இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

ஜெனிவாவை நோக்கித் தமிழ்த் தரப்பை ஒன்றிணைக்க முடியுமா? நிலாந்தன்…

கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரனால்  ஒழுங்கு செய்யப்பட்ட அச்சந்திப்பின் நோக்கம் அடுத்த ஜெனிவா கூட்டத் தொடரை நோக்கித் தமிழ்த் தரப்பு எப்படி ஒரே அணியாக அணுகலாம் என்பதற்குரிய வழிவகைகளை கண்டுபிடிப்பதே. திருமலை கத்தோலிக்க மறை  மாவட்ட ஆயரான நோயல் இமானுவேல் அடிகளார் ;மதகுருக்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இவர்களோடு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும்  கலந்து கொண்டனர். எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அச்சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்கள் பங்கு பற்றவில்லை. எனினும் அடுத்தகட்ட சந்திப்பில் அவர்களையும் இணைத்துக் கொள்வது என்றும் அவர்களுடைய கருத்துக்களையும் கேட்ட பின்னரே ஜெனிவாவைக் கையாளுவதற்கான ஒரு பொதுக் கட்டமைப்பை இறுதியாக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி ஒரு உபகுழுவும்  உருவாக்கப்பட்டது.

இம்முயற்சிகளின் விளைவு என்னவாகவும் இருக்கலாம். ஆனால் தமிழ்க் கட்சிகளின் மீது குடிமக்கள் சமூகத்தில் செல்வாக்கு எனப்படுவது அது எந்த வடிவத்தில் வந்தாலும் வரவேற்கப்பட வேண்டும். தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் அல்லது தமிழ் கட்சிகளுக்கிடையில் ஒரு பொதுக்கருத்தை ஏற்படுத்தும் பணியில் குடிமக்கள் சமூகங்கள் ஏற்கெனவே ஈடுபட்டிருக்கின்றன. குறிப்பாக 2009க்கு பின் கூட்டுத் தோல்வியினாலும் கூட்டு அவமானத்தாலும் கூட்டுக் காயங்களினாலும் கூட்டு மனவடுக்களினாலும் கூட்டுப் பயத்தினாலும் முடங்கிப் போயிருந்த ஒரு சமூகத்தில் துணிச்சலாக சன்னமாக ஒலித்த ஒரே குரல் முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயரான ராயப்பு ஜோசெப்பின் அடிகளுடையதுதான்.

ஒரு ஆயுதப் போராட்டம் கொடுமையான விதங்களில் தோற்கடிக்கப்பட்ட பின்னரான  ஒரு அச்சச்சூழலில் குரலற்ற தமிழ் மக்களின் குரலாக ஆயர் ராயப்பு ஜோசப் அடிகளார் ஒலித்தார். தமிழ்க் குடிமக்கள் அமையத்தின் இணைத் தலைவராக அவர் இருந்தார்.அவருடைய தலைமையில் தமிழ் சிவில் சமூக அமையம் மன்னாரில் 2013ஆம் ஆண்டு ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. அச்சந்திப்பில் தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளின் தலைவர்களும் குடிமக்கள் சமூகத்தின் பிரதிநிதிகளும் மதகுருக்களும் கலந்து கொண்டார்கள். அச்சந்திப்பில்தான் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய பேரவை ஒன்றை உருவாக்குவது என்று.

அப்படி ஒரு பேரவை இன்று வரையிலும் உருவாக்கப்படவில்லை. ஆயர் ராயப்பு நோய்வாய்ப்பட்டு ஓய்வுபெற்றுவிட்டார். சில ஆண்டுகளின் பின் மன்னாரை மையமாகக் கொண்டியங்கும்   குடிமக்கள் அமைப்பின் தலைவரான சிவகரன்  “தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்?” என்ற பெயரில் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தினார்.  அவரைப் போலவே வேறு அமைப்புகளும் கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தின. அக்கருத்தரங்குகள் யாவும் அப்போது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்த கூட்டமைப்பின் மீது விமர்சனங்களை முன்வைத்து கூட்டமைப்பை சரியான தடத்தில் ஏற்றும் நோக்கத்தைக் கொண்டவைகளாக அமைந்திருந்தன.ஆனால் அது சரி வரவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில்தான் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றத்தின் பின் ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயக வெளிக்குள் தமிழ் மக்கள் பேரவை என்ற ஓரமைப்பு உருவாக்கப்பட்டது.  சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் மன்னார் ஆயரின் தலைமையில் கூடி முடிவெடுக்கப்பட்ட  ஒரு தமிழ்த் தேசியப் பேரவை அது அல்ல.  இது தமிழ் மக்கள் பேரவை என்ற பெயரில் உருவாகியது. 
முன்னாள் மன்னார் ஆயரின் சந்திப்பை ஒழுங்கு படுத்திய தமிழ் சிவில் சமூக அமையத்தைச் சேர்ந்தவர்களே இந்தப் பேரவைக்குள்ளும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பொறுப்புகளை வகித்தார்கள்.

தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சியும் விக்னேஸ்வரனின்   எழுச்சியும் வலம்புரி பத்திரிகையின் எழுச்சியும் ஏறக்குறைய சமாந்தரமானவை. ஒரு முதலமைச்சராக விக்னேஸ்வரன் தனது கட்சித் தலைமைக்கு    எதிராக திரும்பிய ஒரு பின்னணியில் அவரையும் அரவணைத்துக் கொண்டு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி;ஈபிஆர்எல்எப்;புளொட் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. தமிழ்த் தேசிய அரசியலில் அது ஒரு புதிய நொதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக சந்திப்புகள்;கருத்தரங்குகள் ;ஆர்ப்பாட்டங்கள் ; எழுக தமிழ்கள் என்று தமிழ்மக்கள் பேரவை ஒரு கட்டம் வரையிலும் வளர்ச்சி பெற்றது. எனினும் அது ஒரு மக்கள் மயப்பட்ட அமைப்பாக பெரு வளர்ச்சியுறவில்லை. விக்னேஸ்வரன் போன்ற பிரமுகர்களை மையமாகக் கொண்டே அது கட்டமைக்கப்பட்டது. எனவே மேலிருந்து கீழ் நோக்கி கட்டமைக்கப்பட்டது. கீழிருந்து மேல் நோக்கி கட்டமைக்கப்படவில்லை. அதனால் ஒரு கட்டத்துக்கு மேல் அந்த அமைப்பு வளர முடியவில்லை.இப்பொழுது அது அனேகமாகச் சோர்ந்து விட்டது. அதை அடுத்த கட்டத்துக்குப் புதுப்பிக்க வேண்டும்.

அச்சோர்வுக்குக் மற்றொரு காரணம் அந்த அமைப்புக்குள் அங்கம் வகித்த விக்னேஸ்வரனும் உட்பட அரசியல் கட்சிகளே. இக்கட்சிகள் தங்களுக்கிடையே ஒரு பலமான ஐக்கியத்தை ஏற்படுத்தி ஒரு பலமான மாற்று அணியாக எழுந்திருந்தால் தமிழ் அரசியலில் இப்போது இருப்பதை விட அதிகரித்தளவில் ஒரு புதிய இரத்தச் சுற்றோட்டத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் பேரவையில் அங்கம் வகித்த கட்சிகள் ஒன்றாக இணைய முடியவில்லை.அவை தங்களுக்கிடையே மோதிக்கொண்டன.அந்த மோதலைக் கட்டுப்படுத்தும் சக்தி பேரவைக்கு இருக்கவில்லை. அதன் விளைவாக அந்த மூன்று கட்சிகளும் சிதறிப்போயின.பேரவையும் சோர்ந்து போய்விட்டது. எனினும் 2015க்கு பின்னரான ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயக வெளிக்குள் நெருப்பை அணைக்க படாமல் பாதுகாத்தது  பேரவையும்தான்.

2013ஆம் ஆண்டு முன்னாள் மன்னார் ஆயர் தலைமையில் முடிவெடுக்கப்பட்டது போல ஒரு தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்க முடியவில்லை. எனினும் குறைந்தபட்சம் ஒரு தமிழ்மக்கள் பேரவையை உருவாக்க முடிந்தது.ஆயர் ராயப்பு அடிகளார் ஓய்வு பெற்ற பின் புதிய குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்த புதிய தலைவர்கள் எழுச்சி பெற்றார்கள். உதாரணமாக முல்லைத்தீவில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக மரபுரிமைப் பேரவை என்றொரு அமைப்பு உருவாகியது. எனினும் குடிமக்கள் அமைப்புக்களால் ஒரு கட்டத்துக்கு மேல் அரசியல் கட்சிகளின் மீது நிர்ணயகரமான விதங்களில் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை.

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது மற்றொரு முயற்சி எடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் பேரவையால் ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.அது தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான ஒரு பொதுக்கருத்தை உருவாக்க  முயற்சித்தது. எனினும் அது வெற்றியளிக்கவில்லை. ஆனால் அந்த முயற்சி பரவலாக கவனிப்பைப் பெற்றது.

அதனிடையே யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஒரு ஒருங்கிணைப்பு முயற்சியை முன்னெடுத்தார்கள். அதன் விளைவாக 13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஓர் ஆவணம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதில் கையெழுத்திட்ட கட்சிகளே அந்த ஆவணத்தைப் பின்னர் கைவிட்டன. அனுபவசாலிகளும் தந்திரசாலிகளும் நிலையான நலன்களின் அடிப்படையில் சிந்திப்பவர்களுமாகிய தமிழ்க் கட்சித் தலைவர்களை ஒன்றாக ஒரு மேசையில் வைத்து அனுசரணை புரியத் தேவையான முதிர்ச்சியும் கொள்ளளவும் மாணவர்களுக்கு இருக்கவில்லை. அதனால் அந்த 13அம்சக் கோரிக்கைகள் பின்னர் கைவிடப்பட்டன. எனினும் அது ஒரு குடிமக்கள் சமூகம் அல்லது மாணவர் அமைப்பு தமிழ் அரசியலின் மீது எவ்வளவு தூரம் செல்வாக்கைப் பிரயோகிக்க முடியும் என்பதற்கு அது ஒரு சிறப்பான பரிசோதனையாகும்.

