Home இலங்கை கொரோனாவை விஞ்சிய ரிஷாட் – இலங்கையின் பேசுபொருளானார்…

கொரோனாவை விஞ்சிய ரிஷாட் – இலங்கையின் பேசுபொருளானார்…

by admin

ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுவதாக குற்றச்சாட்டு…


அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய உத்தரவிடப்பட்ட ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றார்கள் என்ற கருத்தை தனி்பட்டவகையில் தானும் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்

2019 ஜனாதிபதித் தேர்தலின்போது இ.போ.ச. பேருந்துகளில், புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு மக்களை ஏற்றிச்சென்றமை தொடர்பாக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய சட்டமா அதிபர் காவற்துறையினருக்கு உத்தரவிட்டார்.


இருப்பினும் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய பிடியாணை தேவையில்லை என நீதிமன்றம் அறிவித்ததில் இருந்து சில நாட்கள் கடந்துவிட்ட போதிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்யத் தவறிவிட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.


ரிஷாட் பதியுதீன் காவற்துறையினரிடம் சரணடைய வேண்டும்…


ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சட்டரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல, எனவே, சட்டத்துக்கு மதிப்பளித்து ரிஷாட் பதியுதீன் காவற்துறையினரிடம் சரணடைய வேண்டும். என அமைச்சர் சி.பி ரட்ணாயக்கா தெரிவித்துள்ளார்.

எவராவது தவறிழைத்திருந்தால் தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் நுவரெலியா – டயகம பகுதியில் நடைபெற்ற வீதி புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலத் வலியுறுத்தி உள்ளார்.


ரிஷாட் பதியுதீனை கைது செய்யமுடியாததையிட்டு சி.ஐ.டியினர் வெட்கப்படவேண்டும்…


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 22 ஆம் திகதி நிச்சயம் நிறைவேற்றப்படும். ரிஷாட் பதியுதீனை கைது செய்யமுடியாததையிட்டு சி.ஐ.டியினர் வெட்கப்படவேண்டும் என, தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையகத்துக்கு இன்று (17.10.20) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.


ரிஷாட் பதியுதீன் சரணடைய வேண்டும்

ரிஷாட் பதியுதீன் விவகாரம் தொடர்பான விசாரணை பொறிமுறைமீது தமக்கும் பலத்த சந்தேகம் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் அறிக்கை கையளித்துள்ளோம். நீதி கிடைக்கும் என நம்புவதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
நீதித்துறையில் தாம் தலையிடவில்லை. எவருடனும் அரசியல் டீலும் இல்லை. நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளன.
அதேவேளை, ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும் என்பதே தமது கோரிக்கையும். ரவூப் ஹக்கீமும் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். எனவே, தலைமறைவாகாமல் சரணடையுமாறு வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் விடயத்தில் அரசு நீதியாக நடந்துகொள்ள வேண்டும்


மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் விடயத்தில் அரசு நீதியாக நடந்துகொள்ள வேண்டும் என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசித்து வரும் மக்கள், தமது வாக்குகளை மன்னாரில் அளிப்பதற்காக ´வடக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பின்´ நிதி ஒதுக்கீட்டில், அரச பேரூந்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர், அப்பணம் மீள அவ்வமைப்பினால் அரசுக்கு செலுத்தப்பட்டது.


இதன் பின்னரும், தொடர்ந்து இது தொடர்பில் தற்போது இடம்பெற்று வரும் விடயங்கள் குறித்து, சிறுபான்மைச் சமூகம் மத்தியில் அரசாங்கம் தொடர்பிலும் தப்பான கருத்துக்கள் உளவுகின்றன. ஆகையால், இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தி, நீதியினை வழங்க வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More