Home இலங்கை வக்சினே சரணம் ? நிலாந்தன்!

வக்சினே சரணம் ? நிலாந்தன்!

by admin

“அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண.எனது கடந்த வாரக்கட்டுரையில் நான் குவிமையப்படுத்திய விடயமும் இதுதான்.“இலங்கை ஒரு சிறியதீவு எங்களால் பாதிப்பை கட்டுப்படுத்தியிருக்க முடியும்.அரசாங்கம் உணர்வுபூர்வமாக இருக்காததால் மருத்துவநிபுணர்கள் தலைமை வகிக்க முடியாமல்போய்விட்டது” எனவும் எரான் தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசாங்கம் வைரசுக்கு எதிரான போராட்டமும் உட்பட நாட்டின் எல்லாத் துறைகளையும் ராணுவமயப்படுத்தி வருகிறது. பைசர் வக்சினை கையாளும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.பைசர் தடுப்பூசியை கையாள்வதில் சிவில் தரப்புக்கள் போதிய அளவிற்கு வினைத்திறனுடன் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.கொழும்பு லேடி ரிச்வே மருத்துவமனையில் மிக முக்கியமான பிரமுகர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் ரகசியமாக விநியோகிக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு எழுந்தது.தமிழ்ப்பகுதிகளில் மன்னாரில் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.தடுப்பூசிகளை பெறுவதற்காக யாழ்ப்பாணம் புத்தளம்,சிலாபம் போன்ற இடங்களிலிருந்து பலர் மன்னாருக்கு சென்றதாக தெரியவருகிறது.குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வோரும் சீன இந்தியத் தடுப்பூசிகளை நம்பாதவர்களும் பைசர் தடுப்பூசிகளை பெறுவதற்காக மன்னாருக்கு சென்று அங்கே பொய்யான ஆவணங்களை கையளித்து தடுப்பூசிகளை பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இவ்வாறான விமர்சனங்களின் விளைவாக அரசாங்கம் பைசர் தடுப்பூசியை இராணுவத்திடம் கொடுத்துவிட்டது.அதாவது ஒரு குறிப்பிட்டவகை தடுப்பூசியை இனி படைத்தரப்பிடம் மட்டும்தான் பெற்றுக்கொள்ளலாம். மேற்கத்திய நாடுகள் சீனத் தயாரிப்பு தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே மேற்கத்திய தயாரிப்பான பைசர் மோடோர்னா போன்ற தடுப்பூசிகளை பெற்றால்தான் மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.இதனால் அடிக்கடி மேற்கு நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் பைசர் தடுப்பூசியை விரும்புகிறார்கள்.இவ்வாறானவர்கள் இனிமேல் இராணுவத்திடம் போய்த்தான் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.

“பைசர் தடுப்பூசியை இராணுவத்திற்கு மாத்திரம் கொடுக்கும் தீர்மானத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இராணுவத்திற்குத் தடுப்பூசியை வழங்குவதானால், போரின் போது சுகாதாரத் துறைக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்திய நிபுணர் நவீன் டி சொய்சா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை பொதுச் சுகாதார துறையினரும் மருத்துவத் துறையும் போதிய அளவுக்கு வினைத்திறனோடு முன்னெடுக்கவில்லை என்று கூறி அதனை படைத்தரப்பு பொறுப்பேற்றது. இதன்மூலம் மருத்துவ ஊழியர்களால் மருத்துவ சுகாதார நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட வேண்டிய தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் ஒரு ராணுவ நடவடிக்கைபோல முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அடுத்த மாதம் நடுப்பகுதிக்குள் முப்பது வயதுக்கும் மேலான அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுவிடும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அதற்காக இரவு பகலாக தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை படைத்தரப்பு ஓய்வு ஒழிச்சலின்றி முன்னெடுக்கிறது. எனவே தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கு படைத்தரப்பும் அரசாங்கமும்தான் பொறுப்பே தவிர சுகாதாரப் பிரிவினர் அல்ல என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இவ்வாறாக கடந்த 20 மாதங்களுக்கு மேலான இராணுவ மயமாக்கலின் அடுத்தகட்டமாக அரசாங்கம் கடந்தவாரம் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின்மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகளை பிரகடனப்படுத்தியுள்ளது. சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்பதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது.அரசாங்கம் அறிவித்திருக்கும் முழுமையற்ற சமூக முடக்கம் காரணமாக விலைகள் மேலும் அதிகரிக்கின்றன.அரசாங்கம் இதற்கு முன்னரும் சில பொருட்களுக்கு விலைகளை நிர்ணயித்திருக்கிறது.ஆனால் அவ்வாறு விலைகளை நிர்ணயிப்பதன் மூலம் வணிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே கடந்தகால அனுபவமாகக் காணப்படுகிறது.இம்முறையும் அறிவிக்கப்பட்டிருக்கும் சமூக முடக்கமானது சமூகத்தை முழுமையாக முடக்கவில்லை.

“மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளை நிராகரிக்க முடியாத காரணத்தால்தான் நாடு முடக்கப்பட்டது. அந்த நேரத்தில் அரசாங்கம் நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்திருக்கவில்லை” என்று கூறியிருக்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த. அப்படியென்றால் அரசாங்கம் துறைசார் நிபுணர்களின் வேண்டுகோளை ஏற்றுக் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள். அதாவது துறைசார் நிபுணர்களின் நோக்கு நிலையிலிருந்து இந்த சமூகமுடக்கம் அறிவிக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் பொருளாதார நோக்கு நிலையிலிருந்தே இந்த சமூகமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அரசாங்கம் அண்மைய மாதங்களில் அறிவித்த சமூக முடகங்களுக்கு வெவ்வேறு பெயர்களை வைத்தது. சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடு என்று அழைக்கப்பட்டது. இப்பொழுது அறிவிக்கப்பட்டிருப்பது தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஹைபிரிட் சமூக முடக்கம் என்ற ஒரு பெயரையும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார். அதாவது இது முழுமையான அர்த்தத்தில் சமூக முடக்கம் அல்ல என்று பொருள். மருத்துவ நோக்கு நிலையிலிருந்து இது அறிவிக்கப்படவில்லை.பொருளாதார நோக்கு நிலையிலிருந்தே இது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமூக முடக்க காலத்தில் அத்தியாவசிய சேவைகள் என்ற பட்டியலின் கீழ் ஒரு தொகுதி தொழிற்துறைகள் தொடர்ந்தும் இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதித்திருக்கிறது. இதை வசதியாகப் பயன்படுத்தி சனங்கள் வீட்டுக்கு வெளியே வருகிறார்கள். நகரங்களின் மையங்களில்தான் சன நடமாட்டம் குறைவாக இருக்கிறது. புறநகர் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் ஜனங்கள் வழமைபோல நடமாடுகிறார்கள். சந்தைகள் மூடப்பட்டதால் தற்காலிக சந்தைகள் எல்லாக் கிராமங்களிலும் திறக்கப்பட்டு விட்டன. இச்சந்தைகளில் பொருட்களின் விலைகள் வழமையைவிட அதிகமாக காணப்படுகின்றன.உதாரணமாக திருநெல்வேலிச் சந்தையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்தில் தெருவோரங்களிலும் உள்வீதிகளிலும் திறக்கப்பட்டிருக்கும் சந்தைகளில் பொருட்களின் விலை வழமையைவிட அதிகமாக இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் இது நல்லூர் திருவிழாக் காலம். இக்காலகட்டத்தில் மரக்கறி விலை பொதுவாக கீழே வந்துவிடும்.ஆனால் இம்முறை கோயிலும் பூட்டு. சந்தையும் பூட்டு. ஆனால் விலைகளோ உச்சத்தில். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வைரஸ் தொற்றிவிடும் என்ற அச்சத்தோடு வீட்டுக்கு வெளியே வரும் சனங்கள் ஒருபுறம் வைரசை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்னொருபுறம் விலையேற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அனர்த்த காலத்தை தமக்கு வசதியாக பயன்படுத்தி வர்த்தகர்கள் உழைக்கத் தொடங்கி விட்டார்கள். சில பொருட்கள் பதுக்கப்பட்டதற்கும் பெருமளவுக்கு வணிகர்களே காரணம். எதிர்காலத்தில் குறிப்பிட்ட பொருட்களின் விலைகள் உயரலாம் என்று ஊகத்தின் அடிப்படையில் வணிகர்கள் பொருட்களை பதுக்குகிறார்கள். இதுசாதாரண ஜனங்களுக்கு சமூக முடக்கத்தை வேதனை மிகுந்த ஒன்றாக மாற்றிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களுக்கு என்று ஒரு மேஜர் ஜெனரலை பொறுப்பாக நியமித்திருக்கிறது.

