இலங்கை பிரதான செய்திகள்

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இரண்டு வாரங்களில் சுகாதார சேவை போராட்டம்

தமது கோரிக்கைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக சுகாதார தொழிற்சங்கம் ஒன்று இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

ஆறு மாதங்களுக்கு மேலாக, தாம் விடுக்குக் கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சு எவ்வித பதிலையும் வழங்கவில்லை என ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு கடந்த முதலாம் திகதி அனுப்பி வைத்த   கடிதத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஊழியர்களின் பதினொரு கோரிக்கைகள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில், பல்வேறு வழிகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், அவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்ற சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை என, சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிடியே சுகதானந்தா தேரர்  மற்றும் தலைவர் சமிந்த நிலந்த ஆகியோர் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“பல கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நீடிக்கின்றன. சில கோரிக்கைகள் தற்போதைய தொற்றுநோயால் ஏற்பட்டவை. சில தற்போதைய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள்.”

2020 செப்டம்பர் முதல் 2021 பெப்ரவரி வரை, சுமார் 15 தடவைகளுக்கு மேல் கடிதம் மூலம் தமது பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  மேலும் 2020 டிசம்பர் 09ஆம் திகதி சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் எட்டு சந்தர்ப்பங்களில் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், ஒன்றிணைந்த சுகாதாரத் ஊழியர் சங்கம் தனது கடிதத்தில்  தெரிவித்துள்ளது.

எனினும், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு சுகாதார அமைச்சு எவ்வித சாதகமான பதிலையும் அளிக்கவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என சுட்டிக்காட்டியுள்ள ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம், ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக, சுகாதார ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் விடுவது நியாயமற்ற செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கோரிக்கைகள் இதோ

14 நாட்களுக்குள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால்  தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

01. வாரத்தின் மேலதிகமாக பணியாற்றும் 08 மணித்தியாலங்களுக்கு சம்பளத்தில் 01/30 பகுதியை பெறுதல்,
02. 180 நாட்கள் பணியை பூர்த்தி செய்த அனைத்து சுகாதார மாற்றுத் தொழிலாளர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்களை நிரந்தரமாக்குதல்.
03.அரசாங்க இராணுவமயமாக்கல் நோக்கத்திற்காக முறைசாரா ஆட்சேர்ப்பை உடனடியாக நிறுத்துதல்.
04. சீருடை கொடுப்பனவு 15000 ரூபாயாக மாற்றுதல்.
05. அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட இடர் கொடுப்பனவை வழங்குதல்
06. தாமதமான பராமரிப்பாளர் நியமனத்தை வழங்குதல்
07. வட்டி இல்லாமல் பண்டிகை முற்பணத்தை மீளப் பெறுதல்
08. கூடுதல் நேர விகித முறையைப் பின்பற்றுதல்
09. முறையான ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் முறையான கடமைப் பட்டியலைப் பெற்றுக்கொள்ளல்
10. வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல்.
11. முகாமைத்துவ சேவைகள் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நியமனங்களை வழங்குதல் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியத்தை இழந்தவர்களுக்கு ஓய்வூதிய உரிமையைப் பெற்றுக்கொடுத்தல்

ஒன்றிணைந்த சுகாதாரத் ஊழியர் சங்கம், சுகாதார அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரதியை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கும் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. #கோரிக்கைகள் #சுகாதாரசேவை #போராட்டம் #ஒன்றிணைந்தசுகாதாரஊழியர்சங்கம் #பவித்ரா_வன்னியாராச்சி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.