இலங்கை கட்டுரைகள்

வன்முறையாக எதிர்கொள்ளப்படும் சிந்தனையும் சமூகங்களின் பொறுப்புணர்வும்! கலாநிதி சி. ஜெயசங்கர்!

எல்லோரும் ஆடியே பாடுவோம்.
எல்லோரும் பாடிக் கொண்டாடுவோம்.
வாழ்க்கையை அழகாக மாற்றுவோம்

சிட்டுகளின் சிறகினை வாங்குவோம்
பூக்களின் வாசத்தை வாங்குவோம்
வாசமாய் எங்கெங்கும் பரவிடுவோம்.

அலைகள் போல் மகிழ்வாகப் பொங்குவோம்
மலைகளின் உயரத்தை வாங்குவோம்
பூமியில் மகிழ்வாக வாழ்ந்திடுவோம்

(இந்தியாவின் மூத்த பெண்ணிலைச் செயற்பாட்டளாரான கமலா பாசினால் ஹிந்தியில் ஆக்கப்பட்ட பாடலின் பகுதி)


சமூக ஊடாட்ட வெளிகளை வெறுமையாக்குதலை அல்லது இயந்திரத்தனமாக்குதலையும் மக்களது சிந்தனையை உறைநிலைக்குக் கொண்டுவருதலையும் திட்டமிட்டுக் கனகச்சிதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்ச்சித் திட்டத்துள் வாழ்பவர்களாக மனிதர்கள் வடிவமைக்கப்படுகிறார்கள், மனிதர்களது கற்பனை, சிந்தனை, படைப்பாற்றல். விமர்சன நோக்கு என்பவை வன்முறைகளாகக் கணிக்கப்படுகின்றன. கண்காணிக்கப்படுகின்றன. ஒன்றுக் கூடிப் பலதும் த்தும்’ பேசுவதற்கான வீடுசார்ந்த, பொதுவிடம் சார்ந்த வெளிகளில் கூடுவது சாத்தியமற்ற ஒரு அவசர நிலை அன்றாட வாழ்க்கையாகப் பிடர் பிடித்தாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.


தொழிற் சந்தைக்கான பண்டங்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாக கல்வி நிறுவனங்கள் மாற்றம் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையே பொழுதுபோக்குத்தான் என்பதாக வெகுசன ஊடகங்கள் இரவு பகலாக நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன.

கல்வி, வெகுசன ஊடகங்கள் என்பவை சுயாதீனம் கொண்ட அறிஞர்களாலும், பத்திரிகையாளர்களாலும் தீர்மானிக்கப்படும் அல்லது முன்னெடுக்கப்படும் நிலைமை மாறி வணிக நோக்கும் அரசியல் அதிகாரமும் அல்லது அரசியற் கீழ்படிவும் கொண்ட முதலாளிகளாலும் அவர்களது நோக்கை நடைமுறையாக்கும் நிர்வாகிகளாலும் தீர்மானிக்கப்படுவதாகவும் கட்டுப்படுத்தப்படுவதாகவும் நிலைமாற்றம் கண்டுள்ளன.


இவற்றுக்குத் தடைக்கற்களாக இருக்கின்ற தனிநபர்கள். அமைப்புக்கள், சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள். தொழிற்சங்கங்கள் என்பவற்றை அதீத அபிவிருத்தியின் தடைக்கற்களாகவும் சனநாயக விரோத சக்திகளாகவும் முகமாற்றித் தீவிரவாத சக்திகளாக அடையாளப்படுத்தி வலுக் குன்ற அல்லது நீர்க்கச் செய்வது திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வாறு வலுக்குறைவுற்றவை அல்லது இல்லாமலாக்கப்படுபவை கொண்டாட்டங்களுக்குரியனவாக மக்கள் மயப்படுத்தப்படுகின்றன.

போர்கள், இயற்கை அனர்த்தங்கள் என்பன காரணமான இடப்பெயர்வுகள், நிவாரணங்கள், மீள்குடியேற்றங்கள் என்பவற்றினைப் பயன்படுத்திச் சமூதாயச் சிதைவுகளை மிக வேகமாக ஏற்படுத்துவது வழிமுறையாகி இருக்கிறது. போர் அல்லது இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றின் பின்னான மீள்குடியேற்றம், மீள்கட்டமைப்பு என்பவை இவ் வகையிலான நிகழ்ச்சித் திட்டங்களின் அடிப்படையிலேயே நிகழ்த்தப்பட்டு வருவதை அவதானிக்கலாம்.


நடைமுறையிற் செய்யப்படும் விடயங்களும் பேசப்படும் விடயங்களும் யாருக்கானவை என்பதும் எதற்கானவை என்பதும் முக்கியமான கேள்விகளாக இருப்பினும், அவை கேள்விகட்கிடமற்ற கடமைகளாகவும் கொண்டாட்டங்களாகவும் அணுகப்பட்டும், நிகழ்த்தப்பட்டும் வருவதையும் காணமுடிகின்றது.


தாரளமயமாக்கற் பொருளாதாரமும் அதன் முகமாகிய தனியார்மயமாக்கமும், பண்பாட்டையும் சிந்தனைக்கிடமற்ற பொழுதுபோக்குப் பண்பாட்டையும் உலகப் பண்பாடாகவும் நடைமுறையாகவும் மாற்றியமைத்து வருகின்றன.


காடுகளில் இருந்து மிருகக்காட்சிச்சாலைகளுக்கான வாழ்க்கை மாற்றத்திற்கான சாய்த்துச் செல்லுதல்கள் மிகப்பெருமளவில் நடந்தேறி வருகின்றது. அபிவிருத்தி பற்றிய விளக்கங்களும் வியாககியானங்களும் வரைவிலக்கணங்களும் இதனைப் புலப்படுத்துவனவாக இருக்கின்றன.
வாழ்க்கையை இலகுபடுத்தும் மின்னணு நடைமுறைகளின் ஊடாக ஒவ்வொரு மனிதரது சாதகங்கள் மட்டுமல்லாது காண்டங்களும் காப்பகங்களில் ஆவணப்படுத்தப்பட்டு அவர்களது நடவடிக்கைகளை அதிகரித கதியில் அறியக்கூடிய வகையில் பேணப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.


உள்ளூரில், நேரடித் தொடர்புகளில், உரியவர்களால் தீரமானிக்கப்படும் செயற்பாடுகளிலிருந்து நீக்கம்பெற்றுத் தீர்மானங்கள், நடைமுறைகள் என்பவை அதிகாரமற்ற உபநிலையங்கள் வழிச் சர்வதிகாரங்களுங் கொண்ட மைய நிலையங்களாற் கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கவும்படும் நிலையை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.


