Home இலங்கை வவுனியாவின் வளம் குளங்களே! – ஓர் வரலாற்றுப் பார்வை! சுரேஸ்குமார் சஞ்சுதா.

வவுனியாவின் வளம் குளங்களே! – ஓர் வரலாற்றுப் பார்வை! சுரேஸ்குமார் சஞ்சுதா.

by admin

அண்மையில் நான் தமிழ்நிதி அருணா செல்லத்துரை அவர்களின் நூல் அறிமுகவிழாவிற்கு சென்றிருந்த வேளை, வவுனியாவின் வளம் குளம் பற்றி மேடையில் பேசினார். அவர் அப்பேச்சை எடுத்ததற்கு காரணம் ஒரு சில சஞ்சிகைகள் மற்றும் நூல்;களில் வவுனியாவின் வளம் காடு என குறிப்பிடப்பட்டிருந்தமையாலாகும்;. ஆம் உண்மையில் வவுனியாவின் வளம் காடல்ல. வவுனியாவைச் சுற்றியுள்ள குளங்களே. இங்குள்ள குள வளமானது வரலாற்று ரீதியாக மிகமுக்கியத்துவமானது.


இன்றும் கூட வவுனியா குளங்களை நம்பியே பல குடும்பங்களின் வாழ்வாதாரம் காணப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது. வவுனியாவில் குளங்கள் இல்லாத கிராமங்களே இல்லை எனலாம். அந்தவகையில் வவுனியா நகரைச் சுற்றியும் ஒவ்வொரு கிராமங்களிலும் குளங்கள் காணப்படுகின்றது. அந்தவகையில் வவுனியாவின் குளங்களைப் பற்றி ஓர் வரலாற்றுப் பார்வையில் இக்கட்டுரை அமைகின்றது. அத்துடன் வவுனியா பரந்துபட்ட பிரதேசமாக இருப்பதால் வவுனியாவின் தொன்மையை வெளிப்படுத்தும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க குளங்களையே இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.


பொதுவாக அடங்காப்பற்றின் வரலாறு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆரம்பிக்கப்படுகின்றது. இதனை கிறிஸ்துவுக்கு முந்திய காலத்தில் கட்டப்பட்ட குளங்களின் வரலாறுகள் தெரிவிக்கின்றன.


வன்னியில் குறிப்பாக வவுனியா வட்டாரத்தின் பாரம்பரிய மரபுரிமை சின்னங்களுள் புராதன குளங்கள் முக்கிய இடம்பெறுகின்றன. வன்னி பிரதேச மக்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்தவை இவ்நீர்ப்பாசன குளங்கள். குளங்களை மையப்படுத்திய நீர்ப்பாசன விவசாய உற்பத்தி முறை இலங்கைக்கு அறிமுகமாகியதைத் தொடர்ந்தே இலங்கையின் நாகரிக வரலாறு தோற்றம் பெறுகிறது. இது பெருங்கற்கால பண்பாட்டுடன் தோன்றியதை தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் உறுதி செய்கின்றன.


அந்தவகையில் நீர்வள நாகரிகமொன்றின் தோற்றத்திற்கு அடிப்படையை இட்டுக் கொண்டிருந்த பெருங்கற்கால பெருமக்கள் சமூகத்திலிருந்து ஓர் ஓழுங்குப்படுத்தப்பட்ட குழுமமாக மாறியிருந்த ஒரு பிரிவினர் நாகர். அந்தவகையில் இப்பண்பாட்டுப் பின்னணியில் உருவான நாகர் வம்ச குல முறையினரே நீர்ப்பாசனக் குளங்களை உருவாக்கி, நீர்வள நாகரிகமொன்றின் தோற்றம் அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்கள். இந்நீர்ப்பாசன விவசாயமே கி.பி 13ஆம் நூற்றாண்டு வரை இலங்கையின் அரச பொருளாதாரமாகக் காணப்பட்டது.


வவுனியாவில் இன்று பெரும்பாலான கிராமங்களின் பெயர்கள் குளங்களோடு இணைந்ததாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் இங்கு பெரிதும் குளக்குடியிருப்புக்களே பரந்துள்ளன. புளியங்குளம்,ஈரற்பெரியகுளம், பாவற்குளம், உளுக்குளம் என்ற பெயர்கள் குளங்களைக் குறிப்பதோடு இவ்விடத்துக் கிராமத்தையும் குறிப்பனவாயுள்ளன. இவ்வாறு பெயரிடும் முறை கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்னரே தோன்றியதென்பதை வவுனியா மாவட்டத்தில் காணப்படும் கல்வெட்டுகள் உறுதிசெய்கின்றன.
இதற்கு மக்கள் தமது நிரந்தர குடியிருப்புக்களை குளங்களுக்கு அண்மையில் அமைத்துக் கொண்டமை அல்லது குளங்களைக் கட்டியதன் பின்னர் அங்கு தமது நிரந்தர குடியிருப்புக்களைக் ஏற்படுத்தியமை முக்கிய காரணம் எனலாம். ஆரம்பகால இலங்கையில் நிலம், குளம், கால்வாய் என்பன மக்கள் சொத்தாக இருந்துள்ளது. பின்னர் இவை மன்னன் சொத்தாக மாறி அரசுக்கு வருவாய் கொடுத்த போது ஆட்சிக்கு வரும் மன்னர்கள் புதிய குளங்களைக் அமைப்பதும் பழையவற்றை பாதுகாப்பதும் அவர்களின் முக்கிய பணிகளில் ஒன்றாக அமைந்தது. இலங்கை வரலாற்றில் வசபன், மகாசேனன், தாதுசேனன், 2ஆம் மொக்கல்லான, 1ஆம், 2ஆம் அக்கபோதி, 1ஆம் பராக்கிரமபாகு முதலான மன்னர்கள் போற்றப்படுவதற்கு அவர்கள் நீர்ப்பாசனத்துறைக்கு ஆற்றிய பணிகளே முக்கிய காரணமாகும். இவர்களின் ஆட்சியில் வன்னியில் சில குளங்கள் புதிதாகக் அமைக்கப்பட்டதற்கும் பழைய குளங்கள் மீள் உருவாக்கம் செய்யப்பட்டதற்கும் ஆதாரங்கள் காணப்படுகின்றது.


இப்பிரதேசத்தில் நீர் நிறையும் பள்ளங்கள், மடுக்கள், மோட்டைகள் என அழைக்கப்பட்ட அனைத்தும் குளங்களாக மாற்றப்பட்டன. வன்னி பிரதேசத்தில் பெரிய குளங்கள் உட்பட சுமார் 1000 குளங்கள் இருக்கின்றன.


இவற்றில் பெருமளவில் பெரிய குளங்கள் ஆறுகளை மறித்துக் கட்டப்பட்டுள்ளன. அந்தக் குளங்களில் இருந்து வடிந்து பாயும் நீரை மற்றுமொரு இடத்திலே தடுத்து சிறிய குளங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த நீர்ப்பாசன முறையை வெளிநாட்டு ஆய்வாளர்கள் பாராட்டியுள்ளனர். கிறிஸ்துவிற்குப் பிற்பட்ட காலத்தில் பலமுறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக இந்தக் குளங்களின் அநேகமானவை முறிப்பெடுத்துள்ளன.


