Home இலங்கை கொவிட் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளுக்கான தொடர்நடவடிக்கை தேவை…

கொவிட் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளுக்கான தொடர்நடவடிக்கை தேவை…

by admin

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் ஊடக சந்திப்பு
20220.12.21
தொற்றுநோய் நிபுணத்துவ மருத்துவர் திரு. நிஹால் அபேசிங்க


கொரோனா பெருந்தொற்று வேகமாக நாட்டில் பரவிவருகின்றமை வெளிப்படையானதொன்றாகும். நிலவுகின்ற நிலைமை பற்றிக் கலந்துரையாடுவதாயின் கொழும்பு மாவட்டத்தில் கடந்த காலப்பகுதிக்குள் பாரியளவிலான அதிகரிப்பு நிலவுகின்றது. முதலில் பதிவாகி இருந்தது 6903 மாத்திரமே. ஆனால் இன்றளவில் 15,168 பதிவாகி உள்ளது, கடந்த நான்கு வாரங்களில் இரண்டு மடங்கினைப் பார்க்கிலும் பதிவாகி உள்ளது. இது ஒரு பாரதூரமான நிலைமையாகும்.


அதேவேளையில் இங்கிலாந்தில் புதிய வைரஸ் இனமொன்று செத்தெம்பர் மாதத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டது. இலண்டன் நகரம் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து லொக்டவுன் நிலைமைக்கு கொண்டுவரப்பட்டது. ஐரோப்பாவின் பல நாடுகள் இலண்டன் நகரில் இருந்து வருகின்ற வானூர்திகளை இடைநிறுத்தி உள்ளன. குளிர்காலப்பகுதிக்குள் உலகம் பூராவிலும் நோய் பரவுவதில் வேகமாக நிலைமை புலனாகின்றது. இலங்கையிலும் இரண்டாவது அலை அதிகமாக விரிவாகி வருகின்றது.


தொற்றுநோய் நிபுணர் என்றவகையில் நான் காணும் மூன்று பிரதான விடயங்கள் உள்ளன. உலகின் ஏனைய நாடுகள் பயங்கரமான நிலையை அடைந்திருப்பது இறப்புகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்தமையாலாகும். பெருந்தொற்று நோய் பரவுதலானது ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இருமடங்கு மும்மடங்காகி இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க இடமுண்டு. கடந்த 10 வார காலப்பகுதிக்குள் தொற்றாளர்கள் 13 மடங்குகளால் அதிகரித்துள்ளனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் அபாயம் நிலவுகின்றது. இறப்புகள் இடம்பெறுவதைக் குறைத்துக்கொள்வதே தற்போது முக்கியமான விடயமாகும். அதிகமாக இறப்பது வேறு நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்களே என்பது பதிவாகின்றது. இந்த அணியினர் நாம் இனங்கண்ட பிரிவினராவர். தோற்றா நோய்களுக்கு இரையாகியுள்ள இவர்களை இறப்பிலிருந்து தடுத்துக்கொள்வதற்கான திட்டவட்டமான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.


தொகைமதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் 2016 இன் மதிப்பாய்வுக்கிணங்க வயது 60 வருடங்களுக்கு மேற்பட்ட ஆட்கள் மூவரில் ஒருவர் மிகையான இரத்த அழுத்தத்தினால் பீடிக்கப்பட்டுள்ளார். அறுவரில் ஒருவர் இதய நோயினால் அல்லது கொலஸ்ரோல் அல்லது நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒருசிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் இருக்கின்றன. கொறோனா பெருந்தொற்று காரணமாக இவர்களின் உயிருக்கான அபாயநேர்வு அதிகமானதாகும்.