இது. சந்தையில் எந்தக் கத்தரிக்காய் விற்கப்பட வேண்டும் என்பதிலிருந்து ஒரு தேசத்தின் தலைவராக எவர் வரவேண்டும். என்பதும் வரையிலும், அதற்கு மேலாகவும் எதையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டதாக இருக்கின்றது.

செங்கம்பளங்கள் விரிக்கப்பட்டு
திருட்டு வழிகள்
இராஜபாட்டைகள் ஆக்கப்படுகின்றன.

ஊடகங்களில் வெளிவராதவை
செய்திகளாகப் பரவுகின்றன
அதியுன்னத புனைவுகள்
தலைப்புச் செய்திகளாகி
மடைமாற்றும் செய்யப்படுகின்றன

அமைதிவழி எதிர்ப்புக்கள்
கொலைக் குற்றங்களாக
பதிவுசெய்யப்படுகின்றன.

வன்முறையும் வாணிபமும்
அதிகாரத்தின் அhர்த்தமென
ஒழுகப்படுவதாகிறது

கேள்விகள்
கேட்கப்பட முடியாத
குற்றங்களாகின்றன
கருத்துக்கள்
சொல்லப்பட முடியாத
விடயங்களாகின்றன.
இத்தகைய நிலைமையைக் கட்டமைப்பதிலும், காப்பாற்றுவதிலும் செலுத்தும் கவனத்தின் அம்சமாகவே. இதற்குரிய மனித சமூகம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்படுகின்றது. இதனைக் கருத்திற் கொண்டே சமூகப் பொருளாதாரப் பண்பாடும் மற்றும் கல்வி நடவடிக்கைகளும் திட்டமிடப்படுகின்றன. வடிவமைக்கப்படுகின்றன. நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதற்குச் சிந்தனைத்திறம் முடக்கப்பட்ட சமுதாயத்தன்மை அகற்றப்பட்ட அல்லது நீக்கம் பெற்ற அதிநவீனர்களான தனியர்களின் அல்லது தனித்தோர்களின் உருவாக்கம் தேவையானதாக உணரப்பட்டு அதன் உருவாக்கங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவ் வகையில், தொழிநுட்பக் கருவிகளின் உருவாக்கமும் பெருக்கமும் பரவலாக்கமும் இதனைச் சாத்தியமாக்கி வருவதைக் கண்டுகொள்ள இயலுகிறது.


இதன் காரணமாகவே மனித அடிப்படைத் தேவைகளை சாத்தியமாக்குவது சவால்கள். நிறைந்ததாக இருக்க, தொழிநுட்பச் சாதனங்களின் பாவனை சர்வசாதாரணமாகி இருக்கிறது. ‘செல்போன்’ இல்லாக தனிநபரும் ‘டிஷ் அன்ரனா’ இல்லாத தனிவீடும் இல்லை என்ற நிலையே இந்த நிலைமையின் வெளிப்பாடாக இருப்பதனைக் காணலாம். குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கதைப்பதற்கு அலைபேசி இல்லாமல் இருக்க முடியாது என்பது யதார்த்தமாகி இருக்கின்றது.


அல்பேட் ஐன்ஸ்ற்றைன் அஞ்சிய அந்த நாட்கள்
வந்துவிட்டன
‘மனித உரையாடல்களை இல்லாமல் ஆக்கிவிடும்
தொழிநுட்பத்தின் அந்த நாளுக்காக நான்
அஞ்சுகிறேன். முட்டாள்களின் தலைமுறையைக்
கொண்டதாக உலகம் இருக்கப் போகின்றது.’
அல்பேட் ஐன்ஸ்ரீன்

வீட்டுக் கிணற்றுத் தண்ணீர ஏன் குடிக்க முடியாத நிலைக்கு வந்திருக்கின்றது என்ற கேள்வி இங்கு முக்கியமல்ல, அல்லது அக கேள்வி எழுவதில்லை. ஆனால் பல்தேசிய நிறுவனங்களது குளிர்பானங்கள் இல்லாத அன்றாட வாழ்க்கையை, வாழ்க்கையின் கொண்டாட்டங்களைக் காணுவது சிரமமானதாகி இருக்கிறது. அவ்வாறான குளிர்பானங்கள் அற்ற கொண்டாட்டங்கள் நாகரிகமற்றதென நம்பும் பண்பாடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

தண்ணீருக்கும் மனிதருக்குமான உறவு
தகர்ந்து நாட்கள் வெகுவாயிற்று
காணுமிடங்களில் எல்லாம்
கையேந்தி குடித்து
கொண்ட பரவசம்
கனவுகளுக்கும் நினைவுகளுக்கும்
மட்டுமென ஆயிற்று

காற்று மீதான சந்தேகங்கள்
புத்தியில் எழுதப்படலாயிற்று

மர்மக் கதைகளில் தோன்றும்
மாய்த் தேவதைகள்
மதாளித்துக் காய்கறி கனியென
மக்காது மினுங்கிக் கடக்கும் பலகாலம்

தொகை பெருக்கும் மனிதருக்கு
போதாது வாழ
பூமித்தாய் சுரக்கும் வளங்கள்

பணம்பெருக்க முனைவோர் குரலுக்கு
குரல் கொடுக்கும் மூளை வணிகம்

உலகம் வாழ்வும்.
பண்டமும் பணமுமென ஆகிறது
மனித வாழ்வு
உழைப்பும் நுகர்வுமென மாறிற்று

பாரம்பரியமான உணவுகள் பாவனையிலிருந்து மட்டுமல்லாமல் நினைவிலிருந்தும் அகற்றப்பட்டிருப்பதை உணரமுடியாதவர்களாக மனிதர்கள் ஆக்கப்பட்டுள்வார்கள்.
பெண்களது உடைகளில் பண்பாட்டுச் சீரழிவுகளை கண்டுபிடித்துத் தண்டிக்கத் திரியும் பண்பாட்டுக் காவலர்கள் எவரது கண்களிலும் இந்த விடயமும் இது போன்ற பல்வேறு விடயங்களும் படத்தவறுகின்றமை முக்கிய கேள்விக்குரியது. ஏனெனில் இது அவர்கள் யார் என அடையாளப்படுத்துவதாக இருக்கிறது.

