Home உலகம் அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுப்போம் – பைடன். போராடினால்தான் ஜனநாயகம் வலுக்கும் – கமலா….

அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுப்போம் – பைடன். போராடினால்தான் ஜனநாயகம் வலுக்கும் – கமலா….

by admin


ஜோ பைடன், கமலா ஹாரிஸ் முழுமையான உரை தமிழில்

“இந்த தேசத்தின் மக்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் நமக்கு தெளிவான ஒரு வெற்றியை தந்துள்ளனர்,” என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

“நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கும் உறுதிக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். வேற்றுமையை கோராமல் ஒற்றுமையை கோரும் ஒரு அதிபராக நான் இருப்பேன்.” என அவர் கூறி உள்ளார்.

ஒற்றை அமெரிக்கா

“சிவப்பு நிற மாகாணங்கள் நீல நிற மாகாணங்கள் என்றில்லாமல், பல மாகாணங்கள் ஒன்றிணைந்த அமெரிக்காவாக நான் பார்ப்பேன். உங்கள் நம்பிக்கையைப் பெற முழு மனதாக பணியாற்றுவேன்,”என அவர் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கா என்பது மக்களை குறித்தது. நான் இந்த பதவிக்கு வந்ததற்குக் காரணம், அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுக்கவும், இந்த நாட்டின் முதுகெலும்பான நடுத்தர வர்க்க மக்களை மறுகட்டமைக்கவும், மீண்டும் அமெரிக்காவை அனைவரும் மதிக்கும்படியும், நாட்டில் ஒற்றுமையை உருவாக்கவும்தான். எனது இந்த நோக்கத்திற்காக பலர் வாக்களித்துள்ளது குறித்து நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன்,” எனக் கூறிய அவர், தற்போது கடமையாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.

கசப்புகளை ஒதுக்கி வைப்போம்

தனது தேர்தல் பிரசாரத்திற்கு உதவிபுரிந்த பல்வேறு தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த பைடன், டிரம்பிற்கு ஆதரவளித்தவர்கள் குறித்தும் உரையாற்றினார். “ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். கசப்புகளை ஒதுக்கி வைத்து, ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வோம், நமது எதிர்தரப்பினரை எதிரிகளாக நடத்துவதை நிறுத்துவோம்,” என்றார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவோம்

கொரோனாவை கட்டுப்படுத்துவோம்

“எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் எனக்காக வாக்களித்தவர்களுக்காகப் பணி செய்வதுபோலவே நான் கடுமையாக பணி செய்வேன்,” என்றார்.

“எனது முதல் பணி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதுதான். நாம் இயல்பு நிலைக்குச் செல்ல அதுதான் ஒரே வழி,” என்று கூறிய பைடன்.

“திங்களன்று, முன்னணி விஞ்ஞானிகள், நிபுணர்களுடன், பதவி மாற்ற வல்லுநர்களுடன் ஆலோசிப்பேன்,” என்று கூறினார்.’

“எங்கள் கொரோனா கட்டுப்பாட்டுத் திட்டத்தை செயலாக மாற்ற அவர்கள் உதவி செய்வர், இந்த பணி ஜனவரி 20ஆம் திகதி 2021ஆம் ஆண்டு தொடங்கும்,” என்றார்.

உலகிற்கான வழிக்காட்டி

இந்த ஒன்றியத்தை 1860ஆம் ஆண்டு லிங்கன் காத்தார். 1932ஆம் ஆண்டு ரூஸ்வெல்ட் அப்போதைய பிரச்சனைகளை தீர்க்க உறுதி பூண்டார். 1960ஆம் ஆண்டு கென்னடி எல்லைகளுக்கான புதிய உறுதியை அளித்தார். ஒபாமா புதிய வரலாற்றை படைத்தார். நம்மால் முடியும் என்றார்.

தேவதைகளுக்கும், இருளுக்கும் நடந்த தொடர் சண்டையால் உருப்பெற்ற தேசம் இது. தேவதைகள் நீடிப்பதற்கான தருணம் இது.

மொத்த உலகமும் அமெரிக்காவை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த உலகிற்கான வழிக்காட்டி அமெரிக்கா என தனது உரையில் பைடன் கூறி உள்ளார்.

