இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

கங்குலி, கோலி, பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா, தமன்னாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை…

இணையவழி விளையாட்டுகளால் தேசிய அளவில் 25 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கம்…

இணையவழி விளையாட்டுகளால் தேசிய அளவில் 25 ஆயிரம் கோடி ரூபாய் புழங்குகின்றது என்னும் முக்கிய தகவலை தமிழக அரசின் மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. மேலும் இந்த விளையாட்டுகளுக்கான விளம்பரங்களில் நடிக்கும் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டதுடன், மக்கள் நலனை கருதாமல் தங்கள் பைகளை நிரப்புகிறார்கள் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் ” கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் இணையத் தளம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இணையவழி விளையாட்டுகளில் பலதரப்பட்டவர்கள் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் இணையவழி ரம்மி போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளில் சிக்கி, பலர் தங்களின் எதிர்காலத்தை சீரழித்துக்கொள்கின்றனர். தற்போது இணையவழி விளையாட்டுகளால் மனஉளைச்சலுக்கு உள்ளாகி, தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயிர்ப்பலிகளை தடுக்க இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இந்த விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையில் விளம்பரங்களில் நடித்து வரும் கிரிக்கெட் வீரர்கள் கங்குலி, விராட்கோலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா மற்றும் நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் நீலமேகம், துஜா ஆகியோர் முன்னிலையாகி, “அண்மையில் இணையவழி ரம்மி விளையாட்டில் சிக்கி புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் பல லட்ச ரூபாயை இழந்து, தற்கொலை செய்து கொண்டார். இவரை போல ஏராளமானவர்கள் தங்களின் மதிப்பு மிக்க உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். எனவே இதுபோன்ற இணையவழி விளையாட்டுகளை தடை செய்வது அவசியம்” என்றனர்.

இதனைப்பதிவு செய்த நீதிபதிகள், “பிரபலமானவர்கள் விளம்பரங்களில் பங்கேற்கும்போது பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அவரவர் பொக்கற்றுகளை நிரப்புவதில் தான் கவனம் செலுத்துகின்றனர். பெரும்பாலானவர்கள் தங்களை பின்பற்றுகின்றனர் என்று தெரிந்தும் இவ்வாறு செய்வது ஏன்?” என கேள்வி எழுப்பினர்.

அப்போது இணையவழி விளையாட்டு நிறுவனம் சார்பில்முன்னிலையான வழக்கறிஞர், “இந்த வழக்கில் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் தேவையில்லாமல் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்” என்றார்.

அதற்கு நீதிபதிகள், “கிரிக்கெட்டில் சூதாட்டம் இல்லையா? ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளுக்கு அந்தந்த மாநிலங்களின் பெயர்களை பயன்படுத்துவது ஏன்? பிரபலமானவர்கள் இணையவழி விளையாட்டுகள் பற்றி மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால்தான் பலர் இணையவழி விளையாட்டுகளில் சிக்கிக்கொள்கின்றனர்” என்றனர்.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய-மாநில அரசுகளுக்கும், கிரிக்கெட் பிரபலங்கள் கங்குலி, விராட்கோலி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கும் கடிதம் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை எதிா்வரும் 19-ம் திகதிதிக்கு ஒத்திவைத்தனர்.

இதேபோல் மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த மனுவில், “இணையவழி ரம்மி விளையாட்டுக்கு தெலுங்கானா மாநிலம் தடை விதித்து உள்ளது. அசாம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்த விளையாட்டின் ஆபத்தை உணர்ந்து இந்த மாநிலங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவும் இதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வழக்கறிஞர் முன்னிலையாகி, “பிற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் இணையவழி விளையாட்டுகளை தடை செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்” என கோரினார்.

அதற்கு நீதிபதிகள், “இணையவழி விளையாட்டுகளில் ஈடுபட்டு ஒவ்வொரு நாளும் பல உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன. இந்த பிரச்சினையில் கவனம் செலுத்துவது அவசியம். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இதுகுறித்து சட்ட வரைவு ஏதேனும் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வழக்கறிஞர், “இணையவழி ரம்மி விளையாட்டில் தேசிய அளவில் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளது” என்றார்.

அப்போது, “இந்த தொகை யாருக்கு போய் சேருகிறது?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “இந்த விஷயம் குறித்து 10 நாட்களில் அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும்” என்று அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

மேலும் இந்த விவகாரத்தில் அரசு உரிய முடிவை எடுக்கும் என இந்த கோர்ட்டு நம்புகிறது எனவும் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு எதிா்வலரும் 19-ந்திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #இணையவழி விளையாட்டு #கங்குலி, #விராட்கோலி #பிரகாஷ்ராஜ் #ராணா #தமன்னா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link