‘தானியங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுபவர்களானால் உணவைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள். அவர்களுக்கு அது தெரியும். அதுவொரு தந்திரோபாயம், இது வெடிகுண்டுகளை விட அதிகம் சக்தி வாய்ந்தது. இது துப்பாக்கிகளை விட மிகவும் சக்தி வாய்தது. இந்த உலகத்தின் மனிதர்களை கட்டுப்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழி இதுதான்.’
வந்தனா சிவா

திரை நட்சத்திரங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் குருபூசைக்குரியவர்களான புதிய நாயன்மார்களாக வெகுசன ஊடகங்களால் குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்களாற் கட்டமைக்கப்பட்டு வருகிறனர், இந்தப் பூமியில் சிந்திப்பதற்கு என்று எதுவுமே இல்லை எல்லாமும் கும்மாளக் கொண்டாட்டந்தான் என்பதாகவே இலத்திரனியல் ஊடகங்கள் கட்டமைத்துவரும் கடலகம் காணப்படுகின்றது.


சனநாயகத்தின் காவலரண்களாகக் கருதப்படும் வெகுசன ஊடகங்கள் அதிகாரத்தின் இருட்டு வணிகத்தின் காவலரணாகமாற்றம் கண்டிருக்கின்றவ. கடன்கள், நுண்கடன்கள். குத்தகைகள் என்ற நிதிசார் வணிக நடைமுறைகள் வறுமை ஒழிப்புக்கு மாறாக எவ்வாறு மக்களை வருத்திச் சுரண்டுகின்றன. தற்கொலைக்கும், அழுத்தங்களுக்கும். குடும்பச் சிக்கல்களுக்கும், சிதைவுக்கும் இட்டுச் செல்கின்றன என்பது அவற்றுக்குப் பெருவிடயமல்ல.

‘நீங்கள் அவதானமாக இராவிட்டால், ஒடுக்கப்படுபவர்கள் வெறுக்கத்தக்கவர்களாகவும் ஓடுக்குபவர்ள் உங்களுக்கு விரும்பத்தக்கவர்களாகவும் பத்திரிகைகள் உங்களை ஆக்கிவிடும்.’.
மல்கம் எக்ஸ் மேற்படி அதிக வட்டிஈட்டும் நிதிநிறுவனங்களின் வருமானங்களும் இலாப வீத அதிகரிப்புகளும் பொருளாதாரத்தின் பெருமிதமாக ஊடகங்களின் நிதிப்பக்கங்களை நிதிநிறுவன நிர்வாக இயக்குனர்களின் மலர்ந்த முகத்துடனும் குத்தாக மேலேறும் வரைபுகளுடனும் விபரிப்பதே விடயமாகி இருக்கிறது. நிறைவேற்று அதிகாரச் சனாதிபதி ஆட்சிமுறையற்ற இலங்கைத் தீவின் பொருளாதாரநிலை என்னவாகும் என்பது பற்றிப் பொருளியல் அறிஞர்கள் சந்தேகந் தெரிவிக்கின்றதையும் கேள்வியெழுப்புவதையும் காணமுடிகிறது.

நீடித்துச் செல்கின்றன
வேலை நேரங்கள்
உயர்ந்துயர்து செல்கின்றன.
வாழ்க்கைச் செலவுகள்

சீர்கெட்டு
மீளமுடியா வழியில் காலநிலை

வலை விரித்து
வாழ்வின் அவசியமாய் வேவுபார்த்தல்

போர்கள் நிகழ்ழிந்தபடியே
உலகின் பல இடங்கள்
இருங்கீசச் சுருங்கி

இடமற்றுப் போகின்றது
பொதுசன சுதந்திரம்

யார் வாழ்கிறார்கள்?
யாருக்காக வாழ்கிறார்கள்’

முன்னேற்ற முகங்காட்டி
அபிலிருத்திக் கோணியுள்
சுருட்டி அள்ளிச் செல்கிறது.
ஆதிக்கப் பூதம்

சில உதாரணங்கள் மூலம் இதனை விளங்கிக் கொள்ள முடியும். வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை இழக்க விரும்பாத ஊடக வணிகம் கைவிடுவது பொதுமக்களது துயர் நிலையைத்தான் என்பதொன்றும் இரகசியமல்ல. வணிகத்தைப் பாதுகாப்பதற்கு அரசியலும் ஊடகமும், அரசியலை நடத்துவதற்கு வணிகமும் ஊடகமும், ஊடகத்தை நடத்துவதற்கு வணிகமும் அரசியலும் இணைந்து இயங்கி வருவதை இங்கு காணலாம். வணிகம். அரசியல், ஊடகம் என்ற முக்கோணத் தொடர்பு கொண்ட செயற்பாடாக இது இருந்து வருகின்றது. இப் பின்னணியில் சனநாயகத்தையும் சனநாயகத்தின் காவலரணின் சீத்துவத்தையும் புரிந்து கொள்வதொன்றும் சிரமமானதல்ல.


ஆரம்பத்தில் ‘புதிய கலாசாரம்’ ‘புதிய சனநாயகம்’ சஞ்சிகைகளின் கட்டுரைகளை முதல் பக்கத்தில் பிரசுரித்து மாற்றுப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்த சரிநிகருக்குச் சவாலாக அமைந்த தேசியப் பத்திரிகையான தினக்குரல், இப்போது ‘அழகி’ என்ற பெயரில் பெண்களுக்கான இதழை வெளியிடுவதில் வந்து நிற்க்கிறது. அதுபோல நீண்ட வரலாறு கொண்ட தேசிய தினசரியான வீரகேசரி ‘பெண்ணியம்’ என்ற பெயரில் மித்திரன் வாரமலர் பத்திரிகையின் உபஇதழை வெளியிட்டு உலகத் தமிழர் மத்தியில் பரவும்வகை செய்து வருகின்றது.


அழகி, பாவை, பூவை என பெண்கள் அழைக்கப்படுவதிலிருந்தும் நடத்தப்படுவதிலிருந்தும் விடுவிப்பதற்கான பெண்ணிலைவாத அல்லது பெண்ணியச் செயற்பாடுகள். இயக்கங்கள் சிறுசிறு அளவில் முன்னெடுக்கப்பட்டு பொதுப் பண்பாட்டில் பெண்களும் ஆண்களுக்குச் சமதையான ஆளுமைகள் என நிலைநாட்டப்பட்டு வருகின்ற சமூக இயக்கப் போக்கில் ‘பெண்ணியம்’ என்ற பெயரில் மேற்படி கருத்தாக்கத்திற்கு எதிரான விடயங்களைத் தாங்கி தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பெரும் ஊடக நிறுவனம் முன்னெடுத்து வருவதென்பது அதிர்ச்சியளிக்கும் விடயமாகவே பார்க்கமுடிகிறது.