1807ஆம் ஆண்டு திரு.ரோணரின் அறிக்கையின்படி வவுனியா மாவட்டத்தில் இருந்த குளங்கள் 547 ஆகும். 1890 ஆம் ஆண்டில் வவுனியா மாவட்டத்தில் எல்லா பருமங்களிலுமான 533 குளங்கள் இருந்தன. இவற்றுள் 390 குளங்கள் பெரிய அளவிலோ சிறிய அளவிலோ ஏதோ ஒரு வகையில் திருத்தப்பட வேண்டியிருந்தன. இன்றைய நிலையில் வவுனியா மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் 18 பாரிய நீர்ப்பாசன குளங்களும் 606 சிறிய குளங்களும் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர பாழடைந்த நிலையில் பல குளங்கள் காணப்படுகின்றன.


அந்தவகையில் வவுனியாவில் கிட்டத்தட்ட ஈரற்பெரிய குளம், மாமடு, எறுப்பொத்தான, மகாகச்சகொடிய, பாவற்குளம், நவகம, மடுகந்த, அலஹல்ல, வவுனிக்குளம், கோகம்பஸ்வௌ, பூமடு முதலிய குளங்கள் காணப்படுகின்றது. இக்குளங்கள் வரலாற்று பெறுமதி வாய்ந்த குளங்களாக காணப்படுவதோடு புராதன கலிங்குகளை உடைய சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சில குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குளத்தின் நீரலைகள் குளக்கட்டை பாதிக்காமல் இருக்க புராதன காலத்தில் கருங்கற்களை அடுக்கியிருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்ட ஆங்கில ஆய்வாளர்கள், புராதன காலத்தில் இதுபோன்ற குளங்களை கட்டி நீர்ப்பாசனம் செய்தவர்களின் திறமை பாராட்டத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் குளங்கள் ஆதிகாலம் முதலாக வாழ்வாதாரங்களாகும். முன்னே கவனித்தவாறு இடப்பெயர்களும் குளம் என்ற விகுதி பெற்றுள்ளன. ஆயினும் அவற்றைப் பற்றி முதன் முதலாக கள ஆய்வுகளை மேற்கொண்ட ஹியூ நெவிலும் பார்க்கரும் சில தவறான குறிப்புக்களை விட்டுச் சென்றுள்ளனர். அதனால் இன்றுவரை வவுனியாவின் ஆதிவரலாறு பற்றிய குழப்பமான கருத்துக்கள் நிலவுகின்றன. இவர்களில் முதலாமவர் ஆய்வாளர் அல்லர். அவர் விபரத்தொகுப்பாளர். இரண்டாமவர் வரலாற்றரிஞரும் அல்லர். தொல்லியலாளரும் அல்லர். அவர் நீரியல் துறை பற்றிய நிபுணர். ஆகவே வரலாறு பற்றிய அவர்களின் குறிப்புக்கள் மீள்பரிசீலனைக்குரியவை.


குளங்களின் கட்டுக்களும் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளன. குளங்கள் மற்றும் துருசுகள் கட்டப்பட்டுள்ள விதமும், அங்கிருக்கும் கருங்கற்களில் உள்ள தேய்மானத்தையும் வைத்தே ஆய்வு செய்து குளங்கள் கட்டப்பட்டுள்ள கால வரையறையை குறித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பாவற்குளம், மாமடு, ஈரற்பெரியகுளம் என்பன எனது வவுனியா பிரதேச தொன்மைக்கு அடையாளங்களாக உள்ளன.


முக்கியமான தொல்பொருள் எச்சங்களைக் பண்டைய குளங்களில் காணமுடிகின்றது. இது பற்றி திரு. எச். பாக்கரின் அறிக்கைகளில் ஆழமாக விபரிக்கப்பட்டுள்ளது. இங்கு பாவற்குளம், மாமடு, ஈரற்பெரிய குளம் போன்ற பிரமாண்டமான அணைக்கட்டுக்களும் இவ்வாறான எச்சங்களில் அடங்குகின்றன.


இன்று பாழடைந்து கிடக்கும் குளங்களும், கட்டிட அழிபாடுகள், முறிப்பு அணைகளும், கல் கலிங்குகளும், மடைகளும், சிசிலமடைந்த கோயில்களும், புராதன பாலங்களும் இப்பிரதேசத்தின் வரலாற்றுச் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றன.
அணைகளில் புராதன கலிங்குக் கற்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. கலிங்குகள் பொதுவாக வாயில் கொட்டுடன் கூடியவையாக இருக்கின்றன. அதாவது கணிசமானளவு அகலமும் சிறிய தடிப்பமுடைய நீண்ட கல்துண்டங்கள் கலிங்கின் ஓரங்களில் போடப்பட்டு மிகவும் கவனமாகப் பொருத்தப்பட்டுள்ளன.
இன்று பல குளக்கட்டுக்கள் வாகனங்கள் செல்லும் பாதையாகவும் குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறி வருகின்றன. குளங்கள் அசுத்தப்படுத்துவதால் குளத்துடனான பூர்வீக மக்களின் தொடர்பும் குறைந்து போய்விட்டது. தொடர் குளங்கள் வரிசையிலே இடைக்குளங்கள் அழிக்கப்பட்டு குடியிருப்புக்களும் நகரங்களும் அமைக்கப்படுவதால் அடுத்து வரும் கீழ்க்குளங்களில் அசுத்தங்கள் மிகுதியாக சேர்கின்றன.


அடுத்ததாக வவுனியாவில் உள்ள வரலாற்றுப் பெறுமதி வாய்ந்த குளங்களை நோக்குவது அவசியமாகின்றது.

