Home இலங்கை மெய்ப்பொருளே, கலிலியோ என்ன பாடு பட்டிருப்பார்? ஆனால் பூமி உருண்டை தான் – கலாநிதி சி.ஜெயசங்கர்!

மெய்ப்பொருளே, கலிலியோ என்ன பாடு பட்டிருப்பார்? ஆனால் பூமி உருண்டை தான் – கலாநிதி சி.ஜெயசங்கர்!

by admin


வெளிப்பாட்டு முறைகள் அல்லது வெளிப்படுத்தும் முறைகள் பல்வகைப்படும். கதைத்தல் அல்லது பேசுதல், ஆடுதல், பாடுதல், வேளாண்மை செய்தல், விளையாடுதல், வேட்டையாடுதல், படம் வரைதல், சிற்பங்கள் செய்தல், எழுதுதல், புகைப்படம் எடுத்தல், திரைப்படம் எடுத்தல், ‘மீம்ஸ்’ போடுதல் எனப் பலவாக விரியும்.
வரலாற்று ரீதியாகப் பல்வேறு விடயங்களை அணுகும் பொழுதும் மேற்கூறிய விடய

த்தின் இந்தப் பரந்துபட்ட தன்மையைக் காண முடியும்.
உலக வரலாறுகளில் குறிப்பாக எழுத்துருவாக்கம் பெறாத வரலாறுகளின்வழி அதாவது வழக்காறுகளின்வழி அறியப்படும் அறிவு முறைகளினூடு இந்த அனுபவத்தை நிறையவே பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்ச்சியான பங்குபற்றல், செயற்பாடு என்பவற்றின் மூலமே வாய்க்கப்பெறும்.
இவையெல்லாம் கண்ணிற்பட்டாலும் அறிவுக்குப் புலப்படாமல் இருந்துவிடும் ஆபத்தை மேற்கத்தைய காலனியம் கொண்டு வந்த கல்விமுறை உருவாக்கி இருப்பது இன்னமும் உணர்ந்துகொள்ளப்படாதது மட்டுமல்லாமல் எழுத்தில், அச்சில் இருப்பது மட்டுமே அறிவு என்ற ஆதிக்க நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கின்ற மாயை அறிவுபூர்வமான, விஞ்ஞானபூர்வமானதாக கேள்விக்கிடமற்ற வகையில் நம்பிக்கையாகி இருக்கிறது.


அதேவேளை இருநூறு வருடகால நவீன அறிவின் வருகை, இதற்கு முன்னான இரண்டாயிரம் வருடகால வாழ்க்கை வரலாற்றின் அறிவியக்கங்களையெல்லாம் மூடநம்பிக்கை, விஞ்ஞானபூர்வமற்றது, ஆய்வு கூடங்களில் பரிசோதிக்கப்படாதது என்ற வாக்கு மூலங்களின் வழி நிராகரிக்கப்படும், சட்ட ரீதியாகத் தடுக்கப்படும் நிலைமை வலுவான யதார்த்தமாகி இருப்பது பொது வெளிகளிலும், பொதுப்புத்தியிலும் ஓரளவுக்கு உறைக்கத் தொடங்கியிருப்பினும் அதிகார நிலைப்பட்ட மையங்களில் இதன் செல்வாக்கைக் காண முடியாது.
மாறாக இதற்கு எதிரானதும், மாறானதுமான ஓட்டமே வலுவானதாக அல்லது அசைக்கமுடியாததாக இருக்கிறது. இதன்காரணம் மெய்யான அறிவுத்தேடலற்ற, பதவி உயர்வுகளுக்கான, புள்ளித் தேடலுக்கான மையங்களாக இவை மாறிவிட்டிருப்பதும், ஆய்வு என்பது மாற்றத்துக்கானது என்பது பற்றிய நினைவுகளே இல்லாத, ஆய்வு என்பது ஆய்வுக்காக என்ற நிலைமை கூட அற்றுப்போய் ஆய்வு என்பது ஆய்வுக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறையாக வறண்டு போய் விட்டிருக்கிறது. உயர் கல்வி நிறுவன ஆய்விதழ்கள் இதனைத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்பதைக் காணலாம்.


இந்தப் பின்னணியில் உயர்கல்வி நிறுவனங்களில் ஆற்றுகைக் கலைகள் எதிர்கொள்ளும் சவால்கள் புரிந்து கொள்ளப்படாத, புரிந்துகொள்ள முடியாத விடயங்களாகச் சிதிலமடைந்து காணப்படுகின்றன.


