இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கருத்தோவிய கவனயீர்ப்பு!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால் இன்று யாழ் நகர் பகுதியில் கருத்தோவிய கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு நிகழ்வில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் மு.கோமகன் அரசியல் கைதிகளின் உறவுகள் சார்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இந்த தைப்பொங்கலுக்கேனும் அரசியல் கைதிகளான எமது உறவுகள் சிறை மீண்டு வருவார்கள் என இருந்த குடும்ப உறவுகளின் கனவு பொய்த்து போனதொருபொழுதில் குரலற்றவர்களின் குரலாகிய நாம் கருத்தோவிய கவனயீர்ப்பினை நடாத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.


நாம் பேசிக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில், கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் 64 வயதான கனகசபை தேவதாசன் என்ற வயோதிப தமிழ் அரசியல் கைதி 7 நாட்களாக தொடர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார். ஆயுள் தண்டனை கைதியான அவரின் வழக்கினை மேல் முறையீடு செய்து அவரே சட்டவாதியாக மன்றில் தோன்றி தனது வழக்கினை நெறிப்படுத்தி வந்திருந்தார்
ஆனபோதிலும் கொடூர கொரோனா தொற்று காரணமாக சிறைத்துறை அவரை நீதிமன்றம் அழைத்துப் போகிவில்லை.

சட்டத்தரணி முன்னிலைப்படுத்தாத தனது வழக்கு மேன் முறையீட்டு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டு தனக்கு நீதி கிடைக்காமல் போகலாம் ஆகையால் தனக்கு பிணை விடுதலை வேண்டும் அல்லது வழக்கில் ஆஜராகி அதனை முன்னெடுக்கவேண்டும் என சிறைத்துறை சார்ந்தவர்களுக்கு பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனபோதிலும் அவை எதுவும் கவனிக்கப்படாத நிலையிலேயே விரக்தி அடைந்த அவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு நியாயம் கோரிநிற்கிறார்.


கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ள இவர் தொடர்ந்தும் இன்னும் சில நாட்கள் உணவுத்தவிர்ப்பை நீடிப்பாரானால் கவலைக்குரிய விளைவுகள் ஏற்படலாம் அதன் பின்பு நாம் பேசி கோசம் எழுப்பிப் பயனில்லைஅடுத்து மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் ஆட்சிப்பீடம் ஏறிய நாள் முதல் பல கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி வருகிறார்.

கடந்த வாரம் கூட ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதி ராஜ ராம விகாரை விகாராதிபதி ஊவத்தேனை சுமணதேரர் அவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளார் ஜனாதிபதி. ஆனாலும்கூட கடந்த 21 ஆண்டுகளாக தமிழ் அரசியல் கைதியான இந்துமத குரு ரகுபதி சர்மா அவர்கள் சிறையில் வாடுகிறார் என்பதை ஜனாதிபதி மறந்து விட்டாரா என்ற விடயம் கவலையளிக்கிறது.


இவர் கோரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு நடமாட முடியாமல் தள்ளாடும் நிலையில் இருப்பதாக உறவினர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.


ஆகவே ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே நீதி என்று அடிக்கடி கூறும் அரசாங்கம் பன்நெடுங்காலமாக சிறையில் சீரழிந்துகொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மீது கருணை காட்ட வேண்டும்.
அவர்களும் சமூகத்துடன் இணைந்து வாழ ஓர் சந்தர்ப்பமேனும் வழங்க வேண்டும் இதுவே தருணம்.


இங்கு இன்னுமொரு விடயத்தை குறிப்பிட விரும்புகிறோம் தியாகி திலீபன் அவர்களை நினைவுகூர தடை விதிக்கப்பட்ட போதும், யாழ். பல்கலைக்கழகத்தில் தூபி உடைக்கப்பட்ட போதும் தமது கடசிக்கொள்கை கோட்பாடுகளை தள்ளிவைத்துவிட்டு ஒன்றுபட்டு ஒரணியாய் குரெழுப்பிய தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் எங்களது தமிழ் அரசியல் கைதிகளின் மனிதாபிமான விடுதலை விவகாரத்தில் ஒருமித்த குரலை வெளிப்படுத்தி விடுதலைக்கு வழிசமைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக இவ்விடத்தில் குரலற்றவர்களின் குரல் கோரிக்கை விடுக்கின்றது.

இவ்வாறன அரசியல் ரீதியான முன்னெடுப்புக்கள் மூலமே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அரசியல் தீர்மானம் ஒன்றினை அரசாங்கத்திடம் வலியுறுத்த முடியும். கடந்த 7 வருடங்களாக இது நாள் வரையும் சிறைக்குள் பன்னிரெண்டுக்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் துன்பகரமாக உயிரிழந்துள்ளனர்.

மீதமுள்ளவர்களையாவது உயிருடன் சிறை மீட்டு உறவுகளுடன் ஒப்படைக்க ஓரணியில் திரண்டு ஒற்றுமையாக குரல் கொடுக்க அனைத்து தரப்பினரையும் இருகரம் நீட்டி அழைக்கிறது குரலற்றவர்களின் குரல் அமைப்பு.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.