இலங்கை பிரதான செய்திகள்

சமஷ்டி தீர்வுகான கருவியே இந்திய-இலங்கை ஒப்பந்தம் – NEW INDIA FORUM கூட்டத்தில் விக்கி….

13ஐ முழுமையாக அமுல்படுத்த இந்தியாவை வலியுறுத்துகிறார் விக்னேஸ்வரன்…

இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது என்றும் ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

முழுமையான பேச்சின் விபரமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

“இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்” என்ற தலைப்பில் இந்தியாவின் சிந்தனை மையம் ஒன்று இன்று ஞாயிறுக்கிழமை ஒழுங்கு செய்த இணையம் மூலமான கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றியபோதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

“13 ஆவது திருத்த சட்டம் இந்திய-இலங்கை இருதரப்பு உடன்படிக்கைக்கு உட்பட்டது. 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்வது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்துவதாக அமையும். இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது. ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இறுதித் தீர்வானசமஷ்டி முறையை எட்டும் வரை, போரை முடிவுக்கு கொண்டுவர உதவிகளைப் பெறும்போது இலங்கை அரசு வழங்கிய “13ம் அதற்கு மேலாகவும்” என்ற வாக்குறுதிகளை செயற்படுத்த அது முன்வரவேண்டும். அதற்கான தேவையும் அவசியமும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இன்று ஏற்பட்டிருக்கின்றது. ” என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,

கொடிய ஒரு யுத்தத்துக்கு பின்னர் எமது மக்களின் துன்ப துயரங்களை நீக்கும் வகையில் செயற்படக்கூடிய ஒரு இடைக்கால ஏற்பாடாகக் கூட மாகாண சபை எமது மக்களுக்கு பயன்படவில்லை என்பதும் பயன்படப்போவதில்லை என்பதுமே கசப்பான உண்மையாகும். எனது காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்கள், நில அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் போன்ற கட்டமைப்பு மேலும் கலாசார ரீதியான இனப்படுகொலை செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் எதனையும் நாம் 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் கொண்டிருக்கவில்லை. சில நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக் கூடியதாக இருந்ததென்றால் மக்களின் ஒருங்கிணைந்த எதிர்ப்புக் குரலே அதற்குக் காரணமாக அமைந்தது.


ஆகவே, இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இத்தனை குறைபாடுகளுடன் 13 ஆவது திருத்த சட்டம் ஏற்படுத்தப்பட்டமை இந்தியாவுக்கு தோல்வி இல்லையா என்பது சாதாரணமாக எழக்கூடிய ஒரு கேள்வி தான்.


அதற்கு அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஒரு சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டமையும் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ராஜீவ் காந்தியை தனது சாணக்கியத்தினால் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திருப்புவதில் வெற்றி கண்டமையும் முக்கிய காரணங்களாவன. இந்த இந்திய-இலங்கை ஒப்பந்த விடயத்தில் இந்தியா செய்த மிகப்பெரும் தவறு இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் ஒரு தரப்பாகக் கருதி செயற்படாமை ஆகும். அவ்வாறு தமிழ் மக்களை இந்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பாக இணைத்து இந்தியா செயற்பட்டிருந்தால் இன்று அது தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் பல்வேறு வழிகளிலும் அனுகூலமானதாக அமைந்திருந்திருக்கும். அதேபோல, அன்றைய உலக ஒழுங்கை மட்டும் கவனத்தில் கொண்டு இந்தியா இந்த விடயத்தில் காய்களை நகர்த்தியமை இலங்கை விடயத்தில் காலப்போக்கில் தவறுகளை சரி செய்வதற்கான சந்தர்ப்பங்களை இலகுபடுத்தவில்லை என்றும் கூறலாம். 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது இருந்த பூகோள அரசியலும் பிராந்திய அரசியலும் சந்தித்த மாற்றங்கள் முன்னர் போல பெரிய அண்ணன் தோரணையில் இலங்கையைக் கையாளும் நிலைமையில் இந்தியாவுக்கு கடினத்தை ஏற்படுத்தியது.

தென்னிந்தியாவில் தமிழ் மொழி உரிமைக்காக முன்னர் நடைபெற்ற போராட்டங்களையும் இலங்கையில் திட்டமிட்ட இன அழிப்புக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தையும் அதிகம் வேறுபடுத்தாமல் அவசியமற்றவகையில் அதீத எச்சரிக்கையுடன் இந்தியா செயற்பட்டமை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழான 13 ஆவது திருத்தச் சட்டத்தை அர்த்தமுள்ளதாக்குவதற்கு இந்தியா செயற்பட இடமளிக்கவில்லை. எங்கே இலங்கையின் கிழக்கு சுயநிர்ணயம் தமிழ் நாட்டின் பிரிவினைவாதக் கருத்துக்களுக்கு ஆதரவு அளித்துவிடுமோ என்று அப்போது இந்தியா பயந்தது. மேலும் பின்னர் நடைபெற்ற சில கசப்பான சம்பவங்களும் இலங்கையில் தமிழ் மக்கள் பிரச்சினையில் காத்திரமான ஒரு வகிபாகத்தை இந்தியா வகிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கவில்லை.

