Home இலங்கை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலும் சிவில் சமூகங்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை – நிலாந்தன்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலும் சிவில் சமூகங்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை – நிலாந்தன்!

by admin

தமிழ் மக்கள் எப்பொழுதும் போராடத் தயாராக இருக்கிறார்கள். பொருத்தமான போராட்ட வழிமுறைகள் திறக்கப்பட்டால் வீதியில் இறங்குவார்கள் போராடுவார்கள் என்பதைக் கடந்த வாரம் நிகழ்ந்தஐந்துநாட் பேரணி உணர்த்தியிருக்கிறது.


அதே சமயம் தமிழ்ச்சிவில் சமூகங்களுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான உறவில் ஒரு பொருத்தமான பொறிமுறை இல்லையென்றால் கட்சிகளோ அல்லது நிதி வழங்குனர்களோ இந்தப் போராட்டங்களைத் தத்தெடுக்க கூடிய ஆபத்துக்கள் அதிகம் இருக்கும் என்பதனையும் இந்தப் போராட்டம் உணர்த்தியிருக்கிறது.
மட்டக்களப்பைச் சேர்ந்த சிவில் செயற்பாட்டாளர்கள் முதலில் இந்த போராட்டத்தை குறித்து சிந்தித்திருக்கிறார்கள். புலம் பெயர்ந்த தமிழ்த்தரப்புக்கள் அதற்கு பக்கபலமாக இருந்திருக்கின்றன. இப்போராட்டத்தை குறித்து முதலில் சிந்தித்த சிவில் சமூக பிரதிநிதிகள் போராட்டத்திற்கு உதவி கேட்டு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகியிருக்கிறார்கள். இதுதொடர்பில் மட்டக்களப்பில் நடந்த சந்திப்பில் மக்கள் பிரநிதிகளும் பங்குபற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் போராட்டத்துக்குள் நுழைந்த சுமந்திரனும் சாணக்கியனும் போராட்டத்தை எப்படித் தத்தெடுக்கலாம் என்று சிந்தித்தார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.


தொடக்கத்தில் போராட்டம் சுமார் முப்பதுபேர்களோடுதான் ஆரம்பமாகியது. மழை பெய்து கொண்டிருந்தது. பொலிசார் நீதிமன்ற தடை உத்தரவுகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தியவர்களை தடுக்க முற்பட்டிருக்கிறார்கள். அட்டாளைச்சேனை வரை அச்சுறுத்தலான நிலைமையே நிலவியது என்று ஒரு கிறீஸ்த்தவ மதகுரு கூறினார். இதுவிடயத்தில் சாணக்கியனும் உட்பட அரசியல்வாதிகள் போலீசாரின் தடையை உடைத்துக்கொண்டு துணிந்து முன் சென்றிருக்கிறார்கள். போலீஸ்தடையை உடைக்கலாம் என்ற முன்னுதாரணத்தை அது ஏனைய அரசியல் தலைவர்களுக்குக் கொடுத்தது. ஆனால் கிழக்கில்பொதுமக்களுக்குத் தடை இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் போலீசார் பேரணியைதடுப்பதை நிறுத்திவிட்டு அதுசெல்லும் வழியெல்லாம் வீதி ஒழுங்கைப் பேணும் நடவடிக்கைகளில் இறங்கி விட்டார்கள்.


முதலில் அது ஒரு கவன ஈர்ப்பு நடைபயணம் என்றுதான் கூறப்பட்டது. ஆனால் கிழக்கில் முஸ்லிம்களின் கிராமங்களுக்குள் நுழைந்த பொழுது அது பெருந்திரள் பேரணியாகமாறியது. சாணக்கியனுக்கும் சுமந்திரனுக்கும் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் நல்லபிப்பிராயமும் இதற்கு ஒரு காரணம். பொலிகண்டியில் அது முடியும்போது பெருந்திரள் பேரணியாக காணப்பட்டது. அதாவது தமிழ் மக்கள் தெருவில்இ றங்கிப்போராடத் தயார் ஆனால் தலைமை தாங்கத்தான் அமைப்புகளோ பொருத்தமான குடிமக்கள் சமூகத்தலைவர்களோ தயாரில்லை என்பதனை இப்போராட்டம் உணர்த்தியிருக்கிறது.


