இலங்கை கட்டுரைகள்

மறந்த வாழ்க்கையை நினைத்துப் பார்த்தல்! பிறேமானந்த சுஜாதா.

முன்பு வாழ்ந்த வாழ்க்கை முறைகள் இன்றைய காலக்கட்டத்தில் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வாழ்க்கை முறைகள் எல்லாம் ஒரு போட்டி பொறாமை இல்லாத காலக்கட்டமாக இருந்தது. இந்த வாழ்கை முறைகளில் வாழ்ந்த எனது அப்பா,அம்மா,அம்மம்மா,அம்மப்பா ஆகியோரின் கருத்துப்படி முன்பு வாழ்ந்த வாழ்கைமுறைகளை இன்றைய சூழலில் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது என்றார்கள். ஏன் என்றால் அந்த வாழ்கை முறை எப்பவுமே ஓரு மகிழ்;ச்சிகரமான இன்பமூட்ட கூடிய சம்பவங்களாகவே இருக்கும் என்பார்கள்.


ஒரு பகட்டான வாழ்கை இல்லாமல் அன்றைய அன்றைய தினங்களில் மட்டும் சாப்பிட்டு சந்தோஷமாக வாழும் வாழ்கையே இருந்தது என்பார்கள். அவர்கள் வாழ்ந்த அந்த காலக்கட்டத்தில் தொலைக்காட்சியோ, தொழிநுட்பமோ என்பது தொடர்பான விடயங்களில் ஆர்வமில்லாதவர்களாகவும் அனுபவமில்லாதவர்களாகவும் இருந்தார்களாம். அம்மப்பா சொல்லுவார். ‘என்னுடைய அப்பா தான் எங்களுடைய ஊருக்கு தலைவராக இருந்தவர்’ இவர் கூறுவதை தான் ஊர் மக்கள் கேட்டு அதன்படி நடந்துக்கொள்வார்களாம் அப்படி வாழ்ந்த வாழ்கையும் ஒரு சந்தோஷமான வாழ்கையாக தான் இருந்தது என்பார். அவரிடம் மட்டும் தானாம் அப்போது வானொலி ஒன்று இருந்ததாம் செய்தி கேட்பதற்கு ஒவ்வொரு இரவுவேளையிலும் ஊர் மக்கள் அனைவரும் அவருடைய வீட்டு வாசலில் இருந்த மாமரத்தின் கீழ் ஒன்றுக் கூடி இருப்பார்களாம் செய்தி கேட்பதற்கு இப்படி எல்லோரும் ஒன்றாகக் கூடி இருந்து பழகிய தருனங்கள் இப்போது இல்லை என்றார்கள் .


மற்றையது அவர்கள் வாழ்ந்த அந்த காலத்தில் எல்லோருக்கும் கொடுத்து வாழ வேண்டும் என்ற மனபாங்கு இருந்தாக கூறினார்கள். அதாவது நெல் கொடுப்பது, மரக்கறிகள் தோட்டத்தில் பறித்தால் உடனே ஏனையோருக்கும் கொடுப்பது. முன்பு எல்லோருடைய வீடுகளிலும் குப்பி விளக்கு தான் இருந்ததாம் இந்த வாழ்கையில் வாழ்ந்த அனுபவங்கள் எல்லாம் மறக்க முயாது என்றார்கள். எல்லோரும் விவசாயம் தான் செய்வார்களாம் வீடுகளில் தோட்டம் செய்வார்களாம். அரிசியோ, மரக்கறிகளோ கடைகளில் வாங்குவதில்லையாம் அனைத்துமே இவர்களே செய்வார்களாம். எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக உதவி செய்யக் கூடியவர்களாக வாழ்ந்தார்களாம் எல்லோருடைய வீடுகளிலும் கோழி, ஆடு, மாடு என்பன அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு பெறுமதியாக இருந்தது என்றார்கள்
அவர்கள் அந்த காலத்தில் சாப்பிட்ட உணவுகளை இப்போது சாப்பிட முடியாமல் உள்ளது என்றார்கள். உண்மையில் வித்தியாசமான உணவுகளாகவே இருந்திருக்கின்றது. அதாவது அம்மாவுடைய அப்பா அந்தக்காலத்தில் வேட்டையாடுவதற்கு காட்டுக்குபோவாராம் அவர் நிறைய இறைச்சிகள் கொண்டுவருவாராம் கொண்டு வந்து வீட்டை சுற்றியிருக்கின்ற அனைத்து வீடுகளுக்கும் சமைப்பதற்கு இறைச்சி கொடுத்து விட்டு மிகுதியான இறைச்சியை நெருப்பில் காய வைத்து மண் பானை ஓன்றை எடுத்து அதற்குள் இறைச்சியை வைத்து அதற்கு மேல் சுத்தமான தேன் ஊற்றுவாராம் இப்படி இறைச்சியை அடுக்கி அடுக்கி தேன் ஊற்றிய பின்பு நன்றாக மூடி வைத்து நான்கு நாட்களுக்கு பின்பு தான் எடுத்து உண்பார்களாம் இறைச்சியும் தேனும் நன்றாக ஊறிப் போய் இருக்குமாம் இது மிகவும் ருசியாகவும் ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும் என்றார்.