  1. பாவற்குளம் (பாவற்காய்க்குளம், வைகை கட்டின உளுக்குளம்)
    வவுனியாவில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றான பாவற்குளம் கிறிஸ்து சகாப்தத்திற்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தது. கி.மு 3ஆம் நூற்றாண்டில் நாக மன்னர்களால் கட்டப்பட்டது
    குளத்தை அண்டிய பகுதிகளில் குருவித்தலைப் பாவற்கொடிகள் அதிகமாகக் காணப்பட்டபடியால் இந்தக்குளத்தைப் பாவற்காய்க்குளம் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் பாவற்காய்க்குளம் என்பது பாவற்குளம் எனச் சுருங்கி விட்டது.
    வன்னி பிரதேசத்தின் தென்பகுதி நதியான அருவியாற்றின் பிரதான கிளையாகிய கல்லாற்றை மலைப்பாங்கான இடத்தில் மறித்து கட்டி இரண்டு குளங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது இவற்றில் ஒன்று பாவற்குளம் என அழைக்கப்படுகின்றது. இதனோடு ஒட்டியுள்ள மற்றைய குளம் உளுக்குளம் என பெயரிடப்பட்டுள்ளது. பாவற்குளத்துடன் தொடுக்கப்பட்டிருக்கும் உளுக்குளத்திற்கும் பாவற்குளத்து நீர் பாய்கின்றது. மிகப் பெரிய நீர்ப்பாசன திட்டமான பாவற்குளத்தில் அணைகளில் புராதன கலிங்குக் கற்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. கலிங்குகள் பொதுவாக வாயில் கொட்டுடன் கூடியவையாக இருக்கின்றன. அதாவது கணிசமானளவு அகலமும் சிறிய தடிப்பமுடைய நீண்ட கல்துண்டங்கள் கலிங்கின் ஓரங்களில் போடப்பட்டு மிகவும் கவனமாகப் பொருத்தப்பட்டுள்ளன.
    கல்வேலைப்பாட்டுக்கு பின்னால் செங்கல் வேலை செய்யப்பட்டு ஆதாரம் அளிக்கப்படுகின்றது. வாயில் கொட்டுடன் கூடிய கலிங்குகள் ஐந்தை தற்போதும் காணக்கூடியதாகவுள்ளது. மேலும் இதுவரை தனக்கு தெரிந்த மட்டில் இலங்கைத்தீவிலுள்ள நான்குக்கும் மேற்பட்ட கலிங்குகளுடன் கூடிய ஒரேயொரு குளம் இது என திரு.பாக்கர் கூறுகிறார். கலிங்குகளில் புறநடையாக ஒன்று தவிர ஏனையவை நன்னிலையில் உள்ளன. இலங்கையில் உள்ள குளங்களுள் பாவற்குளமே 4 கலிங்குகளைக் கொண்டிருப்பதாகக் ஜே.பி .லூயிஸ் குறிப்பிடுகின்றார்.
    புராதன நீர்ப்பாசனக் கால்வாய் எச்சங்கள் 2 பாவற்குளத்தில் உள்ளது. அவை முறையே 3, 2 ¼ மைல் நீளத்துக்கு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 2 மைல் நீளமான அணைகளை உடையவை. அணைகளின் உட்பக்கம் அலைகல்;லை பொதுவாக காணப்படுகிறது.
    இக்குளத்தின் கலிங்குகள் இரண்டில் பயன்படுத்தப்பட்டிருந்த கட்டடக்கற் துண்டங்கள் (துருசுகற்கள்) பதவியாக் கலிங்கில் பயன்படுத்தப்பட்டிருந்தவற்றை விட மிகப் பழமையானவை. பதவியாக் கலிங்கு கி.பி 3ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. பாவற்குளத்தின் கலிங்குகளை அமைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் செங்கற்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தவை என பாக்கர் குறிப்பிட்டுள்ளார்.
    இக்குளம் பற்றி ஜே.பி லூயிஸ் MANNUAL OF VANNI DISTRICT என்றதனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
    பாவற்குளத்தில் உள்ள வான் 125 அடி நீளமும் , 60 அடி அகலமும் உடையது. வான்கள் வழமையில் கலிங்குகளாக கட்டப்பட்டன. அதாவது தூண்கள் தொடராக அமைக்கப்பட்டதன் மூலம் சட்டக அமைப்பின் மீது அணை ஏற்படுத்தி நிர்மாணிக்கப்பட்டது. இதன் மூலம் ஏறத்தாழ 2 அடி ஆழத்துக்கு மேலதிக நீரைப் பிடித்து வைத்துக் கொள்ள முடிந்தது. பாவற்குளத்தில் இத்தகைய கலிங்கு ஒன்றைக் காணமுடியும்.
    இத்தூண்கள் பருமனிலும் வடிவத்திலும் மிகவும் ஒழுங்கற்றவை. பெரிய தூணுக்கு முற்பக்கமாகச் சில அங்குலங்கள் விலகி 5 அல்லது 6 அடி உயரமுள்ள குறுகிய தூண் உள்ளது. இச்சிறிய தூண்களின் நிரை, வான் பாயும் நீருக்குச் சற்று முன்பக்கமாக குளக்கட்டின் மத்திய கோட்டின் வழியே குளப்பக்கமாக அமைந்துள்ளது.
    இச்சிறு தூண்களிடையே தடிகளும் மண்ணும் கொண்டு தற்காலிக அணை ஒன்று எழுப்பப்பட்டிருக்கும். வடகீழ்ப்பருவப்பெயர்ச்சி மழை நிற்கும்போது மேலதிக நீரைப் பிடித்து வைத்திருக்க வேண்டும் என விருப்பப்பட்ட நேரங்களில் உயர்ந்த தூண்கள் இவ்வாறு அணை எழுப்பி நீரைத்தேக்கி வைக்கும். அதி உயரமான தூண்கள் எவ்வித பயன்பாடும் அற்றனவாக உள்ளன. சிலவேளை கலிங்கை மூடி வெள்ளம் பாயும்போது பாதசாரிகளால் இது தற்காலிக அடிப்பாலத்தின் இறங்கு துறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனலாம். இதன் மூலம் பயணிகள் எப்போதாவது வான் நீருக்கு மேலாக பாயும் வெள்ளத்தைக் கடந்து செல்லக்கூடியதாயுள்ளது.
    அணைக்கட்டில் உள்ளடக்கப்பட்டதும் முன்பு உயர்ந்த பாறையொன்றில் இருந்ததுமான சிறிய தாதுகோபத்தினது சிதைவுகள், மலர் தூவி வணங்குவதற்கான பெரிய பீடம் ஒன்று காணப்பட்டது. இப்பீடம் இப்போது ‘அரச ஆசனம்’ எனப்படுகிறது. இப்பீடம் பற்றித் திரு. பாக்கர் கூறுவதாவது ‘இப்பீடத்திலிருந்து குளத்தினதும், அதன் தளத்தினதும் ஒரு பகுதியையும் மிக நன்கு தரிசிக்க முடியும். இவ்வாறே எதிர்த்திசையிலிருந்தும் தரிசிக்கலாம். தமிழ் ஆட்சியாளர் ஒருவரின் ஆணைக்கமைய தற்போதைய இடத்தில் இப்பீடம் வைக்கப்பட்டிருக்கலாம்.
    ஐந்துதலை நாகபாம்பை வழிபட்ட நாகர்களின் கற்பனை திறனில் உருவாகிய பல சிற்ப வடிவங்கள் இருக்கின்றன. ஐந்துதலை நாகம் என்பது கற்பனை வடிவமா? என்பது ஆய்வுக்குரிய விடயமாகும். அந்தவகையில் நீர்ப்பாசனத்திற்கு பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்து குளங்களைக் கட்டுவதில் தலைசிறந்தவர்களான நாகர்கள், தங்களது காவல் தெய்வமான ஐந்து தலை நாக உருவங்களை கருங்கற்களில் பொளித்து குளக்கட்டுக்களில் வைத்து வழிபட்டுள்ளமைக்கு ஆதாரமாக பல இடங்களில் ஐந்துதலை நாகசிலைகள் உள்ளன. அந்தவகையில் பாவற்குளத்திலும் உண்டு.
    இக்குளத்தின் அணைக்கட்டில் காணப்படும் பெரிய கருங்கல்லில் ஐந்து தலை நாக பாம்பின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. குளக்கட்டில் தனிக்கல்லில் பொளியப்பட்ட நாகசிலை தற்போது குளக்கட்டின் துருசு மேல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது.
    இதை போன்ற சிற்பத்துடன் கூடிய கல் ஒன்று செட்டிக்குளம் பிரதேசத்தில் உள்ள மதவுவைத்தகுளம் அணைக்கட்டில் இருக்கிறது. இக்குளங்கள் நாகமன்னர்களால் ஒரே காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம்.
    இந்த நீர்த்தேக்கம் யாரால் எக்காலத்தில் கட்டப்பட்டது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் நிச்சயமாக இக்குளம் பற்றி பழைய வரலாற்றுக் குறிப்புக்களில் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்பழைய பெயரை அறிந்தால் மட்டுமே இக்குளம் பற்றி மேலும் பல சுவாரசியமான தகவல்களைப் பெற முடியும்.
  2. இரட்டை பெரியகுளம் ஃஈரற்பெரியகுளம் (அலவிச்சைக்குளம்)
    இரண்டு குளங்களை இணைத்து கட்டப்பட்ட பெரிய குளத்தை இரட்டைபெரியகுளம் என அழைத்தனர்.தற்போது இக்குளம் ‘ஈறட்ட’ என அழைக்கப்படுகின்றது. வவுனியாவில் உள்ள இரண்டாவது பெரிய குளமாகும். இக்குளம் வவுனியாவில் இருந்து 6 ½ கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. பாக்கரின் அறிக்கையின் படி இக்குளம் கி.பி 113ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டது. ஆகவே இக்குளம் கி.பி 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வன்னி பிரதேசத்தின் தென்பகுதி நதியான அருவியாற்றின் பிரதான கிளையாகிய கல்லாற்றில் இப்புராதன குளம் காணப்படுகின்றது. அருவி ஆற்றில் கலக்கும் கிளை ஆறான கல்லாற்றை மறித்துக்கட்டப்பட்ட குளமான அலவிச்சைக்குளம் (ஈரற்பெரியகுளம்) பாவற்குளத்திற்கு மேற்குளமாக கட்டப்பட்டிருக்கிறது. இது மேற்குளமாக இருப்பதால் பாவற்குளம் கட்டப்படுவதற்கு முன்பே இக்குளம் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
