராட விட்டுவிட்டு ஏனையவர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் ஒரு நிலைமை ஏன் தோன்றியது ? இதில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது செயற்பாட்டாளர்கள் ஏன் இந்தப் போராட்டங்களுக்கு தலைமை தாங்க முன்வரவில்லை ? குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்கள் இப்போராட்டங்களை ஒருங்கிணைக்க மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. இதற்கு காரணம் என்ன?

பின்வரும் இரண்டு காரணங்களை கூறலாம்.

முதலாவது காரணம்-இப்போராட்டங்கள் கருத்து மையச் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்கள் மைய செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றன என்ற விமர்சனம்.கருத்து மையச் செயற்பாட்டாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்திருந்தால் அவை சிலவேளைகளில் இப்போது இருக்கும் தேக்கத்தை உடைத்துக்கொண்டு புதிய போராட்ட வடிவங்களைக் கண்டுபிடித்து இருந்திருக்கும். ஆனால் இப்போராட்டத்தை இன்றுவரை முன்னெடுப்பது பாதிக்கப்பட்ட மக்களே. எனவே அவை அதிகபட்சம் உணர்வுபூர்வமான தளத்திலேயே இப்பொழுதும் நிற்கின்றன. இது முதலாவது காரணம்.

இரண்டாவது காரணம்- காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பும் ஒருமித்த சிந்தனையும் இல்லை. நாளை நடக்கப்போகும் போராட்டத்தில் வவுனியா அமைப்பு இணையப் போவதில்லை என்று தெரிகிறது. ஏற்கனவே வவுனியா மைய  அமைப்பு இரண்டாக உடைந்து விட்டதாக ஒரு அவதானிப்பு உண்டு. கிளிநொச்சியிலும் நிலைமை அப்படித்தான். இந்த உடைவுகளுக்கு காரணம் மேற்படி போராட்டங்களைப் பின்னிருந்து ஊக்குவிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் தரப்புகக்களே என்று ஒரு அவதானிப்பு உண்டு.

ஒருபுறம் புலம்பெயர்ந்த தமிழ் தரப்புகளின் தார்மீக மற்றும் நிதி ரீதியான ஆதரவு இல்லையென்றால் இந்த போராட்டங்கள் இந்த அளவுக்கு சோர்ந்து போன நிலையிலும்கூட இவ்வளவு காலத்துக்கு இழுபட்டுக் கொண்டு வந்திருக்காது. அதே சமயம் அதே புலம்பெயர்ந்த பணத்தின் தலையீடு தான் இப்போராட்ட அமைப்புகளை ஒற்றுமைப்பட விடுவதில்லை என்றும் ஒரு அவதானிப்பு உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன் அனந்தி சசிதரன் அவ்வாறு ஒற்றுமைப்படுத்த எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அப்போது அவரும் இப்படி ஒரு கருத்தைத்தான் சொன்னார். இந்த அமைப்புகளை பின்னிருந்து ஊக்குவிக்கும் வெவ்வேறு புலம்பெயர்ந்த தரப்புகள் இந்த அமைப்புகளையும் போராட்டத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகின்றன. அதனால் அவை இந்த அமைப்புகள் ஒற்றுமைப்படுவதை விரும்பவில்லை என்று பெரும்பாலான செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இப்படிப்பட்டதொரு பின்னணியில் காணாமல் போனவர்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் சங்கங்கள் ஒருமித்த வேலைத்திட்டத்தின் கீழ் இயங்குவதாகத் தெரியவில்லை. தவிர எல்லாரையும் ஒன்றிணைக்க கூடிய ஓர் அரசியல் இயக்கம் இந்தப் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. இப்போதுள்ள தேக்கத்தை உடைத்துக் கொண்டு ஒரு புதிய போராட்ட வழிமுறையைக் கண்டு பிடிக்கவில்லை என்றால் வரும் ஆண்டும் இதே நாளையொட்டி அதாவது அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாளையொட்டி இப்படி ஒரு கட்டுரையை எழுத வேண்டி வருமா? இப்போது உயிரோடு இருக்கும் அம்முதிய பெற்றோரில் எத்தனை பேர் அப்போது உயிருடன் இருப்பார்கள் ?

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap