இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

தமிழிசையால் எழுவோம் இலங்கைத் தமிழ் பாவலரின் பாமலர்களால் தமிழிசை ஆரம்! பிறிசில்லா ஜோர்ஜ். ஹம்சத்வனி..

Pricilla George and Hamsasthwani 

மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை குறித்த விழிப்புணர்வையும் பன்மொழி அறிவையும் ஊக்குவிக்கும் நோக்குடன் 1999ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டு 2000ம் ஆண்டிலிருந்து மாசி மாதம் 21ம் திகதி அன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற உலக தாய்மொழி தினமானது இந்த வருடமும் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிகழ்வில் எமது தாய்மொழி தமிழைப் போற்றும் முகமாக ‘தமிழிசையால் எழுவோம்’ எனும் தொனிப்பொருளுக்கமைய எமது ஈழத்திருநாட்டில் தமிழுக்கும் இசைக்கும் தொண்டாற்றிய இயலிசைக் கலைஞர்களை நினைவுகூரும் நோக்குடன் எமது மதிப்பிற்குரியவர்களான விநாசித்தம்பி புலவர், சண்முக குமரேசன், வீரமணி ஜயர் ஆகிய இயலிசை வல்லுனர்களின் பாடல்களை இசைக்கின்ற சிறு முயற்சியில் நாமும் இணைந்து இவ் உலக தாய்மொழி தினத்தில் ஓர் அங்கமாகத் திகழ்வதில் பெருமகிழ்வு அடைகின்றோம். அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவர் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட விநாசித்தம்பி புலவர் திரு. த.கதிரவேலு, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஆகியோரின் மாணவராவார்.

இவர் இறையருளால் பல இறை இசைக் கீர்த்தனைகளையும் யாப்பு முறைப் பாடல்களையும் எழுதிய பெருவள்ளராவார். இவரது சாகித்தியங்களில் பெரும்பாலானவை சண்மத பக்தி கீர்த்தனைகளாகவும், விரத கீர்த்தனைகளாகவும் வெளிவந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

சமஸ்கிருத ஸ்லோகங்களான லலிதா சகஸ்ர நாமத்தை ஸ்ரீ லலிதம்பிகை பேராயிரம் என்றும் ஆதித்ய கிருதயத்தை ஸ்ரீ சூரிய கவசம் என்ற பெயரிலும் பாராயண தோத்திர திரட்டு வடிவில் படைத்துள்ளார். மேலும் பல தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவை தவிர பழந்தமிழ் இசை வடிவமான பிள்ளைத்தமிழ், திருப்பொன்னூசல், புலம்பல், திருவருட் கவிமாலை போன்ற பல படைப்புக்களை ஈழத்து ஆலய இறைசக்தி மீது பாடியுள்ளார். இவருடைய மொழி வாண்மையின் திறத்திற்கு அளவையூர் ஸ்ரீ நாக வரத நாராயணர் மீது இவர் வரைந்த தேர் விருத்தம் சான்றாகும்.

இவர் தனது கீர்த்தனைகளை ‘அருட்கவிக் களஞ்சியம்’ எனும் நூல் வடிவில் பல பதிப்புகளாகவும், பாகங்களாகவும் வெளியிட்டுள்ளார். இவர் ‘அருள்’ ‘திருவருள்’ எனும் முத்திரைகளை அமைத்துப் பாடியுள்ளார். இவருக்கிருந்த இறைபக்தி அனுபவங்களை தனது மொழி வாண்மையினூடு அழகிய தமிழிசைக் கீர்த்தனைகளாக வடிவமைத்து ஈழத்துத் தமிழிசை வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியுள்ளார்.

வீரமணி ஜயர் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கர்நாடக இயலிசையாளர்களான திரு. பாபநாசம் சிவன், திரு. எம். டி. ராமநாதன், பரதநாட்டிய வல்லுனரான திருமதி. ருக்மணி அருண்டேல் ஆகியோரது மாணவராவார். இசை, நடனம், நாடகம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்று மானிப்பாய் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் 33 வருடங்கள் விரிவுரையாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றி தனக்கென ஓர் மாணவப் பரம்பரையை உருவாக்கியவர்.

இவர் கீதம், கீர்த்தனை, பதம், பல்லவி, வெண்பா, போன்ற உருப்படிகளை இயற்றியுள்ளார். மேலும் இவரது படைப்பாக்கங்கள் தனிக்கீர்த்தனை வடிவங்களுடன் நின்றுவிடாமல் பல தொகுதிக் கீர்த்தனை வடிவங்களாகவும் வெளிவந்துள்ளன. அவற்றுள் சமகாலத்தில் நூல் வடிவில் காணப்படுகின்ற 72 மேளகர்த்தா கீர்த்தனைகள், 175 தாளக் கீர்த்தனைகள், சௌந்தர்ய லஹரி கீர்த்தனா சதகம் (100 பாடல்கள்), அந்தாதிக் கீர்த்தனா தசகங்கள் (2000 கீர்த்தனைகள்), கிறிஸ்தவக் கீர்த்தனைகள் (100 பாடல்கள்) போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவை தவிர எண்ணிலடங்கா ஈழத்து ஆலயங்களுக்கு திரு ஊஞ்சற் பாடல்கள், கொடிக் கீர்த்தனைகள், தேர் விருத்தம் என்பனவற்றையும் பாடியுள்ளார். இவற்றுள் பெருவாரியான படைப்புக்கள் இன்றளவும் இவரது கையெழுத்து பிரதியிலேயே காணப்படுகின்றது. இவற்றினூடாக இவரது மொழி, இசை ஆகியவற்றின் புலமையும் மணிப்பிரவாள சாகித்ய நடையின் சிறப்பும் எடுத்துக்காட்டப்படுகின்றது.

ஈழத்தில் பிரசித்திபெற்ற பல தலங்களின் மீது பாடல்களை இயற்றி ஈழத்துத் தமிழிசை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளார். இவரது சாகித்தியங்கள் அவர் வாழ்ந்த சமகாலத்திலேயே இந்திய இசைப் பாரம்பரியத்தின் ஆற்றுகையாளர்களிடம் பெருவரவேற்பு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்றளவும் இவரது பாடல்கள் இலங்கையில் மட்டுல்லாது உலகளாவிய ரீதியிலும் ஆற்றுகைப்படுத்தப்பட்டு வருகின்றது. இவர் தனது நடனப் புலமையின் முதிர்ச்சியாய் ரச வெளிப்பாட்டிற்கு உகந்த பாவம் ததும்பும் கீர்த்தனைகளையும், நாட்டிய நாடகங்களையும் படைத்துள்ளார். இவர் சாகித்ய சாகரம், கவிமாமணி, இயலிசை வாரிதி, மஹா வித்துவான் போன்ற விருதுகளையும், கௌரவ முதுதத்துவமாணி (எம்.பில்) பட்டத்தையும் பெற்றுள்ளார்.

சண்முக. குமரேசன் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிறுவயது முதல் தனக்கு இசையில் இருந்த ஆர்வத்தால் அதனையே தனது கற்கைநெறியாக மேற்கொண்டு தமது இசைக்கல்வியை திருச்சியில் பூர்த்தி செய்தார். பின்னர் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியராகச் சேவையாற்றியுள்ளார். முத்தமிழ் வாரிதி ந.வீரமணி ஜயரின் ஆலோசனையாலும், ஊக்கத்தினாலும் இவர் தனது கீர்த்தனைகளை எழுதி ‘இசைப்பாடல்கள்’ எனும் தலைப்பில் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார். இவர் ஈழத்திலுள்ள பல தலங்களின் மீது தனது பாடல்களை இயற்றியுள்ளார்.

மேலும் தமிழ்த்தாய், தேவாரம், திருவாசகம் முதலியவற்றைப் பற்றியும் கீர்த்தனைகள் அமைத்துள்ளார். இவரது கீர்த்தனைகள் யாவும் பொருட்சுவை, எதுகை நயம், பக்திரஸம் ததும்பியனவாகவும் சில கீர்த்தனைகள் அபூர்வ இராகங்களிலும் அமைந்துள்ளன. கல்லூரிப் பருவத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றி மெட்டமைத்து அரங்கேற்றியது முதல் இசைப்பாடல் இயற்றும் ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்தும் ஈழத்து இசை வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளார். உலக தாய்மொழி தினத்தில் ‘தமிழிசை ஆரம்’ இசைநிகழ்வு ஈழத்து தமிழிசைக்கு தொண்டாற்றிய எமது தாய்மொழியைச் சேர்ந்த இயலிசையாளர்கள் மூவரால் உருவாக்கப்பட்ட மொழிசார், மண்சார் இசைப்பாடல்களை நிகழ்கலை வடிவில் தருவதற்கு வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களாகிய நாம் எமது சிறுமுயற்சியால் உலக தாய் மொழி தினமான மாசி மாதம் இருபத்தோராம் திகதி மாலை ஆறு மணிக்கு இணையவழி ஆற்றுகையாக நிகழ்த்தவுள்ளோம்.

இதில் குரலிசைக் கலைஞராக ஹம்சத்வனி பிரசாந், பிடில் இசைக்கலைஞராக பிறிசில்லா ஜோர்ஜ், தண்ணுமை இசைக்கலைஞராக யுதிஸ்ரன் ஜெயராம் தொழில்நுட்ப உதவியாளர்களாக நிசாந்தன் மற்றும் வினோத் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

நன்றி ஆக்கம்: பிறிசில்லா ஜோர்ஜ். ஹம்சத்வனி..

ஜோர்ஜ், ஹம்சத்வனி பிரசாந் உலக தாய்மொழி தினத்தை இசைத்தமிழால் கொண்டாடும் எமது சிறு முயற்சிக்கு பெருந்தகையோரது ஆசியையும், ஆர்வலர்களின் பேராதரவையும் வேண்டி நிற்கின்றோம். எமது இசை ஆற்றுகையைக் காண கீழ்க்காணும்

Link I Click செய்யவும்.

https://youtube.com/channel/UCU19oiKHsZb-8Gg2B2cnJmg

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link