    குறித்த ஒரு குளத்துக்கும் கிராமத்துக்கும் மேலாக எழுந்து நிற்கும் பெரும் பாறையொன்றின் அடியில் பொறிக்கப்பட்டதற்கமைய ‘அலவிச்சை ஏரி’ எனும் பெயர் கொண்ட நீர்நிலையே ஈரற்பெரிய குளம் என திரு. பாக்கர் கருதுகின்றார். இது அவ்வாறு இருப்பின் இந்த ஏரி கி.பி 113 இற்கு முன் நிர்மாணிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
    நீர்த்தேக்கத்தின் கரையில் ஓர் கல்வெட்டை கண்டுபிடித்ததாக பாக்கர் குறிப்பிடுகின்றார். அலவிச்சை ஏரியின் கரையில் குளக்கட்டின் மீது திஹடயா விகாரையில் குருமாருக்கான உணவுக்கொடை பற்றிய பதிவுகள் முதலாம் கஜபாகு மன்னனால் வெட்டப்பட்டு;ள்ளன. கல்வெட்டில் இந்த நீர்த்தேக்கத்தின்; பழைய பெயரான அலவிச்சை ஏரி என குளத்தின் புராதன பெயரை கொண்டுள்ளமை மூலம் நிச்சயமாகின்றது. ஆனால் இக்கல்வெட்டு தற்போது இல்லை.
    சிங்களவர்களால் நிர்மாணிக்கப்பட்ட மிகப் பெருங்குளங்களில் ஒன்றை கொண்டிருப்பினும் சிதைவுகள் எனக் காண்பிக்கத்தக்க வகையில் ஏதுமில்லை. அணைகளின் உட்பக்கம் அலைகல்லை நோக்கியதாகப் காணப்படுகிறது. அணைகளில் புராதன கலிங்குக்கற்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. கலிங்குகள் பொதுவாக வாயில் கொட்டுடன் கூடியவையாக இருக்கின்றன.
    அதாவது கணிசமானளவு அகலமும் சிறிய தடிப்பமுடைய நீண்ட கல்துண்டங்கள் கலிங்கின் ஓரங்களில் போடப்பட்டு மிகவும் கவனமாகப் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் பயன்பாட்டிலுள்ள ஈரற்பெரிய குளத்திலுள்ள கலிங்குகளில் ஒன்று பற்றி திரு.பாக்கர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
    ‘இங்கு நாம் 1770 வருடங்களுக்கு அல்லது அதற்கு அதிகமான காலத்துக்குச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலுள்ள கலிங்கு ஒன்றைக் கண்டுள்ளோம். இலங்கைத்தீவிலுள்ள குளங்களில் இனங்காணப்பட்ட மிகப்பழமையானதும் இயங்கு நிலையிலுள்ளதுமான கலிங்கு அலவிச்சை ஏரியினுடையதாயிருக்கும் சாத்தியமுண்டு. பல சந்தர்ப்பங்களில் குளங்கள் செயற்கையாக அமைக்கப்பட்ட வான்கள் (வெள்ளப் பெருக்கிலிருந்து தப்பிக்கொள்வதற்கான பொறிமுறை) உடன் கூடியவையாக இருந்தன. இவற்றில் சில இன்னமும் எஞ்சியுள்ளன. பாவற்குளத்தில் உள்ள மாதிரியான இந்நீர் வான்களின் தளங்களும் பக்கங்களும் அநேகமாக விசாலமான கற்களால் நெருக்கமாக அமைக்கப்பட்ட சரிவாகச் சூழப்பட்டதாகவுள்ளன.’
    இக்குளம் பற்றி ஜே.பி லூயிஸ் MANNUAL OF VANNI DISTRICT என்றதனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘இது வடக்கு நோக்கிச் செல்லும் பாதைக்கு அருகாமையில் 107வது மைல் கல்லுக்கு அருகில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் விரும்பத்தக்க முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பெரும்பகுதியான அணைக்கட்டு, உறுதியான பாறைகளைக் கொண்டுள்ளது. இக்குளத்தின் பரப்பளவு 535 ஏக்கர் ஆகும். இதன் மூலம் 1200 ஏக்கருக்கு நீர்ப்பாசனம் செய்ய முடியும். இது 15 அடி நீரைத்தேக்கி வைக்கவும், இரண்டு இரும்பு சுலுசுகளைக் கொண்டதாகவும் புனரமைக்கப்பட்டது.
    ஈரற்பெரியகுளத்திலும் ஒரு புத்த துறவிகளின் மடம் இருந்திருக்கின்றது. ஈரற்பெரிய குளத்தின் குளக்கட்டிலிருந்து ஏறத்தாழ கால் மைல் தொலைவில் வீதியின் மருங்கில், பீடக்கிருகத்தின் அழிவுகள் காணப்படுகின்றன. இங்கு பெரிய அமர்ந்த நிலையிலுள்ள புத்தரின் கற் பிம்பமும் வழமைபோன்று இரு நிரையிலமைந்த தூண்களும் படிக்கட்டும் உள்ளன. திரு.பாக்கர் திகாடியா விஹாரைக்கு உரித்தான இச்சிதைவை இனங்காணத் தயங்கியிருப்பார். ஏனெனில் இச்சிதைவுகள் ஈரற்பெரியகுளம் கந்த(மலை) எனப்படும் உயர்ந்த பாறையின் மீது இருந்திருக்க வேண்டும். இங்கு திரிகோண அளவைக் கோபுரத்தைக் கட்டியபோது சில எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வன்னியின் முந்தைய நம்பிக்கைகள் தொடர்பான தடயங்களும் துண்டு துண்டாக அங்குமிங்குமாகச் சந்திக்கின்றன.’
    இப்பகுதி மக்களின் பாரம்பரிய பொருளாதார நடவடிக்கையாக விவசாயம், மீன்பிடி, வேட்டையாடுதல் காணப்படுகின்றன. இவற்றுள் விவசாயமே முக்கிய தொழிலாக இருப்பதை இங்குள்ள இக்குளம்; உறுதிசெய்கின்றது. இக்குளத்தில்; கணிசமானவை குறிப்பிட்ட ஒரு குடும்பம் அல்லது சமூகத்தின் விவசாய உற்பத்தி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் கட்டப்பட்டுள்ளதாக உள்ளது. அதை குளம், கால்வாய்கள், நீர்ப்பாய்ச்சப்படும் நிலம்,ஆழம், அளவு என்பவற்றில் இருந்து உணரமுடிகிறது.
    ஆற்றங்கரையில் குடியேறியிருந்த இயக்கர்களுக்குத் தேவையான நீர்ப்பாசனத் தேவையை நிறைவு செய்வதற்கு நாகர்கள் தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர். நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்திற் சிறந்தவர்களான நாகர்கள் ஆறுகளை மறித்து அணைக்கட்டுக்களைக கட்டி நீர்த்தேக்கங்களை உருவாக்கினர். இவையும் குளங்கள் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டன.
    நாகர்கள் கட்டிய நீர்த்தேக்கங்களின், அணைக்கட்டுக்களில் தாம் வழிபடும் கடவுளும் காவல் தெய்வமுமான ஐந்து தலை நாகசிலைகளை பிரதிஷ;டை செய்துள்ளனர். நாகர்கள் பெரிய குளங்களை கட்டினார்கள் என்பதற்கு இவை ஆதாரங்களாக அமைகின்றன. அந்தவகையில் இக்குளத்தின் புராதன தன்மையை வெளிப்படுத்தும் வகையில் நாக சிலை ஒன்று காணப்படுகின்றது. இதனால் இக்குளத்தில் நாகவழிபாடு மற்றும் நாகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் உறுதிப்படுத்துகின்றது. இக்குளத்தின் அருகில் சுண்ணாம்பு பாறையினால் உருவாக்கப்பட்ட சிறிய குன்று ஒன்றும் காணப்படுகின்றது. அத்துடன் பாறையில் ஏராளமான பண்டைய செங்கற்கள் காணப்படுகின்றன.
    1810 ஆம் ஆண்டில் மடுகந்தையைச் சேர்ந்த ஒரு சிங்களவர் சிங்களவர்கள் வாழ்கின்ற மிகப்பெரிய குளமாகிய ஈரற்பெரிய குளம் திருத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை. சில வருடங்களின் பின்னரே திரு. போப்ஸ் என்பவர் இக்குளம் உடைந்து இருப்பதையும் அது மிகவும் அது மிகவும் வளம் செறிந்து இருப்பதையும் அவதானித்தார். இக்குளம் பிரித்தானியர் காலத்தில் 1886 – 1887 ஆண்டு காலப்பகுதியில் ரூபா 18,500 செலவில் புனரமைக்கப்பட்டது. தற்போது இக்குளம் திருத்தப்பட்டு செயற்கையாக அமைக்கப்பட்ட வீதிகளும் கண்ணைக் கவருவதாக உள்ளது.
  3. வவுனிக்குளம்
    பாலி ஆற்றுக்கு நீரை வழங்கும் கிளையாற்றை மறித்து நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இது ‘பாலிக்குளம்’ என வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. இதன் புராதன பெயர் ‘பாலி வௌ’ என சிங்கள மொழியில் குறிக்கப்பட்டுள்ளது.
    வன்னிப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்கள் யாவும் அந்தந்த இடங்களில் இருக்கும் குளங்களின் பெயர்களாலேயே அழைக்கப்பட்டுள்ளது. தற்போது ‘வவுனியா’ என்று அழைக்கப்படும் இந்த இடத்தின் பெயர் ஆரம்பத்தில் தனியாக ‘விளாங்குளம்’என்று அழைக்கப்பட்டிருக்கிறது. 1733 தொடக்கம் 1890 வரை ‘வவுனியன் விளாங்குளம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. 1890 தொடக்கம் வவுனியா என மாற்றப்பட்டது. விளாங்குளம் கட்டப்பட்டமை அல்லது திருத்தப்பட்டமை பற்றி 1895இல் வெளிவந்த ஜே.பி லூயிஸினுடைய வன்னி பற்றய கைநூலில் குறிக்கப்பட்டுள்ளது.
    இதன் பரப்பளவு 350 ஏக்கராகும். சராசரி மழைக்காலங்களில் இதனால் 400 – 500 ஏக்கருக்கு பயிர் செய்ய முடியும்.
    வவுனிக்குளத்தின் கீழ் சிவலிங்க வழ்பாடு இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் இருந்ததாகவும் அவை சிதைக்கப்பட்டதாகவும் ஆங்கில ஆய்வுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. மேலும் வவுனிக்குளம் பாலியாற்றுப் பகுதியில் உள்ள கோவில்காடு என்ற இடத்தில் புராதன ஆலய அழிபாடுகளில் இருந்து சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இச்சிவலிங்கம் வவுனிக்குள சிவாலயத்தில் தற்போது பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளது.
  4. மாமடு குளம்