இது எந்த வகையிலான துணிச்சலும், நோக்கமும் கொண்டது என்பது தீவிரமான சிந்தனைக்கான விடயமாகும். ‘தலித்தியம்’ என்ற பெயரியல் பார்ப்பனியக் கருத்தாக்கங்களைப் பரவலாக்குவது எந்தளவிற்கு ஆபத்தானதோ கேள்விக்குரியதோ அல்லது மாக்சியம் என்ற பெயரில் முதலாளிய கருத்தாக்கங்களை பரவலாக்குவது எந்களவிற்கு ஆபத்தானதோ கேள்விக்குரியதோ அந்த வகையினதே ‘பெண்ணியம்’ என்ற பெயரில் பெண்ணியச் சித்தாந்தங்கட்கு எதிரான விடயங்களைப் பிரசுரிப்பதும் பரவலாக்குவதுமாகும்.


இவ் வகையிலேயே பெண்கள் தினம், தொழிலாளர் தினம் என்பவையும் வெகுசன ஊடகங்களின் வணிக நோக்கினால் முகஞ் சிதைக்கப்பட்டவையாக இருக்கின்றன. பண்பாட்டுத் தினங்கள் இந்த வகையில் முகச்சிதைப்பிற்கும் சின்னாப்பின்னப்படுத்தல்கட்கும் உரியவையாகி இருக்கின்றன. நவராத்திரியை ஒட்டிய ஆயுத பூசை தினத்தில் ‘ஆயுத பூசை’ திரைப்படத்தை காட்சிப்படுத்துவதும், தைப்பொங்கல். தீபாவளி, புதுவருடம், நத்தார் போன்ற பண்பாட்டுத் தினங்களில் திரை நட்சத்திரங்களின் கலக்கல்கள், கலாட்டாக்களாக மாற்றியமைக்கப்பட்டு இலத்திரனியல் ஊடகங்களில் அவை நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
நீண்ட மரபுகளைக் கொண்ட ஊடகங்கள் இவ் வகையான வணிகத்தனங்களாற் கூட பீடிக்கப்பட்டவையாக நிலைமாறிக் காணப்படுகின்றன. வுiஅநள ழக ஐனெயை வில் நடிகை தீபிகா படுகோனேயை சித்திரித்த விவகாரம், அதற்கு தீபிகா படுகோனேயின் எதிர்வினை, எதிர்வினைக்கான பத்திரிகையின் எதிர்வினை என்பன ஊடகத்துறையின் உயர் பண்பாடு வணிக நஞ்சுட்டம் பெற்றிருப்பதன் வெளிப்பாடு என்பதாகவே அவை பற்றிய உரையாடல்கள் வெளிப்படுத்தியிருந்தன. நடிகை கேற் வில்சனின் ஆபாசப் புகைப்படத்தை பிரசுரித்துப் பழிதீர்த்துக் கொண்டமை புதிய ஊடகப் பண்பாடாகி உலகப் பரப்பில் ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி இருப்பதும் புதினமல்ல.
இவ்வகையில் வெகுசன வாட்கங்கள் என்பவை வணிக நோக்கும் அரசியல் ஆதிக்க நிலைநிறுத்தமும் அதற்கான கட்டுப்படுத்தலுக்குமான வகையில் தகவல்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் தொழிற்சாலைகளாக மாற்றங்கொண்டு இயங்கி வருகின்றன.


பெருவணிகம் இதற்கான அரசியல் இவை இரண்டிற்காகவும்; இரண்டுமாகவும் வெகுசன ஊடகம் என்பது ஆதிக்கம். பெற்றிருக்கின்ற நிலைமையில் புனைவுகளுக்கும் தயாரிப்புகளுக்கும் ஊடாக சிந்தனையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையும் நோக்கமாகக் கொண்டவையாக இயங்கி வருகின்றன.

இதன் இன்னொரு முகமாகவே நவீன கல்விச் செயற்பாடு காணப்படுகின்றது. போட்டிப் பரீட்சை ஊடாக சான்றிதழ் பெற்று தொழிலில் அமர்வது ஒருபுறமும், புதிய வகை கூலித் தொழிலாளர்களை உருவாக்குவது இன்னொரு புறமுமாக காணப்படுகின்றது. சந்தைப்படுத்துவதற்கான பண்டங்களை உற்பத்தி தொழிற்சாலைகளாக கல்விச் செயற்பாடு செய்யும் கல்விக் களங்கள் மிகவும் வேகமான வகையில் உருமாற்றப்பட்டு வருகின்ற அதேவேளை அவை சிந்தனைக் களங்களாகவும் செயற்பாட்டுத் தளங்களாகவும் இருந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்துகின்ற நிர்வாகப் பொறிமுறை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகின்றது. இராணுவ, பொலிஸ் காவலரண்கள், கண்காணிப்பு கமராக்கள், பொது ஊடாட்டங்களுக்கான கட்டுப்பாடுகள். மட்டுப்பாடுகள். கண்காணிப்புகள் என இவை காணப்படுகின்றன.


குறிப்பாகச், சுயாதீன வெளிகளான உயர்கல்விக் கழகங்களின் நிலையிழப்பிற்கு பங்களிப்புச் செய்பவர்களாக சுயநலப் புலமையாளர்களும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சுயநல நோக்கம் கொண்டு தராதரமற்ற தெரிவுகளை மேற்கொள்வது, இருப்புகளுக்காக அதிகாரங்களுக்கு அடிபணிந்து இயங்குவது, சுயாதீனமான கல்வீச் சூழலில் சமூகங்களுக்குப் பொருத்தமானவற்றை கற்றலுக்கான தெரிவுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாமை. உதாரணமாக, மாக்சிய அழகியலை ஈழத் தமிழர் தம் நவீன கலை இலக்கியப் பரப்பில் முன்னெடுத்தவர்கள், வலியுறுத்தியவர்கள். வற்புறுத்தியவர்கள், சுயாதீனமாகப் பல்கலைக்கழக ஆய்வு அறிவுச் சூழலில் மாக்சிய முறையியல்களையோ அல்லது மாற்று முறையியல்களையோ எந்தளவிற்கு நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் என்பது இன்னமும் கேள்விக்குரியதாகவே இருந்து வருகின்றது.

