Home இலங்கை காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்!

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மார்களுக்கு CTID அச்சுறுத்தல்!

by admin

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக பல வருடங்களாக போராடி வரும் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்புகளை வழிநடத்தும் தாய்மார்களைத் தலைநகருக்கு அழைத்து துன்புறுத்துவதாக, இலங்கை பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து இயங்கும் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு, தங்களை காரணமின்றி கொழும்பிற்கு அழைப்பதாக, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிசெல் பச்லெட்டுக்கு எழுதிய கடிதத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

“அடிப்படை காரணமின்றி, கொழும்பில் இருந்து செயற்படும் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவால் நாங்கள் கொழும்புக்கு வரவழைக்கப்படுகிறோம்.”

இந்த விடயமானது, காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதற்கான போராட்டத்தை தடுப்பதோடு, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என சங்கத்தின் தலைவி யோகராஜா கனகரஞ்சனி மற்றும் சங்கத்தின் செயலாளர் லீலா தேவி ஆனந்தராஜா ஆகியோர் பெப்ரவரி 20ஆம் திகதி, சனிக்கிழமையன்று மிசெல் பச்லெட்டுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கில் இருந்து வந்த தகவல்களுக்கு அமைய, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இயக்கத்தின் தலைவர்களை பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவு வரவழைத்து அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்கின்றது.

வலிந்து காணாமல் போனவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கக் கோரிய கடிதத்தில், தாய்மார்கள் “எங்கள் உறவினர்களைக் கண்டுபிடிப்பதற்கான போராட்டம் இலங்கை அரசாங்கப் படைகளால் தேவையற்ற துன்புறுத்தலுக்கும் துன்பத்திற்கும் ஆளாகியுள்ளது” என வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக இராணுவமயமாக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய இலங்கையின் ஆட்சியில், சிவில் பதவிகள், இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரைக் கொண்டு நிரப்பப்படுவதாகவும், இந்த விடயமானது தமிழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதோடு ஜனநாயக விழுமியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“கொரோனா காரணமாக, அவர்கள் எங்களை ஒன்று சேரவிடாமல் தடுக்கிறார்கள். அந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், ஏனையவரிடமிருந்தும் தனிமைப்படுத்துவதாக அவர்கள் அச்சுறுத்துகின்றார்கள். தன்னிச்சையாக ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு தடையுத்தரவை பெற்றுக்கொள்கின்றார்கள். பங்கேற்பவர்களை நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கின்றார்கள்.”

சரத் வீரசேகரத்தைப் பாருங்கள்

முன்னாள் கடற்படை அதிகாரியும், தற்போதைய பொது பாதுகாப்பு அமைச்சருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, தமிழ் எதிர்ப்பு இனவெறி கருத்துக்களை வெகுஜன ஊடகங்கள் மூலம் வெளியிடுகின்ற அதேவேளை, ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடும் தமிழர்களுக்கு நேரடியாக அச்சுறுத்தல்களையும் விடுப்பதாக, சங்கத்தின் தலைவர் யோகராஜா கனகரஞ்சனி மற்றும் செயலாளர் லீலாதேவி ஆனந்தராஜா ஆகியோர், மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்தப் பின்னணியில், அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை பொலிஸார் மற்றும் பிற அரசாங்க ஆயுதப்படைகள் செயற்படும் விதம் குறித்து சர்வதேச சமூகம் கூர்ந்து கவனம் செலுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் வலிந்து காணாமல் போதல் இடம்பெறுவதாக, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைவதற்கு முன்னர் மாத்திரம், எமது மருமகன்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், கணவர்மார் மற்றும் மதகுருமார்கள் அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டவில்லை, யுத்தம் முடிவுக்கு வந்தபோதுகூட , வீதியில் நடந்து சென்றவர்கள், கடலிலும், வீட்டிலும் விசாரணைக்கு மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த உறவினர்களையும் நண்பர்களையும் கண்டுபிடிக்க நாங்கள் நான்கு தசாப்தங்களாக எல்லா இடங்களிலும் தேடி வருகிறோம். ”

வலிந்து காணாமல் போயுள்ள அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதற்கான சர்வதேச ரீதியில் நீதிக்கான போராட்டத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் குறித்த கடிதத்தில், 1,462 நாட்கள் போராட்டத்தின் போது தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல், 83 பெற்றோர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அல்லது எங்கள் சொந்த வாழ்க்கை முடியும் வரை இந்த போராட்டம் தொடரும்.”