இரண்டாவது விடயம் இன்றளவில் 8800 இற்கு மேற்பட்ட குழுவினர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 10 வாரங்களாக வைத்தியசாலை பணியாளர்கள் பாரதூரமான களைப்பு நிலையை அடைந்துவருகிறார்கள். தொற்றாளர்களை பராமரிக்கையில் இந்த களைப்பு நிலைமை பாரதூரமான ஒரு பிரச்சினையாகும். அதனாலும் இந்த வைத்தியசாலைத் தொகுதியை பாதுகாத்தல் பற்றி பாரதூரமாக கலந்துரையாடப்படல் வேண்டும். அப்படி இல்லாவிட்டால் வைத்தியசாலை பணியாளர்கள் செயலற்றுப் போகக்கூடும்.


அடுத்ததாக எங்கள் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகள் பாரியளவில் செயலற்றுப் போயுள்ளன. எனவே வெகுவிரைவில் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய ஐயப்பாடான நிலைமையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். சுகாதார அமைச்சிற்கு பலதடவைகள் முன்மொழிவுகள் சர்ப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பணிகள் பற்றி மீண்டும்மீண்டும் விசாரித்தறியுமாறு. ஒரு தேசமென்றவகையில் நிலவுகின்ற நிலைமையை விளங்கிக்கொண்டு மாற்றங்களை ஏற்படுத்த இது அத்தியாவசியமானது. தடுப்பூசியொன்றை நாட்டுக்கு கொண்டுவருவது பற்றி கலந்துரையாடப்பட்டு வருகின்றபோதிலும் சீக்கிரமாக கிடைக்குமென நினைக்க இயலாது. எனவே தற்போது முன்னெடுத்து வரப்படுகின்ற செயற்பாடுகள் இரண்டாவது அலையுடன் போதுமானதென்பது தெளிவாகவில்லை. வைரஸ் தொற்றியுள்ளதாக இனங்காணப்பட்ட பிரதேசங்களே தற்போது தனிமைப்படுத்துப்படுகின்றன. எனினும் அபாயநேர்வுக் காரணிகளை புதிதாக இனங்காணாமல் தனிமைப்படுத்தினால் மாத்திரம் பயனுள்ளதாக அமையமாட்டாது.


தேசிய புத்திஜீவிகள் அமைப்பு என்றவகையில் நாங்கள் முன்மொழிவது யாதெனில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் பற்றி உடனடியாக தொடர்நடவடிக்கை மேற்கொள்ளுமாறே. தொடர்நடவடிக்கையிலிருந்து இனங்காண்கின்ற விடயங்கள் பற்றி மீண்டும் வலியுறுத்த வேண்டும். நோயைத் தடுத்துக்கொள்ளல் பற்றி மக்களை வலியுறுத்துவதைப் போலவே மக்களின் பாதுகாவலர்நிலையை தன்னிச்சையாக ஏற்றுக்கொண்ட அரசாங்கத்திற்கு ஆற்றுவதற்கான விசேட செயற்பொறுப்பும் உண்டு. அது மக்களின் உயிர்களைப் பாதுகாத்து அன்றாட பணிகளுக்கு அவசியமான வசதிகளை வழங்குவதாகும். எனவே அரசாங்கம் நேரடியாக இடையீடுசெய்து பெருந்தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்’டும். அவ்வாறு நடைபெறாவிட்டால் பாரதூரமான பல பிரச்சினைகளை எதிர்காலத்தில் எதிர்கொள்ளநேரிடும். அவர்களின் உற்பத்திச் செயற்பாங்கினை மேலும் துரிதப்படுத்தியே மேற்குலக நாடுகள் இதற்கு முகங்கொடுக்கின்றன. தடுப்பூசிகள், செனிடைசர்கள் மற்றும் முகக்கவசங்களின் உற்பத்தியை மிகவும் பரவலான மட்டத்திற்கு கொண்டுவந்தே ஆகும்.


