இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் காணாமல் போன உறவுகள் – தாயகத்தில் வலுப்பெறும் போராட்டம்

இலங்கை போர்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து, 11 வருடங்கள் கடந்துள்ள போதிலும், தமக்கான நீதியை கோரி இன்றும் தமிழர்கள் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச அளவில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் அமர்வுகள் தற்போது ஜெனீவாவில் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக கடும் தீர்மானங்கள் கொண்டு வர மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த சமயத்தில் இலங்கையின் வடக்குப் பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது நியாயத்திற்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டங்கள் நடைபெறும் களத்தை பிபிசி தமிழ் பார்வையிட்டது.

இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா நகர் மத்தியில் 1,467வது நாளாகவும் சூழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யுத்த காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக அதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை, மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, அவர்களின் உறவினர்கள், வவுனியாவில் போராட்டத்தை முன்னெடுப்பதாக தமிழர் தாயகம் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா, பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“ஆதாரம் காட்டியும் பலனில்லை”

இலங்கை போர்

தனது கோரிக்கைக்கான தீர்வு உள்நாட்டு அரசாங்கத்திடமிருந்து கிடைக்காது எனவும், சர்வதேச நாடுகளிடமிருந்தே தமக்கான நீதி கிடைக்கும் எனவும் காசிப்பிள்ளை ஜெயவனிதா குறிப்பிடுகிறார்.

தமக்கான நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை தாம் கைவிட போவதில்லை என்றும் அவர் கூறினார்.

தனது பிள்ளையை முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து, பிடித்துக்கொண்டு சென்றதாகவும், ஐந்து வருடங்களாகத் தேடியும் தனக்கு பிள்ளை கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட நிகழ்வொன்றில் தனது மகளை தான் கண்டதாகவும், ஆதாரத்தை காண்பித்து மகளை மீட்க முயற்சித்த போதிலும், அந்த முயற்சி இதுவரை வெற்றியளிக்கவில்லை எனவும் அவர் கூ.றினார்

தாம் போராட்டங்களை முன்னெடுத்து வருவதால், தன்னிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஜெயவனிதா தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் 280 பேர் ஆரம்பத்தில் கலந்து கொண்டனர். ஆனால், பல்வேறு அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகளால் தற்போது 64 பேர் மட்டுமே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்றுமொரு தாயான அரியரத்னம் அன்னலட்சுமி கண்ணீருடன் பிபிசி தமிழிடம் பேசினார்.

தனது மூத்த மகன் 1990ம் ஆண்டு ஒமந்தையில் வைத்து கடத்தப்பட்டதாகவும், தனது 2வது மகன் 2008ம் ஆண்டு வீரப்புரம் பகுதியில் கடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உறவுகளை பார்க்காக சோகத்தில் உயிர் விட்ட குடும்பங்கள்

இலங்கை போர்

மகனை தேடி தம்மால் நடத்தப்படும் போராட்டத்திற்கு உள்நாட்டு அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தீர்வை வழங்காது என கூறிய அவர், வெளிநாடுகளே தமக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தனது கணவன், தனது மகன்கள் காணாமல் போன சோகத்திலேயே உயிரை விட்டதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தனது மகனை தேடித் தருமாறு சுமார் 21 வருட போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களில் ஒருவரான தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி, பிப்ரவரி 22ஆம் தேதி காலமானார்.

வவுனியாவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் போராட்ட களத்தில் பேரின்பநாயகி என்பவர் ஆரம்பம் முதல் போராடி வருகிறார்.

தனது மகன் கிடைப்பார் என்ற எதிர்பார்ப்புடன் போராட்டத்தில் ஈடுபட்ட பேரின்பநாயகியின் ஆசை இறுதி நொடி வரை நிறைவேறவில்லை என்று அவர் வேதனை தெரிவித்தார்.

பேரின்பநாயகியின் மகனான தாமோதரம்பிள்ளை தர்மகுலநாதன், 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதி பாதுகாப்பு பிரிவினர் அழைத்து சென்ற நிலையில், அவர் காணாமல் போயிருந்ததாக அவரது சகோதரர்கள் தெரிவித்தனர்.

வவுனியா – கோழிக்கூட்டு முகாமில் இருந்த நிலையிலேயே தாமோதரம்பிள்ளை தர்மகுலநாதன், காணாமல் போயுள்ளார்.

அன்று முதல் பேரின்பநாயகி இந்த உலகை விட்டு விடை பெறும் தருணம் வரை, தனது மூத்த மகனை தேடி போராடி வந்து, தோல்வி அடைந்துள்ளார்.

இலங்கை போர்

பேரின்பநாயகியின் போராட்டம் மற்றும் தனது சகோதரன் தொடர்பில் பேரின்பநாயகியின் புதல்வர் கண்ணீருடன் பிபிசிக்கு பேசினார்.

தனது மகனை தேடி, உணவு உட்கொள்ளாது, போராட்டங்களில் ஈடுபட்டே தனது தாய் உயிரிழந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

பல தசாப்த போராட்டத்தில் தோல்வியடைந்த பேரின்பநாயகியின் இறுதிக் கிரியைகள் வவுனியா – மறவன்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இலங்கை போர்

அத்துடன், காணாமல் போனோரை கண்டறிவதற்காக வவுனியாவில் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 10 பெற்றோர்கள், எந்தவித தீர்வும் கிடைக்காத நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 7 தாய்மார்களும், 3 தந்தைமார்களும் அடங்குவதாக தமிழர் தாயகம் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா கூறினார்.

ஜெனீவா மனித உரிமை பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இந்த தாய்க்கு உள்நாட்டிலும் நீதி கிடைக்காது, சர்வதேசத்திலும் நீதி கிடைக்காது போயுள்ளதுடன், உயிரிழந்த பின்னராவது நீதி கிடைக்குமா என்பதே இந்த போராட்ட களத்திலுள்ள ஏனைய தாய்மாரின் கேள்வியாக இருக்கிறது.

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.