Home இந்தியா தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் தொ. பரமசிவன் காலம் ஆனார்…

தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் தொ. பரமசிவன் காலம் ஆனார்…

by admin

தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் கலாநிதி தொ. பரமசிவன்  தனது 70 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வுகளின் முன்னோடியாக திகழ்ந்த தொ.ப. எனும் பேராசிரியர் தொ. பரமசிவனின்  பண்பாடு, சமயங்கள் தொடர்பான ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய, திராவிட சிந்தனைகளுடன் கூடிய அடிப்படையைக் கொண்டன. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைத்தவர்.

திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர்.

எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ஆவணப்படுத்தியவர்.  மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

மதுரை அழகர் கோவில் தொடர்பான தொ.பரமசிவத்தின் ஆய்வு நூல் இன்றளவும் கோவில் ஆய்வு நூல்களில் கொண்டாடப்படக் கூடிய ஆகச் சிறந்த நூலாகும். மதுரை தியாகராசா கல்லூரி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராக பணிபுரிந்த தொ. பரமசிவன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றினார்.

இவரது நூல்கள்

அறியப்படாத தமிழகம் – காலச்சுவடு பதிப்பகம்

பண்பாட்டு அசைவுகள் – காலச்சுவடு பதிப்பகம்

அழகர் கோயில் – மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம்

தெய்வம் என்பதோர் – காலச்சுவடு பதிப்பகம்

வழித்தடங்கள் – மணி பதிப்பகம்

பரண் – சந்தியா பதிப்பகம்

சமயம் (தொ.ப-சுந்தர் காளி உரையாடல்)

சமயங்களின் அரசியல் – வானவில் புத்தகாலயம்

தொ.பரமசிவன் நேர்காணல்கள் – காலச்சுவடு பதிப்பகம்

விடு பூக்கள் – கயல்கவின் பதிப்பகம்

உரைகல் – கலப்பை பதிப்பகம்

இந்துதேசியம் – கலப்பை பதிப்பகம்

நாள்மலர்கள் – பாவை பதிப்பகம்

மானுடவாசிப்பு – தடாகம் பதிப்பகம்

பாளையங்கோட்டை – காலச்சுவடு பதிப்பகம்

மஞ்சள் மகிமை – காலச்சுவடு பதிப்பகம்

மரபும் புதுமையும் – காலச்சுவடு பதிப்பகம்

இதுவே சனநாயகம் – காலச்சுவடு பதிப்பகம் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் தொ. பரமசிவன்.

“தொ.ப” என்று அவருடைய மாணவர்களாலும் வாசகர்களாலும் அழைக்கப்பட்ட தொ. பரமசிவன் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950ல் பிறந்தவர்.

ஓட்டுநராக இருந்த தந்தை இளம் வயதிலேயே இறந்து விட, தாயின் அரவணைப்பில் தொ. பரமசிவன் வளர்ந்தார்.

மதுரை பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பொருளாதாரமும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தமிழும் படித்தவர். ஆறு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய பின், 1976ல் மதுரைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக சேர்ந்தார்.

தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக புதுமைப்பித்தனைப் பற்றி ஆய்வு செய்யவே அவர் விரும்பினார். ஆனால், அவருடைய ஆய்வு நெறியாளர் மு. சண்முகம் பிள்ளை, கோயில் குறித்து ஆய்வுமேற்கொள்ளும்படி கூறவே, அழகர் கோயிலை தனது ஆய்வுப் பொருளாக அவர் எடுத்துக் கொண்டார்.

அந்தக் கோயில் குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வு, ஆய்வு நூல்களின் எல்லைகளை விரிவடையச் செய்தது.

இந்த ஆய்வு பலரால் பாராட்டப்பட்டதையடுத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழமே அதனை புத்தகமாக வெளியிட்டது. வழக்கமாக கோயில்கள் குறித்த ஆய்வில், அந்தக் கோயில் கட்டப்பட்ட விதம், அதன் வரலாறு, சம்பிரதாயங்கள் குறித்த தகவல்களே இடம்பெற்றிருக்கும். ஆனால், தொ. பரமசிவன், அழகர் கோயிலுக்கும் பல்வேறு சாதியினருக்கும் இடையிலான உறவை தனது ஆய்வாக முன்வைத்தார்.

தொ. பரமசிவன்

தமிழ் மொழியின் மீதும் பெரும் பற்றும் ஆர்வமும் கொண்டிருந்தவராக இருந்தபோதும் தன்னுடைய ஆய்வுப் பணிகளுக்காக சமஸ்கிருதமும் பயின்றார்.

அழகர் கோயில் நூலுக்குப் பிறகு வெளிவந்த அவரது “அறியப்படாத தமிழகம்” நூல், அவரை தமிழ் பேசும் பகுதிகள் என்றும் அறியப்பட்டவராக்கியது.

நாட்டார் தெய்வங்கள், பெருந்தெய்வங்கள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், கலை, சாதி ஆகியவை குறித்து தொ. பரமசிவன் முன்வைத்த பார்வை தற்கால தமிழ் உரையாடல்களில் மிக முக்கியமானதாக அமைந்தது.

மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த் துறையில் பணியாற்றிய அவர், பிறகு திருநெல்வேலி பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

“பகுத்தறிவாளர்கள் பக்தியைப் பேச மாட்டார்கள். பக்தி இலக்கியம் படிக்க மாட்டார்கள். ஆனால், தொ. பரமசிவன் பெரியாரைப் பற்றியும் பேசுவார், பெரியாழ்வாரையும் பற்றிப் பேசுவார். பல்துறை வித்தகர். மானுடவியல் சார்ந்து இயங்கியவர்கள் தமிழகத்தில் குறைவு. ராகுல சாங்கிருத்தியாயனுக்குப் பிறகு, மயிலை சீனி வேங்கசாமிக்குப் பிறகு தொ. பரமசிவனை நாம் வைக்க முடியும். கடவுள் மறுப்பை மனதில் கொண்டிருந்தாலும் கோயில்கள் குறித்த ஆய்வுகளைச் சிறப்பாக செய்தவர்” என மதுரை தியாகராசர் கல்லூரியில் அவருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் புகழாரம் சூட்டியுள்ளார்.

தொ. பரமசிவன்

ஒரு முறை தனக்கும் பரமசிவனுக்கும் இடையில் நடந்த உரையாடலை நினைவுகூரியுள்ள ஞானசம்பந்தன். “நாங்கள் ஒரு முறை நேதாஜி சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த திண்டுக்கல் முருகன் கோயிலுக்கு வணங்கச் சென்றேன். அவர் வெளியில் நின்று கொண்டிருந்தார். நான் வணங்கிவிட்டு வந்ததும், “முருகன் சிலைக்குக் கீழே கல்வெட்டு உண்டு, பார்த்தீங்களா, இடுப்பில் குறுவாளும் உண்டு. இது நாயக்கர் கால கோயிவில். பாண்டியர் காலக் கோயில் இல்லை” என்றார். நான் கேட்டேன், “நிம்மதியா சாமி கும்பிட விடமாட்டீங்களா? இங்கேயும் வந்து கடவுள் இல்லைனு சொல்வீங்களா?” என்றேன். அப்போது தொ.ப. சொன்னார், “கடவுள் இல்லைனு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்” என்றார். ஆழமான கருத்துகளை மக்கள் மொழியில் பேசிய நல்லறிஞர் அவர்” என ஞானசம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

பாளையங்கோட்டையில் தன் மனைவியுடன் வசித்துவந்த தொ. பரமசிவன், உடல்நலக் குறைவால் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை (24.12.20) அவரது உயிர் பிரிந்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More