அந்த பின்புலத்தில் இருந்துகொண்டுதான் உற்பத்திப் பொருளாதாரமொன்றை முன்னடுத்து வருகிறார்கள். அவ்வாறு இடம்பெறாத உற்பத்தியொன்று இல்லாத எமது நாடு மேற்குலக நாடுகள் கடைப்பிடிக்கின்ற செயல்வழிமுறைகளை உற்பத்தித்திறன் மிக்கவகையில் கடைப்பிடிக்க இயலுமா என்பது பற்றிய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நாடும் மக்களும் மிகவும் பாரதூரமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கும்.

கொவிட் கட்டுப்பாட்டுக்கு அவசியமான மறுசீரமைப்புகளை செய்யாவிட்டால் சிங்களப் புதுவருடத்தையும் கொண்டாட இயலாமல் போய்விடும்…….


நிபுணத்துவ மருத்துவர் பேராசிரியர் கிரிசாந்த அபேசேன
இன்றளவில் நாளொன்றுக்கு கொவிட் தொற்றாளர்கள் 600, 700 பேர்வரை புதிதாக இனங்காணப்படுகிறார்கள். அதைப்போலவே கொவிட் காரணமாக நாளொன்றுக்கு 05 இற்கும் 10 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையுடையோர் இறக்கிறார்கள். இந்த கொவிட் அலை சிறிய பிள்ளைகள் மத்தியில்கூட விரிவடைந்து விட்டது. றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 05, 06 கொவிட் தொற்றுக்குள்ளான பிள்ளைகள் அனுமதிக்கப்படுகிறார்கள். கொழும்பிலிருந்து பிறென்டிக்ஸ் கொத்தணி, பேலியகொட கொத்தணி என அழைக்கப்பட்ட கொத்தணிகள் தற்போது சிறிய சிறிய கொத்தணிகளாக தோன்றி நாடு பூராவிலும் பரவிச் செல்கின்றன.

அதேநேரத்தில் ஒரு பாணி பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம். இந்த நாட்டிலே ஏறக்குறைய 2500 வருடங்கள் பழைமைவாய்ந்த சுதேச மருத்துவம், ஆயர்வேத மருத்துவம் உள்ளது. அதைப்போலவே நவீன மேலைத்தேய மருத்துவமும் உள்ளது. இன்றளவில் எந்தவொரு நாட்டிலும் கொவிட் நோய்க்கு திட்டவட்டமான ஔடதமொன்று தயாரிக்கப்படவில்லை. எனவே எவராவது அதற்கு சரியான ஒரு மருந்தினைக் கண்டுபிடிப்பாராயின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு அதில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது. எமது ஆயுர்வேத மருத்துவ முறையை உலகிற்கு எடுத்துச்செல்ல அது அது சிறந்ததொரு வழியாகும்.

கடந்த காலத்தில் பேசப்பட்ட பாணி பற்றியும் எங்களுடைய கருத்தினை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டும். எந்தவொரு மருந்தினையும் நோயாளிகளுக்கு கொடுப்பதற்கு முன்னர் கிளினிக்சார் பரிசோதனை மேற்கொள்ளப்படல் வேண்டும். இந்த பாணி பற்றியும் கிளினிக்சார் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது திட்டவட்டமான பரிசோதனை அல்ல. மற்றுமொரு பரிசோதனையை மேற்கொண்டு இதில் உண்மை இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும். ஆனால் அரசாங்கம் செய்தது அதையல்ல. அரசாங்கம் செய்ததோ அரசாங்கத்திடமிருந்து விலகிச்செல்கின்ற தேசிய இயக்கங்களை மகிழ்விப்பதற்காக பாணியை விரிவாக்குவதாகும். கொவிட் பெருந்தொற்று தீர்வின்றி பரவிவருகையில் அரசாங்கத்தின் நிர்வாணத்தை மறைத்துக்கொள்வதற்காக பாணிக்கு அநாவசியமான பிரச்சாரமொன்றை பெற்றுக்கொடுத்தார்கள்.


