Home உலகம் விக்கிலீக்ஸ் நிறுவனரை நாடு கடத்த பிரித்தானிய நீதிமன்றம் மறுப்பு!

விக்கிலீக்ஸ் நிறுவனரை நாடு கடத்த பிரித்தானிய நீதிமன்றம் மறுப்பு!

by admin

பிரிட்டனின் மாவட்ட நீதிமன்றம் ஒன்று விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ் (Julian Assange) அவர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் கோரிக்கையை நிராகரித்துத் தீர்ப்பு வழங்கி உள்ளது.அசாஞ்ஜின் உளப்பாதிப்பு நிலைமை மற்றும் அமெரிக்காவில் அவர் தற்கொலைக்கு முயலக் கூடிய வாய்ப்பு என்பவற்றைக் காரணம் காட்டியே நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கியிருக் கிறார்.

இன்று திங்கட்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது மத்திய லண்டனில் உள்ள Old Bailey court கட்டடத்துக்கு வெளியே கூடியிருந்த பெரும் எண்ணிக்கையான ஆர்வலர்கள் ஆரவாரம் செய்து தீர்ப்பை வரவேற்றனர்.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு அமெரிக்க அரச வழக்கறிஞர்களுக்கு 14 நாள்கள் அவகாசம் உள்ளது.உலக ஊடக சுதந்திரத்தின் “சோதனைக்களம்” என்று மதிப்பிடப்பட்ட இந்த வழக்கு விவகாரத்தில் அமெரிக்காவின் கோரிக்கையை மறுத்து அசாஞ்சுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வெளியாகி இருப்பதை சர்வதேச ஊடக அமைப்புகள் வரவேற்றுள்ளன.

இந்த வழக்கின் போது பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் கடந்த நான்கு வாரங்களாகப் பிரசன்னமாகி இருந்த ‘எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்’ அமைப்பின்(Reporters Without Borders) பிரதிநிதி, இந்த வழக்கு பத்திரிகைச் சுதந்திரம் மீது மட்டுமன்றி ஜூலியன் அசாஞ்ஜின் உயிர் மீதும் கேள்வியை எழுப்பியிருந்தது என்று தெரிவித்தார்.

அமெரிக்கப் படைகள் ஈராக்கின் பக்தாத் நகரில் நடத்திய ஒரு வான் தாக்குதலில் சிவிலியன்களும் ஊடகவியலாளர்கள் இருவரும் கொல்லப்பட்ட காட்சியை 2010 இல் வீக்கிலீக்ஸ் இணையத்தளம் முதலில் வெளி உலகுக்குக் கசியவிட்டது. அன்று முதல் ஜூலியன் அசாஞ் உலக அளவில் பிரபலமானார்.

பின்னர் அதே ஆண்டு ஜுலையில் ஆப்கானிஸ்தான் போர் தொடர்பான அமெரிக்க இராணுவத்தின் சுமார் 90 ஆயிரம் ரகசிய ஆவணங்களை வீக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீண்டும் 2010 ஒக்ரோபரில் அமெரிக்க ராஜதந்திரி களால் பரிமாறப்பட்ட பாதுகாப்புத் தொடர்பான ரகசிய ஆவணங்கள் அடங்கிய சுமார் 4லட்சம் தொடர்பாடல்களை வெளியிட்டு உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஜூலியன் அசாஞ்.

நாளாந்தம் வீக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் இலங்கையின் இறுதிப்போரில் நடந்த குற்றங்கள் தொடர்பான அமெரிக்க ஆவணங்களும் அடங்கி இருந்தன.

போரின் இறுதியில் நிகழ்ந்த குற்றங்களில் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள், மூத்த படை அதிகாரிகளது பெயர்களைக் குறிப்பிட்டு கொழும்புக்கான அமெரிக்கத் தூதர் அனுப்பிய தகவல்களும் அச்சமயம் பகிரங்கமாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை நினைவிருக்கலாம்.

ஆஸ்திரேலியப் பிரஜையான 49 வயதான ஜூலியன் அசாஞ் அமெரிக்காவுக்கு எதிராக உளவு பார்த்தார் என்று அமெரிக்காவால் குற்றஞ்சாட்டப்பட்டார்.அவரைக்குறி வைத்து சட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

பாதுகாப்பு ரகசியங்களைத் திருடி வெளியிட்டு பலரது உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விட்டார் என்று அசாஞ் மீது அமெரிக்கச் சட்டம் பாய்ந்தது.சுமார் 175 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்கள் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டன.

சுவீடனில் அவர் சம்மந்தப்பட்ட பழைய பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கில் அவரைக் கைது செய்வதற்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. கைதாவதில் இருந்து தப்புவதற்காக 2012 ஆம் ஆண்டில் அசாஞ் லண்டனில் உள்ள ஈக்குவடோர் (Ecuador) நாட்டின் தூதரகத்தினுள் சென்று ஒளிந்து கொண்டு அரசியல் புகலிடம் கோரினார்.

பல ஆண்டுகள் தூதரகத்தின் உள்ளேயே வாழ்ந்த அவர் மனநிலை பாதிக்கப்பட் டிருந்தார். 2019 இல் அவருக்கு எதிரான பாலியல் வழக்கை சுவீடன் கைவிட்டதை அடுத்து தூதரகத்தை விட்டு வெளியே வந்தார்.

பின்னர் பிரிட்டிஷ் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டு இன்றுவரை லண்டன் சிறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு அவர் பிணையில் வெளியே வர வழிவகுக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

குமாரதாஸன். பாரிஸ்.04-01-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More