பொருத்தமான குடிமக்கள் சமூகத் தலைவர்கள் இல்லாத ஒரு வெற்றிடத்தில்தான் சமயத்தலைவர்களை முன்னிறுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. பேரணியில் பங்கு பற்றுவதற்கு எதிராக திருமலை ஆயருக்கு சட்டத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இலங்கைத்தீவில் ஒரு பொதுமக்கள் பேரணியில் பங்கு பற்றுவதற்கு எதிராக வேறு எந்த ஆயராவது இவ்வாறு தடுக்கப்பட்ட முன்னுதாரணம் உண்டா? சமயத் தலைவர்கள் தாம் சார்ந்த சமயநிறுவனங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். சமய நிறுவனங்களுக்கும் அரசியல் உண்டு. எனினும் அவை அவற்றின் முதலாவது அர்த்தத்தில் சமய நிறுவனங்கள். அரசியல் பணிகளுக்குரியவை அல்ல. ஆனால் ஒரு சமூகத்தின் தேவைகளின் நிமித்தம் சமயத் தலைவர்கள் அரசியல் பணிக்கு வரமுடியும். இதற்கு உலகம் முழுவதும் உதாரணங்கள் உண்டு.


இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் ஆன்மீகவாதிகளின் ஈடுபாடு மிக அதிகமாக இருந்தது. அது ஆன்மீகவாதிககளால் வழிநடத்தப்பட்ட ஒரு போராட்டம் என்று ஈழத்தமிழ் சிந்தனையாளர் மு. தளையசிங்கம் கூறுவார். சுதந்திரப் போராட்டத்துக்கான கூட்டு உளவியலைத் தயாரித்ததில் ராமகிருஷ்ணமிஷனுக்குப் பெரும் பங்குண்டு என்ற பொருள்பட தளையசிங்கம் கூறுகிறார். எப்படி என்றால் அன்னியர் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி ஆங்கில மோகம் கொண்டிருந்த இந்திய படித்த நடுத்தர வர்க்கம் மேற்கத்தியக் கல்வி, மேற்கத்திய சிந்தனை, மேற்கத்திய தத்துவம் போன்றவற்றை பெருமையோடு பின்பற்றிக் கொண்டிருந்த ஒரு பின்னணியில் தனது சொந்தப் பண்பாடு மதம் விழுமியங்களை குறித்து ஒருவித தாழ்வு மனப்பான்மையோடு காணப்பட்டது. ஆனால் விவேகானந்தரின் மேற்கத்திய விஜயமும் சிக்காக்கொவில் அவர் ஆற்றிய உரைக்குக் கிடைத்த ஆதரவும் அங்கீகாரமும் அந்த மனக்கூனலை நீக்கியது.

இதன் விளைவாக இந்திய நடுத்தர வர்க்கம் மேற்கத்தியக் கல்வி குறித்தும் மேற்கத்தைய மேலாண்மை குறித்தும் கொண்டிருந்த பிரமைகள் உடைந்து அதன் கூன் நிமிர்ந்தது என்றும் கருதப்படுகிறது. இந்திய படித்த நடுத்தர வர்க்கத்தின் தாழ்வுச் சிக்கல் நீங்கியதும் அது போராடத் தொடங்கியது என்று தளையசிங்கம் கூறுகிறார்
தென்னாபிரிக்காவில் ஆயர்டெஸ்மன்டூட்டு, கிழக்குத் தீமூரில் சமாதானத்திற்கான நோபல்பரிசை பகிர்ந்து கொண்ட ஆயர்பெலோ (Ximenes Belo), லத்தீன் அமெரிக்காவின் விடுதலை இறையியலை முன்னெடுத்து அதனாலேயே கொல்லப்பட்ட கிறிஸ்தவ மதகுருக்கள் என்று பரவலாக உதாரணங்கள் உண்டு. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திலும் தமது அரசியல் பங்களிப்புக்களுக்காக கொல்லபட்ட ஆல்லது காணாமல் ஆக்கப்பட்ட கிறீஸ்தவ மதகுருக்கள் உண்டு.


அதேசமயம் இலங்கைதீவில் ஒரு கெட்ட முன்னுதாணமும் உண்டு. அரசியலில் மாசங்கத்தின் செல்வாக்கு இச்சிறிய தீவை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது?


எனவே ஒரு சுதந்திரப் போராட்டத்தில் அல்லது ஒரு மக்கள்திரளின் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் ஆன்மீக நிறுவனங்கள் சமய நிறுவனங்கள் உன்னதமான பங்களிப்பைச் செய்ய முடியும். போராடும் மக்களின் ஆன்ம பலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் போராட்டத்துக்கான நீதியின் இதயமாக நின்று போராட்டத்தை வழிநடத்துவதற்கும் ஆன்மீகத் தலைவர்களும் சமயத் தலைவர்களும் பொருத்தமான பங்களிப்பைச் செய்ய முடியும். எனவே மத நிறுவனங்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பதல்ல. ஆனால் பிரச்சினை என்னவென்றால் சிவில் அமைப்புக்களின் கட்டமைப்புக்குள் மத நிறுவனங்களையும் உள்வாங்கி சிவில்தலைவர்கள் அதை முன்னெடுப்பதே அதிகம் பொருத்தமானதாக இருக்கும்.