எங்கள் வைத்தியம் பற்றி எங்களுக்கும் கரிசனை உண்டு. குறைவாக மதிப்பிடுவது கிடையாது. நாங்கள் கூறுவது ஏதேனும் மருந்து இருக்குமானால் சரியான கிளினிக்சார் பரிசோதனைகளில் உறுதிசெய்யப்படல் வேண்டும். நோயாளர்களைப் போலவே சுகதேகிகளுக்கும் வழங்கி பரிசோதனையை உறுதிசெய்ய வேண்டும். உறுதிசெய்யப்படாத மருந்தினை கொடுத்தல் மருத்துவ நெறிமுறைகளை மீறுவதாகும். எமது அரசாங்கம் சுதேச மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் பற்றிய பரிசோதனைகளை உத்தியோகபூர்வமாக தொடங்கவில்லை. நவீன மருத்துவத்தை எடுத்துக்கொண்டாலும் இந்தியாகூட வெக்சீன் பற்றி பரிசோதனை செய்து வருகின்றது. எமது நாட்டிலும் தகைமை படைத்த விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். ஒருசிலர் மேற்குலக நாடுகள் மேற்கொள்கின்ற பரிசோதனைகளுடனும் தொடர்புபட்டுள்ளார்கள். ஆனால் இந்த நாட்டில் பரிசோதனைகளை மேற்கொள்ள அரசாங்கம் வசதிகளை வழங்குவதில்லை. எந்த மருத்துவ முறையாகவிருப்பினும்சரி இந்த நோய்க்கான மருத்தினைக் கண்டுபிடிப்பதற்கான வசதிகளை அதிகரித்துக் கொடுக்கவேண்டும்.
இந்த நாட்டிலே பலம்பொருந்திய சமுதாய மருத்துவ சேவையொன்று உள்ளது. அதனை நோய்களைத் தடுப்பதற்காக பிரயோகிக்கிறார்கள். அது நாங்கள் கொண்டுள்ள மிகப்பெரிய சொத்தாகும். பெரும்பாலான மேற்குலக நாடுகளுக்கு இந்த நிலைமை கிடையாது. இற்றைவரை கொவிட்டை தடுப்பதற்கான ஏதாவது வெற்றி அடையப்பெற்றிருப்பின் அதற்கான காரணம் பலம்பொருந்திய சமுதாய மருத்துவ சேவை, சுகாதார மருத்துவ அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடிமட்டத்தில் இருப்பதைப்போலவே மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் ஒருங்கிணைந்த வலையமைப்பொன்று உள்ளது. எமது சுகாதார அமைச்சரின் கீழ் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் அவரின்கீழ் பணிப்பாளர்களும் இருக்கிறார்கள். அதைப்போலவே தொற்று நோயியல் பிரிவொன்றும் உள்ளது. இந்த பொறியமைப்பு இருந்தாலும் கொவிட் கட்டுப்பாட்டுக்காக நிபுணத்தவ மருத்துவர் திருமதி சுதர்ஷனி பர்னாந்துபுள்ளே நியமிக்கப்பட்டார். இது சம்பந்தமாக அவருக்குள்ள அதிகாரம் என்ன? எல்லா நிறுவனங்களும் வேறு அமைச்சரொருவரின் கீழேயே இருக்கின்றன. அமைச்சர் சுதர்ஷனி பர்னாந்துபுள்ளேயின் கைகளும் கால்களும் கட்டிவிடப்பட்டுள்ளன. இதுவும் அந்த பாணியைப் போன்ற ஒரு வித்தையாகும்.


அதைப்போலவே இராணுவத் தளபதி கௌரவமான ஒரு பதவியை வகிக்கிறார். இன்று அவர் ஊடகப் பேச்சாளர் வேலையை அல்லவா செய்கிறார்? அன்றாட புள்ளிவிபரத் தரவுகளைக் கூறுவதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அது அவரது அந்தஸ்துக்கு பொருத்தமானதல்ல. இராணுவம், பொலிசு உள்ளிட்ட அரச பொறியமைப்பினைப் போன்றே அனைத்து மக்கட் குழுக்களும் கொவிட் கட்டுப்பாட்டுக்காக தேவை. ஆனால் அந்த தீர்மானத்தை மேற்கொள்பவர் யார்? சுகாதார அமைச்சரா? சுகாதார பணிப்பாளர் நாயகமா? என்று ஒன்றுமே தெளிவாக இல்லை. கொவிட் கட்டுப்பாட்டில் ஒரு ஒழுங்குமுறை கிடையாது.


எமது நாட்டில் கொறோனா கட்டுப்பாடு ஒரு என்ஜின் இல்லாத வாகனம் போன்றது. எங்கே போவது என்று தெரியாது. சுகாதார அமைச்சில்கூட பல்வேறு பிரிவுகளுக்கிடையில் இணைப்பாக்கம் கிடையாது. அதைப்போலவே மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் எடுத்துக்கொண்டாலும் முறையான இணைப்பாக்கம் கிடையாது. இணைப்பாக்கம் உள்ள இடங்களிலும் பல குறைபாடுகள் நிலவுகின்றன. சமுதாய மருத்துவசேவை எவ்வளவுதான் பலம்பொருந்தியதாக இருப்பினும் நிலவுகின்ற நிலைமையின் கீழ் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அதன்பொருட்டு அரசாங்கம் உடனடியாக இடையீடு செய்ய வேண்டும். நான் கடந்த ஒற்றோபர் மாதத்தில் அபாய எச்சரிக்கையொன்றைச் செய்தேன். இவ்விதமாக போனால் நத்தார் மற்றும் புதுவருடத்தைக் கொண்டாட இயலாமல் போய்விடுமென்று. அதைப்போலவே தற்போது நடந்துவிட்டது. இவ்வாறு போனால், அவசியமான மறுசீரமைப்பினை செய்யாவிட்டால் சிங்கள புத்தாண்டினைக் கொண்டாடவும் முடியாது. இன்றளவில் கொவிட் கட்டுப்பாடு அராஜக நிலையை அடைந்துவிட்டது.


இலங்கையிலிருந்து கொவிட் தொற்றினை ஒழித்துக்கட்ட எமக்குத் தேவை. அதற்காக உச்ச சக்தியை நாங்கள் வழங்குவோம். அதேவேளையில் செல்கின்ற இந்த பயணத்தை மாற்றி சரியான பாதையில் கொவிட் கட்டுப்பாட்டு இயக்கத்தை வழிநடத்திச் செல்லுமாறு நாங்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

உளரீதியாக சிகிச்சை பெறவேண்டியவர்களிடமிருந்து உலகளாவிய பெருந்தொற்றுக்கான சிகிச்சையை எதிர்பார்க்கக் கூடாது.
களணி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு. சந்தன அபேரத்ன
இலங்கை எதிர்நோக்கியுள்ள மிகவும் பாரதூரமான நிலைமை பற்றி இன்றளவில் பிரச்சாரமாகிக் கொண்டிருக்கின்ற மூடநம்பிக்கைகள் பற்றிய உண்மை நிலையை வெளிக்கொணர நான் விரும்புகிறேன். மூடநம்பிக்கையை அடிப்படையாகக்கொண்ட சிகிச்சை முறைகளின்பால் சமூகம் கவனஞ்செலுத்தி வருகின்றது. ஆனால் நான் களணி பல்கலைக்கழகத்தின் ஓலைச் சுவடிகள் ஆராய்ச்சி மற்றும் பேணுகை நூலகத்திற்கு பொறுப்பாக செயலாற்றியதன் மூலமாகப் பெற்ற அனுபவத்தின் வாயிலாக விடயங்களை எடுத்துரைக்கின்றேன். இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் பெரும்பாலான ஓலைச்சுவடிகளில் திரிபீடகம், இலக்கியம் மற்றும் மருத்துவவியல் விடயத்துறைகளுடன் தொடர்புடைய ஓலைச்சுவடிகளின் பேணுகைக்காக 08 வருடங்களாக பங்களிப்புச் செய்தேன். அதன்போது பெரும்பாலான ஓலைச்சுவடிகளை வாசித்துப் பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பின்னர் ஆவணப்படுத்தினேன். அதன்போது 5000 இற்கு மேற்பட்ட சுதேச மருத்துவ ஓலைச்சுவடிகளை வாசிக்கவேண்டி ஏற்பட்டது. விகாராம, சுதேச மருத்துவர்கள் வசமிருந்த மற்றும் பிரத்தியேக சேகரிப்புகளிலிருந்த மருத்துவ நூல்களை வாசித்தேன்.