இந்தியாவின் மாநில ஆட்சிக்கும் இலங்கையில் மாகாண ரீதியான ஆட்சிக்கும் எந்த அடிப்படையிலும் சமாந்திரம் வரைய முடியாது. இந்தியாவின் மாநிலங்களுக்குரிய சகல உரிமைகளும் எமது மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை இந்திய சட்ட நிபுணர்கள் அப்போது கொண்டிருந்த போதும் அவ்வாறு அது நடைபெற இலங்கை அரசாங்கம் இடமளிக்கவில்லை. இரண்டு நாடுகளுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் இருக்கின்றன. இலங்கையின் ஒற்றை ஆட்சி கட்டமைப்பு வெறும் சட்ட ரீதியான பண்புகளைக் கொண்டதல்ல. அது சிங்கள பௌத்தர்களின் தனிப்பட்ட சித்தாந்தங்களில் தங்கியிருக்கின்றது. அது மகாவம்ச சிந்தனையினால் செதுக்கப்பட்ட, வழிநடத்தப்படுகின்ற ஒரு சமூக சட்ட கட்டமைப்பாகும். மகா வம்ச மனநிலையின் கீழ் இலங்கையை பொறுத்தவரையில் இந்தியாவானது வரலாற்றுக்காலம் தொட்டு ஒரு எதிரி நாடாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால், மறுபுறத்தில் இன, மத, மொழி மற்றும் பண்பாட்டு ரீதியாக இலங்கைத் தமிழ் மக்கள் இந்தியாவை முற்றிலும் நேசிக்கின்றார்கள். ஆனால், இவற்றை சீர்தூக்கிப் பார்த்து இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா இன்றுவரை தவறியுள்ளது. அன்னை இந்திரா காந்தியின் மறைவுக்கு பின்னர் இலங்கை தொடர்பாக இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே இந்தச் சறுக்கல்கள் ஏற்பட்டன. அன்னை இந்திரா காந்தியின் பின்னர் தடங்காது முடிவெடுக்கும் ஒரு தலைமைத்துவம் இப்பொழுது தான் உதித்திருக்கின்றது.

ஆகவே, இந்தப் புரிதல்களின் அடிப்படையில் இலங்கை தொடர்பாக இந்திய வெளியுறவு கொள்கையில் ஏற்படக்கூடிய மாற்றமே இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் இந்தியாவின் வகிபாகம் எப்படி இருக்கப்போகின்றது என்பதையும் தென்கோடியில் இந்தியாவின் பாதுகாப்பையும் உறுதிசெய்யப்போகின்றது. அதாவது, இந்தியாவின் பாதுகாப்பானது தென்கோடியில் இருக்கும் தமிழ் மக்களின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது என்று நான் பலமுறை கூறி வந்துள்ளேன்.

இந்தியா எத்தகைய நல்லெண்ண செயற்பாடுகளைச் செய்தாலும், எத்தனை கடன் உதவிகள் மற்றும் சலுகைகளை வழங்கினாலும் இலங்கை அரசாங்கங்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்கப் போவதில்லை. எவ்வளவு தான் இராணுவ, பொருளாதார உதவிகளை வழங்கினாலும், இலங்கை அரசு இந்தியாவைத் தமிழர் சார்பான நாடாகவே பார்க்கும். ஆகவே தமிழர் சார்பாக இந்தியா நடவடிக்கைகள் எடுப்பதை எவரும் பிழை கூறமுடியாது. இந்தியா துணிந்து நீதியை நிலைநாட்டலாம். நிலையான தீர்வைக் கொண்டு வரலாம்.

