Home இலங்கை ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே குடும்பம்? நிலாந்தன்…

ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே குடும்பம்? நிலாந்தன்…

by admin

பசில் ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவார் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. இல்லையென்றால் அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு முன் அவர் நாடாளுமன்றத்திற்குள் வந்து விடுவார் என்று தெரிய வருகிறது. அவருடைய பெயர் கட்சியின் தேசியப் பட்டியலில் இல்லாதபடியால் சட்டச் சிக்கல்கள் உண்டு என்று கூறப்படுகிறது.ஆனால் ராஜபக்சக்கள் இது விடயத்தில் தடைகளை உடைக்கும் சக்தி மிக்கவர்கள். பசிலை எப்படியாவது உள்ளே கொண்டுவரப் பார்ப்பார்கள்.இதன்மூலம் அவர்கள் எந்த இறுதி இலக்குகளை முன்வைத்து 20ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார்களோ அந்த இலக்குகளில் ஒன்றை அடைந்து விடுவார்கள்.

19 ஆவது திருத்தம் தமது குடும்பத்திற்கு எதிரானது என்று ராஜபக்சக்கள் கூறி வந்தார்கள். அதில் ஓரளவுக்கு உண்மையும் உண்டு. ராஜபக்சக்களைக் குறிவைத்து மூன்று சரத்துக்கள் அதில் இருந்தன. முதலாவது- ஜனாதிபதியின் பதவிக் காலாம் இரண்டாக மட்டுப்படுத்தபட்டது. அது மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரானது. இரண்டாவது- இரட்டை பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் ஜனாதிபதியாக வர முடியாது. அது கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரானது. மூன்றாவது 35 வயதுக்கு மேல்தான் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.அது நாமல் ராஜபக்சவுக்கு எதிரானது.இம்மூன்று ஷரத்துக்களின் மூலமும் ராஜபக்ச குடும்பம் அடுத்தடுத்த தேர்தல்களில் போட்டியிடுவதை தடுப்பதே ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாக இருந்தது. எனினும் கோட்டாபய ராஜபக்ச தனக்குப் போடப்பட்ட சட்டப் பூட்டை வெற்றிகரமாக உடைத்தார். அதை தொடர்ந்து 20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்ததன் மூலம் ராஜபக்சக்கள் தங்கள் குடும்பத்துக்கு போடப்பட்டிருந்த எல்லாத் தடைகளையும் அகற்றி விட்டார்கள். பசிலோடு சேர்த்து நாடாளுமன்றத்தில் ராஜபக்சகளின் எண்ணிக்கை எழாகிவிடும்.  

20 ஆவது திருத்தத்தின் சட்ட வரைவு அரச வர்த்தமானியில் வெளியான பின் தாமரை மொட்டு கட்சிக்குள்ளேயே அதற்கு எதிராகக் குரல்கள் கேட்டன. அது ராஜபக்ஸக்கள் எதிர்பார்க்காத ஒன்று. ஏன் அவ்வாறு எதிர்ப்பு கிளம்பியது?

நிச்சயமாக 20ஆவது திருத்தம் நாட்டின் ஜனநாயக இதயத்தை பாதிக்கும் என்பதற்காக அல்ல. மாறாக கோட்டாபய ராஜபக்ஷவின் கைகளில் ஒரு அரசனுக்கு உரிய அதிகாரங்கள் கிடைத்துவிட்டால் அவர் கட்சியின் மூத்த உறுப்பினர்களை மதிக்க மாட்டார் என்ற ஒரு அச்சம் தாமரை மொட்டுக் கட்சியில் இருந்த மூத்த உறுப்பினர்கள் மத்தியில் தோன்றியதே காரணம் என்று கூறப்படுகிறது. மஹிந்த ராஜபக்சவோடு ஒப்பிடுகையில் கோட்டாபய படைத்துறை பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். எனவே அரசருக்குரிய அதிகாரங்கள் கிடைத்தால் அவர் கட்சிக்குள்ளும் ராணுவத்தனமாக கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் போது அது சில சமயம் நமது சுயமரியாதைக்கு பிரச்சினையாக அமையலாம் என்ற அச்சம் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் காணப்பட்டது. ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் போது அவ்வாறு அவமதிக்கப்பட்ட கட்சி முக்கியஸ்தர்களைத்தான் மைத்திரிபால சிறிசேன தன் தலைமையில் திரட்டி கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார். இந்த அனுபவத்தின் பின்னணியிலேயே 20ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களுக்கு தாமரை மொட்டுக் கட்சிக்குள்ளேயே  எதிர்ப்புக் கிளம்பியது என்று கூறபடுகிறது.