இன்று கொவிட் சம்பந்தமாக ஒரு இடத்தில் ஒரு பாணியை தயாரித்ததாக கூறும்போது மற்றுமோர் இடத்தில் மற்றுமொரு பாணியை தயாரித்தாக கூறப்படுகின்றது. அவர்களுக்கு ஒருசில ஔடத வகைகளை பெற்றுக்கொடுத்தது ‘காளி’ போன்ற கட்புலனாகாத சக்தியே என கூறப்படுகின்றது. இப்படிப்பட்ட ஆட்களிடமிருந்து சிகிச்சை பெறுமாறு பரிந்துரைப்பவர்கள் பாரதூரமான வன்முறைச் செயலையே புரிகிறார்கள். இந்த பாணியைத் தயாரிக்கின்ற ஒருவர் எமது இரக்கத்திற்கு இலக்காகவேண்டிய மனோவியாதிக்காக சிகிச்சை பெறவேண்டியவரே என நான் நினைக்கிறேன்.


பொதுவில் கீழைத்தேய மருத்துவமுறை என அழைக்கப்படுகின்ற ஒவ்வொன்றிற்கும் குறித்துரைத்த மருந்துப்பட்டோலை, அது எழுதப்படுகின்ற காலத்தில் எவரிடம் மருந்துப் பட்டோலை இருந்தது, பாவிக்கவேண்டிய மருந்தின் அளவு, ஔடதங்களுடன் சேர்க்கப்படவேண்டிய விகிதங்கள் மற்றும் அதனை பாவிக்கக்கூடாதவர்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. சுதேச மருத்துவம் என்பது விஞ்ஞானரீதியான முறையியலின் ஊடாக பரம்பரைவழியாக ஔடதங்களை அறிமுகஞ் செய்வதாகும். எவருமே அதனை பரீட்சித்துப் பார்க்கலாம். எம்மிடமிருந்த அந்த மருத்துவமுறைக்கு மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக்கொண்ட பரிகாரங்கள் எனக் கூறப்படுகின்றவை மூலமாக பாரிய சேதமேற்படுத்தப்பட்டது. நான் வாசித்துள்ள மருத்துவ நூல்களில் ஒருசில நேரங்களில் மேலைத்தேய மருத்துவமுறைகளில் இனங்காணப்படாத நோய்களுக்குகூட சிகிச்சைகள் இருக்கின்றன.
அதைப்போலவே ஒரே மருந்துப் பட்டோலை பாம்புக்கடிக்கான சிகிச்சையில் நாகபாம்பு விஷத்திற்கு ஒரு மருந்து வேளை, விரியன் விஷத்திற்கு ஒரு மருந்துவேளை என்றவகையில் மாற்றப்பட்டுள்ளது. அரவம் தீண்டிய நேரத்திற்கிணங்கவும் ஒளடத்தின் மருந்துவேளை மாற்றப்படுகின்றது. அந்தளவுக்கு முன்னேற்றமடைந்த மருத்துவ முறைக்கு மூடநம்பிக்கையை அடிப்படையாகக்கொண்ட இத்தகைய பிரச்சாரங்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற, விடுக்கப்படுகின்ற சவால்களை தோற்கடிக்க கீழைத்தேய மருத்துவத்தை நேசிக்கின்ற அனைவரும் அணிதிரள வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்.