இவ்வாறு 2009க்கு பின்னிருந்து தமிழ் சிவில் சமூக அமையத்திலிருந்து தொடங்கி தமிழ் மக்கள் பேரவை வரையிலுமான கட்டமைப்புக்களின் மூலம் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு நொதிப்பு ஏற்பட்டது. இந்த நொதிப்பின் விளைவாகத்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்புக் கோலம் மாறியது. இப்பொழுது கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்து விட்டது. மாற்று அணியை சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்துவிட்டார்கள். இது ஒரு மாற்றம்.

மாற்று அணியை சேர்ந்தவர்கள் இந்த இடத்தில் ஒரு விடயத்தை மனதில் வைத்திருக்க வேண்டும்.மாற்று அணிக்குக் கிடைத்த வாக்குகள் எனப்படுவது தனிய அந்தக் கட்சிகளின் கடும் உழைப்பால் மட்டும் கிடைத்தவை அல்ல. அதற்குமப்பால் அது கடந்த பத்தாண்டுகளில் குடிமக்கள் சமூகங்கள் ஏற்படுத்திய நொதிப்பின் விளைவும்தான்.கூட்டமைப்பு விட்ட தவறுகளின் விளைவும்தான். தமிழ்க் கருத்துருவாக்கிகளின் கூட்டுழைப்பின் விளைவும்தான்.எனவே கடந்த பத்தாண்டுகளில் தமிழ் தேசிய அரசியலில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால் அதில் குடி மக்கள் சமூகங்கள் ஏதோ ஒரு விகிதமளவுக்கு பங்களித்திருக்கின்றன.அந்தப் பங்களிப்பின் விகிதம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு தமிழ் அரசியலும் செழிப்படையும்.

இதில் கடந்த 10ஆண்டுகால அனுபவத்தையும் தொகுத்துக் கற்க வேண்டும். ஆயுத மோதல்கள் முடிந்த கையோடு முதலில் தமிழ் சிவில் சமூக அமையம் பின் தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புகள் எந்த அளவுக்கு தமிழ் அரசியலின் மீது தாக்கமான செல்வாக்கைச் செலுத்தின என்று பார்க்கவேண்டும். இதுவிடயத்தில் குடிமக்கள் சமூகங்கள் ஏன் ஒரு கட்டத்துக்கு மேல் தமிழ்க் கட்சிகளின் மீது செல்வாக்கைப் பிரயோகிக்க முடியவில்லை என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் சுயாதீனக் குழுவும் பல்கலைக்கழக மாணவர்களும் முன்னெடுத்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் ஏன் தோல்வியுற்றன என்பதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்க் கட்சித் தலைவர்களை ஒரே மேசையில் கொண்டு வந்து இருத்துவதற்கு வெறுமனே நீதியின் பாற்பட்ட அறம்சார்ந்த நன்நோக்கம் கொண்ட சில அனுசரணையாளர்களால்  மட்டும் முடியாது என்பதைத்தான் கடந்த 10 ஆண்டுகால அனுபவம் நிரூபித்திருக்கிறது. குடிமக்கள் சமூகங்கள் தங்களை கீழிருந்து மேல் நோக்கி மேலும் பலமாகக் கட்டியெழுப்பும் பொழுதே அரசியல்வாதிகள் குடிமக்கள்  சமூகங்களின் அழுத்தத்தை மீறிச்செல்ல முடியாத ஒரு வளர்ச்சி ஏற்படும்.

இப்படிப்பட்டதொரு பின்னணியில்தான் இப்பொழுது தமிழ்க் கட்சிகளை ஜெனிவாவை நோக்கி ஒருங்கிணைக்கும் ஒரு வேலை  தொடங்கப்பட்டிருக்கிறது.இதில் வெற்றி கிடைக்கலாம் கிடைக்காமல் போகலாம். ஆனால் தமிழ்க் கட்சி அரசியலின் மீது குடிமக்கள் சமூகங்கள் செல்வாக்குச் செலுத்தும் ஒரு வளர்ச்சி என்பது தமிழ் அரசியலை குறிப்பாக தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயத்தை மேலும் செழிப்பாக்க அவசியம்.

கடந்த ஆண்டு ஒரு நோயாண்டு. அது குடிமக்கள் திரட்சியை மட்டுப்படுத்திய ஆண்டு. எனினும் ஆண்டின் முடிவில் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் முன்னிலைக்கு வந்தது. ஜனாஸா எதிர்ப்புக்கு எதிரான முஸ்லிம்களின் போராட்டமும் பரவலாகி வருகிறது. வைரஸ் தொற்று அச்சத்துள்ளும் சமூகங்கள் போராடத் தொடங்கிவிட்டன.தமிழ் அரசியலில் தேர்தல் அபிலாசைகளற்ற குடி மக்கள்  சமூகங்களின் செல்வாக்கும் தலையீடும் அதிகரித்தால் புதிய அரசியல் ஆண்டில் தமிழ் மக்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.