Home உலகம் தலிபான் தீவிரவாதிகளால் காபூல் நகரம் சுற்றிவளைப்பு! அதிபர் கானி வெளியேறினார்!

தலிபான் தீவிரவாதிகளால் காபூல் நகரம் சுற்றிவளைப்பு! அதிபர் கானி வெளியேறினார்!

by admin

இடைக்கால அரசாங்கம் மூலம் அமைதி வழியில் அதிகாரத்தை கைமாற்ற இறுதி நேர முயற்சி! விமான நிலையத்தை நோக்கி வெளிநாட்டவர்கள் தப்பி ஓட்டம் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள்
ஹெலிகள் மூலம் மீட்கப்பட்டனர் பென்ரகனினின் கணிப்புக்கு மாறாக தலிபான் படைகள் தலைநகர் காபூலின் எல்லைகளை நெருங்கியுள்ளன. நகரில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரங்களில் ஆயுதம் தாங்கிய தலிபான் வீரர்களைக் காண முடிவதாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.


அமெmரிக்கா மற்றும் இங்கிலாந்து புலனாய்வுச் சேவைகள் காபூல் நகரம் தலிபான்களிடம் வீழ்ச்சி அடைவதற்கு இன்னும் சில வாரங்கள்,அல்லது மாதங்கள் பிடிக்கும் என்று கணிப்பிட்டிருந்தன.

ஆனால் அதற்கு மாறாக ஒருவார காலப்பகுதிக்குள் நாடு முழுவதையும் கைப்பற்றித் தலைநகர் வரை முன்னேறி சென்றுள்ளது தலிபான் படை.தலிபான் படைகள் நகரின் நாலா புறங்களிலும் நெருங்கி வந்து சுற்றிவளைத்துள்ளன என்பதை உறுதிப்படுத்தியிருக்கும் பிபிசி, அங்குள்ள சிலரது தகவல்களின்படி தெருக்களில் சடலங்களைக் காணமுடிகிறது என்ற செய்தியை வெளியிட்டிருக்கிறது.


ஆட்சியாளர்களையும் அரசுப் படைகளையும் சரணடையுமாறு பகிரங்க வேண்டு கோள் ஒன்றை விடுத்திருக்கும் தலிபான்தலைமை அமைதியான விதத்தில் அதிகாரக் கைமாற்றம் நிகழ்வதை உறுதிப்படுத்தும் வரை நகரினுள் பிரவேசிக்காமல் நகர நுழைவாயில்களில் நிலை கொண்டிருக்குமாறு தனது போராளிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. நகர மக்களது உயிர்க
ளுக்கோ அவர்களது கண்ணியத்துக்கோ உடைமைகளுக்கோ ஊறு விளைவிக்க வேண்டாம் என்று தனது வீரர்களுக்குக் கண்டிப்பான உத்தரவுகள் விடுக்கப்பட்டுள்ளன என்று தலிபான் பேச்சாளர் அறிவித்திருக்கிறார்.


ஆனால் நகர வாசிகள் குறிப்பாகப் பெண்கள் பெரும் பீதியுடன் வீடுகளில் முடங்கியுள்ளனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. தாங்கள் கைப்பற்றிய பிறநகரங்களில் பர்தா அணிவது உட்படப் பெண்களுக்கான பல கடுமையான இஸ்லாமியச் சட்டங்களை தலிபான்கள் மீண்டும் நடைமுறைப் படுத்த ஆரம்பித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.


ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் அப்துல் சத்தார் மிர்சாக்வால் (Abdul Sattar Mirzakwal) தலிபான் படைகள் நகரின் வாயில்களுக்கு நெருங்கி வந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். நகரம் தாக்கப்படலாம் என அச்சமடைய வேண்டாம் என்று மக்களிடம் தெரிவித்துள்ள அவர்,
இடைக்கால நிர்வாகம் (transitional government) ஒன்றின் மூலம் அமைதியான வழி முறையில் அதிகாரத்தைக் கைமாற்றவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அறிவித்திருக்கிறார்.


ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையிலான அதிகாரக் கைமாற்றம் தொடர்பான பேச்சுக்கள் கட்டாரில் நடைபெறவுள்ளன என்ற தகவலை ரொய்ட்டர் செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.

நாட்டின் அதிபர் அஷ்ரப் கானி(Ashraf Ghani) பாதுகாப்பாக தலைநகரில் இருந்து வெளியேறி நாட்டைவிட்டுச் சென்றுள்ளார் என்ற தகவலைத் துணைப் பிரதமர் அப்துல்லா (Abdullah Abdullah) வெளியிட்டுள்ளார். அவர் எந்த நாட்டுக்குச் சென்றுள்ளார் என்பது தெரியவில்லை.


இதேவேளை – அமெரிக்க விமானப்படைக்குச் சொந்த மானவை என நம்பப்படும்’சீனூக்’ ரக
(Chinook) ஹெலிக்கொப்ரர்கள் இரண்டு அங்குள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளையும் முக்கிய பல ஆவணங்களையும் அங்கிருந்து மீட்டு விமான நிலையத்துக்கு கொண்டு சென்றதை அடுத்துத் தூதரகம் முற்றாக மூடப்பட்டுவிட்டது.


கடந்த இருபது ஆண்டுகாலமாக வெறுமனே ராஜதந்திர செயற்பாடுகளுக்கு மட்டுமன்றி ஒரு முக்கிய புலனாய்வுமையமாகவும் இயங்கிவந்த அமெரிக்கத் தூதரகத்தில் பறந்த கொடி இறக்கப்பட்ட பின் அது மூடப்பட்டிருக்கிறது. எனினும் தமது தூதரகம் மூடப்பட்டாலும் சில
தூதரகப் பணிகளைக் காபூல் விமான நிலையத்தில் இருந்து தொடரவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


காபூல் நகரை விட்டு வெளியேறுவதற்கு எஞ்சியுள்ள ஒரே வழியாக அங்குள்ள சர்வதேச விமான நிலையம் மட்டுமே உள்ளது. பல நாடுகளையும் சேர்ந்த ராஜதந்திரிகளும் குடும்பத்தினரும் அங்கு படையெடுத்துள்ளனர். நாட்டைவிட்டு வெளியேற முண்டியடிப்போரால் அது நிரம்பிக் காணப்படுகிறது.


அமெரிக்கப் படைகளது பலத்த கட்டுக் காவல் கண்காணிப்பின் கீழ் உள்ள அந்த வான் தளம் பெரும் எண்ணிக்கையானபயணிகளையும் விமானங்களையும் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது எனச் செய்திகள் வந்துள்ளன.


பிரான்ஸ் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது பிரஜைகளை கடந்த மாதமே வெளியேறும்படி கேட்டிருந்தது. அங்கு இன்னமும் எஞசியிருப்போரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது.


ஜேர்மனி உட்பட சில நாடுகள் காபூலில்உள்ள தமது பிரஜைகளை அங்கிருந்துஇன்று ஞாயிறு இரவு வெளியேற்றவுள்ளன. ஜேர்மனியப் பிரஜைகள் நூறு பேரை அங்கிருந்து உஷ்பெகிஸ்தானுக்கு இடம்மாற்றுவதற்காக ‘எயார்பஸ்’ விசேட விமானம் ஒன்றை காபூலுக்கு அனுப்பவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. (படங்கள் : AFP screen shot)

          - பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                                     15-08-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More