Home இலங்கை மஹர தாக்குதலின் சாட்சிகளை சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு

மஹர தாக்குதலின் சாட்சிகளை சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு

by admin

பதினொரு பேர் கொல்லப்பட்டு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைச்சாலையில் நடந்த படுகொலை சாட்சிகள், சிறைச்சாலைக்குள் சித்திரவதை செய்யப்படுவதாக கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும் முன்னணி குழு ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

“இந்த சாட்சிகள் கொலைகாரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். இந்த ஆதாரங்களை எப்படியாவது மறைக்க அவர்கள் கடுமையாக முயற்சி செய்கிறார்கள்.”

 மஹர சிறைச்சாலையின் “கொலைகார” அதிகாரிகளை வேறொரு சிறைக்கு மாற்றி, ஆதாரங்களை பாதுகாக்குமாறு துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமல் சில்வா புதன்கிழமை (டிசம்பர் 30) குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில் மஹர சிறைத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மஹர சிறைக் கலவரத்தை நேரில் கண்ட சாட்சிகளுக்கு  சரியான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் சுதேஷ் நந்திமல் சில்வா குற்றம் சாட்டினார்.

“அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படபலாம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையிலான குறித்த விசாரணைக் குழுவில், நீதி அமைச்சின் தலைமை சட்ட ஆலோசகர், ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா, நீதி அமைச்சின் மேலதி செயலாளர் ரோஹன ஹபுகஸ்வத்த, சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் காமினி ஜயசிங்க மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஆர்.எல் ரணவீர ஆகியோர் அடங்குகின்றனர்.

மார்பில் துப்பாக்கிச் சூடு

நவம்பர் 29ஆம் திகதி  மஹர சிறைச்சாலையில் நடந்த படுகொலையில் கொல்லப்பட்ட 11 பேரில் 8 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்திருப்பது நீதிமன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, தகனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

உடல்களை அடையாளம் கண்ட பல உறவினர்கள், தமது  அன்புக்குரியவர்களில் மூன்று அல்லது நான்கு பேர் மார்பில் காயத்தைக் கண்டதாகக் கூறியுள்ளதாக, இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவிலாளர்கள் அமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.

ரமிந்து சுலக்சன, ரொட்ரிகோ, பிரதீப் அதுல குமார, எருவ்வல அவந்த குமார, இந்திக புஷ்பகுமார, அமித் சுபசிங்க, சம்பத் புஷ்பகுமார, ரசிக ஹர்ஷன காரியவாசம் மற்றும் மாலன் கிரெய்க் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட கைதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பிரேத பரிசோதனைகள் ஊடாக தெரியவந்துள்ளது.  

மேலும் மூன்று பேரின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் அடுத்த வருடம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் பீடத்தின் பேராசிரியர் ஜீன் பெரேரா, கொழும்பு வடக்கு போதனை (ராகம) வைத்தியசாலையின் தலைமை சட்ட வைத்திய அதிகாரி  சந்துன் விஜேவர்தன, தொற்று நோய் வைத்தியசாலையின் (ஐ.டி.எச்)தலைமை சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா, கொழும்பு தெற்கு போதனை (கலுபோவில) வைத்தியசாலையின் தலைமை சட்ட வைத்திய அதிகாரி  பி.பி. தசநாயக்க மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பகுப்பாய்வாளர் பீ.பி மடவல ஆகியோர், கொலைகள் குறித்து பிரேத பரிசோதனை நடத்தும் தடயவியல் குழு நிபுணர்களாக காணப்படுகின்றனர். #மஹர_தாக்குதல் #படுகொலை_சாட்சிகளை #சித்திரவதை #குற்றச்சாட்டு #தடயவியல்குழு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More