வவுனியாவில் உள்ள இப்பிரதேசத்தின் தொன்மையை எடுத்துக்காட்டும் குளங்களில் மிகப் புராதனமான பெரியகுளமாகும். நொச்சிமோட்டை (பறங்கி ஆறு) நதிப்படுக்கை மூலம் பரந்த அளவில் பயிர் செய்யப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து வெளிக்குளம் – மாமடு வீதியில் 11.1முஆ தூரத்தில் மாமடு என்ற கிராமத்தில் இக்குளம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்குளம் கி.பி 2ஆம் 3ஆம் நூற்றாண்டுக்குரியவை என பாக்கர் கருதுகிறார். வசப மன்னனால் இக்குளம் கட்டப்பட்டது என கூறப்படுகின்றது. மாமடு குளத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டிலே 5ஆம் கஸ்ஸப்ப (கி.பி 937 – 54) அவருடைய ஆட்சிக்காலத்தின் 13ஆவது ஆண்டிலே இக்குளத்தையும் ஏனைய குளங்களையும் திருத்தியதாக கூறப்பட்டுள்ளது.


ஜே.பி லூயிஸ் மாமடு குளம் பற்றி MANNUAL OF VANNI DISTRICT என்றதனது நூலில் வௌ;வேறு அத்தியாயங்களில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘மாமடு குளம் வவுனியாவில் இருந்து வடக்கு நோக்குச் செல்லும் பாதையிலிருந்து 3½ மைல் தூரத்தில் வடகிழக்கில் அமைந்துள்ளது. வவுனியாவில் இருந்து 5 – 6 மைல் தூரத்தில் அமைந்துள்ள மாமடு,ஈரற்பெரிய குளத்திலும் பார்க்க சிறிய குளத்தை கொண்டுள்ளது. இக்குளத்துக்கு திறமான நீர்வரத்து உண்டு. குளத்தின் அணைக்கட்டு சுமார் 1½ மைல் நீளமுடையது. ஈரற்பெரிய குளம், மடுகந்த போன்று மாமடுவும் சிங்களவர்கள் குடியேறியுள்ள பழைய கிராமமாகும். இவ்வினத்தைச் சேர்ந்த அங்கு வாழ்ந்தவர்களுக்கு இது வழங்கப்பட்டது. 1¼ மைல் நீளமான அணைகளையுடையவை. மாமடுவை புனருத்தாரணம் செய்வதற்கு முன்பு 3 கலிங்குகளைக் கொண்டிருந்தன.வானிலிருந்து 300 யார் கீழே நீர்தரை வழியே இன்னோர் கலிங்குலா உண்டு’.
அனுராதபுரத்தின் பின்னர் பொலநறுவை, தம்பதெனியா தலைநகராக மாற்றப்பட்டதன் பின்னர் இங்குள்ள கிராமங்களுக்கும் நெல்வயலுக்கும் உணவளிக்கும் இக்குளம் ஆயிரங்கணக்கான ஆண்டுகளாக கைவிடப்பட்டன. பிரித்தானிய ஆட்சியின் கீழ் இக்கிராமத்தில் 16 குடும்பங்கள் வாழ்ந்தது. இக்குளம் பாழடைந்தமையால் தங்கள் நெல்வயல்களை தக்கவைத்துக் கொள்ள சவாலாக அமைந்தது. இதனால் இக்குளத்தை மீண்டும் கட்டுமாறு கிராமவாசிகள் அப்போதைய ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதன் பின் 1881 ஆம் ஆண்டில் ஹென்றி பாக்கரின் வழிகாட்டுதலின் கீழ் நிறைவேற்றப்பட்டது.


