Home உலகம் நவீன முதலாளித்துவம் நீண்டகாலம் தாக்குப் பிடிக்காது! – மக்ரோன்.

நவீன முதலாளித்துவம் நீண்டகாலம் தாக்குப் பிடிக்காது! – மக்ரோன்.

by admin


உலகம் பெருந் தொற்றுக்காலத்துக்குப் பிந்திய “புதிய ஒழுங்கு” ஒன்றை வகுத்துக் கொள்ளவேண்டியதன் அவசியத்தை உலகத் தலைவர்கள் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்.
ஜரோப்பாவில் அது சார்ந்த கொள்கை மாற்றக் கருத்து பிரான்ஸின் அதிபர் மக்ரோனிடம் இருந்து வந்துள்ளது.


நவீன முதலாளித்துவம் (modern capitalism) நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிக்கும் எனக் கருதவில்லை என்ற சாரப்பட எச்சரித்திருக்கும் அதிபர் எமானுவல் மக்ரோன், சமத்துவமின்மை, பருவநிலை மாற்றம் போன்றவற்றைக் கையாள்வதில் அதிக கவனத்தை செலுத்துமாறு உலகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


முதலாளித்துவமும் சந்தைப் பொருளாதாரமும் பல மில்லியன் மக்களைப் பட்டினியில் விட்டுள்ளன என்பதை அவர் தனது கருத்துக்களில் ஒப்புக் கொண்டார்.


முதலாளித்துவத்தின் நிதிமயமாக்கல் “நேர்மறையான புதுமைகளுக்கும் தொழிலுடன் சம்பந்தப்படாத லாபங்களுக்கும் வழிவகுத்து விட்டது”


இந்த அமைப்பில் இரண்டு தரப்புகளே அரசர்கள். ஒன்று பங்குதாரர்கள். அடுத்தது நுகர்வோர்கள். இவர்களுக்கு இடையே தொழிலாளர்களும் பூமியும் அதற்கான விலையைச் செலுத்தவேண்டி உள்ளது – என்று மக்ரோன் தெரிவித்தார்.


“மனித குலத்தைக் கருத்தில் கொள்ளாமல் இனி நாம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று நான் நம்பவில்லை”


“தொற்று நோய்க் காலத்தில் இருந்து நாங்கள் வெளியேறும் சமயத்தில் பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிராகப் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியவர்களாக இருப்போம்.


” பொருளாதாரம் மீண்டும் ஓர் தார்மீக அறிவியலாக மாறியுள்ளது. மனித மதிப்புக்கு மேல் எதுவும் இல்லை. தொற்று நோய்கள், காலநிலை மாற்றம் மற்றும் அழிவுகளால் தாக்குப்படக்கூடிய நிலையில் நமது சமூகங்கள் உள்ளன.


கொரோனா வைரஸுக்குப் பிந்திய அனுபவத்தில் இருந்து இவற்றை நாம் பாடங்களாகக் கொள்ள வேண்டும். “


-இவ்வாறு அவர் மேலும் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
பொதுவாக வணிக சார்பு மையவாதி யாகத் தன்னை அடையாளப்படுத்தி வந்தவர் மக்ரோன். திறந்த பொருளாதாரம், முதலாளித்துவம் தொடர்பான அவரது இந்தப் புதிய இடதுசாரி நோக்கிலான கருத்துகள் பரவலாகக் கவனத்தை ஈர்த்துள்ளன.
சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் மே மாதம் நடைபெறவேண்டிய உலகத் தலைவர்களது Davos Agenda -2021 மாநாடு தொடர்பான ஒன் – லைன் கேள்வி-பதில் அமர்வு ஒன்றிலேயே மக்ரோனின் இந்தக் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.


எதிர்காலத்துக்கான அரசியல், வர்த்தகம் உட்பட உலகக் கொள்கைகள், கருத்துரு வாக்கங்கள், நாடுகளின் கூட்டாண்மை களை வடிவமைப்பதற்கான உலகத் தலைவர்களது ஒன்று கூடலே ‘Davos Agenda -2021’ என அழைக்கப்படுகிறது.

வழமையாக டாவோஸ் பனிச் சறுக்கு நகரில் இடம்பெற்றுவருகின்ற அந்த உலகப் பொருளாதார மாநாடு இம்முறை சிங்கப்பூருக்கு இடமாற்றப்படவுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.
28-01-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More