இலங்கை பிரதான செய்திகள்

கைவிடப்பட்ட இந்திய மீனவ படகுகளும் தொடரும் சர்ச்சைகளும்…

இந்திய மீனவர்களால் இலங்கையில் கை விடப்பட்ட படகுகளினால் வடக்கு மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சணைக்கு தீர்வு கானும் விடயத்திலும் சிலர் ஆதாயம் கான முயன்றனரா என்ற பெரும் கேள்வி தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளதோடு இரு நாட்டின் அரசும் தலையை குடையும் அளவிற்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடும் சமயம் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து இலங்கை வளத்தை அபகரிப்பதனால் உள்ளூர் மீனவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்குவது தற்போது ஒரு தசாப்தமாகவே சுட்டிக்காட்டப்படுகின்றது. இருப்பினும் அதற்கு இன்றுவரை ஓர் நிரந்தர தீர்வு எட்ட முடியாமலேயே உள்ளது.

இந்த நிலையில் இலங்கை கடற்பரப்பிற்குள் 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை ஊடுருவிய இந்திய மீன்பிடி படகுகளை விடுவிக்குமாறு இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் 2019ஆம் ஆண்டு வழங்கிய பரிந்துரையின் பெயரில் நீதிமன்றங்கள் அப்படகுகளை விடுவிக்க அனுமதியும் வழங்கின. அந்த அனுமதியின் பெயரில் இந்தியாவில் இருந்து இந்திய கடல்வள அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் நேரில் வந்து தமது படகுகளை பார்வையிட்டனர். பார்வையிட்டதன் அடிப்படையில் நல்ல நிலையில் இருந்த படகுகளை இந்தியாவிற்கு எடுத்துச் சென்றதோடு பழுதடைந்த படகுகளை கைவிட்டுச் சென்றனர்.

இவ்வாறு கைவிட்ட படகுகள் கிராஞ்சி , காரைநகர் கடற்கரை பகுதிகளில் உள்ள கடற்படை முகாம் அருகே கட்டி வைக்கப்பட்டுள்ளது.  இங்கே நிறுத்தி வைத்திருக்கும் இந்த படகுகளினால் நுளம்பு பெருக்கம் ஏற்படுவதோடு சுற்றுச் சூழலிற்கு மாசு ஏற்படுவதாக கருதி இவற்றினை அங்கிருந்து அகற்ற அனுமதி கோரப்பட்டது . இதன் அடிப்படையில் 2020-08-27 அன்று இடம்பெற்ற சட்டவிரோத கடல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் செயலணிக் கூட்ட தீர்மானத்தின் பிரகாரம் யாழ்ப்பாணம் , மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றங்களிற்கு ஓர் நகர்த்தல் பத்திரத்தை சமர்ப்பித்தனர்.

நீதிமன்றங்களில் சமர்ப்பித்த வழக்குகளில் ஊர்காவற்றுறை மன்றில் 2020-09-08 அன்று வழங்கிய கடித்த்திற்கான கட்டளைப் பிரதியினை B/ 216/17 இலக்க   நகர்த்தல் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு பெறப்பட்டுள்ளது . இந்த நகர்த்தல் பத்திரத்தில் இந்தியத் தூதரகத்தின் கோரிக்கைக்கு அமையவும் , சட்டமா அதிபர் , வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரது ஆலோசணையின் பெயரிலும் 94 படகுகளையும் ஏலத்தில் விற்பனை செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த அனுமதி கோரலின் பெயரில்
2020-10-14 அன்று ஊர்காவற்றுறை நீதிமன்றம் வழங்கிய கட்டளையில் படகுகளை ஏலம் விடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோன்று நவம்பர் மாதம் மன்னார் நீதிமன்றில் 27 படகுகளிற்கு ஏலம் விடுவதற்கு அல்லது அழிப்பதற்கான அனுமதி வழங்க்பட்டுள்ளது. இந்தச் சம்பவமே யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஊடகங்களில் வெளிவந்த நிலையில் இந்திய ஊடகங்களும் வெளிப்படுத்திய சமயமே சர்ச்சை ஏற்பட்டது.  அதில்  இந்திய மீனவர்களின் 121 படகு இலங்கையில் அழிக்கப்படவுள்ளதாகவே இந்தியாவின் தமிழ் நாட்டில் செய்தி பரவியதோடு பல மீனவ அமைப்புக்களின் தலைவர்களும் கருத்துரைத்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் மீனவர்களின் படகுகள் அழிக்கப்படவுள்ளதாக கருத்து தெரிவித்த பல இந்திய மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு 2019ஆம் ஆண்டு வருகை தந்து படகுகளை பார்வையிட்டு கொண்டு செல்ல முடியாது எனத் திரும்பிச் சென்ற குழுவிலும் அங்கம் வகித்தனர்.

இதேநேரம் இந்தியத் தூதரகத்தின் கோரிக்கையின் பெயரிலும் என திணைக்களம் நீதிமன்றில் சமர்ப்பித்த ஆவணத்தை ஆராய்ந்தபோது இந்தியத் தூதரகம் வெளிவிவகார அமைச்சிற்கு வழங்கிய கடிதம் இணைக்கப்பட்டிருந்தது. அதனால் இந்தியத் தூதரகம் இவ் விடயத்தை ஏற்கனவே நன்கு அறிந்திருந்ததோடு அதன் நிலவரத்தையும் சரியாகவே அணுகியுள்ளதாகவே கருதப்படுகின்றது.  #கைவிடப்பட்ட #இந்திய #மீனவர்கள் #படகுகள் #சர்ச்சை #மீனவஅமைப்புகள்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap