இலங்கை பிரதான செய்திகள்

கண்ணதாசன் தொடர்ந்தும் மறியலில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக கடமையாற்றிய கண்ணதாசன் மீதான ஆயுள் தண்டனைத் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டு வழக்கை வரும் 28,29 மற்றும் 30ஆம் திகதி தொடர் விளக்கத்துக்காக வவுனியா மேல் நீதிமன்றம் நியமித்தது.

அத்துடன், கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பிணை விண்ணப்பத்தை மன்றில் முன்வைத்த போதும் அரச சட்டவாதியின் கடும் ஆட்சேபனையால் கட்டளை வழங்கப்படவில்லை.

தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன், போரின் முடிவில் படையினரிடம் சரணடைந்து மறுவாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.


அதன் பின்னர் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற மிருதங்க கலைஞர்களில் ஒருவரான கண்ணதாசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டம் உருத்திரபுரம் பகுதியில் 2007 ஜனவரி மாதவாக்கில், மஞ்சுளா விஜயபாலன் எனும் சிறுமியைக் கட்டாயமாக விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்த்ததாக அவருடைய தாயார், கண்ணதாசன் மீது 2014 மார்ச்சில் வழக்கு தொடுத்தார். அடுத்த ஆண்டே பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கண்ணதாசன், பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

அதனடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆள்களைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றால் ஆயுட்தண்டனை வழங்கப்பட்டிருந்தது

இந்தத் தண்டனையை எதிர்த்து க.கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேன்முறையீட்டு மனு மீது இரண்டு ஆண்டுகளாக விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை 22ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை ரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்திருந்தது

இந்த நிலையில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுப்பதற்கு வவுனியா மேல் நீதிமன்றில் மீளவும் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. வழக்குத் தொடுனரான சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் முன்னிலையானார். கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.

எதிரி வெலிக்கடைச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மன்றில் முற்படுத்தப்பட்டார்.

கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார்.

எதிரிக்கு முதலாவதாக நடைபெற்ற விளக்கத்தின் போது, இந்த மன்றினால் பிணை வழங்கப்பட்டது. அதனடிப்படையில் மீள் விளக்கத்தின் போதும் பிணை வழங்கப்படவேண்டும். என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடுக்கப்பட்டு மீள் விளக்கம் இடம்பெறவுள்ளது. எனவே சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பிணை அனுமதி வழங்கப்படக்கூடாது என்று அரச சட்டவாதி மன்றுரைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்து கட்டளை வழங்கப்படும் என அறிவித்த மன்று வழக்கை வரும் 28, 29 மற்றும் 30ஆம் திகதிக்கு தொடர் விளக்கத்துக்கு நியமித்தது. அதனால் செப்ரெம்பர் 28ஆம் திகதிவரை எதிரியின் விளக்கமறியலை மன்று நீடித்தது. #கண்ணதாசன் #மறியல் #ஆயுள்தண்டனை #விரிவுரையாளர் #விடுதலைப்புலிகள்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.