இலங்கை பிரதான செய்திகள்

கண்ணதாசன் விடுதலை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசன், போரின் முடிவில் படையினரிடம் சரணடைந்து மறுவாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற மிருதங்க கலைஞர்களில் ஒருவரான கண்ணதாசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.

கிளிநொச்சி மாவட்டம் உருத்திரபுரம் பகுதியில் 2007 ஜனவரி மாதவாக்கில், மஞ்சுளா விஜயபாலன் எனும் சிறுமியைக் கட்டாயமாக விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்த்ததாக அவருடைய தாயார், கண்ணதாசன் மீது 2014 மார்ச்சில் வழக்கு தொடுத்தார். அடுத்த ஆண்டே பயங்கரவாத விசாரணைப் பிரிவு காவரஹதுறையினரால் கைது செய்யப்பட்ட கண்ணதாசன், பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

அதனடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆள்களைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றால் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இந்தத் தண்டனையை எதிர்த்து க.கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேன்முறையீட்டு மனு மீது இரண்டு ஆண்டுகளாக விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 2020 ஜூலை 22ஆம் திகதி அவரது ஆயுள் தண்டனையை ரத்துச் செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுக்க அனுமதியளித்திருந்தது.

இந்த நிலையில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை மீள விளக்கத்துக்கு எடுப்பதற்கு வவுனியா மேல் நீதிமன்றில் மீளவும் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. வழக்குத் தொடுனரான சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி, குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய விண்ணப்பம் செய்தார்.

கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.

வழக்குத் தொடுனர் தரப்பு விண்ணப்பத்தை நிராகரித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், எதிரியை விடுவித்து விடுதலை செய்து கட்டளையிட்டார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.