காணாமல் போன தனது மகனைத் தேடி 21 வருடங்களாக போராடிய ஒரு தமிழ் தாய் பெப்ரவரி 22ஆம் திகதி திங்கட்கிழமை காலமானார்.

உயிரிழந்தவர் வவுனியாவின் மரவங்குளத்தில் வசிக்கும் தாமோதராம்பிள்ளை பேரின்பநாயகி (61) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் காணாமல் போயுள்ள தனது மகன் தர்மகுளநாதனை அவர் தேடி வருகிறார், சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக வவுனியாவில் நடந்த போராட்டங்களில் தாய் பேரின்பநாயகி பங்கேற்று வந்தார்.

காணாமல் போன தனது மகனை 12 ஆண்டுகளாக தேடிவந்த, முல்லைத்தீவில் வசித்த மற்றொரு தாயான கனகமணி சுந்தரலிங்கம் பெப்ரவரி 17 வியாழக்கிழமை உயிரிழந்தார்.

அந்த நேரத்தில் பெற்றோருடன் சேர்ந்து இராணுவத்தில் சரணடைந்த 29ற்கும் மேற்பட்ட பிள்ளைகள், கைக்குழந்தைகள் உள்ளிட்டவர்களின் தலைவிதியை இதுவரை அறியமுடியவில்லை என, சங்கத்தின் தலைவர் யோகராஜா கனகரஞ்சனி மற்றும் செயலாளர் லீலாதேவி ஆனந்தராஜா ஆகியோர் அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிள்ளைகள் எங்கே?

“இந்த பிள்ளைகள் என்ன குற்றம் செய்தார்கள்? இவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க எவரும் இல்லையா? என அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு மற்றும் நலனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ‘குழந்தைகளை காப்பாற்றுங்கள்’, ‘குழந்தைகள் நிதியம்’ மற்றும் ‘யுனிசெப்’ போன்ற அமைப்புகளுக்கு இது தெரியாதா?
இந்த பிள்ளைகள் மீது அக்கறை கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? உலகின் மனிதநேயம் இறந்துவிட்டதா? ” என கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

அரசாங்கம் பொய்யுரைக்கிறது

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்தவர்களை, யுத்தத்தின்போது உயிரிழந்துள்ளதாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும், சிங்கள அமைச்சரவை அமைச்சர்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள, யோகராஜா கனகரஞ்சனி மற்றும் லீலா தேவி ஆனந்தராஜா ஆகியோர், யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கப் படைகளிடம் சரணடைந்தவர்கள் போரில் எப்படி உயிரிழக்க முடியும் என கேள்வி எழுப்புகிறார்கள்.

“இவர்கள் இராணுவத்திடம் ஒப்படைத்ததற்கு நாங்கள் நேரில் கண்ட சாட்சிகளாக உயிருடன் இருக்கும்போது, இலங்கை அரசாங்கம் ஏன் இப்படி தொடர்ந்து பொய்யுரைக்கிறது? எங்களுடைய உறவினர்களையும் நண்பர்களையும் நிரந்தரமாகவே பிரிக்கவா? என அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க உறுதி செய்யுமாறு சங்கத்தின் தலைவர் யோகராஜா கனகரஞ்சனி மற்றும் செயலாளர் லீலாதேவி ஆனந்தராஜா ஆகியோர் தனது சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். .

“நீங்கள் தலையீடு செய்து அரச புலனாய்வாளர்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை நிறுத்தி எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.” என ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிசெல் பச்லெட்டிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ள தமது உறவுகளை கண்டறிய, காணாமல் போனோர் அலுவலகம், எவ்வித ஆகப்பூர்வமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என, காணாமல் போனோர் அலுவலகம் (OMP) குறித்து வடக்கில் உள்ள தாய்மார்கள் முன்னதாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More