1886 – 1887 பிரித்தானியர் காலப்பகுதியில் மாமடுகுளம் 19,200 ரூபா செலவில் புனரமைக்கப்பட்டது. இக்குள புனரமைப்பின் போது நீர்த்தேக்க காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் கி.பி 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் சேன (கி.பி 853 – 887) மன்னனின்; கால ஓர் சிங்கள பலகை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் நாய் காகம் உருவத்துடன் 3½ அடி உயரம், 3 அடி அகலம் மற்றும் 1½ அடி தடிமன் கொண்ட கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அவை 2 துண்டுகளாக உடைக்கப்பட்டுள்ளன. நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் வேறு தேவைக்கு பயன்படுத்துபவர்களும் மதப்பிரச்சாரம் செய்யாதவர்களும் மாடுகள், காகமாக மறுபிறவி எடுப்பார்கள் என கூறுகின்றது. மேலும் இச்சிங்கள கல்வெட்டு வவுனியாவிற்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் இருந்த மகிந்தவாவி என்ற குளம் பற்றிக் கூறுகிறது. இதை முதலாம் பராக்கிரமபாகு தனது ஆட்சிக்காலத்தில் (கி.பி 1153 – 1186) மீள் உருவாக்கம் செய்ததாகச் சூழவம்சம் கூறுகிறது. இது மாமடுக்குளம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது இப்பலகை கல்வெட்டு வவுனியா தொல்பொருட்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  1. எறுப்பொத்தான குளம் (ஏறிப்பார்த்தான்)
    வவுனியாவில் இருந்து 17.6மஅ தூரத்தில் எறுப்பொத்தான கிராமத்தில்; அமைந்துள்ளது. எறுப்பொத்தான பிரதேசம் பற்றி சிறப்புப்பெற்ற புராணக்கதையும் உண்டு.
    ஒரு பெரிய கைவிடப்பட்ட குளம். இதனுடைய ஒரு பகுதி அணைக்கட்டு கற்பாறைகளால் ஆனது. இக்கற்பாறை பெரிய புளியங்குளம் முதல் ஈரற்பெரிய குளம் வரை விரிந்துள்ளது. இது கிட்டத்தட்ட மாமடு குளத்தைப் போன்று பெரியது. இதனுடைய அணைக்கட்டுக்கள் பெரிய உடைப்பைத் தவிர, நல்ல நிலையில் உள்ளன. இக்குளம் 1.2 ளுஙரயசந முடைழஅநவநச பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
    வானிலிருந்து 300 யார் கீழே நீர்த்தரை வழியே கலிங்குலா உண்டு.எறுப்பொத்தான நீர்த்தேக்கத்தின் சதுப்பு வாயில் இங்கு இயற்கையாக உருவான பாறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. அது நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரை கட்டுப்படுத்துகின்றன. அத்துடன் எறுப்பொத்தான நீர்த்தேக்கம் இன்றும் செயல்பட்டு வரும் நீர்த்தேக்கமாகும். இந்நீர்த்தேக்கம் 2011ஃ2012 ஆம் ஆண்டில் புனரமைக்கப்பட்டது.
    இக்குளத்தின் அணையில் ஓர் கல்வெட்டு காணப்படுகின்றது. அத்துடன் அணைக்கு அப்பால் கல்வெட்டுக்கள் பொறித்த நிலையில் பழங்கால பௌத்த குகை காணப்படுகின்றது. அந்தவகையில் தொல்லியல் எச்சங்கள் காணப்படும் பகுதியாகும்.
  2. மகாகச்சகொடிய குளம்

வவுனியாவில் இருந்து 15.9 முஆ தொலைவில் மகாகச்சகொடிய புராதன கிராமத்தில் உள்ளது. மகாகச்சகொடி ஆதிக் குடியிருப்புக்களில் ஒன்றாகும். இது கிறிஸ்துவுக்கு முந்திய காலத்துக்கு உரிதாக இருக்கும் சாத்தியமும் உள்ளது. இதன் சிங்கள நாமம் ‘தித்தாவெளி’. இக்குளம் நொச்சிமோட்டை கிளை ஆற்றை மறித்து கட்டப்பட்டது.


இக்குளம் பற்றி ஜே. பி. லூயிஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘மகாகச்சகொடியில் கலிங்குலா ஒரே தூணை மட்டும்; கொண்டது. வவுனியா குளத்தைப் புளரமைப்பு செய்ய முன்னர் அதன் அணையின் உட்புற அந்தத்தில் ஒருவகையான கலிங்குலா இருந்தது. ஆயின் அது கண்ணுக்குப் புலப்படவில்லை.


இக்குளத்தில் தற்போது ஓரே ஓரு துருசு மாத்திரம் காணப்படுவதோடு குளத்தின் அணைக்கட்டு குளத்தின் நீர் அரிக்காமல் தடுப்பதற்கு கருங்கற்கள் இடப்பட்டுள்ளன.
ஏனைய குளங்கள்

கனகராயன் குளத்தின் தென்பகுதிக் குளக்கட்டினை அடுத்த காட்டுப்பகுதியில் பௌத்த மடாலயத்திற்கான சின்னங்கள் காணப்படுகின்றன. இங்கிருந்த சிலைகள் ஆண்டியாவிற்கான இந்து ஆலயம் கட்டுவதற்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. இது 3ஆம் அல்லது 4ஆம் நூற்றாண்டில் இடம்பெற்றிருக்கலாம். குளத்தின் பெயரைக் கொண்டும் இங்குள்ள பாரம்பரியங்களின்படியும் வன்னி மன்னன் ஒருவன் இங்கிருந்து ஆட்சி நடத்திருக்கலாம்.
மடுகந்த குளம் வவுனியாவில் இருந்து 6.5மஅ தொலைவில் ஹொரவப்பொத்தான வீதியில் அமையப்பெற்றுள்ளது. நொச்சிமோட்டை ஆற்றினை மறித்து கட்டப்பட்டுள்ளதுடன் இக்குளத்தின் பரப்பளவு 260 ஏக்கர். சுமார் 360 ஏக்கருக்கு இதனால் நீர்ப்பாசனம் செய்ய முடியும். இக்குளத்தினுடைய நீர் உற்பத்தியாகும் பகுதி வளமின்மையினால் வரட்சியான காலங்களில் குளம், நீர் இன்றி காணப்படும்.


