இலங்கை பிரதான செய்திகள்

யாசகம் செய்தாலும், வழங்கினாலும் தண்டனை!

இலங்கையில் யாசகம் வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர

யாசகம் பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என்று காவற்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், எந்த விதமான தண்டனை வழங்கப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர் உண்மையான யாசகர்கள் கிடையாது எனவும், வர்த்தக நோக்கத்துடன், யாசகம் பெறுவோர் தற்போது இலங்கையில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பிரதான ஒருவரின் வழிநடத்தலின் கீழ், பெரும்பாலானோர் யாசகம் பெறுவதாகவும், யாசகம் பெறுவோருக்கு பிரதான நபர் நாளாந்தம் சம்பளத்தை வழங்குவதாகவும் விசாரணைகளின் கண்டறியப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், யாசகம் பெறும் நடவடிக்கைகளை நிறுத்துவற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களிலுள்ள வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறும் நடவடிக்கை காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதனால், வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறும் யாசகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அவர்களை வழிநடத்தும் பிரதான நபர்களையும் கைது செய்து, அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க எடுக்க உள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறுவோருக்கு, ஓட்டுநர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் யாசகம் வழங்குகின்றமையினாலேயே, யாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அஜித் ரோஹண, இதனால், பிரதானமாக வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் ஓட்டுநர்களோ, வாகனத்தில் பயணிப்போரோ யாசகர்களுக்கு யாசகத்தை வழங்கும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கின்றார்.

யாசகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், போலி முகத்துடன் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை குறைவடையும். இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால், சில யாசகர்களும் பாதிக்கப்பட்டிருந்தமை கடந்த காலங்களில் பதிவாகியிருந்தது.

குறிப்பாக கொழும்பு மற்றும் அநுராதபுரம் ஆகிய நகரங்களில் யாசகர்களுக்கு கோவிட்-19 தொற்று கடந்த காலங்களில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி, யாசகர் ஒருவர் வீதியில் வீழ்ந்து உயிரிழந்திருந்த நிலையில், அவரது சடலம் மீது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு கோவிட்-19 தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இதனால், யாசகர்களின் ஊடாகவும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் தற்போது எழுந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

உண்மையாக யாசகம் பெறுவோர் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்தும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் விளக்கியுள்ளார்.

உண்மையாக யாசகம் பெறுவோர் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது தொடர்பில் தாம், சமூக சேவை திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானம் எட்டப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

நாட்டில் உண்மையாக யாசகம் பெறுவோர் மிக குறுகிய தரப்பினரே காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

அவ்வாறு உண்மையாக யாசகம் பெறுவோர் பிரதான நகரங்களிலும், வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகிலும் யாசகம் பெறுவதில்லை என அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

யாசகம் தண்டனை வீதி சமிக்ஞை

BBC

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.