தமிழ் இலக்கியம் கற்பிக்கும் ஒருவரது கவிதை, சிறுகதை, நாவல் போன்ற படைப்பிலக்கிய ஆற்றல் பரிசோதிக்கப்படுவதுமில்லை, நிபந்தனையாகவும் இருப்பதில்லை, இவ்வாறே இந்துப் பண்பாடு கற்பிக்கும் ஒருவரின் பண்ணிசை வல்லமை பார்க்கப்படுவதில்லை, அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் ஒருவரிடம் அவரது அரசியல் செயற்பாடு அல்லது செயல்வாதம் கேட்கப்படுவதில்லை, நுண்கலை மற்றும் கலை வரலாறு கற்பிக்கபடுவர்களிடம் கூட குறித்த கலைகள் சார் ஆற்றுகை அல்லது படைப்பாக்க அனுபவங்கள் வினவப்படுவதில்லை. இவை அடிப்படைத் தேவை எனினும், இது பற்றிய சிந்தனையை உயர் கல்விச் சூழலில் அவதானிக்க முடியாது. இத்தகையதொரு பின்னனியில் ஆற்றுகைக் கற்கைகளில் எழுத்துமைய ஆய்வு நிபந்தனையாக விதிக்கப்படுவது வலுவாக கடைப்பிடிக்கப்படுகின்றது தவிர்க்கவே முடியாததாக இருக்கின்றது இதன் அர்த்தம் எதுவாக இருக்கிறது?
எழுத்தில் மட்டுமே அறிவுருவாக்கம் நிகழும் நவீனமயமாக்கம் என்ற பெயரில் காலனியம் கொண்டுவந்த இருண்ட பக்கத்தை உள்ளுர் அதிகாரம் தன்னுட்கொண்டு அறிவின் மேலாதிக்கத்தை தன்வசப்படுத்தி அதனை அனுபவிப்பதுடன் அறியாமையினால் காலனியத்தின் தொழிற்பாட்டை தனதாக்கிக் கொண்டு விட்டிருக்கிறது. இதன் மிகவும் வெளிப்படையான யதார்த்தத்தை கொவிட்-19 காலத்தில் நெற்றியடியாகக் கண்டு கொண்டிருக்கின்றோம். கொவிட்-19க்கு மருத்துவ சிகிச்சைக்கான வழிமுறையற்ற நிலையிலும் உள்ளுர் மருத்துவ முறைகளை நிராகரிப்பதில், அவை பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எந்தவித அறிவாராய்வுமின்றி அல்லது அவர்களின் வாக்கு மூலங்களில் கூறுவதானால், அவர்கள் கூறும் ஆய்வு கூடங்களில் பரிசோதனை எதுவும் செய்யாமலே வாக்கு மூலங்களை வெளியிடுவதில் கடுமையாக இருப்பதைக் காணமுடியும்.
அதாவது அறிவு அல்லது கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்ட ஓரிடத்தில் இன்னும் தெளிவாகச் சொன்னால் அதிகாரம் பெற்ற இடத்திலிருந்து வெளிப்படையாகச் சொன்னால் ஆதிக்கம் பெற்ற ஓரிடத்திலிருந்து வருவது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும், ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக இருப்பதைக் காண முடியும்.
இத்தகையதான அறிவின் அரசியல் ஆதிக்க பின்னணியில் அதன் இன்னொரு தளம் பற்றிய பார்வையே ஆற்றுகைக் கற்கைகளின் எழுத்தின் அதிகாரத்தை வலியுறுத்துவது. எழுத்து என்பது வெளிப்பாட்டு அல்லது வெளிப்படுத்தும் முறைமைகளில் ஒன்றேயன்றி எழுத்துத்தான் அறிவு எழுத்தில்தான் அறிவு என்பது மேலாதிக்கச் சிந்தனையன்றி அறிவுடைமையின் பாற்பட்டதல்ல என்பது பிரதி பண்ணும் கல்வி முறைக்குள்ளால் புரிந்துகொள்ள முடியாதது. பங்குபற்றலும் செயற்பாடுகளுமே மெய்ப்பொருளைக் காணும் அறிவைத் தருவதாக இருக்கும். ஆனால் யதார்த்தத்தில் ஒப்புவிக்கும் அல்லது பிரதி பண்ணும் கல்வியே நடைமுறையாகவும் அதிகாரபூர்வமானதாகவும் சுருங்கச் சொன்னால் விஞ்ஞான பூர்வமானதாகவும் ஏற்று நடைமுறைப்படுத்துவது அறிவுபூர்வமானதாகவும், பெருமிதத்திற்குரியதாகவும் இருந்து வருகிறது.
ஆய்வு முறையாக ஆற்றுகை, ஆய்வு முறையாகக் கதை சொல்லல், ஆய்வு முறையாகப் புகைப்படக்கலை எனப்பலவகைப்பட்ட வெளிப்பாட்டு முறைகள் உலகில் நடைமுறையில் இருப்பினும், உள்ளுர் ஆய்வு முறைகள், ஒடுக்கப்பட்டவர்களது அல்லது விளிம்புநிலைப்பட்டவரது விடுவிக்கப்பட்டவர்களது ஆய்வு முறைமைகள், பெண்ணிய ஆய்வு முறைமைகள் எனப் பலவகைப்பட்ட ஆய்வு முறைகள் புளக்கத்தில் இருப்பினும் இவையெதுவும் அறியாதும், புரியாதும் இருந்து கொண்டு குறைந்தபட்சம் அறிவும் அறிவுருவாக்க முறைகளும் உலகம் முழுவதற்கும் ஒன்றாக இருக்க முடியாது என்ற அறிவின் அடிப்படையும் ஏற்றுக்கொள்ளப்படாது ‘எது எடுத்தாலும் நூறு ரூபாய்’ என்ற பாணியில் இயங்குவது உயர் கல்வி எந்த வகையிலானதாக இயங்கி வருகிறது என்பதைப் புரிய வைப்பதாக இருக்கிறது.
இத்தகையதொரு சூழ்நிலையில் ஆற்றுகைக் கலைகளின், அதுசார் கற்கைகளின் இயக்கமும் உருவாக்கமும் தனித்தன்மை கொண்டவை என்பதை விளங்க வைப்பது பகீரதப்பிரயத்தனமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாகவே ஆற்றுகைக் கற்கைகள் தனித்த, தனித்துவமான சூழ்நிலைகளில் இயங்க வேண்டுமென்பது வலியுறுத்தப்படுகிறது. இல்லையேல் தற்போது உள்ளது போல் நரி கொக்கிற்கு வைத்த விருந்துக் கதையாகவே இருக்கும். அது அவ்வாறு தான் இருந்தும் வருகிறது.


