Home உலகம் வல்லவனுக்கு புல்லும் அயுதம் – கொரோனா – பணியிழப்பு – சாலையோர உணவகம் ஆரம்பித்த மலேசிய விமானி…

வல்லவனுக்கு புல்லும் அயுதம் – கொரோனா – பணியிழப்பு – சாலையோர உணவகம் ஆரம்பித்த மலேசிய விமானி…

by admin
படக்குறிப்பு,கேப்டன் அஸ்ரின்

கொரோனா விவகாரத்தால் மலேசிய விமானப் போக்குவரத்துத் துறை பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த விமானி ஒருவர் வேலையிழப்பு காரணமாக சாலையோர உணவகம் ஒன்றைத் தொடங்கி உள்ளார்.

இதையடுத்து சூழ்நிலைக்கேற்ப முடிவெடுத்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வதாக கூறும் அவருக்கு மலேசியர்கள் பலரும் வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

மலிண்டோ ஏர் விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் அஸ்ரின். கொரோனா பாதிப்பால் கடும் இழப்பைச் சந்தித்த அந்நிறுவனம் அண்மையில் ஆட்குறைப்பு நடவடிக்கையாக 2,200 ஊழியர்களைப் பணியிலிருந்து விலக்கியது. விமானிகள் முதல் தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் வரை பலர் பணியிழந்தனர். அவர்களில் கப்டன் அஸ்ரினும் ஒருவர்.

“கடந்த சில மாதங்களில் நடந்தவற்றைப் பார்த்த பிறகு நானும் எனது குடும்பமும் கடுமையாகப் பாதிக்கப்படுவோம் என்பதை நன்கு அறிந்திருந்தேன். குறிப்பாக பொருளாதார ரீதியில் பாதிப்பு இருக்கும் என்பது தெரிந்ததால் மாற்று வழிகளை சிந்திக்கத் தொடங்கினேன்.

“பாடசாலைக் கல்வியை முடித்த பின் சமையல் கலை தொடர்பாகப் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் கற்றுக்கொண்ட அந்த சமையல் நுணுக்கங்களை இப்போது பயன்படுத்துவது என முடிவு செய்தேன்,” என்று சொல்லும் கப்டன் அஸ்ரின், தற்போது சாலையோர உணவகம் ஒன்றைத் துவங்கி உள்ளார்.

இதன்மூலம் மாதம்தோறும் சுமார் 1,500 மலேசிய ரிங்கிட்டை (1 ரிங்கிட்=17.50 ரூபாய்) வருமானமாக ஈட்டமுடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். ஆனால், விமானியாகப் பணியாற்றியபோது அவர் பெற்று வந்த ஊதியம் சுமார் 50 ஆயிரம் மலேசிய ரிங்கிட்.

மலேசிய ஏர்லைன்ஸ், ஃபயர்ஃபிளை, ஜகார்த்தா ஏர் உள்ளிட்ட விமான நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.

தனது சாலையோர உணவகத்துக்கு ‘கப்டன் கோர்னர்’ என்று பெயர் சூட்டியுள்ளார்.

கேப்டன் அஸ்ரின்

மீ கரி, பிஹுன் சூப் என மலேசியாவின் பிரபலமான உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது இவரது சிறு உணவகம். கப்டன் அஸ்ரினும் வாடிக்கையாளர்களை வரவேற்பது, உணவு பரிமாறுவது, பொங்குள் (பார்சல்) கட்டுவது எனப் பரபரப்பாக இயங்குகிறார்.

மேலும் அவர் விமானிக்கான முழுச் சீருடையையும் அணிந்தபடியே இந்தப் பணிகளைச் செய்கிறார் என்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம். அஸ்ரினின் மனைவியும் மாமியாரும்தான் சமையலில் அவருக்கு உதவிகரமாக உள்ளனர்.

தனது மகன் ஆரம்பித்துள்ள இந்த சாலையோர உணவகம் குறித்து அஸ்ரினின் தந்தை ஸவாவி அஹமட் தமது முகநூல் பக்கத்தில் அண்மையில் பதிவிட்டார். இது ஏராளமானோரின் கவனத்தைக் கவர்ந்தது.

விமானப் போக்குவரத்துத் துறை நலிவடைந்துள்ள நிலையில் தனது மகன் எப்போது விமானிக்கான சீருடையை அணிந்து விமானத்தை இயக்குவார் என்பது தெரியவில்லை என்றும், அதனால் உணவகம் தொடங்கியுள்ள தன் மகனுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அந்தப் பதிவில் ஸவாவி அஹமட் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவைக் கண்ட ஏராளமானோர் கப்டன் அஸ்ரினைப் பாராட்டி உள்ளனர். அவரது உணவகத்துக்கு நேரில் வருகை தந்து உணவு அருந்தப் போவதாகப் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

கப்டன் அஸ்ரினுக்கு நவம்பர் 4-ம் தேதி பிறந்தநாள். இதையறிந்து அவரது புது முயற்சி வெற்றி பெறவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும் பலரும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.