அது மட்டுமின்றி குரக்கன் களியும,; மீன் குழம்பும், ஊறுகாயும் சாப்பிட்ட அனுபவங்களை மறக்க முடியாது என்றார்கள். இன்றைய பிள்ளைகள் இப்படியான உணவுகளை சாப்பிட்டே இருக்கமாட்டார்கள் என்றார்கள். அதுமட்டும் இன்றி மண்டுமரம் என்னும் மரத்தின் பழங்கள் மஞ்சள் நிறமாக இருக்கும் என்பார்கள் இந்த பழங்களை எடுத்து வெட்டி காயவைத்து அதனை இடித்து மா எடுத்து அந்த மாவுடன் அரிசிமா கலந்து புட்டு அவித்து சாப்பிடுவார்களாம். இதனை மண்பானையில் மூங்கில் குழல் வைத்து தான் புட்டு அவித்து எடுப்பார்களாம்; இந்த உணவை இரவுவேளையில் தான் சாப்பிடுவார்களாம்.இந்த புட்டுக்கு தயிர் மற்றும் மரவள்ளிக் கிழங்குகறியும், பூசணிக்கறியும் வைத்து சாப்பிடுவார்களாம். இந்த மாவில் பலகாரமும் செய்து சாப்பிடுவதாம் இது நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும் என்றார்கள் இது எல்லாம் மருத்துவ குணம் கொண்ட உணவாக இருந்திருக்கின்றாம். ‘இப்படி சாப்பிட்டதால் தான் அந்த காலத்தில் இருந்து இன்று வரைக்கும் எந்த விதமான நோய் குணங்களும் ஏற்படாமல் இன்றைக்கும் மிகவும் ஆரோக்கியமாக நான் இருக்கின்றேன்’ என்று எங்களுடைய அம்மம்மா கூறுவார்.


அவர்கள் வாழ்ந்த காலத்தில் நெற்பயிர் செய்தால் அறுவடை காலங்களில் ஊர் முழுவதும் ஒரு கோலாகலமாகவே இருக்கும் என்றார்கள் ஏன் என்றால் அறுவடை காலம் முழுவதும் ஊர் ஆண்களே ஈடுபடுவதனால் ஊர் செழிப்பாக இருக்கும் என்றார்கள் ‘இந்த காலத்தில் இயந்திரம் வந்து அறுவடை செய்து நெல்மூடைகளை இயந்திரங்களே ஏற்றிக் கொண்டு செல்கின்றது’ இதனை போன்று எல்லாம் முன்பு இல்லை என்றார்கள் அதாவது அறுவடை செய்வதற்கு ஊருக்குள்ளே இருந்து 10-12 பேர் ஆண்கள் சேர்ந்து நெற்கதிர்களை வெட்டுவார்களாம் இவர்களுக்குள் ஒருவர் தலைவராக இருப்பார் இவரை முகாமைக்காரர் என்பார்களாம். அதன் பின்பு சூடு வைத்து அதனை மிதிப்பதற்கு மாடுகளை கொண்டு சூடு மிதித்து நெல்மூடைகளை மாட்டு வண்டில்களில் வீடுகளுக்கு கொண்டு வருவார்களாம் அப்படியான சம்பவங்கள் எல்லாம் இப்போது இல்லை என்றார்கள்.


அந்த காலத்தில் வீடுகளில் சில சடங்குகள் செய்யும் முறைகள் இருந்ததாக கூறினார்கள் அதிலும் அம்மன் சடங்கு முக்கியமான சடங்காக இருக்கின்றது. இதனை வீட்டுக்கு முன்பாக சிறிய பந்தல் அமைத்து செய்வார்களாம் அன்றைய தினத்தில் அந்த வீட்டில் தான் முழு ஊரும் ஒன்றாக கூடி இருந்து சடங்குகளை செய்து முடிப்பார்களாம். அது ஒரு சந்தோஷமான தருணங்களாகவே இருந்தது என்றார்கள.; இன்றைய சூழலில் தாங்களும் தங்களுடைய வீடும் என்றவாறு மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால் முன்பு அன்றைய நாள் முழுவதும் சடங்குகள் நடக்கும் வீடுகளில் தான் எல்லோருக்கும் சாப்பாடு காலையில் இருந்து இரவு வரைக்கும் சடங்கு நடைபெறும் இது முடிந்த பின்னர் வைரவர் பூசைகள் இடம்பெறுமாம். ஒன்றுக்கூடி வாழ்ந்த வாழ்கையை மீள வாழமுடியாதா?’ என்ற எண்ணம் எனக்கு ஏற்படும் என்பார் அப்பா.


அந்த காலத்தில் மண் பானை மண் சட்டிகளில் தான் சமைப்பதாம் தண்ணீரை குளிர வைப்பதற்கு பெரிய மண்பானையில் தான் தண்ணீர் வைத்து குடிப்பார்கள், மண் சட்டியில் பசுப் பாலை சூடாக்கி குடிப்பது என்ற விடயங்கள் இந்த காலத்தில் பெரிதாக இல்லை என்று கூறினார்கள். இவ்வாறான பல விடயங்கள் இன்றைய சூழலில் வாழ்பவர்களுக்கு தெரியாமல் இருக்கின்றது.
அந்தக் காலக்கட்டத்தின் வாழ்கைமுறையில் வாழ்ந்தவர்கள் சிலர் அந்த வாழ்கை அனுபவத்தை மறக்க முடியாத அளவுக்கு வாழ்ந்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சிலர் அதனை மறந்து இன்றைய நவீன சூழலுக்குள் அகப்பட்டவர்களாக இருக்கின்றார்கள் அவர்கள்; வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மறந்துவிட்டார்கள். ஆனால் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை வாழ முடியாமல் இருந்தாலும் ஒரு பொழுதேனும் அதனை நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த நினைவுகள் சிலவேளையில் அவர்களுடைய நோய்க்கு மருந்தாக இருக்கும்.
பிறேமானந்த சுஜாதா
கிழக்குப் பல்கலைக்கழகம்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.