அவ்வாறு எதிர்ப்பு கிளம்பிய பொழுது குறிப்பாக இரட்டை பிரஜாவுரிமை சம்பந்தப்பட்ட சரத்தில் கோட்டாபயவே அதிருப்தியாளர்களை நேரடியாகக் கையாண்டார். இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் தனது குடும்பத்துக்கு எதிரானது என்றும் 20 ஆவது திருத்தத்தில் அதை நீக்காமல் விட்டால் அது தனக்கு ஒரு மானப் பிரச்சினை போன்றது என்ற தொனிப்பட அவர் தனது கட்சி ஆட்களிடம் கேட்டுக் கொண்டதையடுத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கி விட்டார்கள் என்று கூறப்படுகிறது.

அதேசமயம் எதிர்க்கட்சிகள் இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான ஷரத்தை வேறு ஒரு கோணத்தில் அணுகின. அது இனவாதக் கோணம். 19 ஆவது திருத்தத்தில் இருக்கும் அந்த சரத்து நீக்கப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் இரட்டை பிரஜாவுரிமை பெற்ற தமிழர்கள் நாட்டில் தேர்தலில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து விடுவார்கள் என்றும் அவர்கள் பயங் காட்டினார்கள்.

ஆனால் குறிப்பிட்ட ஷரத்து தமிழ் நோக்கு நிலையில் சாதகமான ஒன்றே. இப்பொழுது புலம்பெயர்ந்த தரப்பில் இருக்கும் பலர் தாயகத்தில் அரசியலில் இறங்குவது நல்லது. ஏனென்றால் ஒரு காலம் போராட்ட அரசியலில் தம்மை அர்ப்பணித்து செய்யப்பட்ட பலரும் இப்பொழுது புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் அங்குள்ள ஜனநாயக சூழலுக்குள் அவர்கள் புடம் போடப்பட்டிருக்கிறார்கள். போராட்ட அனுபவமும் புலம் பெயர்ந்த நாடுகளின் ஜனநாயக அனுபவமும் அவர்களுக்கு புதிய தரிசனங்களை கொடுத்திருக்கக் கூடும். அப்படிப்பட்ட ஆளுமைகள் தாயகத்தின் அரசியலில் நேரடியாக இடையீடு செய்யும் பொழுது அது தலைமைத்துவ வெற்றிடங்களை நிரப்ப உதவும். அதோடு இளம் தலைவர்களை உருவாக்குவதற்கு அவர்களுடைய அனுபவங்கள் உதவக்கூடும். யூதர்கள் தமது தேச உருவாக்கத்தின் போது அவ்வாறு புலம் பெயர்ந்த ஆளுமைகளை இணைத்துக் கொண்டதை இங்கு சுட்டிக்காட்டலாம்.

இதை இப்படி எழுதுவதன் நோக்கம் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் உழைத்த காசை அரசியலில் முதலீடு செய்யும் பொருட்டு அவர்களை மேலிருந்து கீழ் நோக்கி பரசூட் மூலம் தாயக அரசியலில் இறக்க வேண்டும் என்பதல்ல. மாறாக அவர்கள் காசை அல்ல தமது செழிப்பான அனுபவத்தை தாயகத்தில் பகிர்வதன் மூலம் கீழிருந்து மேல் நோக்கிய செழிப்பான தலைமைப் பாரம்பரியத்தை  கட்டியெழுப்புவதற்கு தமது பங்களிப்பைச் செய்யலாம். அதாவது தாயகத்தின் அரசியல் சூழலை பண்படுத்தி வளப்படுத்துவதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் அறிவும் அனுபவமும் அவசியம். அது தாயக அரசியலில் நொதிப்பை ஏற்படுத்தும்.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாட்டு அரசியலில் ஈடுபடுவதற்கு வழிவகை செய்யும் 20 ஆவது திருத்தத்தில் உள்ள குறிப்பிட்ட ஷரத்து ராஜபக்ஷக்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் பிரயோசனமானது. ஆனால் இதை தமிழ் மக்கள் அணுகும் நோக்குநிலை வேறு ராஜபக்சக்கள் அணுகும் நோக்கி நிலை வேறு. தமிழ் மக்கள் தமது அரசியலின் ஜனநாயக இதயத்தை பலப்படுத்துவதற்காக அவ்வாறு யோசிக்கிறார்கள். ஆனால் ராஜபக்சக்கள் சிங்கள அரசியலின் ஜனநாயக இதயத்தை பலவீனப்படுத்துவதற்காக அவ்வாறு யோசிக்கிறார்கள்.