தமிழ் மக்களின் வரலாற்றில் அரசியல் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தளபதிகள் உருவாகியிருக்கிறார்கள். ஆனால் சிவில் தலைவர்கள் என்று கருதப்படுவோர் பெருமளவுக்கு உருவாகியிருக்கவில்லை. ஆயுதப் போராட்டத்திற்கு முந்திய மிதவாத அரசியலிலும் சரி ஆயுதப் போராட்டத்திற்குப் பிந்திய மிதவாத அரசியலிலும் சரி அவ்வாறானசிவில் தலைமைகள் பெருமளவுக்கு மேலெழவில்லை.
கடந்த நூற்றாண்டின் முற்கூறில் யாழ்ப்பாணம் வாலிபர் காங்கிரசை ஹண்டி பேரின்பநாயகம் உருவாக்கினார். கிழக்கில் மட்டக்களப்பில் கல்விச்செயற்பாட்டாளரான நல்லையா இலவசக்கல்வியின் முன்னோடியாகக் காணப்பட்டார். கண்டி பெரியநாயகம். நல்லையா போன்றவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் கடந்த சுமார் ஒரு நூற்றாண்டு காலப்பரப்பில் தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிவில் சமூகத் தலைமைகள் மிக அரிதாகவே மேலெழுந்திருக்கின்றன. மதம் சார்ந்த நிறுவன உருவாக்கிகள் தோன்றியியிருக்கிறார்கள் இப்போதும் தோன்றுகிறார்கள். ஆனால் சிவில் சமூகத் தலைவர்கள் என்று சொல்லத்தக்க ஆளுமைகள் போதிய அளவுக்கு உருவாகவில்லை.


ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரான மிதவாத அரசியலிலும் ஆயுதப் போராட்டத்தின் போதும் சிவில்சமூகங்கள் பலமான வளர்ச்சியைப் பெற்றிருக்கவில்லை. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் பல சிவில் சமூகத் தலைவர்கள் ஒன்றில் ஆயுதப்போராட்டத்தில் இணைந்தார்கள் அல்லது ஆயுதப் போராட்டத்தோடு தொடர்புடையவர்கள் என்ற காரணத்தால் கொல்லப்பட்டார்கள் அல்லது புலம் பெயர்ந்தார்கள்.


போருக்குப் பின்னரான சூழலில்சிவில் சமூகத் தலைவர்கள் எழுச்சி பெறாமல் போனதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. என்.ஜியோக்கள் ஐ.என்,ஜியோக்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழ் தரப்புக்கள் போன்றன சமூகத்தில் துருத்திக் கொண்டு மேலெழும் செயற்பாட்டாளர்களை நிதி உதவிகள் மூலம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு தன்னியல்பாக வளராமல் செய்து விடுகின்றன என்றும் ஒரு விமர்சனம் உண்டு. நிதி உதவிகள் சிவில் சமூகத் தலைவர்களை உருவாக்குமா? என்ற கேள்வி இங்கு முக்கியம். கடந்த பத்தாண்டுகாலத்தையும் எடுத்துப்பார்த்தால் தமிழ் பரப்பில் நிதி உதவி என்ற அம்சம் பல செயற்பாட்டாளர்களைப் ரொஜெக்ரிவிஸ்ட் ஆகமாற்றியிருக்கிறது. இதுவும் உள்ளூர் சிவில் சமூகத் தலைவர்கள் எழுச்சி பெறுவதற்கு சவாலாகக் காணப்படுகிறது. ஆபிரிக்கபுலமைச் செயற்பாட்டாளர் ஒருவர் “நிதி உதவி மாற்றத்தை ஏற்படுத்தாது” என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.


