Home இலங்கை யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன்.

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன்.

by admin

கடந்த ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘நகரபிதாவிற்குக் குடியானவன்’ எழுதிய கடிதத்தை வாசிக்க நேர்ந்ததில் ஏற்பட்ட சிந்தனைகளை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆசையின் விளைவே இச்சிறு கட்டுரை. யாழ்ப்பாண நகரத்தை, வீதி அகலிப்பு முதலிய பலநடவடிக்கைளால் அழித்துக் கொண்டிருக்கும் செயற்பாடுகள் மீதான கோபமும், மனவருத்தமும் கூட இக்கட்டுரை எழுதக் காரணமாகும். ஏன் யாழ்ப்பாணத்தில் துறைசார் நிபுணர்களை எல்லா இடங்களிலும் அகற்றிவிடுதல் என்பதை அதிகாரிகள் ஒரு வியூகமாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்ற காரணம்  கட்டுரையாளர் ஜீவன் தியாகராஜாவைப் போல எனக்கும் புரியவில்லை.

படம் 01- குறிப்பிட்ட பண்புத்தொடர்ச்சியுடைய ஆஸ்பத்திரிவீதி கடைத்தொகுதிகள்

போருக்குப் பின்னரான மீள் கட்டுமானம் பற்றிய சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான தேர்ந்த முன்னுதாரணமாக இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய ஜெர்மனியையும், ஜப்பானையும் கூறுவார்கள். அவை தமது பொருளாதார அபிவிருத்தியோடு பண்பாட்டுத் தனித்தன்மையையும் – வரலாற்று அடையாளத்தையும் தக்க வைக்கும் முயற்சியையே அவற்றின் வடிவமைப்பின் பிரதானமான கொள்கையாகக் கடைப்பிடித்து இருந்தன என்று கூறுவார்கள். இப்பின்னணியில் வைத்து, போருக்குப் பிற்பட்ட யாழ்ப்பாண நகரத்தை மீள்கட்டமைத்தல் என்ற விடயப்பரப்பினைப் எடுத்துப் பார்ப்போமாயின், அச் செயற்பாடானது  மிக மிகக் குழப்பமூட்டுவதாகக் காணப்படுகிறது என்பதை அடிப்படை நகரத் திட்டமிடல் பற்றிய பார்வையுடைய எவரும் புரிந்து கொள்வார்கள். அதேசமயம்,  யாழ்ப்பாண நகரத்தின் பண்டைய அடையாளங்களை, வரலாற்றுத் தடங்களை அழிப்பதை திட்டமிட்ட உள்நோக்கத்துடன் ‘ யாழ்ப்பாண நகர அபிவிருத்தி’ என்ற கவர்ச்சியான சுலோகத்துடன் செய்கின்றார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

படம் 02 – ஆஸ்பத்திரி வீதி : ஒழுங்கற்ற விளம்பரத்தட்டிகள், ஒழுங்குகுலைக்கப்பட்ட நடைபாதைகள்

ஒரு நகரத்தின் மீள் கட்டுமானத்தில் அதன் பார்வைத்தோற்றம் மிகப்பெரிய பங்காற்றுகின்றது.  இப் பார்வைத்தோற்றத்தைக் கட்டமைக்கும் பிரதான அமைப்புகளாக அவ் இடத்தின் தெருக்கள், பாதையோர நடைபாதைகள் , கட்டட முகப்பு அமைப்புகள் என்பன முக்கிய இடம் பெறுகின்றன. இங்கு கட்டட முகப்பு அமைப்பு (facade) என்பது இவற்றில் தலையானதாகும். இதுவே மனிதருக்கும் கட்டட சூழலுக்கும் இடையிலான பிணைப்பை உருவாக்கும் முக்கிய காரணியுமாகும். அதுவே நகரத்தின் பண்புகளைச் சிருஷ்டிக்கும் முக்கிய அலகுமாகும். அவ்வகையில், அவ்விடத்தின் கட்டடக் கலையின் தனித்தன்மையைம் சிறப்பையும் அவை உருவாக்குவதுடன்,  அம் மக்களின் கலை, காலாசார வாழ்வியல் விழுமியங்கள், பொருளாதார நிலை , அறிவியல் சார் விழிப்புணர்வு என்பவற்றை ஒருங்கே வெளிப்படுத்தி நிற்கும் ஒன்றாகவும் காணப்படுகிறன. இன்னொருவகையிற் சொன்னால் அந்த மக்களின் கீர்த்தியை –செழுமையை மற்றவர்களுக்கு காட்டி நிற்கும் தோற்ற அமைப்பாகவும் அவை காணப்படுகிறன. இப்படி எல்லாம் இருக்கும்போது அதனைக் குழப்பிச் சிதைத்து அடையாளமற்ற ஒன்றாகுகின்றோம். இது தமிழ் மக்களுக்கு வரலாறும் இல்லை; பண்பாட்டுச் சிறப்புமில்லை என நிறுவ முயலுவர்களுக்கு இலகுவாக வழி சமைத்துக் கொடுக்கும் ஒன்றாகிவிடும் என்பதிற் சந்தேகம் இல்லை.

