Home உலகம் ஜேர்மனியில் FFP2 மாஸ்க் பாவனைக்கு! பவாறியாவில் 35 பேருக்கு புது வைரஸ்!!

ஜேர்மனியில் FFP2 மாஸ்க் பாவனைக்கு! பவாறியாவில் 35 பேருக்கு புது வைரஸ்!!

by admin

ஜேர்மனியின் தென் கிழக்கு மாநிலமான பவாறியாவில் (Bavaria)மருத்துவமனை ஒன்றில் சுமார் 35 நோயாளிகளுக்கு மாற்றம் அடைந்த புதிய வைரஸ் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பவாறியாவில் Garmisch-Partenkirchen என்னும் பனிச்சறுக்கல் விளையாட்டு நகரில் உள்ள மருத்துவமனையிலேயே 75 தொற்றாளர்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 35 பேருக்கு குழப்பமான புதிய தொற்று அறியப்பட்டிருக்கிறது. அது இங்கிலாந்து மற்றும் தென்னா பிரிக்கா வகையைச் சேர்ந்ததா அல்லது வேறு புதிய வகை வைரஸா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை – பவாறியா மாநில அரசு புதிய வைரஸ் தொற்றைத் தடுக்கு முகமாகப் பொதுப் போக்குவரத்து களிலும் மற்றும் கடைத் தொகுதிகள் போன்ற இடங்களிலும் FFP2 என்னும் காற்று வடிகட்டும் தன்மை அதிகம் உள்ள முகக் கவசங்களை அணியுமாறு தனது மக்களைக் கேட்டுள்ளது.தற்சமயம் பாவனையில் உள்ள சாதாரண மாஸக்குகளும் மக்கள் துணியில் தாங்களே தைத்து அணிந்து கொள்ளும் முகக் கவசங்களும் தீவிர தொற்றும் தன்மைகொண்ட புதிய வைரஸைக் கட்டுப்படுத்த போதாது என்று அறிவியல் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியதை அடுத்தே FFP2 வகை மாஸ்க்குகள் அங்கு கட்டாய பாவனைக்குக் கொண்டுவரப் பட்டுள்ளன.

சாதாரண மாஸ்க்குகளை விட விலை உயர்ந்த FFP2 வகை மாஸ்க்குகள் (full protective filter masks) சுவாசக்காற்றை முழு அளவில் சுத்திகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டவை. பவாறியாவைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பொதுப் போக்குவரத்து களில் இந்த வகை மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்கும் யோசனையை ஜேர்மனிய அரசு பரிசீலித்து வருகின்றது.அயல் நாடான ஒஸ்ரிய அரசு பொதுப் போக்குவரத்துகளில் பயணிகள் FFP2 மாஸ்க் அணிவதை ஜனவரி 25 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கி உள்ளது.

துணியில் தைத்த மாஸ்க் வகைகள் புதிய வைரஸ் தொற்றை தடுக்காது!


வேகமாகப் பரவும் புதிய வைரஸிடம் இருந்து தப்புவதற்கு தரமான மாஸ்க் வகைகளை அணியுமாறு பிரான்ஸின் பொதுச் சுகாதாரத்துக்கான உயர் அதிகார சபை(Haut conseil de la santé publique) அறிவுறுத்தி உள்ளது.

இரண்டாம் வகைக்குள் (catégorie 2) அடங்கும் துணியினாலான மாஸ்க்குகள் காற்றை வடிகட்டும் திறன் குறைந்தவை. அவை புதிய வைரஸ் தொற்றை தடுக்கக் கூடியவை அல்ல என்று பரிந்துரைக்கப் பட்டுள்ளது.


மாற்றமடைந்த இங்கிலாந்து வைரஸ், தென்னாபிரிக்க வைரஸ் என்பன ஜரோப்பாவில் வேகமாகப் பரவி வருவதால் மாஸ்க் அணியும் நடைமுறைகளில் புதிய ஆலோசனை களை சுகாதார அதிகார சபை வெளியிட்டுள்ளது.


வீடுகளில் சாதாரண துணியினால் தயாரிக்கப்படுகின்ற மாஸ்க்குகளை அணிவதைத் தவிர்த்து முதலாம் வகைக்குள்(catégorie 1)அடங்கும் மீளக் கழுவிப் பயன்படுத்தக் கூடிய துணியினாலான மாஸ்க்குகளை (masque en tissu réutilisable de catégorie 1) வாங்கி அணியுமாறும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
பொதுச் சுகாதார உயர் அதிகார சபையின் இந்த சிபாரிசுகளை நாட்டில் நடைமுறைப் படுத்துகின்ற தீர்மானத்தை சுகாதார அமைச்சே எடுக்கவேண்டும்.


கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதில் துணிகளால் தயாரிக்கப்படுகின்ற மாஸ்க்குகள் 70 வீதமும் காற்றை வடிகட்டும் தன்மை கூடிய ரிசுக்களால்(பேப்பர்) முறைப்படி தயாரிக்கப்படுகின்ற(surgical masks and category 1 fabric masks) மாஸ்க்குகள் 90 வீதமும் பாதுகாப்பானவை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குமாரதாஸன் – பாரிஸ்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More