Home இலங்கை ரிசாத் கைது – ஹரின் – மனுஷா மீது அச்சுறுத்தல் ஆகியவற்றை நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்

ரிசாத் கைது – ஹரின் – மனுஷா மீது அச்சுறுத்தல் ஆகியவற்றை நிபந்தனை இல்லாமல் கண்டிப்போம்

by admin

ரிஷாத் பதுர்தீன் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் மீதும் கைது மேகங்கள் சூழ்கின்றன. இவற்றை மூலம் இன்றைய அரசு, எதிர்கட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து, நாட்டின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க முயல்கிறது.

இவை தொடர்பில் ஆராய நாளை ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இவை பற்றி நாம் ஆழமாக ஆராய்வோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவா் மேலும் கூறியுள்ளதாவது,

நண்பர் ரிஷாத் பதுர்டீன், மீதான பொதுவான சமூக வலைத்தள குற்றச்சாட்டுகளை நானறிவேன். அவரது கட்சியினர் 20ம் திருத்தம் தொடர்பில் அரசுக்கு ஆதரவளித்த “அரசியல் சூழல்” தொடர்பிலும் எனக்கு மனவேதனை இருக்கின்றது. ஆனால், இவற்றை காரணமாக இன்று கூறி, அவரது கைதை நியாயப்படுத்தவோ, அரசின் அராஜக போக்குக்கு ஒரு சாட்டு தேடி தரவோ கூடாது. எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல், அவரது கைதை, அவர் கைது செய்யப்பட்ட முறைமையை நமது கட்சி கண்டிக்கின்றது.

கைது அச்சுறுத்தல் எனக்கு புதிதல்ல. இதைவிட மிக பயங்கரமான 2007ம் ஆண்டு, இன்றைய ஜனாதிபதி பலமிக்க பாதுகாப்பு  செயலாளாராக பணியாற்றியபோது, கோர யுத்தம் வடகிழக்கில் நடக்கிறது.

அப்போது, எனது தொகுதி கொழும்பில் அடைக்கலம் புகுந்த வடகிழக்கு தமிழர்கள் வகைதொகை இல்லாமல் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் புறநகர் பகுதிகளில் வீசப்பட்டிருந்த வேளை, அந்த அரச பயங்கரவாத அராஜகத்துக்கு எதிராக தெருவில் இறங்கி போராடினேன் என்பதற்காக, என்னை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து, கொடுமையாக விசாரித்து, பயமுறுத்தினார்கள்.

அப்போது எனக்கு ஆதரவாக எந்த ஒரு தமிழ், முஸ்லிம் எம்பீயும் வாயை திறக்கவில்லை. அரசுடன் சேர்ந்து பலர் அமைதி காத்தார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எம்பீகள் அல்லாத சில சிங்கள முற்போக்காளர்கள் மட்டுமே எனக்காக குரல் கொடுத்தார்கள்.

ஆனால், அந்த தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு இன்று எனது நிலைபாடுகளை நான் தீர்மானிக்க முடியாது. அந்தளவு “சிறுமனதாளன்” அல்ல, நான்.

இப்போது, பகிரங்கமாக கொழும்பில் குடும்பத்துடன் வாழும் ரிசாத் பதுர்தீன் எம்பீயை, அதிகாலை அமைதியை ஊடறுத்து, அவரது வீட்டை சுற்றி வளைத்து, ஒரு பாதாள உலக கேடியை இழுத்து செய்வதை போல் கொண்டு சென்றதன் மூலம் இந்த அரசு எமக்கு சொல்கின்ற செய்தி என்ன?

“தன் மீது குற்றம் சாட்ட சாட்சியங்கள் இருந்தால், தன்னை விசாரியுங்கள்” என அவரே பலமுறை கூறியுள்ளார். ஆனால், எதிர்கட்சியில் இருக்கும்போது, தினசரி வரிசையாக வந்து, அவர் மீது சீஐடியில் புகார் செய்து விட்டு, பின் ஊடகங்களில் வசை பாடி விட்டு, சாட்சியங்கள் இருப்பதாக கூறி விட்டு, ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் சூத்திரதாரிகளை தூக்கில் போடுவோம் எனவும் கூவி விட்டு, ஆளும்கட்சியாக மாறிய பின், சுமார் இரண்டு வருடங்கள் சும்மா இருந்து விட்டு, இப்போது நௌபர் மௌலவி என்பவரே சூத்திரதாரி எனவும் அறிவித்து விட்டு, இப்போது ரிஷாடை இந்த அரசு கைது செய்துள்ளது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நௌபர் மௌலவியை “சூத்திரதாரியாக” ஒப்புக்கொள்ளாததால், அவரை சமாளிக்க இவரை இந்த அரசு கைது செய்கிறது என்ற பலத்த சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

இதேபோல்தான், நண்பர்கள் ஹரின், மனுஷ ஆகியோர் மீதும் கைது மேகங்கள் சூழ்கின்றன. நாளை இது இன்னும் மேலும் பலரையும் சுற்றி வளைக்கும். ஆகவே நாம் இந்த பின்னணியை புரிந்துக்கொள்ள வேண்டும்.

ரிசாத் கைது பற்றி, சனிக்கிழமை காலையிலேயே எதிர்கட்சி தலைவர் சஜித்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவராக நான் பேசினேன். தற்போது நாளை ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இவை பற்றி நாம் ஆழமாக ஆராய்வோம் என நம்புகிறேன்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More