காட்டுமிராண்டித் தனமாகவும் நவவஞ்சகமாகவும்
தோற்கடிக்கப்பட்டனர் எம் மூதாதையர்
தலைமுறை தலைமுறையாகப் புதுப்புது வழிகளில்

குறையாடியப்படியே ஆயினும்
தனவான்களாகவும் கோமகன்கணகவும்
எங்களில் தங்களைத் திணித்துக் கொண்டனர்
எம் சுயத்தை உருவி வீசி
தம்சேவகச் சடங்களாய்
பதனிட்டுப் போயினர் வெள்ளைத் திமிரர்

புதியவர் வந்தனர் கறுப்புத்தோலில்
பிரதி செய்யப்பட்ட வெள்ளைத் திமிரராக…
செய்மதி விடுவதும் ஏவுகணை சுடுவதும்
அவர் செய்வர்
வாரீர் எம் புதல்வீர் புதிய கூலியராய்…

உல்லாசப் பயணம் வரும்
வெள்ளைத் திமிரருக்கு பரிசாரகர் ஆகலாம்.
நோயுற்று வீழுகையில் பரிகரிக்கும் தாதியரும் ஆகலாம்
வாரீர் எம் புதல்வீர் ஏற்றுமதி ஆகலாம்
என்று கூவிப் புதியவர் வந்தனர்.

களையாத கேசமும் குறையாத செல்லமும்
அதிகாரத்துடனோர் கபடுவாராத நட்பும் பூண்ட
பிரதி செய்யப்பட்ட வெள்ளைத் தீமிரராக
புதியவர் வந்தனர் கறுப்புத் தோலில்

கற்பிக்கப்படுபவற்றின் பொருத்தப்பாட்டை, கேள்விக்குள்ளாக்கும் ஆசிரியர் சமூகமும் கற்பவற்றின் பொருத்தப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் மாணவர் சமூகமும் உருவாகுவதன் தேவை அதி அவசியமாக உணரப்படுவதாக இருக்கிறது. கற்றலின் நோக்கம் என்ன என்பதை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மக்களது சமூக உருவாக்கம் இதற்கு அடிப்படையானது.

அப்பா அம்மாவினது கடமைகள் என ஆங்கிலப் பாடநூலில் வகுக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் மோட்டார் சைக்கிளில் தாயால் அழைத்து வரப்படும் பிள்ளையொருவர் அம்மாவின் கடமையாக மோட்டார் சைக்கிளில் தன்னை அழைத்து வருவதை பரீட்சையில் எழுத, மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு வரும் ஆசிரியையால் அது பிழையானதெனப் புள்ளியிடப்படுவதும், ஈழத் தமிழர்களின் பாரம்பரிய அரங்கான கூத்து வட்டக்களரியில் ஆடப்படுவது. வலுவான யதார்த்தமாக இருக்கப் படச்சட்ட மேடையில் நவீன நாட்கமாக ஆற்றுகை செய்யப்பட்ட இராவணேசன் கூத்தெனக் கற்பிக்கப்படுவதும், பரீட்சை வினாவாகத் தொடர்ந்து வருவதுமான’ முரண்நிலைகளின் களமாகவும், கிரிகைகளாக அமைந்த செயல்முறைகளாகவும் நிலவிவரும் கல்விச்சூழல் பற்றிய எந்தவிதமான வினாவுதலுமற்று மேற்படி பரீட்சைகளில் வெற்றி பெற்றவர்கள் பாராட்டுக்குரியவர்களாகவும், தோல்வியுற்றவர்கள் அறிவிலிகளாகவும் மதிப்பிடப்படுவது அபத்தமில்லையா?


சமகாலக் கல்விமுறை பற்றி 80கள், 90களின் ஈழத் தமிழரது கல்வியல் அரங்கு வலுவான எதிர்வினையாற்றி இருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டியதுழூ ஆயினும் மேற்படி கல்வி முறையினால் அந்த அரங்கும் விழுங்கப்பட்டிருக்கிறது என்பதும் உண்மையானது.
இந் நிலையிற் பல்கலைக்கழகங்களைத் தனியார்மயப்படுத்துவது என்பது மேலும் சிக்கலான நிலைமைகளைத் தோற்றுவிப்பதுடன் உலக பிரசித்தமான இலங்கையின் இலவசக் கல்வி முறைமையினையே இருப்பற்றதாக்கிவிடும் சூழலை உருவாக்கவல்லது.


சர்வதேசப் பாடசாலைகளில் தொழிற்சந்தைக்கான உற்பத்திகளாகப் பயிற்றுவிக்கப்படுவதுடன் கூடவே பிறநாடுகளின் வரலாறும் பண்பாடும் படிப்பதும் அத்தகைய சூழலிற் பணிபுரிவதும் அத்தகைய சூழலை உருவாக்கும் ஊடகங்களாக மாணவர்கள் அமைவதும் நிகழவல்லது.
நவீன அறிவு முறையும் அதன் உருவாக்க நிலையமான பல்கலைக்கழகமும் காலனித்துவத்திற்கு முந்திய அறிவு முறைமைகளையும் ஆக்கத்திறன்களையும் பாமரத்தனமானவை, மூடநம்பிக்கைகள் எனக் குணாதிசயச் சிதைப்புச் செய்து திரிசங்கு உலகத்தில் வாழும் மனிதர்களை ஏலவே உருவாக்கி வருவதும் கண்கூடானது.


படைப்பாக்கங்களும், கண்டுப்பிடிப்புக்களும் ‘எங்களுக்கு இயலாதவை’ ‘ஆங்கிலேயர்களால் தான் முடியும்’ ‘அவர்கள் கண்டுபிடிக்கட்டும் நாங்கள் பாவிப்போம்’ ‘எங்களுக்கு வசதி வாய்ப்புக்கள் இல்லை’ ‘நாங்கள் சோம்பேறிகள்’ என்று தங்களைத் தாங்களே சொல்லும் மாணவர் குழாமே பன்னிரண்டு வருடகால முழுநேர கல்விப் புலத்துள் இருந்து பெரும் போட்டி பரீட்சைகள் தாண்டி பல்கலைக்கழகம் புகும் பல்வேறு துறைகளையும் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதும் ஆச்சிரியமானதல்ல,

கண்டுபிடிப்புக்கள், கண்டுபிடிப்பாளர்கள் அட்டவணைகளில் இலங்கையர்களின் பெயர்கள் ஏன் இருப்பதில்லை என்ற சாதாரண கேள்வி பன்னிரண்டு வருடகாலப் பாடசாலைக் கல்விச் செயற்பாடு உள்ளார்ந்து ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் புலப்படுத்துவதாக இருக்கிறது என்பது தான் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது.