என்னைப் பொறுத்தவரையில், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் பல உண்மைகளை இந்தியா புரிந்துகொண்டுள்ளது என்று நினைக்கிறேன். ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கில் சம்ஷடி அடிப்படையிலான ஒரு தீர்வினை ஏற்படுத்துவதே இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகும் என்பது கௌரவ மோடி தலைமையிலான அரசாங்கத்துக்கு புரியாத ஒரு விடயம் அல்ல. கௌரவ மோடி அவர்கள் தமது முதற் சந்திப்பிலேயே இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கைக்கு ஒரு கூட்டுறவு சமஷ்டியே சிறந்தது என்று கூறியிருந்தார். ஆகவே எந்தளவுக்கு இந்தியாவின் தென் கோடியில் உள்ள இலங்கைத் தமிழ் மக்கள் அதிகாரத்தை பெற்று பாதுகாப்பாகவும் பலமாகவும் இருக்கின்றார்களோ அந்தளவுக்கு இந்தியாவுக்கும் அது பாதுகாப்பாக அமையும். என்பதை அவர் உணர்ந்திருந்தார். இதன் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையை மிகவும் துணிச்சலான முறையில் இந்தியா இனிவரும் காலங்களில் மேற்கொள்ளவேண்டும். கடந்த ஒரு வருடகாலமாக இந்தியாவின் உள்ளீடல் அவசியம் என்பதை நான் வலியுறுத்தி வந்துள்ளேன். இந்தியாவின் கவனம் எங்கள் பக்கம் திரும்பியுள்ளதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

13 ஆவது திருத்த சட்டத்தில் எதுவும் இல்லை என்றும் இதனால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யமுடியாது என்றும் நான் இங்கு விளக்கம் அளித்ததன் அர்த்தம் 13 ஆவது திருத்த சட்டத்தை இல்லாமல் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்தியாவோ அல்லது இலங்கைத் தமிழ் மக்களோ பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பது அல்ல. உண்மையில் 13 ஆவது திருத்த சட்டத்தை இல்லாமல் செய்வதன் மூலம் தமிழ் மக்களிடம் இருந்து எந்த ஒரு பாரதூரமான அதிகாரத்தையும் தாம் இல்லாமல் ஆக்கப்போவதில்லை என்பது அரசாங்கத்துக்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும் ஏன் அரசாங்கம் 13 ஆவது திருத்த சட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்கு முயற்சிக்கின்றது என்றால், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய அதிகார பகிர்வுக்கான சந்தர்ப்பங்கள் மற்றும் வாய்ப்புக்களை தற்போது அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைஇருக்கும் போதே அதனை இல்லாமல் செய்வதற்கான ஒரு அரசியல் யுக்தியாகத்தான் அதை நான் நோக்குகின்றேன். 13 ஆவது திருத்த சட்டத்தில் எதுவும் இல்லை என்ற போதிலும் அதில் ஒரு அரசியல் இருக்கிறது. அது பூகோள அரசியலுடன் தொடர்புபட்டது.

நான் முன்னர் கூறியதுபோல, 13 ஆவது திருத்த சட்டம் இந்திய-இலங்கை இருதரப்பு உடன்படிக்கைக்கு உட்பட்டது. 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்வது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்துவதாக அமையும். இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது. ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இறுதித் தீர்வான சம~;டி முறையை எட்டும் வரை, போரை முடிவுக்கு கொண்டுவர உதவிகளைப் பெறும்போது இலங்கை அரசு வழங்கிய “13ம் அதற்கு மேலாகவும்” என்ற வாக்குறுதிகளை செயற்படுத்த அது முன்வரவேண்டும். அதற்கான தேவையும் அவசியமும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இன்று ஏற்பட்டிருக்கின்றது.

13 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் அதன் வரைபின் அடிப்படையிலும் நடைமுறையின் அடிப்படையிலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை திருப்திப்படுத்தும் வகையில் அமையாமை காரணமாக தமிழ் மக்களின் தரப்புக்களும் தலைமைகளும் காலத்துக்கு காலம் தமக்கான தீர்வு எப்படி அமையவேண்டும் என்று தீர்வு திட்டங்களை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமுகத்துக்கும் முன்வைத்துள்ளனர். அவற்றுள் முக்கியமானவையாக வட மாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியவை பொதுமக்களுடன் கலந்தாலோசித்து தீர்வு திட்டங்களை முன்வைத்துள்ளன. இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் இந்த தீர்வு திட்டங்கள் பரிசீலனை செய்யப்படவேண்டும். அத்துடன், எதிர்வரும் காலங்களில், தீர்வுக்கான எந்த முயற்சியும் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதன் அடிப்படையில், அவர்கள் ஒரு தரப்பாக கருதப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, 13 ஆவது திருத்த சட்ட முன்னெடுப்புக்களில் தமிழ் மக்கள் ஒரு தரப்பாகவோ அல்லது அவர்களின் ஆலோசனையோ பெறப்படவில்லை.
இந்தியாவைக் கையாள்வதில் முன்னர் போல இலங்கை அரசாங்கம் பல்வேறு ஏமாற்று வித்தைகளை மேற்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு அமைவாக இந்திய மக்களும் அதன் மத்திய மாநில அரசாங்கங்களும் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap