உலகம் பிரதான செய்திகள்

99 வயதில் நூறு அடிகள் நடந்து மருத்துவ சேவைக்கு நிதி திரட்டிய பிரிட்டிஷ் கப்டன் சேர் ரொம் மூர் உயிரிழந்தார்!


பிரிட்டனில் வைரஸ் பேரிடரின் நடுவே நாட்டுக்கு நம்பிக்கை ஊட்டிய ஒரு முன்னாள் படைவீரரின் மறைவுச் செய்தியை பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.


ஓய்வு பெற்ற படை வீரரும் கொரோனா பெருந்தொற்று நோய்க் காலத்தில் உலகெங்கும் பல லட்சக்கணக் கானோரின் கவனத்தை ஈர்த்தவருமான கப்டன் சேர் ரொம் மூர் (Captain Sir Tom Moore) உயிரிழந்துவிட்டார் என்று அறிவிக்கப்படுகிறது.


சில நாட்களாகக் கடும் நிமோனியாவி னால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் இன்று பெட்போர்ட் (Bedford) மருத்து வமனையில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நிமோனியாவுக்கான மருந்துச் சிகிச்சைகளைப் பெற்று வந்ததன் காரணமாக அவருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தனது நூறாவது பிறந்த நாளுக்கு ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் நிதி திரட்டி மருத்துவமனைகளுக்கு வழங்க விரும்பினார் ரொம் மூர். அதற்காக நூறு அடிகள் நடக்க முடிவு செய்தார்.


தனது 99 ஆவது வயதில்- கடந்த ஆண்டு முதலாவது பொது முடக்க காலப் பகுதியில்- தனது வாழ்விடத்தில் பூங்காவைச் சுற்றி நடக்க ஆரம்பித்தார்.


நிதி சேர்க்கும் அவரது அந்த நடை முயற்சி உலக அளவில் அவரைப் பிரபலமாக்கியது. தள்ளாடும் வயதில் பூங்காவைச் சுற்றி அவர் நடக்கின்ற காட்சிகள் உலகெங்கும் வெளியாகின. நிதி நன்கொடைகள் குவிந்தன. ஆயிரம் பவுண்ட்ஸுகளுக்காக தனியொருவராக அவர் எடுத்துவைத்த நூறு அடிகள் இறுதியில் சுகாதார சேவைகளுக்கு 33மில்லியன் பவுண்ட்ஸ்(£32,794,701) நிதியைத் திரட்டி சாதனை படைத்தது. நூறாவது பிறந்த நாளன்று அவருக்கு கேணல் தரநிலை வழங்கி பிரிட்டிஷ் அரசு அவரைக் கௌரவித்தது.

இரண்டாவது உலகப் போர் காலப்பகுதியில் இராணுவத்தில் இணைந்த ரொம் மூர் இந்தியா, மியான்மர் போன்ற நாடுகளில் பிரிட்டிஷ் படைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

மூரின் மறைவுக்கு பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அனுதாபம் வெளியிட்டுள்ளார். “நெருக்கடியான கட்டத்தில் நாட்டையும் மக்களையும் ஒன்றுபடுத்திப் பெரும் நம்பிக்கை ஊட்டிய ஒரு ஹீரோ ரொம் மூர்” – என்று பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட் டுள்ளார். பிரதமரின் டவுணிங் வீதி அலுவலகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட் டுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.
02-02-2021

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.