எனவே தொகுத்துப்பார்த்தால் தடுப்பூசிக்கும் ராணுவம்தான் பொறுப்பு. அத்தியாவசியப் பொருட்களுக்கும் ராணுவம்தான் பொறுப்பு.அரசாங்கம் நம்புகின்றது வேகமாக தடுப்பூசியை போடுவதன் மூலம் நோய் பரவும் வேகத்தையும் இறப்பு விகிதத்தையும் குறைக்கலாம் என்று. இந்த இலக்கை முன்வைத்து தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் படையினரிடம் தரப்பட்டிருக்கின்றன. அடுத்தமாதம் நடுப்பகுதியளவுக்குள் நாட்டிலுள்ள முப்பது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துவிட்டது.30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தின்படி அரசாங்கம் கிட்டத்தட்ட அறுபது வீதத்துக்கு மேல் முன்னேறி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன் பின்னரே பாடசாலைகளையும் அலுவலகங்களையும் முழுமையாக திறக்கலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. இது விடயத்தில் சில மேற்கத்திய நாடுகளின் முன்னுதாரணத்தை பின்பற்றி தடுப்பூசிகளை வேகமாக போட்டு.முடித்தால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று அரசாங்கம் நம்புகின்றது.சீனாவைப் போலவே வக்சினேற்றும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கமும் சாதனை படைக்க முயற்சிக்கிறது

ஆனால் தடுப்பூசி போடுவதற்கான தேசிய கொள்கையின்படி60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்காமல் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடுவது என்று அரசாங்கம் கொள்கையை மாற்றியது என்றும் இது தொடர்பில் சுகாதாரப்பிரிவுடன் அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லை என்றும் ஜேவிபி குற்றம்சாட்டுகிறது. இவ்வாறு திட்டத்தை மாற்றியதால்தான் அதிகளவு முதியோர் அண்மைக்காலங்களில் இறந்தார்கள் என்றும் அக்கட்சி கூறுகிறது. ஓகஸ்ட் மாதம் மொத்தம் 4850 பேர் கோவிட் தொற்றினால் இறந்திருக்கிறார்கள் அவர்களின் 3000 பேர் தடுப்பூசி போடாத 60வயதுக்கு மேற்பட்ட முதியோர்களே என்று ஜேவிபி சுட்டிக்காட்டியுள்ளது. முதியோரை அதாவது ஓய்வூதியர்களைச் சாகவிட்டால் அதனால் அரசாங்கத்துக்கு லாபமுண்டு.னென்றால் சேமிப்பில் உள்ள ஓய்வூதியம் அரசாங்கத்துக்கு கிடைக்கும்அதேநேரம் இளவயதினரை பாதுகாத்தால் அதனாலும் லாபம் உண்டு.ஏனென்றால் அவர்களுடைய உழைப்பால் வருமானம் கிடைக்கும்.எனவே தடுப்பூசி கொள்கையை அரசாங்கம் திடடமிட்டே மாற்றியிருக்கலாம் என்று ஓர் அரசு ஊழியர் கூறினார்.

வைரஸ் புதிய திரிபுகளை அடையும் பொழுது தடுப்பூசி மட்டும் ஒரு தீர்வு அல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.”தடுப்பூசிகளை மாத்திரம் நம்பியிருப்பதால் கொள்கை வகுப்பாளர்களும் – பொதுமக்களும் பெருந்தொற்றை தடுப்பதற்கு செய்யவேண்டியதை செய்யத் தவறுகின்றனர்”என்று கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் அவசியமானது அது உயிரிழப்புகளை குறைத்து நோயின் தீவிர தன்மையை குறைக்கின்றது.ஆனால் நீங்கள் பாதிக்கப்படுவதையோ அல்லது ஏனையவர்களிற்கு நோய் தொற்றச் செய்வதையோ தடுப்பூசிகள் தடுக்காது…..எந்தவொரு வைரசையும் சமாளிப்பதற்கு சமூகத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.ஆனால் அவை மாத்திரமே தீர்வல்ல.இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தடுப்பூசி மாத்திரம் போதுமானது என நாங்கள் நினைத்தால் நாங்கள் ஏனைய முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கமாட்டோம்,மக்கள் என்னசெய்யவேண்டும் என்பது குறித்து அவர்களிற்கு நாங்கள் அறிவூட்டமாட்டோம்” என பேராசிரியர் மனுஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை பெருமளவுக்கு புறக்கணித்துவிட்டு ஆகக்கூடியபட்சம் தடுப்பூசியைப் போடுவதன்மூலம் நிலமையை கட்டுப்படுத்தலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது.நாடு முழுவதும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இழப்புகளைத் தாங்கினால் சரி என்று அரசாங்கம் சிந்திக்கின்றது.இது விடயத்தில் அரசாங்கம் திட்டமிடுவதுபோல நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டபின் நிலைமை கட்டுக்குள் வருமா? வைரஸ் வைக்கும் சோதனையில் அரசாங்கம் சித்திபெறுமா?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More