இளமருதன் குளம் அப்பிரதேச மக்களால் அமைக்கப்பட்ட பழமையான குளம் ஆகும். அங்கு இரண்டு துருசுகள் காணப்படுவதோடு அணைக்கட்டு மண்மேட்டினால் அமைக்கப்பட்டது. இக்குளம் மழைக்காலங்களில் நீர் நிரம்பி காணப்படுதோடு இக்குளத்தினுடைய நீர் உற்பத்தியாகும் பகுதி வளமின்மையினால் வரட்சியான காலங்களில் குளம், நீர் இன்றி காணப்படும். இந்நீர்த்தேக்கம் மூலம் 30 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சப்படுகின்றது. 1990 ஆம் ஆண்டு நீர்ப்பாசன திணைக்களம் இக்குளத்தினை பொறுப்பாக ஏற்றுக்கொண்டு புனரமைப்பு செய்தது. இக்குளத்தில் கிராமிய வழிபாடான பிள்ளையார் வழிபாடு நிலவுகின்றது.


கோகம்பஸ்வேவ குளமானது புராதன குளமாகும். இக்குளம் தற்போது அடர்ந்த காடுகளாலும் யானைகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகின்றது. இளமருதன் குளத்திலிருந்து 1மஅ க்கு அப்பால் காணப்படுவதுடன் மேலும் 1மஅ சென்றால் அக்குளத்தில் புராதன நாகசிலை காணப்படுவதாகவும் அவ்வூர்;வாசி இருவரால் தெரிவிக்கப்பட்டது. எனினும் பாதைகள் இன்றிய நிலையில் கடினமான காடாகவும் யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்பட்டதால் மேற்கொண்டு நாகசிலையினை பார்வையிட செல்லமுடியவில்லை. அத்துடன் இக்குளம் நிர்மாணிக்கப்பட்ட காலம் தெளிவில்லை.


பூமடுவ (ப. த. பெ – பூமடு) குளமானது சிறந்த நீர் வரத்துள்ள குளம் ஆகும். தாமரை, அல்லி, ஒலு போன்ற பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் பூமடு என்ற பெயர் பெற்றது.


நவகம குளம் இரண்டு கலிங்குகளைக் கொண்டு காணப்படுவதோடு ஈரற்பெரிய குளத்துடன் இணைந்த வகையில் காணப்படுகின்றது.
மருதமடு கிராமம் பழமைவாய்ந்த குடியேற்றக் கிராமமாகும். சிங்களவர்களே குடியேற்றவாசிகள். இங்குள்ள மருதமடு குளம் சுமார் 12 அடி உயரமான அணைக்கட்டை கொண்டுள்ளது. இரண்டு நீரோடும் ஆற்றுப்படுக்கைகளை இணைத்து இக்குளம் கட்டடப்பட்டமை இக்குளத்துக்கு போதிய நீpர் வருவதற்கும் குளம் செழிப்பாக இருப்பதற்கும் காரணமாக அமைகின்றது. இக்குளத்தின் கீழ் உள்ள சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்புடைய வயற்காணிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யக்கூடிய நிலையில் உள்ளது. இ;க்குளம் வடமத்திய மாகாணத்தில் எல்லைக்கு அண்மித்தாக உள்ளது.


மதவு வைத்த குளம் அருமையானதோர் புராதன சிங்களவர்களின் குளத்தைக் கொண்டுள்ளது. ஐந்து தலைகள் கொண்ட நாகம் ஒன்று குளக்கட்டிக் மீதுள்ள இந்துக்கோவிலில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.


முடிவுரை
இப்பிரதேசத்தில் உள்ள குளங்களை நோக்கிய களப்பயணம் மேற்கொண்டபோது அக்குளங்களின் புராதன தன்மையினை அறிய முடிகின்றது. பாவற்குளத்தில் ஐந்துதலை நாகசிலை காணப்படுகின்றது. ஆனால் தற்போது அதன் பழமை தன்மையினை காணமுடியவில்லை என்றே கூற வேண்டும். அந்தவகையில் இவ்நாகசிலை முழுவதும் சிவப்பு வர்ணக்கலவை பூசி; காணப்படுகின்றது. இச்செயல் அதன் பழமையினையும் இப்பிரதேசத்தின் பெருமையினையும் அழிப்பதற்கு சமமாகின்றது. அந்தவகையில் ஈரற்பெரியகுளம், மாமடு குளம், எறுப்பொத்தான குளம், பாவற்குளம், மகாகச்சகொடிய குளம், மடுகந்த குளம், பூமடு குளம் என முதலிய குளங்களைத் தவிர மேலும் சில குளங்கள் அனுராதபுர, பொலன்னறுவை அரசு கால மன்னர்களால் வட இலங்கையில் கட்டுவிக்கப்பட்டிருக்க இடமுண்டு. ஆனால் அவை இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.


இக்குளங்களுக்குரிய பெயர்களை நோக்கும்போது இக்குளங்களை தனிநபர் அல்லது குடும்பம், குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த சமூகம், சமூகத்தில் செல்வாக்கு பெற்ற வணிகர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், வன்னிச்சிற்றரசர்கள், அரச வம்சங்கள் அல்லது அவ்வம்சங்களை நினைவுப்படுத்தியோர் ஆகியோர் கட்டுவிக்கப்பட்டிருக்கலாம். இக்குளங்கள் பண்டுதொட்டு இப்பிரதேச மக்களது வாழ்வோடு இரண்டறக்கலந்திருப்பதால் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு ஆய்வுகளில் இக்குளங்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.


இன்று பாழடைந்து கிடக்கும் குளங்களையும் ஒவ்வொரு கிராமக் குடியிருப்பாகக் கருதில் இங்கு பிரதேச மக்கட் தொகை அதிகமாக இருந்திருக்க வேண்டும். இங்கு உள்ள பல குளங்களை அமைப்பதற்கு எவ்வளவு மனிதவலு தேவைப்பட்டிருக்க வேண்டுமென எண்ணும் போது இன்று இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் தொகை போல் பலமடங்கு அன்று இருந்திருக்க வேண்டும். இலட்சங்கணக்காண மக்களின் வாழ்விடமாக விளங்கியிருக்க வேண்டும் என உறுதிசெய்ய முடிகிறது. பண்டைய நாளில் குடித்தொகை மிக அதிகமாகவும், செறிவாகவும் இருந்துள்ளதென்பது பல அறிஞர்களின் முடிவு. பாழடைந்து கிடக்கின்ற குளங்களின் எண்ணிக்கை இவ்வாறான முடிவினை எடுக்க வைத்துள்ளது.


