இலங்கை பிரதான செய்திகள்

போலித் தகவல்களை பரப்புவோர், பிடியாணையின்றி கைது செய்யப்படுவர்!

சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்கள், நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிட்டு, அவற்றைப் பரப்புவோரை பிடியாணையின்றி கைது செய்யும் அதிகாரம் உள்ளதாக காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

அத்தகைய போலித் தகவல்களால் ஏற்படக்கூடிய குற்றங்கள் தொடர்பில் காவற்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவது, இனங்களுக்கு இடையே அல்லது மதங்களுக்கு இடையே விரிசல் ஏற்படுத்துவது, சிறுவர்கள் அல்லது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், மத நம்பிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது, பல்வேறு மோசடிகளுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவது என்பன அந்த குற்றங்களாகும்.

அத்துடன், போலித் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு முரணாக செயற்பட தூண்டப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தண்டனை சட்டக்கோவையிலுள்ள சரத்துகள், சிவில் மற்றும் அரசியல் சமவாயத்திற்கான சட்டங்கள், கணினி குற்றங்கள் சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம், அவதூறு கருத்துக்கள் சட்டம் ஆகியவற்றுக்கு அமைய இந்த செயற்பாடுகள் தொடர்பில் பிடியாணை இன்றி சந்தேகநபர்களை கைது செய்ய முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி திட்டமிட்ட வகையில் அல்லது தனிப்பட்ட ரீதியில் பொய்த் தகவல்களை பரப்புதல் அல்லது அதற்கு உடந்தையாக செயற்படுதலை தவிர்க்குமாறு காவற்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட சில அரச நிறுவனங்களின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எனும் அமைப்பின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.