மனிதரால் உருவாக்கப்பட்ட மேற்பரப்புக்கள் அனைத்துமே குறிப்பிட்ட ஒரு கருத்தை அல்லது விடயத்தை வெளிப்படுத்தவும், கடத்துவதற்குமாகவே கட்டமைக்கப்படுகின்றன என்பது அறிஞர்கள்களது கூற்றாகும் . எனவே, ஒன்றிணைந்த – கட்டட முகப்புத் தோற்றமானது பல்வேறுதரப்பட்ட பௌதீக இடமைவு – நிலவுரு தொடர்பான ஒத்திசைவுகளைக் கொண்டதாக அடிப்படையில் காணப்படவேண்டும் என்பர். அது அவ்விடம் சார் கட்டடப் பாரம்பரியத்தை, அதன் அதனடிப்படைக் கோட்டுபாட்டு நிலைப்பாடுகளை, பாராம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும் என்பதில் நாடுகளும், சமூகங்களும் கவனமாயுள்ள நிலையில் அதற்கு எதிரான திசையில் நாம் பயணம் செய்கிறோம்.

படம் -03 ஆஸ்பத்திரி வீதி : ஒழுங்குநிலையில் அதன் தோற்றப்பொலிவு எவ்வாறு இருக்குமெனக் காட்டும் படம்

அபிவிருத்தி அடைந்த நாடுகளை எடுத்து நோக்கினால், குறிப்பாக எங்களில் பலருக்கும் ஏதோவொரு வகையில் நன்கு பரிச்சயமான பரீஸ், லண்டன், பார்சிலோனா போன்ற நகரங்களின் பெயர்களைச் சொன்னவுடனேயே எமக்கு முதலில் அவற்றின் பார்வைத்தோற்றமே எமது மனக் கண்ணிற்தோன்றும். அதுதான் அதன் தனியடையாளமாகும். அது அவர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது; அவற்றின் அழகான கட்டடவரிசைகளுடன் கூடிய, அதனடைய திட்டமிட்ட தனித்துவமே அவற்றை நோக்கி உலகத்தை ஈர்க்கிறது என்பதை நாம் பரிந்துகொள்ளவேண்டும்.

போர் சூழல் காரணமாக அங்கும் இங்கும் மூடப்பட்டு ஓட்டை ஒடிசாலாக எம்மிடம் ‘அபிவிருத்திக்காக’ ஒப்படைக்கப்பட்டு ஏறத்தாழ 11 வருடங்கள் கடந்தநிலையில் எம்மிடம் இன்று நகரத்தில் எஞ்சியுள்ளது,  தென்னிலங்கையைச் சோந்த பெரும் வர்த்தக நிறுவனங்கள் காவிவந்த ‘Alcobond Clading Sheet’ எனும் பெரியளவிலான வர்த்தகத்தட்டிகளான முகப்புக் கலாசாரம் மட்டுமே. இதன் மூலமாக தென்னிலங்கையில் உள்ள இன்னொரு நகரத்தைப் போல யாழ்ப்பாணத்தை மாற்றி அதன் தனித்துவத்தையும் – அடையாளத்தையும் அழிக்க உதவியுள்ளோம்.  அது யாழ்ப்பாண நகரத்தின் காட்சிப்புலத்தை ஒத்திசைவற்ற சிறியபெரிய வர்ண ஜால தட்டிகளின் நகராக்கிச் சீரளித்திருக்கிறது(படம் 02).

காலனிய காலத்தின் பிற்பகுதியிலும், அதற்கு பிற்பட்ட முதற் காலகட்டத்திலும் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட கட்டடக்கலை, நகர அமைப்பு சம்பந்தமான விழிப்புணர்வும் மேலாண்மையும் அக்காலப்பகுதியில் நிறுவப்பட்ட யாழ் நூல்  நிலையம், யாழ்ப்பாண நகரமண்டபம், புகையிரத நிலையம் என்பனவற்றிலும், அதற்கு முற்பட்ட காலப்பகுதியில் கட்டப்பட்ட புகழ்  பூத்த  பல பாடசாலைகளின் கட்டடங்களிலும் காணப்படுகிறது . அதன் தொடர்ச்சியை இல்லாது ஆக்குவதைத்தான் இன்று நாம் முதன்மைப் போக்காக்கி உள்ளோம். இது எமது கல்வி முறையில் இயலாமையா அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான அரசியலின் வெற்றியா? லல்லது இரண்டும் தானா தெரியவில்லை.  மிஞ்சி இருக்கும் கட்டடங்களில் இன்று நாம் செய்யும் ஒவ்வாத இணைப்புக் கட்டடங்கள், முகப்புக்கள்  என்பன யாவும் யாழ்ப்பாணத்தின் அறிவுலக வங்குறோத்து நிலைமையைக் காட்டுகின்றது என்றால் அது மிகையாகாது.

