இலக்கியம் இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

குழந்தை. ம.சண்முகலிங்கம் மாணவர் அறியப்படாத பொக்கிசம் – நிவேத்திகா.

இந் நாளாம் நன்னாளாம்
உம் அகவை நாளாம்
அரங்கியல் மாணாக்கர்
எம் பொன்னாளாம்

உம் புகழ்
உலகெல்லாம் பேசப்பட
உம் அகவை நாளில்
வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன்

இன்றைய தினம்(15.11.2020) தனது 89 ஆவது அகவையினை நினைவு கூரும் எம் அரங்கியல் முதுபிதா குழ.ம.சண்முகலிங்கம் பற்றிய மனப்பதிவுகளை வெளிக்கொணர்வதில் பெரு மகிழ்வடைகின்றேன்.
சண்ணர் என்று அழைக்கப்படும் அவர் எனக்கு முகந்தெரியாத முகவரி தெரியாத ஒரு படைப்பாளி. ஆனால் அவருடைய படைப்பு எனக்கு அவர் முகம், முகவரிகளை அறிமுகப்படுத்தியது.
உண்மையில் எனக்கு சண்ணர் பற்றியோ அல்லது அவருடைய படைப்புப் பற்றியோ பூரண அறிவில்லை. தூசு என் கண்ணில் வந்து மாட்டியது போல் எந்தையும் தாயும் நாடகமானது என் மனதில் ஒட்டிக் கொண்டது.


கிழ.பல்கலைக்கழகத்தில், நாடகமும் அரங்கியலும் விசேட பாடத்தினை கற்கும் மாணவர்கள், நுண்கலைத்துறை விரிவுரையாளர் சு.சந்திரகுமாரின் நெறியாள்கையின் கீழ் எந்தையும் தாயும் நாடகம் மேடையேற்றப்பட்டது. நாடக பயிற்சிக் காலங்களில் நான் அதில் ஈடுபட்டமையும் அது பற்றிய கலந்துரையாடல்களும் என்னை சண்ணர் ஐயா பக்கம் இழுத்துச் சென்றது.
கோட் சூட் போடாத வெள்ளை வேட்டியும், சேட்டும் தான் அவருடைய எளிமையின் அடையாளம். அவர் எம் இளந் தலைமுறை அறியப்படாத பெரும் பொக்கிசமாக இருப்பதை என்னால் அறிய முடிந்தது.


எந்த ஒரு காரியமாக இருந்தாலும் மனதில் விருப்புடன் செயற்பட்டால் மாத்திரமே அக் காரியத்தை நேர்த்தியாக செய்து முடிக்க முடியும் என்பது மனிதப் பண்பு. ஆனால் அதற்கு எதிர்மாறாக பயணித்தவர்தான் சண்ணர். காற்றில் அடித்து வரும் சருகுக் கூட்டம் போல அடித்து வரப்பட்டதுதான் அவருடைய மொழி பெயர்ப்பு பணியும் நாடகப் பணியும். நாம் அறியப்படாத சண்ணரது நாடகப்பிரதிகள், நாட்டிய நாடகம், சிறுவர் நாடகம், ஓராள் அரங்கு, வில்லுப்பாட்டு, உரையிடைப்பட்ட பாட்டு, இசை நாடகப் பிரதி, கூத்து, வானொலி நாடகம், ஆங்கில நாடகம், தொலைக்காட்சி எழுத்துரு, மொழி பெயர்ப்பு நாடகங்கள் என அவருடைய படைப்புக்களை படிப்பதற்கு தனியான துறை அமைக்கப்பட வேண்டும் என்றுதான் எண்ணம் எழுகின்றது. அந்தளவிற்கு அவருடைய படைப்புக்கள் வெளி வராத பொக்கிசமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.


நாடக பாடதின் வரலாற்றினை நோக்கும் போது நாடக பாடம் பற்றிய அடிப்படை இல்லாதவர்கள்தான் நாடக பாடத்தை சிறப்பாக நகர்த்தி வந்துள்ளார்கள் என்பதற்கு சண்ணர் சிறந்த எடுத்துக்காட்டு. இவர் போன்ற செயற்பாட்டாளர்களால்த்தான் இன்று நாம் பாடசாலைகளிலும், உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நாடகத்தை ஒரு பாடமாக கற்கக் கூடியதாக இருக்கின்றது.


அக்காலத்தில் இருந்த சண்முகலிங்கம் ஐயா போல் படைப்பாக்க திறன் கொண்டவர்கள் தொழில்நுட்ப வசதி அறியாத காலத்திலும் கூட அவர்களின் நாடக செயற்பாடு பசுமையான நினைவுகளை மீட்டுத்தருகின்றது. உதாரணமாக- play diraction என்ற ஆங்கிலப் புத்தகத்தை பல்கலைக்கழக நாடக துறை மாணவர்களுக்காக இரண்டு வாரங்களில் தனது கைப் பட எழுதிக் கொடுத்தள்ளார். அன்று பசுமையாக இருந்த நாடக பாடத்தில் இன்று மந்த நிலையே காணப்படுகின்றது. காரணம் நமது கல்வி முறைகளில் ஏற்பட்ட மாற்றம். உதாரணம்- போலேப்பிறேயர் கூறும் வங்கிமுறைக் கல்வி முறை.


நாடகத்தை ஒரு பூட்டாக எடுத்து பட்டம் பெற்று, வெளியுலகிற்குச் சென்று பட்டதாரி எனும் சாவியால் பூட்டைத் திறந்து வயிற்றுப் பிழைப்புக்காக வேலை எடுத்தால் போதும் என்ற மனப்பக்குவமே, இன்று பல பட்டதாரிகளிடத்தில் குடிகொண்டுள்ளதால் நாடகப் பயணத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். பல இளம் படைப்பாளிகள் காணாமலாக்கப்படும் போக்கு இன்றைய நாகரீகமாக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றான கல்வி முறையினைத்தான் சண்ணரது கல்வி முறை எமக்கு உணர்த்தி நிற்கின்றது.


நம்மைப் போன்று தரம் ஆறு தொடக்கம் பல்கலைக்கழகம் வரை என்று ஒரு ஒழுக்கவியலுக்குள் அகப்படாத சண்ணர் கார்மேகங்கள் தூவும் மழைத்துளிகள் போல் நாடகப் பிரதிகளை நமக்கு தூவிவிட்டிருக்கின்றார் என்றால், ஏன் நம்மால் முடியவில்லை? அவரது நிழலைத் தொடரும் அடுத்த தலைமுறை ஏன் உருவாகவில்லை? என்பதை மாணவர் சமூகம் உணர வேண்டும். நம் கல்வி முறைகளுக்குள் இருக்கும் திணிப்புக்களுக்கு அப்பால் தேடல் மிகுந்த உலகை கண்டடைய வேண்டும். அப்பொழுதுதான் நாம் சண்ணரது அரங்கியல் பயணத்தைத் தொடர முடியும்.


கல்வியியல் சிந்தனையாளர்கள் பற்றி நாம் கற்கும் போது மேலைத்தேய சிந்தனையாளர்களின் கல்விக் கோட்பாடுகளை கோடிட்டுக் காட்டுவதில் உள்ள பெருமிதம், ஏன் நம் நாட்டு நம் மொழி பேசும் குழ.ம.சண்முகலிங்கம் போன்றவர்களின் கல்வியியல் சிந்தனை பற்றிப் பேசுவதற்கு மனம் இல்லாதவர்களாக இருக்கின்றோம் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.


அ.ஆன் நிவேத்திகா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap