உலகம் பிரதான செய்திகள்

“America Back” ஆட்டம் காண்கிறதா? காபூல் நிலைவரத்தின் முடிவு என்ன? “உத்தரவாதம் இல்லை!”- பைடன்!


ஜோ பைடனை ஒருபோதும் கொல்ல வேண்டாம் என்று அல்கெய்டா தலைவர்
ஒஸாமா பின் லேடன் தனது தளபதிகளுக்கு ஒரு முறை உத்தரவிட்டிருந்தாராம்.
அதற்கு அவர் கூறிய காரணம் இதுதான்.

பைடன் அதிபர் பதவிக்கு வந்தால் அவர் அமெரிக்காவை மிகுந்த நெருக்கடிக்குள் இட்டுச் செல்வார். எனவே ஒபாமாவை இலக்கு வையுங்கள். அவரைக் கொன்றால் அவரது ஜனநாயகக் கட்சியின் அடுத்த அதிபராக பைடனே பதவிக்கு வருவார். அவர் அமெரிக்காவை மிக நெருக்கடியான ஆட்சிக்குள் கொண்டு செல்வார். அதற்கு வாய்ப்பளியுங்கள்- என்று பின் லேடன் குறிப்பிட்டிருந்தாராம்.


பாகிஸ்தானில் ஒஸாமா பின் லேடன் கொல்லப்பட்ட வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ஆவணம் ஒன்றில் இந்தவிடயம் தெரிய வந்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கியமைக்காக பைடன் நிர்வாகம் பரவலான கண்டனங்களைச் சந்திக்க நேர்ந்துள்ள இந்த வேளையில் சில சர்வதேச ஊடகங்கள் ஜோ பைடன் பற்றியபின் லேடனின் மதிப்பீட்டை நினைவு கூர்ந்து செய்தி வெளியிட்டுள்ளன.


பின் லேடனின் தீர்க்க தரிசனம் இன்று தலிபான்களது வெற்றிக்குக் காரணமாகி விட்டது என்பதைச் சுட்டிக்காட்டி சிலர் விமர்சிக்கின்றனர். டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் போது
பெரும் சரிவைச் சந்தித்ததாகக் கருதப்படுகின்ற அமெரிக்காவின் “இமேஜ்” ஜோ பைடனின் வெற்றியுடன் மீண்டும் அதன் முந்திய நிலைக்குத் திரும்பிவிட்டதாகப் (“America Back”) பிரசாரங்கள் செய்யப்பட்டன. ஆனால் வியட்நாம்போர்க் காலத்தில் வாங்கிய பலத்தஅடியை ஒத்த ஒரு மோசமான அரசியல் பின்னடைவைப் பதவிக்கு வந்து மிகக் குறுகிய காலத்துக்குள் ஜோ பைடன் நிர்வாகம் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் சந்திக்க நேர்ந்துள்ளதாக அரசியலாளர்கள் மதிப்பிடுகின்றனர்.


காபூல் நிலைமையை “வரலாற்றில் மிகக் கடினமான வான்வழி மீட்பு நடவடிக்கை “என்று வர்ணித்துள்ள ஜோ பைடன், “அதன் முடிவு என்னவாகும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது” என்றுகையை விரித்துள்ளார்.அந்த மீட்பு நடவடிக்கையில் “இழப்புகள்”தவிர்க்க முடியாதவை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நிலைவரம் தொடர்பாக ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாக நேற்று அவர் வெள்ளை மாளிகையில் இருந்து
நாட்டுக்கு விளக்கமளித்துள்ளார்.


பல்லாயிரக்கணக்கானவர்களால் நிறை ந்துள்ள காபூல் விமான நிலையத்தில் இருந்து ஆட்களை மீட்கும் பணிகள் பெரும் சவால்களுடன் தொடர்ந்து நடை பெற்றுவருகின்றன.அமெரிக்க விமானங்கள் ஆட்களை மீட்டு வருவது கடந்த சில மணிநேரங்களாக மந்தமடைந்துள்ளது என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.


இந்த நிலையில் – அமெரிக்கப் பிரஜைகள் உட்பட ஆப்கானிஸதான் வெளியேறிகளைப் பத்திரமாக
மீட்டுவருகின்ற நடவடிக்கை மேலும் பல நாள்களுக்குத் தொடராது. அது விரைவிலேயே முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.


இன்னமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் உயிரைக் கையில் பிடித்தவாறுகாத்து நிற்கின்றனர். இந்த நிலையில் காபூல் மக்களைத் திடீரெனக் கைவிட்டு வது போன்ற அமெரிக்காவின் நிலைப் பாடு அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்ற நேட்டோ நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.


ஆப்கான் நெருக்கடி ஒரு பெரும் சர்வ தேசப் பிரச்சினை, அதில் அமெரிக்காவுக்கு உள்ள முதன்மைப் பாத்திரத்தை கைவிட்டிருக்கின்றார் பைடன். அதன் மூலம் சர்வதேச அரங்கில் இருந்து
அமெரிக்காவை வேறு பாதைக்கு நகர்த்திச் செல்கிறார். “அமெரிக்காவுக்கே முதன்மை” (America First) என்ற அதன்பெருமையை அந்நாடு இழந்துவருகிறது.


இவ்வாறு அதன் நேச அணியான நேட்டோ நாடுகள் கருதுகின்றன. ஆப்கானிஸ்தானைக் கைகழுவி விடுகின்ற பைடனின் போக்கு அமெரிக்கா வின் உள்நாட்டு அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.


ஆப்கானிஸ்தானில் செயற்படுகின்ற மேற்குலக ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் தலிபான்களால் இலக்குவைக்கப்பட்டு வருகின்றனர். அங்கு செயற்படுகின்ற ஜேர்மனியின் ‘டொச்
வெலா (“Deutsche Welle – DW) செய்திநிறுவனத்தின் செய்தியாளர் ஒருவரைத்
தேடிச் சென்ற தலிபான்கள் அவரது உறவினர் ஒருவரைக் கொன்று மற்றொருவரைக் காயப்படுத்தி உள்ளனர்.


” டொச் வெலா “செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.அங்குள்ள நூற்றுக்கு மேற்பட்ட செய்தியாளர்களிடம் இருந்து அவசர உதவிக் கோரிக்கைகள் கிடைத்துள்ளன என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கின்ற உலக அமைப்புகள் தெரிவித்துள்ளன.


தலிபான் தலைவர்கள் முதலில் அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக அவர்களது முந்திய ஆட்சிக்கால அடக்கு முறைகள் தற்போதும் நீடிப்பதை அங்கு இடம்பெறுகின்ற பல சம்பவங்கள் உணர்த்தி வருகின்றன.


தலிபான் இயக்கம் அனைத்து நாடுகளுடனும் சிறந்த ராஜீக நட்புறவை உருவாக் குவதற்கு விருப்பம் வெளியிட்டிருக்கிறது. ஆனால் எந்த நாட்டிடமும் தங்கள் மதம் சார்ந்த கொள்கைகளை விட் டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் அது எச்சரித்துள்ளது. சீனா, ரஷ்யா, துருக்கி ஈரான் ஆகியன தலிபான் ஆட்சியை அங்கீகரிக்கும் வகையில் வெளிப்படை யான சமிக்ஞைகளை வெளியிட்டிருக்கின்றன. ஆயினும் மேற்கு நாடுகள் இது வரை எந்த விதமான நிலைப்பாட்டையும் வெளியிடவில்லை.

   - பாரிஸிலிருந்து குமாரதாஸன்
                         20-08-2021

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.