ஒருபுறம் தென்னிலங்கையின்  காலிக்கோட்டைக்கு சுற்றுலா சென்று அவற்றின் கட்டடக்கலை அம்சங்களையும் நகர அமைப்பையும் வியந்து வரும் நாம் அதே கட்டடப்பாணியும் நகர அமைப்பும் உடைய எமது யாழ் கோட்டையைச் சுற்றிய குடியிருப்புகளில் எஞ்சியதையும் அழித்துக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டுள் வரும் இச் செயற்பாடுகளோடு தொடர்புடைய திணைக்களங்களை விடுத்துப் பேசினாலும் யாழ்ப்பாண மாநகரசபை மற்றும் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் பங்கு இது தொடர்பாக யாது? ஒரு புறம் அரசின் நேரடித்தலையீட்டினால் காலிக்கோட்டை புனரமைக்கப்பட்டு யுனஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய இடமாக விளங்கி பெருமையையும் அன்னியசெலாவணியை இலங்கைக்கு ஈட்டித்தருகிறது., இன்னொருபுறம் நமது அதே காலத்தினையும், கட்டடக்கலை மரபினையும் ஒத்த யாழ் நகரப்பகுதி அழிந்து கொண்டிருப்பதுக்கு யர் பொறுப்புக் கூறுவார்கள்?

காலனிய நகரம் மட்டுமன்றி யாழ்ப்பாணத்தின் கோயில் நகரமாக அறிஞர்களால் கருதப்படும்  வண்ணைச்சிவன் கோயில் சார்ந்த கட்டட அமைப்புகளும் காலத்தின் கோலத்தில் சிக்குண்டு பொலிவிழந்து காணப்படுவது இன்னொரு வருந்தத்தக்க நிலவரமாகும். காலனிய காலத்தில் மட்டுமன்றி அவற்றிற்கு முன்னேயே யாழ்ப்பாணத்தில் மிகச்சிறந்த நகர அமைப்பும் கட்டடக்கலைமரபும் காணப்பட்டதென இவற்றினை நேரடியாக பார்வையிட்ட ஆங்கில  காலனித்துவ ஆட்சியாளர்களின் குறிப்பேட்டில் இருந்து அறிய முடிகின்றது.

எனவே அவ்வாறான அழகிய தோற்றத்தை, அதன் பண்பாட்டு அடையாளங்களை, வரலாற்றுச் சிறப்பை கொண்டிருந்த யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலையை அதிலிருந்து மீட்டெடுத்து முன்னேற்றுவது தொடர்பான முன்னெடுப்புக்களைச் சரியான முறையில் செய்யாது இருப்பது ஏன்?  

அண்மையில் நகரபிதாவின் தலைமையில் வீதி அகலிப்புநடவடிக்கைக்கு வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பை நல்குவதாக தெரிவித்ததான செய்தி மகிழ்ச்சிக்குரியதாகும், எந்தவொரு நாட்டின் நகரத்தின் வளர்ச்சிக்கும் அவர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. இச்சுமுகமான விழிப்புணர்வையும் பெருந்தன்மையையும் அடிப்படையாகக்கொண்டு யாழ் நகரத்தை மீட்டெடுக்க முடியும் என்பது எனது நம்பிக்கை(படம்-03).

இவ்வாறான முன்னேற்றங்களில் முன்னுதாரணமாக திகழும் நகரங்களையும், அவற்றின் கட்டமைப்புக்களையும் ஆராய்ந்து நகரத்திற்குரிய முதன்மைத் திட்டத்தினையும் விரிவான திட்ட வரைபுகளையும் அமைப்பது இன்றிமையாததாகும். அவ்வாறனதொரு செயற்திட்டத்தினையே நமது மாநகரசபையும் மேற்கொண்டிருக்கும்  அல்லது அதிற் தேவையான திருத்தங்களை மேற்கோள்ளும் என்பது எனது திடநம்பிக்கை. என்னையும், என்னைப்போன்ற பொது மக்களையும் எமது சமூகத் தலைவர்கள், அரசியலவாதிகள் ,நகரபிதா முதலியோர் கைவிட மாட்டார்கள் என்றே நம்புகிறேன். மாநகரசபைகளில்  இவ்வாறான திட்ட வரைபுகள் மக்களின் எளிதாகு பார்வைக்கு, பெரியளவில் அதிக கட்டுப்பாடற்ற  முறையில்  பார்வையிடக்கூடியதாக இருக்கவேண்டும். அத்துடன், அவர்கள் தங்களின் அது தொடர்பான கருத்துக்களை பதிவுசெய்யக்கூடியதாகவும் இருக்கவேண்டும்; அதுதான் ஜனநாயகமானதும் கூட.  நாம் பலர் அறிந்தது போல மேலை நாடுகளில் முதன்மை வரைபு, விரிவான வரைபுகள் என்பன மிக விரிவான வகையிலே செய்யப்பட்டு, அவை மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை காணமுடியும் அதுமட்டுமின்றி  அவை இணையத்தின் மூலம் பார்வையிடக்கூடிய வசதியுடன் உள்ளமையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