மனநோய்க்காக சிகிச்சை பெறவேண்டிய நோயாளியிடமிருந்து உலகளாவிய பெருந்தொற்றுக்காக சிகிச்சை பெறுமாறு பரிந்துரைக்கின்றவர்களுக்கு வேறுவிதமான பரிகாரம் செய்யவேண்டி ஏற்படும். விஞ்ஞானரீதியான ஓர் அமைச்சரவையை நியமித்துக் கொண்டதாக கூறினாலும் பெரும்பாலானோர் மூடநம்பிக்கையை பிரச்சாரம்செய்ய பங்களிப்புச் செய்கிறார்கள். வெகுசன ஊடகங்களும் அரச தரபபினர்களும் இந்த மூடநம்பிக்கைக்கே உயர்ந்த மட்டத்திலான பிரச்சாரம் வழங்குகிறார்கள்.


7000, 8000 வருடங்கள் பழைமையான மருத்துவ முறையை அடிப்படையாகக்கொண்டு ஒரு பாணியை உற்பத்தி செய்ததாக கூறப்பட்டது. ஆனால் எமக்கு கிடைத்த சுதேச மருத்துவ நூல்களில் மிகவும் தொன்மையான மருந்துப் பட்டோலை கிறிஸ்துவுக்கு முன் இரண்டாவது நூற்றாண்டுக்குரிய மருந்துப் பட்டோலையாகவே இனங்காணப்பட்டது. தம்பதெனிய விஜேசுந்தராராமவின் முன்னாள் விகாராதிபதி தேரர் இதனை எமக்கு வழங்கினார். கி.மு. 02 ஆம் நூற்றாண்டளவில் வசித்ததாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற மலியதேவ தேரருக்கு சுலுகுணு உபாசகரால் கையளிக்கப்பட்ட மருந்துக் கஞ்சி பட்டோலை இதனோடு தொடர்புடையதாகும். எங்களுக்கு கற்றாராய கிடைக்காமல்போன பண்டைய மருந்துப் பட்டோலைகள் இருக்கக்கூடும். எனினும் 7000, 8000 வருடங்கள் தொன்மையான மருத்துவ முறைபற்றி தகவல்கள் கிடைக்குமாயின் அதுபற்றி விசேட கவனஞ் செலுத்தப்படல் வேண்டும்.


மிகவும் பயங்கரமான பெருந்தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பதிலாக, விஞ்ஞானரீதியான முறையியல்களைக் கடைப்பிடித்து நோயைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மக்களின் வறுமையின் மற்றும் கல்வியின் தாழ்ந்த மட்டத்தை பயன்படுத்தி மூடநம்பிக்கைகளின்பால் ஆற்றுப்படுத்துகின்ற, மூடநம்பிக்கைகளால் கட்டிப்போடுகின்ற முயற்சியொன்று உள்ளது. பேராசிரியர் நிமல் சேனாநாயக்க அவர்கள் போன்ற நிபுணத்துவ மருத்துவர்கள் ஒருசில நோய்கள் சம்பந்தமாக நிலவிய மூடநம்பிக்கைகளை பிணைக்க தலைசிறந்த கலைப் படைப்புகளை உருவாக்கினார்கள். அதன் மூலமாக விஞ்ஞான கருத்தியல்களை சமூகமயப்படுத்தினார்கள். ஆனால் இன்றளவில் மருத்துவ விஞ்ஞான அடிப்படைகள் பற்றிய எவ்விதமான கவனமும் செலுத்தாமல் மக்களை மூடநம்பிக்கைகளிலேயே தடுத்துவைக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு நாடு என்றவகையில் நாங்கள் இந்த முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும். இந்த செயற்பாடுகள் மூலமாக அவமதிப்பிற்கும் சவாலுக்கும் இலக்காவது எமது மிகவும் உன்னதமான சுதேச அறிவின் திரட்சியைக்கொண்ட மருத்துவக் கலையாகும்.