தள்ளாடும் மலேசிய விமானப் போக்குவரத்துத்துறை

கேப்டன் அஸ்ரின்

மற்ற நாடுகளைப் போலவே மலேசிய விமானப் போக்குவரத்துத் துறையும் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. விமானப் போக்குவரத்துத் துறையில் பல பில்லியன் ரிங்கிட் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் வீ. கா. சியோங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதமே மலேசிய விமானப் போக்குவரத்துத் துறைக்கு நடப்பாண்டில் 13 பில்லியன் மலேசிய ரிங்கிட் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் மலேசியன் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா, மலிண்டோ விமான நிறுவனங்கள் சுமார் 10.9 பில்லியன் மலேசிய ரிங்கிட் அளவிற்கு இழப்புகளை எதிர்கொண்டிருப்பதாகவும், விமான நிலைய பராமரிப்பு நிறுவனங்கள் 2.1 பில்லியன் மலேசிய ரிங்கிட் அளவுக்கு இழப்புகளைச் சந்திக்கும் என்றும் மலேசியப் போக்குவரத்து அமைச்சு கணித்துள்ளது.

ஜூலை நிலவரப்படி மலேசிய விமான நிறுவனங்கள் 1,69,728 விமான சேவைகளை ரத்து செய்ததாகவும் 4,316 மில்லியன் பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டதாகவும், சுமார் 3 மில்லியன் பயணிகள் தங்களுடைய பயணத்தை ஒத்தி வைத்திருப்பதாகவும் போக்குவரத்து அமைச்சர் வீ.கா. சியோங் தெரிவித்திருந்தார்.

நிதி நெருக்கடியால் தத்தளிக்கும் விமான நிறுவனங்கள்

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, விமானப் போக்குவரத்து துறையில் மீட்சி பெற சுமார் 12 முதல் 18 மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளது. பயணிகள் விமானப் பயணச்சீட்டை முன்பதிவு செய்வதில் மிகுந்த தயக்கம் காட்டுவதாக அந்நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

இதே பிரச்சினையைதான் மற்ற விமான நிறுவனங்களும் எதிர்கொண்டுள்ளன. இதையடுத்து மலேசிய விமான நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை என்பது தவிர்க்க முடியாதது எனத் தெரிவித்துள்ளன.

மலிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் 2,200 பேரை அதிரடியாக ஆட்குறைப்பு செய்துள்ளது. அந்நிறுவனத்தில் மொத்தம் 3,200 பேர் பணியாற்றி வந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 1,000ஆகக் குறைந்துள்ளது. ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முன்கூட்டியே விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் அஸ்ரின்

இதற்கிடையே விமான நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் உதவிகளை எதிர்பார்த்துள்ளன. கடந்த காலங்களில் MH 370, MH 17 ஆகிய இரு விமானங்களை இழந்துள்ளது மலேசிய ஏர்லைன்ஸ். அந்நிறுவனம் எதிர்கொண்டுள்ள கடும் நிதி நெருக்கடியிலிருந்து மீள மறு சீரமைப்புத் திட்டம் தேவையென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் முன்வைக்கப்பட்ட மறுசீரமைப்புத் திட்டத்துக்கு குத்தகைதாரர்கள் ஆதரவு வழங்காவிட்டால் இந்நிறுவனத்தை மூடவேண்டிய நிலை ஏற்படும் என்கிறார் மலேசியன் ஏர்லைன்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.

மறுசீரமைப்புத் திட்டத்தை சில குத்தகைதாரர்கள் ஏற்க மறுத்துவிட்டதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேவேளையில் ஏர் ஏசியா நிறுவனம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவும், சுமூகமாக செயல்படவும் சுமார் 2.5 பில்லியன் மலேசிய ரிங்கிட் தேவைப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்க்கும் நிதி கிடைக்கும் பட்சத்தில் அந்நிறுவனத்தால் அடுத்தாண்டு இறுதிவரை சிக்கல்களின்றி செயல்பட இயலும் என அவர் கூறியுள்ளார்.

மலேசிய வங்கிகள் இந்நிறுவனத்துக்கு சுமார் 1 பில்லியன் டாலர் கடன் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் இத்தகைய நிதி உதவியானது 24 ஆயிரம் வேலைகளைத் தக்கவைக்க வழிவகுக்கும் என டோனி ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ஏர் ஏசியா மேற்கொண்ட ஆட்குறைப்பு நடவடிக்கையால் ஏர் ஏசியா ஊழியர்கள் 250 பேர் பாதிக்கப்பட்டனர். அந்நிறுவனம் ஜப்பானில் மேற்கொண்டு வந்த வணிக நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக கடந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்தது.

மலேசிய விமான நிறுவனங்கள் வருவாய் இழப்பால் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருப்பது இதன்மூலம் உறுதியாகி இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More