இதன் இன்னொரு கட்டமாகவே தொழிற் சந்தைக்கு தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாற்றி அமைக்கப்பட்டுவரும் பல்கலைக்கழக தொழிநுட்ப பொறிமுறையின் உதிரிப்பாகமாக அல்லது அலகாக பட்டதாரிகளை உருவாக்கும் அல்லது வடிவாக்கம் செய்யும் அல்லது தாயாரிக்கும் கைங்கரியமாகவே பார்க்கப்படுகின்றது. இது ஒப்பீட்டளவில் உரையாடலுக்கும் செயற்பாடுகளுக்கும் களநிலமாக அமையும் பல்கலைக்கழகச் சூழலை அந்நிலை அற்றுப் போகச் செய்யும் உள்ளார்ந்த நடவடிக்கையாக அமைகிறது.


தீவிரவாத, அடிப்படைவாத சக்திகளின் போராட்டங்கள், ஊர்வலங்களுக்கு வழங்கப்படும் அனுமதி, அளிக்கப்படும் பாதுகாப்பு என்பன கல்விக்கான அரச நிதி அதிகரிப்புக்கான கோரிக்கையை முன்வைத்தும் இராணுவ, அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க கோரும் மாணவரது போராட்டங்களுக்கு மறுக்கப்படுவதும் பின்னவை தாக்குதலுக்கு அல்லது சட்ட நடவடிக்கைக்கு உட்படுவதும் வெளிவாரியான கட்டுப்படுத்தலாக அமையக் காணலாம்.

‘அரசாங்கங்கள் தங்களுக்குச் சாத்தியமான தொழிநுடபங்கள் அனைத்தையும் தங்களது முதன்மையான எதிரிக்கு எதிராக, அதாவது அதன் சொந்த மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தும்’
நோம் சொம்ஸ்கி

மாணவர்களை ஆயுட்காலக் கடனாளிகள் ஆக்கும் பொறிமுறைகளைக் கொண்டதாக கல்வி முறை பெற்றிருக்கின்ற மாற்றம் எதிர்ப்புக்களை உலகப் பரப்பில் உருவாகியிருப்பதை அமெரிக்க, மேற்குலக கல்விச் சூழலில் காணக் கூடிதாக இருக்கிறது. உயர்கல்வி நிலையங்கள் பல்தேசிய நிறுவனங்களால் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கிறன. பல்தேசிய நிறுவனங்களின் வலுவான இருப்பிற்கு ஏற்ற வகையில் உயர் கல்வி நிறுவனங்கள் தகவமைக்கப்படுவது விரைவாக நடந்தேறி வருகின்றது. அதன் நீட்சியை உலகெங்கிலும் உணரக்கூடியதாக இருக்கிறது.


அடிப்படை உரிமைகள், நீதி நியாயங்களுக்காகக் குரல் கொடுக்கும் புலமையாளர்கள் உடனடிப் பதவிநீக்கம் பெறும் செய்திகள், அதற்கெதிரான போராட்டங்கள் என்பவை முகநூல்களிலும் தன்னார்வ இணையத் தளங்கள் வழி உலகம் முழுவதும் பரப்பப்படுவதும் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதும் நிகழ்ந்து வருகின்றது.


இவையெல்லாம் வெகுசன ஊடகங்கள் எதனதும் செய்திகளாக இருப்பதில்லை. உலகப் பிரசித்தமான செய்தி நிறுவனங்களும் குறிப்பாக நடுநிலையான அல்லது பக்கச் சார்பற்றதென முத்திரைகுத்திக்கொள்ளும் செய்தி நிறுவனங்களுக்கும் இவை செய்திகளாவதில்லை. வெகுசன ஊடகங்களினால் எவை செய்திகளாக்கப்படுகின்றன. எவை செய்திகளாக்கப் படுவதில்லை என்ற புரிதல் உலக நிலவரத்தைப் புரிந்து கொள்வதனை இலகுவாக்கும்.

யதார்த்தங்களை அறிவர் ஆயினும்
இத்தனைக்கும் இத்தனைக்கும் பின்னர்
வதந்திகள் பொய்யெனவும்
செய்திகள் உண்மையெனவும்
யுத்தியில் பதிந்தது அதுவே ஆயிற்று

அம்பலங்கள் அற்று அடையுனிட வாழ்வில்
வெகுசன ஊடகங்கள் உலகமாயிற்று.

வியளங்களும் விடுப்புக்களும் அலசிவரும் அம்பலங்கள்.
உயிர் கொண்டு எங்கும் எப்பொழுதும்
எங்களுக்கென

இந்த வகையிலேலே விவசாயம், உணவு, மருந்து என பல்லகை உற்பத்திகளையும் கையகப்படுத்தி இருக்கும் பல்தேசிய நிறுவனங்கள் உலகின் மூலை முடுக்குகளில் உள்ள வளங்கள் எல்லாவற்றையுங்கூட தமது ஆதிக்கத்துக்குள் கொண்டுவரும் வகையில் பொருளாதாரத் திட்டங்கள், கொள்கைகள், சட்டங்கள், உரிமங்கள் என்பவற்றை தமக்கு சார்பான வகையில் உலகளவிலும், தேசமட்டங்களிலும் மாற்றியமைக்க அனைத்து வழிகளையும் கையாளும் என்பதை ஜோன் பேக்கின்ஸின் ‘பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலங்கள்’ நூல் தெளிவாக வெளிப்படுத்தும்.


இதுமட்டுமல்லாது பல புலமையாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்களது நடவடிக்கைகள் எழுத்துக்கள் என்பவை இவற்றை அம்பலப்படுத்துபவையாக இருந்து வருகின்றன.

‘மொன்சான்ரோ புளிப்பரப்பு வாசிகளாக வாழ்வதற்கு ஐ மரபணு மாற்றப்பட்ட மனிதர்களே தகமை பெற்றவர்கள்’

வான் நிறைந்த நட்சத்திரங்கள் போன்று உலகம் பூராகவும் பரந்திருக்கும் செயற்பாட்டாளர்களது ஓய்வொழிச்சலற்றதும் தியாகங்கள் நிறைந்ததுமான செயற்பாடுகளால் பண பலம், ஆயுத பலம், நிறுவன பலம், அதிகார பலம் என அனைத்துப் பலங்களையும் தன்னகத்தே கொண்ட பல்தேசிய நிறுவனங்கள் அம்பலப்படுத்தப்பட்டு இருப்பதும் காணக் கூடியதாக உள்ளது.


