இலங்கை பிரதான செய்திகள்

சீனா, இந்தியா, யப்பானுக்கு, கொழும்பு துறைமுகத்தை பங்கு பிரித்தது இலங்கை!

கிழக்கு முனைய விரிவாக்கத் திட்டத்தின் படம்
படக்குறிப்பு,கிழக்கு முனைய விரிவாக்கத் திட்டத்தின் படம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை, இந்தியாவின் அதானி நிறுவனம், ஜப்பான் முதலீட்டாளர், ஜோன் கீல்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியன இணைந்து முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தின் ஒரு பகுதி ஏற்கனவே சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இப்போது மேற்கு முனையம் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு வழங்கப்பட்டுள்ளது சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது.

இந்தியா மற்றும் ஜப்பான் இந்த முனையத்தை எவ்வாறு இணைந்து கட்டுப்படுத்தும் அல்லது பிரித்துக்கொள்ளும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களாக 35 ஆண்டு கால வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இன்று தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர் ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு தாம் ஜப்பான் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ள போதிலும், ஜப்பான் அரசாங்கம் இதுவரை முதலீட்டாளர் தொடர்பிலான அறிவிப்பை விடுக்கவில்லை என அவர் கூறுகின்றார்.

வெளிநாட்டு நிறுவனமாக இந்தியாவின் அதானி நிறுவனம் விளங்குவதுடன், ஜப்பான் முதலீட்டாளர் வரும் பட்சத்தில் அதுவும் வெளிநாட்டு முதலீடாகவே காணப்படும். மேலும், ஜோன் கீல்ஸ் நிறுவனம் உள்நாட்டு நிறுவனமாக காணப்படுகின்றது.

இந்த மூன்று முதலீட்டாளர்களும் இணைந்து, இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான துறைமுக அதிகார சபையுடன் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை செயற்படுத்தவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.

35 ஆண்டுகளுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தியபின், மீளக்கையளித்தல் அடிப்படையில் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

‘சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா விரும்பாது’

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியாவிற்கு கிடைத்தமையானது, இந்தியாவிற்கு அது மிக பெறுமதியானது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் மூத்த பேராசிரியர் கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்த இலங்கை - சீன ஆதிக்கத்தை குறைக்கவா?

கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தரும் கப்பல்களின் ஊடாக கொண்டு வரப்படும் சரக்குகளில் பெருமளவானவை, இந்தியாவிற்கே மீண்டும் கொண்டு செல்லப்படுவதாக அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையமானது, மிக பெரிய பரப்பளவை கொண்டுள்ளமையினால், இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தின் ஒரு பகுதி ஏற்கனவே சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியை சீனா மிக சிறந்த முறையில் செயற்படுத்தி வருவதாக பேராசிரியர் கூறுகின்றார்.

இந்தநிலையில், சீனாவை விடவும், சிறந்த முறையில் துறைமுகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின், சீனாவின் போட்டி நாடுகளான இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இதனை செயற்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து பெருமளவிலான பொருட்கள் இந்திய துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்படும் நிலையில், அந்த இடத்தில் சீனாவின் ஆதிக்கம் இருப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என அவர் தெரிவிக்கின்றார்.

இந்தியாவிற்கு கொழும்பு துறைமுகம் தொடர்பில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு கரிசனை காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்தியாவிற்கு ஏற்கனவே கிழக்கு முனையத்தை வழங்க உத்தேசித்திருந்த போதிலும், உள்நாட்டில் எழுந்த எதிர்ப்புகளினால் அந்த திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், இதுவரை அபிவிருத்தி செய்யப்படாத மேற்கு முனையத்தையே இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

மேற்கு முனையம் கொழும்பு துறைமுகத்திலேயே மிக பெரிய நிலப்பரப்பை கொண்ட ஓர் இடம் எனவும், அங்கு இதுவரை எந்தவொரு வளர்ச்சி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விடவும், மேற்கு முனையமானது, இந்தியாவிற்கு மிகவும் நன்மை தரக்கூடியது என அவர் தெரிவிக்கின்றார்.

Sri lanka ports authority

அதேபோன்று, இந்தியாவுடன் ஜப்பான் இணைந்து, மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்து தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, தெற்கு முனையத்தை செயற்படுத்தும் சீனாவிற்கு அது சவாலாக அமையும் என பேராசிரியர் கூறுகின்றார்.

இதேவேளை, துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி பணிகளுக்கான முதலீடுகளை இலங்கை அரசாங்கத்திற்கு மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாமை காரணமாகவே, இலங்கையிலுள்ள தனியார் நிறுவனமொன்றையும் இந்த திட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

இந்த திட்டத்தின் ஊடாக இலங்கை வலயத்திலேயே மிகவும் பாதுகாப்பான நாடாகவும் விளங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.

பொருளாதார ரீதியில் 35 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு சொந்தமான சொத்தொன்று காணப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

ஆசிய வலயத்தில் யுத்தம் ஒன்று ஏற்படும் பட்சத்தில், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்நாட்டில் முதலீடு செய்துள்ளமையினால், நாட்டின் துறைமுகங்கள் மிகவும் பாதுகாப்பாக காணப்படும் என அவர் தெரிவிக்கின்றார்.

இலங்கைக்கு இதுவொரு பாதுகாப்பாக காணப்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட சிரேஷ்ட பேராசிரியர் கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

BBC

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.