Home இலங்கை வவுனியாவில் காடழிப்பு தொடர்கிறது

வவுனியாவில் காடழிப்பு தொடர்கிறது

by admin

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து சுற்றுச்சூழல் சேதம் தீவிரமடைந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் “தவறான புனைகதை” என  ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச நிராகரித்த நிலையில் 100 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையான விடயம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வன்னியில் உள்ள பல கிராமங்களுக்கு நீர் வழங்கும் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கர்  வனப்பகுதி தீக்கிரையாகியுள்ள விடயத்தை,  சூழலியலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

வவுனியாவில் உள்ள மாமடுவ மலை பிரதேசத்தில் பல கல் குவாரிகளை ஆரம்பிக்கவும், சோளப் பயிர்ச் செய்கைக்காகவும் காடு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என, பிரதேசவாசிகள் தெரிவிப்பதாக சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவிலிருந்து மடு மலைக்குச் செல்லும் வழியில் அழகிய மலையைப் போல தோற்றமளிக்கும் இந்த  வனப்பகுதி தொல்பொருள் முக்கியத்தும் மிக்க இடமுமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின்போதுகூட நன்கு பாதுகாக்கப்பட்ட மாமடுவ மலைப் பகுதி, யுத்தம் நிறைவடைந்து சில ஆண்டுகளிலேயே கல் குவாரி ஒன்றை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக,  சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர கரியவசம் தெரிவித்துள்ளார்.

காடுகளை அழித்தவர்கள் வெளியில்

வனப்பகுதியின் பெரும்பாலான பகுதி தீக்கிரையாகியுள்ள நிலையில், அழிவிற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை கைது செய்வதற்கு அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ரவீந்திர காரியவசம் தெரிவிக்கின்றார்.

ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மாமடுவ புராதண குளத்தின் முக்கிய நீர்நிரப்பு பிரதேசம் தீயால் அழிவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எலரா வம்சம், துட்டுகைமுனு வம்சம், அக்போ வம்சம் போன்றவற்றின் இடிபாடுகள் பெரும்பாலானவை மாமடுவ மலை மற்றும் மாமடுவ குளத்தின் அருகே காணப்படுகின்றன. எனவே இந்த பகுதி தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த என்பதால் பாதுகாக்கப்பட வேண்டும்.” என சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹகச்சக்குடிய,  அதம்பகஸ்வெவ, அக்பொபுர, மற்றும் விமகல்லா உள்ளிட்ட பல கிராமங்களின் முக்கிய முக்கிய நீரேந்து பகுதியாக இந்த வனப்பகுதி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமம் கடும் நெருக்கடியில் உள்ளது

மிகக் குறைந்த மழை பெய்யும் வவுனியா மாவட்டத்தில் உள்ள இந்த கிராமங்களில் வசிப்பவர்கள், மாமடுவ மலை நீர்த்தேக்கத்தின் நீர் மற்றும் மழை நீரை சேகரித்தே பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாக  ரவீந்திர காரியவசம் சுட்டிக்காட்டுகின்றார்.

விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், கைமருந்துகளுக்கான மூலிகைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் யுத்தத்திற்கு முன்பிருந்தே இந்த வனப்பகுதி இப்பகுதி மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மாமடுவ மலைப் பிரதேசத்தில் பல குவாரிகளை அமைப்பதற்கான முயற்சிகள், கடந்த காலத்தில் மலையை அண்மித்த பிரதேசத்தைச் சுற்றியுள்ள கிராம மக்களின் பங்களிப்புடன் தடுக்கப்பட்டதாக  அந்த அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும்,  கடந்த நாட்களில் மீண்டும் வனம் தீப்பிடித்ததுடன், மாமடுவ மலைப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 98 ஏக்கர் தீக்கிரையாகியுள்ளது.

யானை நடைபாதை

வறண்ட மண்டல சூழலில் வளரக்கூடிய பெரிய மரங்கள், தாவரங்களை அழிப்பது மற்றும் யானைகள் சுற்றித் திரியும் மற்றும் யானை நடைபாதையாக  கண்டறியப்பட்டுள்ள இந்த பிரதேசம்,  
சுமார் 94 வகையான புலம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் பறவைகளின் பழக்கப்பட்ட சூழலாக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மாமடுவ மலை மற்றும் மடு மலைப் பிரதேசம் பாலூட்டிகளின் பன்முகத்தன்மைக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த இடமாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த  செந்நிறக் களிமண் பகுதி முழுவதும் சிதறடிக்கப்படுவதால் நீரின் அமிலத்தன்மை அதிகரித்தாலும், தாவர அமைப்பு மற்றும் அதன் வேர் அமைப்பின் தூண்டல் காரணமாக நீர் மிகவும் சுத்திகரிக்கப்படுகிறது.”

பாதுகாப்பு படை முகாம்கள், காவல் நிலையங்கள் அந்த பிரதேசத்திற்கு மிக அருகில் அமைந்திருந்தாலும், தீ விபத்து தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள சூழல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம், பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாக்கப்பட வேண்டிய மீதமுள்ள அரசாங்க வனங்கள் வணிக பயிர்களுக்காகவோ அல்லது வேறு எந்த காரணத்திற்காகவோ கையகப்படுத்தப்பட்டால் இதைச் செய்வதற்கான வழி இதுவல்ல. இன்று ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன, இதில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்றால், காடுகளை அழித்து இரவில் தீ வைப்பவர்களை கைது செய்ய வேண்டும்.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையில் சுமார் 7 ஏக்கர் வனப் பகுதிகள் தினமும் அழிக்கப்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சமீபத்தில் வலியுறுத்தியிருந்தது.

மேலும் பல இடங்களில் இந்த காடழிப்பு அரசியல்வாதிகளின் பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக்கு அமைய இடம்பெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த செய்திகளை ஜனாதிபதி சமீபத்தில் மறுத்திருந்ததோடு, “தவறான செய்திகளை பரப்புவதற்கும் சமூகமயமாக்குவதற்குமான ஒரு நடவடிக்கை” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், காடழிப்பு இடம்பெறுவதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்சவுடன் இணைந்து இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தகவல்களை வழங்க நான்கு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அமைச்சரின் தனிப்பட்ட தொலைபேசி  இலக்கமான 0707-555666 இற்கு வட்ஸ்அப் தகவல்,  குறுந்தகவல் அல்லது காணொளிகளை அனுப்புமாறு  அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தகவல்களை வழங்க, சுற்றாடல் அமைச்சு – 1991, மத்திய சுற்றாடல் அதிகாரசபை – 1981, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் – 1921  ஆகிய இலக்கங்களுக்கு  தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. #வவுனியா #காடழிப்பு #சுற்றுச்சூழல் #தீக்கிரை #யுத்தம் #மாமடுவமலை #சூழலியலாளர்கள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More