Home இலங்கை ஆயர்கள் நால்வரும் அமெரிக்காவும் கனடாவும் – நிலாந்தன்!

ஆயர்கள் நால்வரும் அமெரிக்காவும் கனடாவும் – நிலாந்தன்!

by admin

கடந்த திங்கட்கிழமை வடக்கு கிழக்கிலுள்ள கத்தோலிக்க ஆயர்கள் நால்வர் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிக்கையானது முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலையே என்று தெரிவிக்கின்றது. மேலும் நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்த மத நிறுவனங்கள் எவ்வாறு முன்னுதாரணமாக செயற்படலாம் என்பதற்குரிய நடைமுறை வழிகாட்டல்களையும் வழங்கியிருக்கிறது.


இந்த அறிக்கையின் விசேஷ அம்சம் இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகந்தான்.வடக்கு கிழக்கிலுள்ள நான்கு ஆயர்கள் கூட்டாக இவ்வாறு கூறியிருப்பது இதுதான் முதல்தடவை.அதற்குத் தென்னிலங்கையிலிருந்து என்ன எதிர்வினை வந்திருக்கிறது என்பது இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் தெரியவில்லை. ஆனால் இது ஒரு முக்கியமான திருப்பம்.


இதேபோன்ற மற்றொரு திருப்பம் கடந்த வியாழக்கிழமை புலம்பெயர்ந்த தமிழ் பரப்பில் நிகழ்ந்தது.கனடாவின் மிகப்பெரிய நாடாளுமன்றமாகிய ஒண்டாரியோ நாடாளுமன்றம் மே18ஐ முன்னிட்டு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக அறிவித்திருக்கிறது.தமிழகத்திலும் வடமாகாண சபையிலும் நிறைவேற்றப்பட்டதை போன்று அது நேரடியாக ஒரு இனப்படுகொலை தீர்மானம் இல்லைதான். ஆனாலும் தமிழ் இனப்படுகொலையை குறித்து அறிவூட்ட வேண்டும் என்று அது கூறுகிறது. எனவே அது நடந்தது இனப்படுகொலை என்று கூறுகிறது.


இதற்குப் பன்னிரெண்டு நாட்களுக்கு முன்னதாக கடந்தமாதம் 24ஆம் திகதியன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஓர் அறிக்கையை வெளியிட்டது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்ட அந்த அறிக்கையானது ஆர்மீனியாவில் கடந்த நூற்றாண்டில் முதலாம் உலகப் போரின்போது இடம்பெற்றது இனப்படுகொலையே என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது. 1915ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் துருக்கிய ஒட்டோமான் பேரரசு ஆர்மீனியர்களைக் கொன்று குவிக்கத் தொடங்கியது. அல்லது மரணத்தை நோக்கி பலவந்தமாக நாடு கடத்தியது.இவ்வாறு இனப்படுகொலைக்கு உள்ளாக்கிய ஆர்மீனியர்களின் மொத்த தொகை சுமார் 15 லட்சம் என்று கணக்கிடப்படுகிறது. ஆர்மீனிய இனப்படுகொலைதான் கடந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை ஆகும்.


இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாருமே தண்டிக்கப்படவில்லை. இவ்வாறு இனப்படுகொலை செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாததைக் கண்டு மனம்கொதித்த போலந்தை சேர்ந்த சட்ட மாணவனாகிய ராஃபெல் லெம்கின்-Raphael Lemkin-என்பவர் இனப்படுகொலை என்ற வார்த்தையை உருவாக்கினார்.இனப்படுகொலைக்கு எதிரான சட்டத்தின் மூலவர் அவரே.கிட்டத்தட்ட 20 ஆண்டுகளின் பின் 1948ஆம் ஆண்டு ஐநா இனப்படுகொலைக்கு எதிரான உடன்படிக்கையை நிறைவேற்றியது.


கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் பின்னரே அமெரிக்கா அதனை இனப்படுகொலை என்று ஏற்றிருக்கிறது. இதுவரையிலும் 29 நாடுகள் அதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொண்டுள்ளன ஆனால் கடைந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை முன் நகர்த்திய பிரித்தானியா இன்று வரையிலும் அதை இனப்படுகொலை என்று ஏற்றுக் கொள்ளவில்லை..
வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது…”நாங்கள் வரலாற்றை உறுதிப்படுத்துகிறோம். நாங்கள் இதை செய்வது யாரையும் நிந்திப்பதற்காக அல்ல என்ன நடந்ததோ அது இனி ஒருபோதும் நடக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகத்தான்” ஆனால் இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அமெரிக்கா அவ்வாறு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம் சென்றது என்பதுதான். அதாவது உலக சமூகத்தின் நீதி எனப்படுவது எவ்வளவு மெதுவானது எவ்வளவு தாமதமானது எந்தளவிற்கு அரசியல் மயப்படுத்தப்பட்டது என்ற மிகக் கொடுமையான ஓர் உண்மையை அது ஈழத்தமிழர்களுக்கு உணர்த்துகின்றது.


இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் அரசுகளின் நீதி என்பது எவ்வளவு தாமதமானது என்பதை மட்டுமல்ல அது புவிசார் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப வேறுபடும் என்பதனையும் அது உணர்த்துகிறது.


ஏனெனில் அதை இனப்படுகொலை என்று கூறுவதன் மூலம் தமது நேட்டோ அணிக்குள்ளிருக்கும் பலம் பொருந்திய துருக்கியைப் பகைக்கக் கூடாது என்றே இதற்கு முந்திய அமெரிக்க ஜனாதிபதிகள் சிந்தித்தார்கள். ஆனால் இரண்டாம் உலக மகாயுத்த சூழலில் நிகழ்ந்த யூத இனப் படுகொலை விடயத்தில் அவர்கள் வேறுவிதமாக சிந்தித்தார்கள். யூத இனப்படுகொலை தொடர்பில் மேற்கத்திய நாடுகள் விரைந்து முடிவை எடுத்தன.யூதர்களுக்கு நீதி கிடைக்கத் தேவையான நிலைமைகளை ஊக்குவித்தன.அதுக்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம்…


முதலாவது யூதர்களை இனப்படுகொலை செய்த ஹிட்லரை தோற்கடித்த இரண்டாம் உலக மகாயுத்த சூழலும் அதற்கு பின்னரான சூழலும் ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நூதனமான யூத டயஸ்போறா ஆகும்.உலகின் மிக நீண்டகால டயஸ்போறா அதுதான்.கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலானது.அந்த டயஸ்போறாவின் கனிதான் அணுகுண்டு. அந்தப் டயஸ்போறாவின் கனிதான் மார்க்சியம்.அந்த டயஸ்போறாவின் கனிதான் சிக்மண்ட் பிராய்டின் உளவியல் கோட்பாடு.

அதனால்தான் இருபதாம் நூற்றாண்டை யூதர்களின் நூற்றாண்டு என்று அழைப்பார்கள். இத்துணை பலம்வாய்ந்த யூத டயஸ்போறாவானது இனப்படுகொலைக்கு எதிரான ஒரு கருத்துருவாக்கத்தை வெற்றிகரமாக செய்தது.கடந்த நூற்றாண்டில் மட்டும் அல்ல இந்த நூற்றாண்டிலும் எட்வேர்ட் செய்ட் போன்ற மிகவும் ஸ்தாபிக்கப்பட்ட அறிஞர்களுக்கு எதிராக கருத்துருவாக்கம் செய்யமுயலும் அளவுக்கு அது பலமானது என்பதனை இங்கு சுட்டிக்காட்டலாம்.யூதர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எப்படி அரசியலாக்கினார்கள் என்பதும் அப்படி அரசியலாக்கும் ஒரு போக்கிலேயே தாம் பலஸ்தீனர்கள் எதிராக இழைத்த அநீதிகளையும் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.


மூன்றாவது காரணம் இஸ்ரேலின் புவிசார் அரசியல் அமைவிடம். இஸ்ரேல் என்ற நாடு பகைவர் என்ற கடலால் சூழப்பட்ட ஒரு தீவைப் போன்றது.மேற்கு நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் நலன்களை அந்த பிராந்தியத்தில் நிரந்தரமாக பிரதிபலிக்கும் ஒரு நாடாக அது காணப்படுகிறது. சுற்றியுள்ள அரபு நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் மிகவும் நம்பிக்கை வாய்ந்த ஒரு கருவியாக அது காணப்படுகிறது. எனவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் இஸ்ரேலுக்கு சாதகமாக முடிவுகளை எடுக்கின்றன. ஐநாவில் இதுவரையிலும் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்திய தீர்மானங்களில் பெரும்பாலானவை இஸ்ரேலுக்கு எதிரானவைதான். இதை இன்னொரு விதமாக சொன்னால் அமெரிக்கா பாலஸ்தீனர்களுக்கு எதிராக ஐநாவின் வரலாற்றிலேயே அதிக தடவைகள் -அதாவது 43தடவைகள்- வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியிருக்கிறது.

