உலகம் பிரதான செய்திகள்

றுவாண்டா இனப்படுகொலை :குற்றம் புரிந்தோர் தப்புவதற்கு பிரான்ஸ் உதவியமை அம்பலம்!

1994 இல் றுவாண்டாவில் நிகழ்ந்த துட்சி(tutsi) இனப் படுகொலைகளுக்குப் பொறுப்பான ஹுட்டு (hutu) ஆட்சியா ளர்கள் மீது நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என்று பிரான்ஸின் அன்றைய பிரான்ஷூவா மித்ரோன் அரசு அங்குள்ள தனது விசேட பிரதிநிதிக்கு ரகசியமாக உத்தரவிட்டது.

இதனை நிரூபிக்கின்ற பழைய ரகசிய தந்திப் பிரதி ஒன்று(telegram- confidential diplomacy) வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்ற தகவலை பிரான்ஸின் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

1994 இல் றுவாண்டா படுகொலைகள் நிகழ்ந்த கையோடு பிரான்ஸ் அங்கு மேற்கொண்ட மனிதாபிமானப் படை நடவடிக்கைக்குப் பெயர் “ஒப்பரேஷன் ட்றுக்கைய்ஸ்” (L’opération Turquoise).1994 ஜூனில் இனப்படுகொலைகள் நிறைவுற்ற சமயத்தில் பிரான்ஸ் அரசு அங்கு தனது படைகளை அனுப்பி வைத்தது.

ஸயர் நாட்டில் இருந்து சென்ற “ஒப்பரேஷன் ட்றுக்கைய்ஸ்” படைகள், இன அழிப்பில் இருந்து தப்பிப் பிழைத்து லட்சக்கணக்கில் அகதிகளாகி அந்தரித்த துட்சி இன மக்களைப் பாதுகாப் பதற்கான மனிதாபிமானப் பாதுகாப்பு வலயங்களை (Safe Humanitarian Zone) ஸயர் நாட்டின் எல்லையோரம் நிறுவின.

துட்சி இன மக்களைக் கொன்றொழித் துப் பெரும் இனப்படுகொலை புரிந்த ஹுட்டு அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாதுகாப்பு வலயங்களுக் குள் அவர்களுக்கும் தஞ்சம் அளித்து பின்னர் அவர்களில் பல முக்கிய சூத்திரதாரிகள் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்வதற்குப் பிரெஞ்சுப் படை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக சுமத்தப்பட்டுவருகின்றன.

அத்தகைய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான ரகசிய ராஜதந்திர ஆவணம் ஒன்றே தற்போது பழைய பெட்டகங்களில் இருந்து கிடைத்துள்ளது.பிரான்ஸின் விசேட தூதராக றுவாண்டாவில் தங்கியிருந்த ஒருவருக்கு பாரிஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆவணமே தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகவலை பிரான்ஸ் மீடியாபாட் (Médiapart) , ஏ.எவ்.பி ஆகிய செய்தி நிறுவனங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருக்கின்றன. ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் பல நாடுகளை- குறிப்பாக றுவாண்டாவை- தனது செல்வாக்கின் பிடியில் வைத்திருந்த காலப்பகுதிலேயே துட்சி இனப்படுகொலைகள் நடந்தேறின.

றுவாண்டா இனப்படுகொலை நிகழ்ந்த சமயம் பிரான்ஸில் பிரான்ஸுவா மித்ரோன்(François Mitterrand)பதவியில் இருந்தார். றுவாண்டாவின் அன்றைய ஹுட்டு இன அதிபர் ஜூவனல் ஹபரியமனா (Juvenal Habyarimana) அரசுடன் மிக நெருங்கிய உறவைப் பேணிவந்தவர் மித்ரோன்.1994 இல் சுமார் நூறு நாட்களில் எட்டு லட்சம் துட்சி இன மக்கள் மிலேச்சத் தனமாகப் படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலும் அதற்கு முன்னரும் பின்னரும் பிரான்ஸ் வகித்த பங்கு என்ன என்பது குறித்த பல ராஜீக இரகசியங்கள் கால் நூற்றாண்டுகள் கடந்த பிறகும் இன்னமும் உலகிற்குத் தெரியாமல் மூடி வைக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அதிபர் ஒருவர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அவர் உயிரிழந்து 25 ஆண்டுகள் கடக்கும் முன்னர் பகிரங்கப் படுத்துவதை பிரெஞ்சுச் சட்டங்கள் தடுக்கின்றன.இந்த நிலையில் அதிபர் பிரான்ஸுவா மித்ரோனின் றுவாண்டா தொடர்பான இரகசிய ஆவணங்களை (1991-1995 ) அணுகிப் பரிசீலிப்பதற்கு வரலாற்று ஆய்வாளர் ஒருவருக்கு நாட்டின் அதிஉயர் நிர்வாக மன்றம் (le Conseil d’État) அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.றுவாண்டாவில் பிரான்ஸின் தலையீடுகள் பற்றிய பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்ட ஆய்வாளர் François Graner என்பவருக்கே நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தது. மித்ரோனின் றுவாண்டா ஆவணங்க ளைப் பரிசீலிக்க அனுமதி கேட்டு அவர் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றங்களில் போராடி வந்தார்.அதன் பயனாகவே தற்போது இந்த ரகசிய ராஜதந்திர ஆவணம் அவரது கைக்குக் கிடைத்திருக்கிறது.

அண்மைக்கால வரலாற்றில் உலகம் வெட்கித் தலை குனிந்த மிக மோசமான இன அழிப்புகளில் ஒன்று றுவாண்டா படுகொலைகள்.றுவாண்டாவின் பூர்வீக குடிகளான துட்சி இனத்தவர் மீது ஹுட்டு இனத்தவர்கள் கத்திகள், வாள்கள் கொண்டு நடத்தி முடித்த மிக மிலேச்சத்தனமான படுகொலைகளில் மொத்தம் எட்டு லட்சம் துட்சிக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

ஈழத் தமிழர்களது முள்ளிவாய்க்கால் படுகொலைகள் போன்று இன்றைய உலக அரசியல் ஒழுங்கினாலும் அது சார்ந்த நிறுவனக் கட்டமைப்புகளாலும் தடுக்க முடியாமற்போன மாபெரும் மனிதப் பேரவலம் அது. #றுவாண்டா #இனப்படுகொலை #பிரான்ஸ் #tutsi #முள்ளிவாய்க்கால்

(படம் :றுவாண்டாவில் துட்சி இன அகதிகள். நன்றி :ஏஎப்பி.)

——————————————————————

குமாரதாஸன். பாரிஸ்.15-02-2021

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.