இதை இன்னும் விரிவாகப் பார்க்கலாம். பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வருவது என்பது ராஜபக்சவின் வம்ச ஆட்சியை தொடர்சியறாமல்  பாதுகாக்கும் நோக்கிலானது.

பசில் ராஜபக்ச ராஜதந்திர நகர்வுகளில் சிறப்பாக செயற்படுவார் என்று ஒரு கருத்து குடும்பத்திற்குள்ளும் கட்சிக்குள்ளும் உண்டு. அரசியல் எதிரிகளோடு டீல்களைச் செய்வதில் அவர் வல்லவர் என்றும் நிரூபிக்கபட்டுள்ளது. 20 ஆவது திருத்தத்துக்கு வேண்டிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான டீல்களை பெருமளவுக்கு அவரே முன்னெடுத்தார் என்றும் ஒரு அவதானிப்பு உண்டு. எனவே வெற்றிகரமான டீலர் ஆகிய அவரை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவர வேண்டிய ஒரு தேவை ராஜபக்ஷக்களுக்கு உண்டு என்று ஒரு காரணம் கூறப்படுகிறது.

ஆனால் மெய்யான காரணம் அதைவிட ஆழமானது என்று கொழும்பில் கூறப்படுகிறது.இப்பொழுது பிரதமராக இருக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வயதாகிவிட்டது. தொடர்ந்தும் அரசியலில் தீவிரமாக செயற்படுவதற்கு அவருடைய மூப்பும் உடல்நிலையும் இடம் கொடுக்குமா என்ற கேள்விகள் உண்டு. இப்போதுள்ள யாப்பின் படி ஜனாதிபதி வெளிநாடு செல்லும் பொழுது அல்லது ஜனாதிபதிக்கு இயலாமல் போகும் போது பிரதமரே பதில் ஜனாதிபதியாக கடமை புரிவார். எனவே பிரதமராக நம்பகமான பொறுப்பான ஒருவரை வைத்திருக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவருடைய வயதும் உடல்நிலையும் இடம் கொடுக்கவில்லை என்றால் அந்த இடத்துக்கு வேறு ஒருவரை தயாராக வைத்திருக்க வேண்டும். எனவே இது விடயத்தில் ஏற்படக்கூடிய வெற்றிடங்களை கவனத்தில் எடுத்து பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வரத் திட்டமிடுகிறார்கள். அதாவது சுருக்கமாகச் சொன்னால் ராஜபக்ச குடும்பத்தின் வம்ச தொடர்ச்சியைப் நீடிப்பதற்கு உரிய ஏற்பாடு இது.

இந்த இடத்தில் சில  கேள்விகள் எழும். நாட்டை ஆள்வதற்கு ராஜபக்ச குடும்பத்துக்குள் மட்டும்தான் கெட்டிக்காரர்கள் இருக்கிறார்களா? தாமரை மொட்டு கட்சிக்குள் வேறு மூத்த ஆளுமைகள் கிடையாதா? அல்லது அந்தக் கட்சிக்குள் உள்ள ஆளுமை மிக்கவர்களும் மூத்தவர்களும் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?

தாமரை மொட்டுக் கட்சி என்பது யுத்த வெற்றியை ஒரு குடும்பத்தின் சொத்தாக்கி நிறுவனமயப்படுத்தியதன் விளைவே. எனவே அதன் இதயம் ராஜபக்சக்கள்தான். இதை ஏற்றுக் கொண்டுதான் ஏனைய மூத்த உறுப்பினர்கள் கட்சிக்குள் அடங்கி இருக்கிறார்கள். பசில் ராஜபக்ஷவின் நியமனத்தை அவர்கள் மௌனமாக ஏற்று கொள்கிறார்கள் என்று சொன்னால் முதலாவதாக யுத்தத்தை வென்ற ஒரு குடும்பத்துக்கு ஏனைய எல்லா தகுதிகளும் இருக்கும் என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இரண்டாவதாக தாமரை மொட்டு கட்சி என்பது ஒரு குடும்பத்தின் சொத்து என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா ? மூன்றாவதாக திறமைகளை விட மூப்பைவிட ஒருவரின் பிறப்புத்தான் பதவி உயர்வுகளைத் தீர்மானிக்கிறது என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? அவர்கள் மட்டுமல்ல ராஜபக்ச குடும்பத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அள்ளிக் கொடுத்த 69 இலட்சத்துக்கு அதிகமான மக்களும் அப்படித்தான் நம்புகிறார்களா? 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More