கடந்த ஐநா தீர்மானத்திற்கு முன்னரான விவாதங்களின்போது தமிழ்த்தரப்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலைக் குறிக்கும் அஜென்டா ஐட்டம்-Ajenda items-என்று அழைக்கப்படும் பத்து விவகாரங்கள் குறித்து அதிகம் உரையாடப்பட்டது.இதில் எத்தனையாவது இடத்தில் இலங்கை விவகாரத்தை இணைக்கவேண்டும் என்று கேள்வி எழுந்தபோது ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.அந்த பத்து ஐற்றங்களில் ஏழாவதாக காணப்படுவது தனிய பலஸ்தீனத்துக்குரியது. அப்படி ஒரு ஐற்றம் பாலஸ்தீனத்துக்கு என்று சிறப்பாக உருவாக்கப்பட்டபோதிலும் பலஸ்தீனர்களின் வாழ்வில் அதிசயங்கள் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு பலஸ்தீனர்களை ஒடுக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அதிகம் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய ஐநாவில்தான் கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் அரசியல் மையம் கொண்டிருக்கிறது.


எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நீதி மிகவும் தெளிவானது குரூரமானது.அதாவது அரசுகளின் நீதி என்பது தூய நீதி அல்ல.அது நிலைமாறுகால நீதியாக இருந்தாலும் சரி பரிகார நீதியாக இருந்தாலும் சரி திட்டவட்டமாக அது தூய நீதி அல்ல. கடந்த 24ஆம் திகதி வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் கவர்ச்சியான வசனங்களை வைத்து அரசுகளின் நீதியை குறித்து ஈழத்தமிழர்கள் முற்கற்பிதங்களை ;மாயைகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மாறாக யூதர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்று உலகம் எப்படி அங்கீகரித்தது?ஏன் அங்கீகரித்தது?இன்றுவரையிலும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் இஸ்ரேலை ஏன் பாதுகாக்கின்றன? போன்றவற்றில் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.


இதன் அர்த்தம் ஈழத் தமிழர்கள் தங்களை தென்னாசியாவின் யூதர்களாக கற்பனை செய்ய வேண்டும் என்பதல்ல.மாறாக யூதர்கள் தொடர்பில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் எடுக்கும் முடிவுகள் அறத்தின் பாற்பட்டவை அல்ல.அவை முழுக்கமுழுக்க புவிசார் அரசியல் பொருளாதார நலன்களின் அடிப்படையிலானவை என்பதை விளங்கிக் கொள்ளவதே.அதிகம் போவானேன் ஆர்மீனியர்களை துருக்கி இனப்படுகொலை புரிந்தது என்பதனை இஸ்ரேல் இன்றுவரையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

எனவே உலகத்தின் நீதி அல்லது பேரரசுகளின் நீதி என்பது முழுக்க முழுக்க நலன்களின் அடிப்படையிலானது. அது தூய நீதி அல்ல. தமிழ் இனப்படுகொலையை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்பது ஒரு அறம்சார்ந்த கேள்வி அல்ல. மாறாக அரசியல் நலன்கள் சார்ந்த கேள்விதான். அதை இன்னும் ஆழமாக சொன்னால் புவிசார் அரசியல் நலன்சார்ந்த மற்றும் பூகோள அரசியல் நலன் சார்ந்த ஒரு கேள்விதான். அதற்குரிய விடையும் புவிசார் அரசியல் மற்றும் பூகோள அரசியலின் அடிப்படையில்தான் அமைக்க முடியும்.அதற்காக உழைப்பது என்பதும் புவிசார் அரசியலின் அடிப்படையிலும் பூகோள அரசியலின் அடிப்படையிலுந்தான் திட்டமிடப்பட வேண்டும். தமிழ்மக்களுக்கு நடந்து இனப்படுகொலையே என்று ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கையை உலகப்பரப்பில் அதிகப்படுத்த வேண்டியது அவசியம்.அதை நாடுகளின் அரசியல் தீர்மானங்களாக மாற்ற வேண்டியதும் அவசியம்.ஆனால் அது தொடக்கம் மட்டுமே. அதற்கும் அப்பால் அரசியல் நலன்களின் அடிப்படையில் எப்படிச் சுழித்துக்கொண்டு ஓடுவது என்பதை ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More