நவீன கல்விமுறை, வெகுசன ஊடகம், அரச அதிகாரம் என்பவற்றின் ஆதரவற்ற நிலையிலும் உலகம் தழுவிய வகையில் இது எவ்வாறு நிகழ்ந்திருக்கிறது. நிகழ்ந்து வருகிறது என்பதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். தன்னார்வம் கொண்ட தனிநபர்ககள், சிறுகுழுக்கள், அமைப்புகள், வலையமைப்புகள் என்பவை இந்த நிலைமையை நேரடியான தொடர் செயற்பாடுகள் மூலமும், செயற்பாடுகள் பற்றிய விடயப் பகிர்வுகள் மூலமும் ஒரு பகுதியினரிடமிருந்து மறுபகுதியினர் கற்றுக் கொண்டும் பெற்றுக் கொண்டும் சேர்ந்து செயற்படுவதன் மூலமுமாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.


இந்த நிலமைகள் சட்ட ரீதியாகவும் சட்ட விரோதமாகவும் ஆதிக்க சக்திகளால் எதிர்கொள்ளப்பட்டும் வருகின்றன. பல்தேசிய நிறுவனங்களின் இலாபக் கொழுப்பே அபிவிருத்தி என்றும் பொருளாதார வளர்ச்சி என்றும் புனையப்பட்டு வருகின்றது. இதனை ஏற்றுக் கொள்ளாது நிராகரிப்பது, எதிர்ப்பது வன்முறையாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக வெகுசன ஊடகங்களின் வழியாகப் புனைவுகள் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. வளர்ச்சிக்கு இடையூறான விடயங்கள் நீக்கப்பட்டு அல்லது களையப்பட்டுச் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதாக அரசு அதிகாரம் தனது தரப்பின் புனைவைப் பகிருகின்றது.
புதிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு சட்டவாக்கங்களையும் நீக்கங்களையும் ஏற்படுத்துவதன் வாயிலாகப் பல்தேசிய நிறுவனங்களின் நலன் காக்கும் விடயங்கள் தேசத்தினதும் மக்களினதும் நலன் பேணும் விடயங்களாகக் கட்டமைக்கப்படுகின்றன. வெகுசன ஊடகங்களின் செய்திகளும் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களும் இதற்குத் தகுத்த சான்றுகளாக உள்ளமை சிந்தனைத் திறமுள்ள எவரும் அவதானிக்கக் கூடியதாகும்.


இந்த நிலைமைகளின் கீழ் அரசியல்வாதிகள் எனப்படுபவர்கள் பாதாள உலகக்கும்பல்களை வேர்களாகவும், வெளிப்படைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுதுகளாகவும் பிரச்சாரப் பொறிமுறைகளைக் கிளைகளாகவும் கொண்ட பெருவணிக விருட்சங்களாகக் கைகளில் அதிகாரமும் காலடியிற் சட்டம் ஒழுங்கும் கொண்டவர்களாக அவதாரம் கொண்டிருக்கிறார்கள்

சட்டங்கள், யாப்புகள் என்பவற்றை பல்தேசிய நிறுவனமயப்பட்ட ஆதிக்க ஒழுங்குகளுக்கு ஏற்றவகையில் மாற்றி அமைப்பதற்கான முகவர்களாக இயங்கி வருபவர்களாக இருப்பது அரசியல்வாதிகளின் நடைமுறையாக இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் தெரியப்பட்டாலும் அழைக்கப்பட்டாலும் அவர்கள் உலகப் பெருவணிகத்தின் முகவர்களாக இயங்கக் காணப்படுகின்றார்கள். அதனாலேயே அவர்கள் வாங்குதற்கும் விற்பதற்குமான பண்டங்களாகியிருக்கிறார்கள்

அவர்கள் கழைக்கூத்தாடிகள்
அர்பப்பணிப்பு மிக்கவர்கள்.
ஆற்றல் மிக்கவர்கள்
மேலாக
தம்பர் தகுந்தவர்கள்

அவர்கள் கழைக்கூத்தாடிகள்
உயிர் துஞ்சும் வித்தைகளால்
ஆச்சரியப்படுத்தி மகிழ்வூட்டுபவர்கள்

அவர்கள் வித்தையெல்லாம்
ஏங்குதல் வாழ்க்கையான
உறவுகள் வயிறாற…….

வாய்வாள் விசுக்கும்
குடல் நீளங்கொண்டார்.
இவர்கள்

கள்ளப் பணம்
கடத்தல் பண்டமாக
ஆள்மாறும் கைமாறும்
வித்தை எல்லாம்
இவர்களுடையவை

நடைமுறையிலுள்ள மக்கள் நலனுக்குப் பாதகமான பெருவணிகச் சூழலில் இயங்கு தளங்களாகவும், இந்த யதார்த்தங்களை மறைத்து நிற்கும் பெருந்திரைகளாகவுமே வெகுசன அரசியல் வெகுசன ஊடகம், வெகுசன கல்வி, வெகுசனப் பண்பாடு என்பன செயற்படுத்தப்பட்டு வருகின்றன.


யதார்த்த நிலைகளை திசை திருப்புவதற்கான வழிமுறையாகவே மக்கள் மத்தியிலுள்ள வேறுபாடுகள், வித்தியாசங்கள், முரண்பாடுகள் என்பன மோதல்களாக்கப்பட்டுப் பேணப்பட்டு வருகின்றன. இந்த முரண்பாடுகள், மோதல்கள், அழிவுகட்குக் கருவிகளாக இருப்பவர்கள் தங்கள் நலன்களை அடைவதைக் குறிக்கோளாக உடையவர்களாக இருக்கிறார்கள்.


உலகில் எங்கெங்கு முரண்பாடுகள், மோதல்கள், இடப்பெயர்கள், அழிவுகள் ஏற்படுகின்றன என்பதை உலக வரைபடத்திற் குறித்துக் கொள்வோமானால் அங்கெல்லாம் பல்தேசிய நிறுவனங்களது நலன்களுக்கான வளங்களின் இருப்பைக் காண முடியும்.