கடந்தபத்தாண்டு கால தொகுக்கப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் தமிழ் மக்கள் பேரவையோ அல்லது அதையொத்த வேறு எந்த அமைப்போசிவில் சமூகத் தலைவர்களை என்றுகுறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஆளுமைகளை உருவாக்கத் தவறிவிட்டன. இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் தமிழ் மக்கள் மத்தியில் சிவில் சமூகத் தலைமைகள் என்று கூறத்தக்க ஒரு பாரம்பரியம் மிகவும் பலவீனமாகவே இன்றுவரை காணப்படுகிறது. விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவைக்குள் எழுச்சி பெற்று வந்த காலகட்டத்தில் மூத்த சிவில் அதிகாரியும் சமூக அரசியற் செயற்பாட்டாளரும் ஆகிய எனது நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். “விக்னேஸ்வரன் ஒரு புதிய கட்சியைத் தொடங்குவதைவிடவும் ஒரு மக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்கினால் நன்றாக இருக்குமே? ” என்று. ஆனால் அது நடக்கவில்லை.அவ்வாறு தலைமை தாங்கத் தேவையான அரசியல் தரிசனமும் வாழ்க்கை ஒழுக்கமும் விக்னேஸ்வரனிடம்இல்லை. எனவே அவர் ஒரு கட்சியை தொடங்கினார். அந்த வெற்றிடம் இன்றுவரை உள்ளது. அந்த வெற்றிடத்தில்தான் சமயத் தலைவர்களும் மதகுருக்களும் முன்னே வருகிறார்கள்.
2009க்குப்பின் முன்னாள் மன்னார் ஆயரைப் போன்றவர்கள் மேலெழுந்தார்கள். எனினும் அரசியல் தலைவர்களின் மீது செல்வாக்கைப் பிரயோகிக்கும் ஒரு வளர்ச்சியை அவர்கள் முழுமையாக அடையவில்லை.


இப்படிப்பட்ட மிகப் பலவீனமான ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில்தான் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியில் மதத் தலைவர்களை முன்னிறுத்த வேண்டிய ஒரு காலச்சூழல் ஏற்பட்டதா?


பேரணியின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அதாவது பொத்துவிலில் தொடக்கி பொலிகண்டி வரை அரசியல்வாதிகள் பேரணியை ஹைஜாக் பண்ண முயன்றதாகக் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இதன் விளைவாகவே பேரணியை எங்கே முடிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இப்பிணக்கானது பேரணி திருகோணமலையை அடைந்தபோது பகிரங்கமாகவும் கூர்மையாகவும் வெளிப்பட்டது. திருகோணமலையில் மதத்தலைவர்களும் அரசியல் தலைவர்களும் முரண்பட்டுக் கொண்டார்கள். அரசியல் தலைவர்கள் பேரணியின் மீது செல்வாக்குச் செலுத்துவதை ஏற்பாட்டுக் குழு இயன்றளவுக்கு தவிர்க்க முயற்சித்தது. சமயத் தலைவர்களையே பேரணியில் முன்னுக்கு நிறுத்துவது என்று ஏற்பாட்டுக்குழு முடிவெடுத்தது. ஆனாலும் அதை முழுமையாக நடைமுறைபடுத்தும் சக்தி ஏற்பாட்டுகுழுவுக்கு இருக்கவில்லை. ஏனெனில்பேரணியின் தொடக்கத்தில் போலீஸ் தடைகளை உடைத்தமைக்கும் பேரணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றதிற்கும் அரசியல் கட்சிகளின்பங்களிப்பும் ஒரு காரணம்.


எதுவாயினும் எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் இது ஒரு நம்பிக்கையூட்டும் தொடக்கம். பொருத்தமான தருணம் பொருத்தமான அறவழி போராட்ட வழிமுறைகள் திறக்கப்பட்டால் தமிழ் மக்கள் போராடுவார்கள் என்ற செய்தியை பேரணி உணர்த்தியிருக்கிறது. சிவில்சமூகங்கள் தங்களைப் பொருத்தமான விதத்தில் ஒன்றிணைத்து எந்தவொரு வெளித் தரப்பினாலும் கையாளப்பட முடியாத சுயாதீனமான வளர்ச்சியை அடைவதன் மூலம் சிவில் சமூகங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான ஒரு பொருத்தமான சமநிலையைப் பேணலாம். ஈழத் தமிழர்கள் மிகச் சிறிய ஒரு மக்கள் கூட்டம். அரசியல்வாதிகளையும் புலம் பெயர்ந்த தமிழர்களையும் தமிழகத்தையும் நீக்கிவிட்டு சிவில் சமூகங்கள்தனியாகப் போராடமுடியாது. சிங்கள மக்கள் மத்தியிலும் நிலைமை அதுதான். 2015ல்ஆட்சி மாற்றத்தின் பொது சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஒன்றாகநின்றே ஆட்சியை மாற்றின. எனவே தொகுத்துக் கூறின் தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது ஒருதமிழ்த் தேசிய இயக்கந்தான்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More