குளங்களின் தற்போதைய பெயர்களைக் கொண்டும் இவற்றின் புராதனப் பெயர்களைக் கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமங்கள் உள்ளன. பாவற்குளம் முதலானவை நாகரோடும் தமிழ்மொழி பேசுவோரின் குடியிருப்பின் உற்பத்தியோடும் தொடர்புடையவை. நாக இனமக்கள் காலப்போக்கில் மக்கள் தொகை பெருக மக்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வேறு பல இடங்களில் குளங்களை அமைத்து வந்தனர். சிங்களவர்கள் இவ்;நல்ல குளங்களின் மீது கண் வைத்திருந்தார்கள். தற்போது பாவற்குளம், எறுப்பொத்தான, பூமடு ஆகிய குளங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைவசமிருக்கின்றன.


நீர்ப்பாசனத்திற்காக மழைக்காலங்களில் மழைநீரைத் தேக்கி வைப்பதற்கு கிராமங்கள் முழுவதிலும் குளங்களை கட்டியுள்ளனர். ஒவ்வொரு ஆறும் சிறு மலைகளிலிருந்து ஊற்றெடுத்து வரும்போது நிரம்பி வழியும் நீர் சிறு ஆறுகளாக மாறுகின்றன. இங்குள்ள குளங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக உள்ளன.
உதாரணம் : பாவற்குளம் – உளுக்குளம் இங்குள்ள குளங்களில் குளக்கட்டுக்கள் உடைந்த நிலையில் தற்போது பல குளங்கள் கைவிடப்பட்டுள்ளன. அக்குளங்களும் கட்டுக்களும் அடர்ந்த காடுகளால் மூடப்பட்டுள்ளன.


உதாரணம் : அலஹல்ல, கோகம்பஸ்வௌ நாக மன்னர்களினால் ஆளப்பட்டு வந்த இப்பிரதேசம் பரப்பளவில் சுருங்கியிருந்தது. யாழ்ப்பாணத்தை காலத்திற்குக் காலம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தென்னிந்திய மன்னர்களாலும், தெற்கில் இருந்து வந்த சிங்கள மன்னர்களாலும் இப்பிரதேசம் தாக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. அரச மாளிகைகளும் கட்டிடங்களும், கோயில்களும் நாசமாக்கப்பட்டன. பல நூற்றாண்டு காலமாக இப்படியான ஆக்கிரமிப்புக்களும், அழிவுகளும் ஏற்பட்ட வண்ணமே இருந்தன.


வவுனியாவில் 50க்கும் மேற்பட்ட நீர்ப்பாசன குளங்கள் இருக்கின்றன. அடுத்தடுத்து ஏற்பட்ட படையெடுப்புக்கள், பெருவெள்ளம், கடும்வரட்சி, கொள்ளை நோய், மலேரியா போன்ற காரணங்களினால் மக்கள் இப்பிரதேசத்தை விட்டு இடம்பெயர்ந்தனர். இதனால் கவனிப்பாரற்று குளங்கள், வளமான வயல்நிலங்கள் இவை நாளடைவில் முறி குளங்கள் ஆயின. முறிகுளங்களுடைய வயல்வெளிகள் இளங்காடுகளால் மூடப்பட்டிருப்பதனால் வனவிலங்குகளின் உறைவிடமாக மாறிவிட்டன. இங்கு ஆதி காலத்தில் பெருந்தொகையான மக்கள் வாழ்ந்திருப்பதை உறுதிப்படுத்திக் கூற முடிகிறது.


வரலாற்று ஆதாரங்களுக்கு அமைவாகவும், முன் கூறப்பட்ட வைகளுக்கு இணங்கவும், அந்தக்காலங்களில் வாழ்ந்த மக்கள் ஒரே இடத்தில் நீடித்து, நிலைத்து வாழ்ந்திருக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் இருந்து நாகத் தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை நவீன வரலாற்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். அந்தக்காலங்களில் ஆட்சி செய்த நாக மன்னர்களுடைய காலத்திலே, அங்கு வாழ்ந்த இடங்களுக்கு என்ன பெயர்கள் இருந்திருக்கும் என்பதையும் வேறு ஆய்வுகள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.


இந்த குளங்களைக் கட்டியவர்கள் யார்? வன்னியனார் குளங்களைக் கட்டினார் என்பதற்கும் ஆதாரம் கிடைக்கவில்லை. ஈழத்தின் நாகரிகத்திற்கு வித்திட்டவர்கள் பெருங்கற்காலப் பண்பாட்டைப் பேணிய திராவிட மக்கள் என்பது தெளிவாகின்றது.

வரலாற்றுக்காலத்தில் திராவிடப் பெருங்குடியினர் குறிப்பாகத் தமிழ் பேசிய மக்கள் வேரூன்றி இருந்தனர் என்பதை இலக்கியக் கல்வெட்டு சான்றுகள் நிரூபிக்கின்றன.


பாவற்குளம் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலே கட்டப்பட்டவை. அத்துடன் மாமடு குளம் கி.பி ஆரம்ப நூற்றாண்டுகளிலே கட்டப்பட்டதாக அறியமுடிகின்றது. எனவே சிங்கள மன்னர்கள் தான் குளங்களையும் கால்வாய்களையும் அணைக்கட்டுக்களையும் கட்டினார்கள் என பாளி நூல்கள் கூறுவதை முழுதாக ஏற்றுக்கொள்ளமுடியாது.


பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் குளங்களை அமைத்து நீர்ப்பாசன விவசாயத்தில் ஈடுபட்டவர்களாவார். எனவே இதனை நோக்கும் போது இயக்கர், நாகர், திராவிட என்னும் ஆதிக்குடிகளும் அவர்களை ஆட்சி செய்த குறுநில மன்னர்களும் அக்குளங்களைக் கட்டுவித்தனர் என்றே கொள்ள வேண்டும். இப்பாரிய குளங்களை உற்றுநோக்கும் போது பண்டைய மன்னர்களுக்கும் மக்களுக்கும் இருந்த தொழினுட்ப அறிவு பற்றி வியப்படையாமல் இருக்க முடியாது.


அந்தவகையில் பெருங்கற்காலத்துடன் தொடர்புடைய குளங்களை நோக்கும் போது மிகப்பரந்த அடிப்படையிலான தொல்லியல் அகழ்வாராய்ச்சியின்றி பெருங்கற்கால நீர்ப்பாசனத்தின் நாடளாவிய பரம்பல் எவ்வாறு இருக்கும் என்று குறிப்பிடமுடியாது. இங்குள்ள பிராந்தியத்தின் ஆதிக்குளங்களை அண்டியுள்ள பகுதிகளில் தக்க மேலாய்வு செய்யப்படின் இப்பண்பாடு பற்றிய புதிய தகவல்கள் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் இப்புராதன குளங்களின் பண்டைய பெயர்கள் தெரிந்தால் மாத்திரமே வவுனியாவில் உள்ள புராதன குளங்கள் பற்றிய ஆய்வும் பூரணப்படுத்தப்படும். மேலும் வவுனியாவில் முழுiமான வகையில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத நிலையில் கிடைத்திருக்கின்ற ஆதாரங்களை வைத்தே வவுனியா மாவட்டத்தின் தொன்மையையும், பெருமையினையும் எடுத்துக் காட்டுகின்ற குளங்கள் பற்றிய இச்சிறிய கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வட்டாரத்தில் விரிவான தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமானால் இம்மாவட்டத்தின் தொன்மைக்கு வெளிச்சமூட்டலாம்.

சுரேஸ்குமார் சஞ்சுதா
கிழக்குப் பல்கலைக்கழகம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More