இந்த நிலைமைகளுக்கு எதிராகப் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு கலைஞர்கள், அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் இயங்கியிருக்கிறார்கள், இயங்கி வருகிறார்கள். நைஜீரியாவின் கென் சரோ-விவா தனது பிரதேசத்துப் பெற்றோலிய வளம் சுரண்டப்படுவதற்கு எதிரான செயற்பாட்டு ஊடகமாகக் கவிதையைக் கையாண்டு மக்கள்மயப்பட்ட போராட்டத்தில் முன்னணிப் பங்கெடுத்திருந்தார். அவரது கவிதைகள் உண்மையைப் பேசின. அதனால் தூக்கிலிடப்பட்டார். இவ்வாறு பல உதாரணங்கள் உலகப் பரப்பிற் பரவலாகக் காணப்படுகின்றன.

ஆனால் ‘கவிதைக்குப் பொய்யழகு’ என்று வீதந்தெழுதும் கலைஞர் நவீன அரசாங்கங்களின் அரசவைக் கவிஞராக வீற்றிருப்பார் என்பது ஒரு உதாரணம் மட்டுமல்ல. அதிகாரம் எவரைத் தூக்கிற் போடுகிறது, வடிவமைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பெயரில் எவரைச் சிறையில் அடைக்கின்றது. எவரைக் கௌரவிக்கின்றது. விருது வழங்குகின்றது என்பதன் வாயிலாகப் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை முக்கியமானதாகும்.


இப் பின்னணியில் வெகுசன ஊடகங்களில் பிரசித்தம் பெறுபவை எவை. கவனியாது விடப்படுபவை எவை என்பதை விளங்கிக் கொள்வதன் மூலமாக யதார்த்தத்தை யார புதைக்கிறார்கள். ஏன் புதைக்கிறார்கள், எவற்றை பிரபல்யப்படுத்துகிறார்கள். பிரபல்யப்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் புதிரானதல்ல.

‘அதிகாரத்தை நிலைநிறுத்த விரும்புபவர்கள் ஆபத்தான சக்திகளாகக் கருதுவது படிப்பறிவும் விமரிசன நோக்கும் கொண்ட மக்களையே’ என அரசியலறிஞரும் தத்துவாசிரியருமான ஹனா அறென்ற’ எச்சரிக்கின்றார். மாணவர்களது ஆத்மாவை வதைக்கும் போட்டிப் பரீட்சையை விரும்பி ஏற்கும் சமூகம், கொண்டாடும் சமூகம் யதார்த்தத்திலிருந்து கட்டமைத்து மாயையுட் கட்டிவைத்திருக்கும் வெகுசன ஊடகங்கள் குறிப்பாக பிரபல்ய தமிழ் சினிமாக்களாலும், நெடுந்தொடர் நாடகங்களாலுமானது உலகு எனப் பிணித்து வைத்திருக்கும் இலத்திரனியல் ஊடகங்களுக்குள் அடங்கியும் முடங்கியும் கிடக்கும் சமூகம் எத்தகைய இயல்பு கொண்டதாக இருக்கும் என்பது புதிரானதல்ல.


படிப்பறிவும் சிந்தனைத் திறமும் மட்டுமல்லாது படைப்பாற்றலும் அற்ற நுகர்வுச் சமூகமாகப் பல்தேசிய நிறுவன எதிர்ப்பாற்பிற்குரிய சமூகமாகவே மிகப் பெருமளவிற்கு மாறியுள்ள சூழ்நிலையில், சீந்தனைப் பரப்புக்களை இழந்து நிலப்பரப்புக்களுக்காகக் கொக்கரிப்பதும் ஒருவகை வணிகம் என்றே உலகம் பூராகவும் கருதப்படுகின்றது.


எந்தெந்த விடயங்கள் மறக்கடிக்கப்படுகின்றன. மறைக்கப்படுகின்றன் மனிதர்கள் ஒன்றுகூடித் தங்களைப் பற்றியும் தங்களது சூழல் பற்றியும் உரையாடுவதற்கான வெளிகள் எந்தளவிற்கு நடைமுறைப் புழக்கத்தில் இருந்து வருகின்றன அல்லது அவற்றிற்கு என்ன நடந்தது என்பது பற்றி சிந்திப்பதும் உரையாடுவதும் முன்னெடுப்புக்கனை மேற்கொள்வதும் அவசியமில்லையா? அவசியமெனில் எவ்வாறு முன்னெடுப்பது? யார் முன்னெடுப்பது? இது நம் முன்னால் உள்ள கேள்வி.
‘உலகை ஏமாற்றுவது சர்வவியாபகமாயுள்ளபோது உண்மையைச் சொல்வது புரட்சிகரசி செயலாகும்’ என்கிறார் ஜோர்ஜ் ஓவல் ‘கவிஞராக எனது கடமை நான் விழித்தெழுவது, உண்மையை அறிந்து கொள்வதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்வது. இது கடுமையான உழைப்பைக் கோரி நிற்பது, தலைப்புச் செய்திகளுக்கும் அப்பாற் பார்க்க வேண்டியது, தகவல்களை, கட்டமைப்புகளை, முறைமைகளை அலசி ஆராய வேண்டியது’ என்கிறார் கென்யக் கவிஞர் லைலஜா பட்டேல்’

நாங்கள் வாழவேண்டும் இந்தப் பூமியில் – என்றும்
நாங்கள் வாழவேண்டும் இந்தப் பூமியில்

இயற்கை தந்த இனியவாழ்வை
இணைந்து மகிழ்ந்து வாழ வேண்டும்

இயற்கை மடியினில் கூடுகள் கட்டி
இயற்கை மகிழ்ந்திட வாழ்வினைக் கூட்டி

இணைந்து மகிழ்ந்து வாழ வேண்டும் – நாங்கள்
இணைந்து மகிழ்ந்து வாழ வேண்டும்

துயர்களை எல்லாம் துச்சமாய் எண்ணி
தடைகளை எல்லாம் வெற்றிப் படிகளாய் மாற்றி
துணிந்து நிமிர்ந்து உயர்வு பெற்று வாழ வேண்டும் – நாங்கள்
துணிந்து நிமிர்ந்து உயர்வு பெற்று வாழ வேண்டும்

அன்பின் வழியிலே வாழ்வினைக் கூட்டி
வன்முறையற்ற
வாழ்வினை ஆக்கி
இணைந்து மகிழ்ந்து உயர்வு பெற்று வாழ வேண்டும்.

(மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர் குழுவின் பாடல்)

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.