ஆற்றுகைக் கற்கைகள் மட்டுமல்ல விளையாட்டுக் கற்கைகளும் மிகுந்த சவாலுக்கு உரியதாகவே இருந்து வருகிறது. விளையாட்டு படிப்பைக் கெடுக்கும் என்ற ஆழ்ந்த உறுதியான நம்பிக்கை கொண்ட சமூகத்தில் விளையாட்டுக் கற்கைகள் சவால்களை எதிர்கொள்ளாது எந்தவகையில் இருக்க முடியும்? அந்தவகையில் தான் கலை என்பது கடவுள் தந்த கொடை என்ற கருத்துக் கட்டிவிடப்பட்டிருக்கும் சமூகத்தில் அதைக் கற்கையாக ஏற்றுக் கொள்வதே சிக்கலானதாக இருக்கிறது. இந்நிலையில் ஆற்றுகைக் கலைகளைப் புரிந்து கொள்ள வேண்டி எந்தப் பாறையில் மோதிக் கொள்வது? ஏனெனில் ஏலவே அது பாறையுடன் மோதிக்கொள்வதாகவே இருந்து வருகிறது.


ஆற்றுகைக் கற்கைகளில் ஆற்றுகை அம்சத்தின் முக்கியத்துவம் பற்றி உரையாடும் பொழுது வெளியிலிருந்து மட்டுமல்ல உள்ளிருந்தும் எதிர்ப்புக் கிளம்புவது ஆச்சரியமானதல்ல. எழுத்தும் பத்திரமும் உறுதியான அத்தாட்சிப் பத்திரமாக கடுமையாகக் கடைப் பிடிக்கப்படும்.


நிர்வாகச் சூழலில் வாய்ப்பாட்டு வல்லமையிலும் அத்தாட்சிப் பத்திரமே அதிகம் பேசும் முறைமைக்கும் அதுவே புரியும் ஏற்றுக்கொள்ளும். ஏனெனில் அவர்களுக்கு முன்னால் அத்தாட்சிக்கு ஆவணப்படுத்த பத்திரம் உண்டு. பத்திரம் மட்டும் இருந்தால் சரி, வேறெதுவும் பேசாது. ஆற்றுகைக் கலை வல்லமை அதன் அறிவு திறன் உருவாக்கம் அதன் அளிக்கையில் இருக்காது இருக்க முடியாது என்ற நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? வெகுசனக் கலையே கலை. இது பொழுது போக்கிற்கு மட்டுமே என்ற அறியாமையில் இருந்தே இது பிறக்கிறது.


பத்திரம் வைத்திருக்கும் வித்துவமற்றவர் உள்ளிருந்தும் பத்திரத்தில் மட்டுமே அறிவுத் திறனைக் காணும் வெளியிருந்து இயங்கும் முறைமையுள் ஆற்றுகைக் கலையின் தனித்துவத்தை மட்டுமல்ல அறிவுருவாக்கம், திறன் விருத்தியின் பாங்கையும் எங்ஙனம் கண்டு கொள்வது? ஆற்றுகையில் வெளிப்படும் வித்துவத்தில் அறிவும் திறனும் பொதிந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் அறிவுச் சூழலின் உருவாக்கமே ஆற்றுகைக் கலைகளை மட்டுமல்ல அறிவுருவாக்க, திறன் விருத்தி முறைகளையே விடுவிக்கும். இல்லையேல் எல்லாம் கடதாசிக் கோபுரங்கள் தாம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More