“போராடினால்தான் ஜனநாயகம் வலுவாக இருக்கும்”

கமலா ஹாரிஸ் உரை:

கமலா ஹாரிஸ்
படக்குறிப்பு,கமலா ஹாரிஸ்

அமெரிக்கத் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுடன் சேர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்தியத் தமிழ் மற்றும் கருப்பினப் பூர்வீகம் கொண்டவரான கமலா ஹாரிஸ் தமது உரையைத் தொடங்கும்போது இப்படிக் குறிப்பிட்டார்:

“ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு செயல்பாடு என்று நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் லூயிஸ் இறப்பதற்கு முன்பு எழுதினார். அமெரிக்காவின் ஜனநாயகம் என்பது உத்தரவாதம் செய்யப்பட்டது அல்ல. ஜனநாயகத்துக்காகப் போராடுவதற்கு நாம் எந்த அளவுக்கு விரும்புகிறோமோ அந்த அளவுக்கே அது வலுவாக இருக்கும் என்பதே அவர் சொன்னதன் பொருள்”

“இதில் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் இருக்கிறது. சிறந்த எதிர்காலத்தைக் கட்டமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு சக்தி இருக்கிறது” என்று பேசிய கமலா ஹாரிஸ், 2020 தேர்தலுக்கான பைடனின் முழக்கமான “அமெரிக்காவுக்கு நீங்கள் புதிய நாளைத் தொடங்கினீர்கள்” என்ற வாசகத்தையும் குறிப்பிட்டு அவர் பேச்சைத் தொடர்ந்தார்.

“நீங்கள் நம்பிக்கையை தேர்வு செய்தீர்கள். ஒற்றுமையை, கண்ணியத்தை, அறிவியலை, உண்மையை தேர்வு செய்தீர்கள். அதனால் நீங்கள் பைடனை தேர்வு செய்தீர்கள்” என கமலா ஹாரீஸ் கூறி உள்ளார்.

கமலா ஹாரிஸ்
படக்குறிப்பு,உரையாற்றுவதற்காக மேடையேறிய கமலா ஹாரிஸ்

மக்களின் ஆராவாரத்திற்கு இடையே உரையாற்றி வரும் இவர் இவ்வாறாக கூறி உள்ளார்.

பைடன் ஒரு ஹீலர் (குணப்படுத்துபவர்) என கூறிய கமலா, கடந்த காலங்களில் தோல்வியை சந்தித்த நபருக்குதான் மக்களின் தேவை குறித்த ஒரு புரிதல் இருக்கும். அந்த புரிதல் ஒரு தேசமாக நம் நோக்கத்தை மீட்டெடுக்க உதவும் என கூறி உள்ளார்.

குடும்பத்தின் மீதான பைடனின் பாசம், அவரது நல் இயல்பு என பல விஷயங்களை பட்டியலிட்டார் கமலா ஹாரிஸ்.

பைடனின் குடும்பத்தைப் பற்றி பேசிய அவர் பின்னர் தம் குடும்பம் குறித்தும் பேசினார். இந்த தருணம் பெண்களுக்கு எப்படியானதாக இருக்கும் என்றும் பேசினார்.

என் அம்மா அமெரிக்காவில் இப்படியான நிகழ்வு நிச்சயம் சாத்தியப்படும் என தெரிவித்தார்.’

ஒரு பெண் துணை அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டிப்பதை குறிப்பிட்டே கமலா இவ்வாறாக பேசினார்.’

தனி மனுசியாக என் அம்மா என்னை வளர்த்தெடுத்தார் அவரை நான் இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். இந்த தருணத்தை சாத்தியப்படுத்திய கருப்பின மக்களை, ஆசியர்களை, வெள்ளை இனத்தவர்களை, லத்தீனியர்களை நான் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன் என அவர் தன் உரையில் குறிப்பிட்டார்.

இந்த மக்கள்தான் ஜனநாயகத்தின் முதுகெலும்பு. நூறு ஆண்டுகளுக்கு முன்பு 19வது சட்டத் திருத்தத்திற்காகப் போராடியவர்கள் அவர்கள். 55 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குரிமைக்காகப் போராடியவர்கள் அவர்கள். 2020தில் புதிய தலைமுறை பெண்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த போராட்டத்தின், இலக்கின் வெளிப்பாடாக இப்போது நான் இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

துணை ஜனாதிபதியாக ஒரு பெண்ணை தேர்ந்து எடுத்ததற்கு பைடனைப் பாராட்டினார் கமலாஹாரிஸ்.

துணைஜனாதிபதியாக பதவி ஏற்கும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம். நான் கடைசி பெண் அல்ல என அவர் தெரிவித்தார்.

BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More