எனவே இச்சந்தர்ப்பத்தில் மூடநம்பிக்கைகளை தோல்வியுறச் செய்விக்கின்ற அதேவேளையில் சுதேச மருத்துவ முறைக்கு எற்படுத்துகின்ற சேதத்தையும் தோற்கடிக்க வேண்டும். மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே கல்வியில் தாழ்ந்த மட்டம் நிலவுகின்றது. நீரில் முழ்குகின்ற மனிதன் வைக்கோலக்கூட பற்றிக்கொள்வது போல வேறு பரிகாரங்கள் இல்லாதவிடத்து மூடநம்பிக்கையின் பின்னால் செல்கிறான். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 6 ] ஐ கல்விக்காக ஒதுக்குமாறு போராட்டம் நடாத்தியது இந்த நிலைமையைத் தோல்வியுறச் செய்விக்கத்தான். இந்நாட்டு மக்களை கல்வியால் பலப்படுத்தாவிட்டால் மூடநம்பிக்கையிலிருந்து தடுக்கஇயலாது. மக்களை மூடநம்பிக்கைளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகவே கல்விக்காக ஒதுக்குகின்ற நிதியை அதிகரிக்குமாறு அரசாங்கங்களுக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்தோம்.


தேசிய புத்திஜீவிகள் அமைப்பு என்றவகையில் இந்த மூடத்தனமான ஔடத்தின் பின்னால் செல்வதால் உங்களுக்கு எவ்விதமான நன்மையும் விளையமாட்டாதென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். விஞ்ஞானரீதியான முறையியல் அன்றி நோய்களைக் குணப்படுத்த இயலாது. எமது இலக்கியத்தில் அஹிவாதக்க எனக் குறிக்கப்பட்ட ஒருசில நோய்கள் உள்ளன. பீடிக்கப்பட்ட விதத்தைக் கண்டுபிடிக்க இயலாதென்பதே அதன் மூலமாக கருதப்படுகின்றது. அத்தகைய சந்தர்ப்பத்திலும் வீட்டிலிருந்து வெளியேறாமல் சுவரை தகர்த்துக்கொண்டு செல்லுமாறு குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலமாக கூறுவது ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு ஸ்பரிசம் மூலமாக, நெருங்குவதன் மூலமாக பீடிக்கப்படுகின்ற நோய்கள் பற்றியாகும். அந்தக்காலத்தில் நவீன விஞ்ஞானம் என்று நாங்கள் கூறுகின்ற முறையியல் இருக்கவில்லை. ஆனால் மக்கள் வேறுவிதமாக அந்த விஞ்ஞானரீதியான உண்மையைக் கண்டார்கள். அவ்விதமாக உண்மையைக்கண்ட மக்கள் என்றவகையில் மூடநம்பிக்கைகளை தோற்கடித்து மக்களை தவறாக வழிநடாத்துகின்ற பிரச்சாரங்களுக்கு இரையாகாமல் இருப்பதற்கான பொறுப்பு உள்ளது.


அதைப்போலவே முறைமைசார்ந்த வேலைத்திட்டமொன்றின் ஊடாக கொவிட் பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். மூடநம்பிக்கைகளை விதைப்பவர்களுக்கு எதிராக உண்மையிலேயே அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம் அந்த நடவடிக்கைகளை எடுக்காததால் ஒரு சமூகமென்றவகையில் முன்நோக்கி நகர மக்கள் முன்னணி வகிக்கவேண்டுமென்பது வலியுறுத்தப்படுகின்றது. மக்கள் வாழ்க்கையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்காக முறைமைசார்ந்த விஞ்ஞானரீதியான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறே அரசாங்கத்திற்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கிறோம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More