குறிப்பாக தற்போது முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திக்குரிய திட்டமிடல் வரைபுகள் மீது எவ்வளவு தூரம் பொதுமக்கள் தரப்புக்களது கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன எனத் தெரியவில்லை. வெறும் கண்துடைப்பு மக்கள் கருத்துக் கணிப்பு கூட்டங்களை நான் குறிப்பிடவில்லை. பதிலாக உண்மையான சமூக மற்றும் நிபுணத்துவ ஊடாட்டங்களை மட்டுமே நான் இங்கே குறிப்பிடுகிறேன். யாழ் நகரம் மட்டும் அல்லாது யாழில் உள்ள மற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்கள்- ஊர்களும் தமக்கான முதன்மை, விரவான திட்டமிடலைச்செய்து தமது விழ்புணர்வையும் பெருமையையும் நிலைநாட்ட வேண்டும். அதற்கு அத்திட்டங்கள் நேர்த்தியான முறையிலே துறைசார்ந்த அறிஞர்களால் வடிவமைக்கப்பட்டு.  பொது மக்களின் பார்வைக்குவைக்கப்பட்டு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட  வேண்டும்.

நமது நோக்கம் இன்னொரு லண்டனை உருவாக்குவதோ காலனிய கால கட்டடத்தை மீளகட்டுவதோ இல்லை மாறாக காலத்தின் தேவை கருதி எமக்கு தனித்துவமான தன்மைகளை பாதுகாத்து, அவற்றில் இருந்து எடுக்கப்பட வேண்டிய பண்புகளை உள்ளடக்கி, எமது தேவைகளுக்கு ஏற்புடைய எதிர்காலத்தையும் மனதில் கொண்டு வடிவமைக்கப்பட நகரம் ஆகும், இவற்றை செயற்படுத்த பெரும் பணச்செலவு தேவையென்பதைவிட அதற்கான மனநிலையும் மற்றவர்களையும் செவிமடுக்கும் பண்பும்தான் அடிப்படைத் தேவை.

உதாரணமாக 1950 பிற்பாடு அமைக்கபட்ட சத்திரத்சந்தியை அண்மித்த 3-4 மாடி கடைத்தொகுதிகளை உற்றுநோக்கில், அவற்றுக்கிடையிலலான முகப்புசார்ந்த சந்தமும், ஒப்புவமையும் அதேசமயத்தில் அவற்றின் தனித்தன்மையும்  முன்மாதிரிகையாக கொள்ள கூடியவை(படம்-01). இன்று அவை பாரிய விளம்பரபலகைகளினால் திரைசெய்யப்பட்டு ஏதோ ஒரு அவமானச்சின்னம் போல மூடிமறைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் தனது பண்டைய கட்டடங்களைப் பாதுகாத்து அவற்றை வரலாற்று பெட்டகமாக்கியுள்ளது.  ஆனால், அதே காலகட்டத்திற்குரிய எம்மத்தியிலுள்ள கட்டடங்களை நகரத்திற்கு உள்ளேயே அழித்தும், விளம்பரத் தட்டிகளாலும்  திரை போட்டு மறைத்துள்ளோம். இவற்றை சீர்செய்து , விளம்பரப்பலகைகளை அமைப்பதற்குரிய அளவுத்திட்டங்கள் முறைமைகளை வகுப்பதன் மூலமும் இவ் வகையான கட்டுமானங்களுக்கான வழிகாட்டும் கொள்கைமுறைகளை அமைத்து வழிநடாத்துவதன் மூலமும் ஒழுங்கற்றமுறையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிய கட்டுமான அலகுகளை அப்புறப்படுத்தி பாதசாரிகளுக்குரிய இடங்கள், வாகனதரிப்பிடங்கள் சரியான முறையில் உபயோகப்படுகின்றன என்பதை ஆளுமைசெய்வதன் மூலமும் இவற்றை சரிசெய்ய முயற்சிக்கலாம் எனபதுவும் எனது கருத்தாகும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More